குட்டி ரேவதி கவிதைகள்

 

 

ஓவியம் :  ரோகிணி மணி

 

 

 


ஆகாய வீதியில்

கழுத்து நீண்ட இரண்டு கடல்கள்
வான்வெளியில் சந்தித்துக்கொண்டன
மேகமுகம் திரண்டு இருள
கொந்தளிப்பில் சுருளும் அலைகளோ
கன்னங்கரேல் திமில்களுடன் அலைந்தன
அடம்கொண்டு நிலமெங்கும் புரண்டன
ஆகாயவீதியில் எழுந்து நின்று
ஒன்றையொன்று அரவணைத்து
தீவிர முத்தத்தால்
கவ்விக்கொண்ட கடல்கள்
முத்த எழுச்சி தீராமல்
தனித்தனியே தளும்பிக் கிடந்தன
தகிப்பின் இதழ்ப்பாறைகள் உலர


கறுப்பு

மருள் மாலை ஒளியில்
குளிக்க இறங்கினேன்
தலையில் நீரூற்றி உடலில் மழைபோல
ஒளி இறங்கியதொரு கணத்தில்
மார்பின் நடுவே மயிரின் ஒரு பிரியும்
கறுப்பாய் வழிந்தோடியது கண்டேன்
சட்டென்று ஆங்கே
உடல் திறந்து கொண்டாற்போல்
உள்ளே உறையும் இன்னொரு பெண்ணின்
இருப்பைத் தொட்டுணர்ந்தது போல்
எல்லாமே ஒரு கணம் தான்
ஒரு தெறிப்பு தான்
ஒளியும் நீரும் நனவும் கலைந்து
மெய்யின் மெய்ம்மைக் குளிராய் உணர
மயிர்க்கற்றையின் நுனியில்
நீர் தாரையாகிக்கொண்டிருந்தது


ஒளி ஆண்டு
 
மழைதொறும் முகிலுரசி மடிப்புற்று
மலைத்தொடராகிய காலவெளியை
கிண்ணென்று குடைகிறது
சிறுவண்டு தன் ஒலியின் உளி கொண்டு
மண்டைக்குள் மூளைமடிப்புகளுக்கு
உள்ளிருந்து அகந்திறந்து
நினைவுகள் கடந்தவெளி
கிளர்ந்து விரிகிறது நிலவனப்பு
பல ஒளிஆண்டு தொலைவிற்கு


வீழ்

எப்படி என்று கேட்காதே
ஏன் என்றும் கேட்காதே
எங்கு என்றும் கேட்கவே கேட்காதே
அபாயம் அபிப்ராயம் எச்சரிக்கை
உள்ளுணர்வின் நிமிண்டல்களைத் தாண்டி
தலைகுப்புற வீழ்ந்து விடு
என்னுள்ளே
மலைகளின் சரிவுகளை விட
பள்ளத்தாக்குகளின் ஆழம்
இருள் அப்பியது தான்
மனவெளி என்றால் இப்படித்தான்
உருவங்களோ நேர்வழிகளோ
காலத்தின் திரைவெளிகளோ
இயல்பாய் விரிய சாத்தியமில்லை
வனத்தின் புதிர்கள் எதிர்படுவதுபோல்
மந்திரமும் திகைப்பும் கூட
வரையறுக்கப்பட்டிருக்கவில்லை
உனைத் தாங்கும்
எந்த ஆதாரமும் தேடாதே
தரை தட்டி மூளைச்சிதறிப்போவாய்
நீ என்னுள்ளே அந்தரத்தில் சரிகையில்
உன் இடுப்பின் மருங்குகளில்
இறக்கைகள் விரியும் என்று
சபதித்துக் கொள்கிறேன்
நீ தான்
அந்த தேவதேவதையரின் தேவன்
என்றும்
வீழ்
ஏன் என்று கேட்காதே


நான்கு கண்கள்

தண்ணீர்க்குளத்தில் குதித்தவள்
தன் இருகைகளால்
நீரை விலக்குகையில் போல்
சிற்றிலைகளாய் ஒதுங்கிச் செல்கிறது காலம்
நீயும் நானும் காபி அருந்தச் சென்றபோது
என் முகத்தில் பதிந்தன உன் இருகண்கள்
உன் கோப்பையில் என் இருகண்கள்
கதவைத் திறந்து நம் வீட்டிற்குள் நுழைகையில்
கதவின் மதகில் பதிந்து கொண்ட
நான்கு கண்களை
கவனத்தில் கொள்ளாது
நாம் புழங்கமுடிந்தது
ஏனெனில் இது நம் வீடு
கோப்பையின் காபியைப் போல
பகுதிகளாய்ப் பிரிந்து கிடக்கவில்லை வீடு
நம் வீட்டிற்குள் நுழைகையில்
எதற்கு நமக்கு கண்கள்
விதானத்தில் நட்சத்திரங்களைப் போல்
கண்கள் ஒட்டிக்கிடந்த இரவுகளையும்
கடலின் கரையில் கால்களைப் போல
காத்துக்கிடந்த தனிமையின் கணங்களையும்
நம் கண்களைத் தவிர
வேறு எவர் நினைவில் கொண்டுவிட முடியும்
கண்கள் நடைவழியிலேயே திரியட்டும்
எதுவும் இடறுதல் இல்லை


நிலவின் பனி

இடிபாடுகளுக்கு இடையே
மூர்க்கமாக வீசும் மூச்சுடன்
வீழ்ந்து கிடந்தேன்
கால்கள் கனத்த கட்டிடங்கள்
காலத்தின் அந்தரங்கம் பிளந்து காட்டி
என் மேலே சரிந்து கிடந்தன
மழை வெயில் புயல் இரவு காலம் சூறாவளி
புழுதியெல்லாம் உதறி எழுந்து நின்ற
என் மீது மெல்ல வீசிச் செல்லும்
முழுநிலவின் பனிமூச்சு
அதன் பேரொளி கசிந்து
என் கால்கள் மீது வீழ்ந்து
நீர்த்தடாகமாகிறது
எனக்குப் பின் எழுதவந்தோர் எல்லாம்
பிதற்றும் படியான
கழிவிரக்கத்தில் நடுங்கும்படியான
ஆழம் என் கால்களின் கீழே

One comment

  1. நல்ல கவிதைகள் ஆனால் இந்த காலத்தில் இந்த கவிதையை வெளியிட என்ன காரணம் என தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *