கண்டராதித்தன் கவிதைகள்

 

 

 

 

 

ஓவியம் : அனந்த பத்மநாபன்


நிறைகுடம்

அதுவொரு அரைகுறை
சற்று கவனமாகப் பழகு
என்று அவர் கூறினார்.

அப்படியா அவர் சொன்னால்
சரியாகத்தான் இருக்கும்
யாரைச்சொன்னார் அப்படி.

உன்னைத்தான்.

அவர் யாரைச்சொன்னாலும்
சரியாகத்தானிருக்கும்.
சற்று கவனமாகவேப் பழகு


தான செட்டில்மென்ட் அறிவிப்பு.

இத்திருமண வரவேற்பில்
பாடிக் கொண்டிருக்கும்
மாற்றுத்திறனாளிச் சிறுமி
(கண்தெரியாத)
சாதனாவிற்கும்,

உடன் பாடிய
அனந்தராமன்,
டிரம்ஸ் ரமேஷ் மற்றும்
இசைக் குழுவினருக்கும்,

மேற்படி தாலுகாவைச்
சேர்ந்த தாசில்தார்
அரு.க.வைத்தியநாதன்
அவர்களின்
அன்பளிப்பு ரூபாய்நூறு.


 மனம்

1.அந்தச் சிறப்பு நமக்கு
கிடைக்குமா கிடைக்காதா
என்ற மனதை வைத்துக்கொண்டுதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சமயத்தில் கூச்சமாகவும் இருக்கிறது.
இதில் கூச்சப்பட
என்னவென்றும் இருக்கிறது.

2.எப்போதாவது
அற்பத்தனம் வந்து
போனால் பரவாயில்லை
அற்பத்தனமே
வாழ்க்கையானதால்
சங்கோஜத்திற்கும்
சௌகர்யத்திற்கும்
வித்தியாசமில்லாமல்
பழகிவிட்டது.

3.சொல்வதைக்கேள்
இவர் மூலமாக
அவரைப்பிடித்து
அந்த வழியில் சென்றால்
அந்த இடத்தை அடையலாம்.

கேட்கமாட்டேன்
இந்தப் புறம்போக்கிடத்திலேயே
வாழ்ந்து கொள்கிறேன்.


அனுபவச் சேகரம்

அவர் சொன்னதைவிடவும்
பத்து ரூபாய் குறைத்துக்கொடுத்தேன்

கட்டுப்படியாகாதென்றார்.

பார்த்துச் சொல்லுங்கள்
கட்டுப்படியாகுமென்றேன்.
தம்பீ பொருட்களை வைத்துவிட்டு
பையை எடுத்துக்கொண்டு
போ என்றார் கறாராக.
நான் துணிப் பையிலிருந்த
பொருட்களை எடுத்துவிட்டு

அங்கிருந்த அவமானம்,
ஏமாற்றம்,அனுபவம் ஆகியவற்றில்
கொஞ்சம் எடுத்துக்கொண்டு
நடையைக் கட்டினேன்.


 

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *