வே.நி.சூர்யா கவிதைகள்

 

 

 

 

 

 


 

ஒரு பழைய தினம்

எங்கேயிருந்து இவ்வளவு பதற்றம் வந்ததென தெரியவில்லை
உக்கிரமான பதற்றத்தில்
பயங்கரமாய் துடிக்கிறது இதயம்
நாவறண்டு போய் தொண்டைக்குமிழடைக்கிறது
எண்ண முடியா எண்ணங்களையெல்லாம் எண்ணிப்பார்க்கிறது மனது
வெடவெடக்கின்றன கைகளும் கால்களும்
மண்டை சூடேறி வியர்வையில் நனைகிறது நெற்றி
ஏறத்தாழ கண்களில் ததும்பி நிற்கிறது கண்ணீர்
மாதவியிடமிருந்து செல்போனில் மற்றொரு குறுஞ்செய்தி:
“நான் சும்மா சொன்னேன். உண்மையென்று நினைத்துவிட்டாயா?”


அப்பா இனி குடிக்கமாட்டார்

அப்பா குடித்துகொண்டு வருவதை நினைத்து தினம்தினம் வருந்துகிறான்
ஒருநாள் அவனுக்கொரு யோசனை தோன்றியது
ஆள்அரவமற்ற நள்ளிரவில் மதுவிடுதியிருக்கும் தெருவுக்கு போகிறான்
யாராவது இருக்கிறார்களாயென சுற்றும் முற்றும் பார்க்கிறான்
தெருவில் முதியவரொருவர் நடந்து போய்க்கொண்டிருந்தார்
அடுத்த சந்தில் அவர் மறைந்தபிறகு
மறுபடியும் யாராவது இருக்கிறார்களாயென சுற்றும் முற்றும் பார்க்கிறான்
சுற்றும் முற்றும் எவரும் இல்லை
உடனே பவ்யமாக மதுவிடுதியை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு எங்கோ விரைகிறான்
அப்பா இனி குடிக்கமாட்டாரென தனக்கு தானே அவன் முணுமுணுத்துக் கொள்வது மட்டும் வீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.


தெரியவேண்டியது தெரியாததோடு பேசிக்கொண்டிருக்கிறது

 
1
தெரியவேண்டியது
தெரியாததை
ஏனோ கையில் எடுத்து எடுத்து பார்க்கிறது
பின்பு
 
2
தெரியவேண்டியதிற்காக தெரியாதது சிருஷ்டிக்கப்படவில்லை
அது தெரியாதிருக்க சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் தெரியவேண்டியது அப்படி அல்ல

3
நித்தியத்துவத்தின் விதியாய்
தெரியவேண்டியதின் பேழையில் வைத்து பூட்டப்படுகிறது தெரியாதது
(கவிஞர் அபிக்கு)


பல முறை மரணிக்கும் ஒருத்தி

இன்று மத்தியானம் ஒரு கனவு
பெட்டி பெட்டியாய் பிரிக்கப்பட்டு ரயில் போல என் உடல் போய்க்கொண்டிருக்கிறது
முகமில்லாத ஒருத்தி அவ்வோடும் ரயிலிலிருந்து கீழே குதிக்கிறாள்
குதிரைகள் கணைக்கும் சப்தம் கேட்கின்றன
விழித்து பார்த்தேன்
முன்பு மாதவி பரிசளித்த அது
கீழே விழுந்து சில்லுச்சில்லாய் நொறுங்கிக் கிடந்தது
அதுவரை எனக்கு தெரிந்திருக்கவில்லை ஓர் உடலுக்கு பல முறை மரணம் வருமென்று


இப்போது யென்ன ஆயிற்று ?

1
எங்கும் எங்கும் எங்கும் எறும்புகள்
மூச்சை உள்ளிழுக்கிறேன்
அங்கு காற்றில்லை
எறும்புகள் உள்ளே போகின்றன
புத்தகத்தை திறக்கிறேன்
அங்கு சொல்லில்லை
வரிக்கு வரி எறும்புகள் ஊர்வலம் போகின்றன
மழையில் நனையலாமென குடையை தூக்கி எறிகிறேன்
அங்கு மழையில்லை
எறும்புகள் வேகவேகமாய் சொட்டுகின்றன
ஏதோவொரு மரத்தில் ஏதோவொரு கனி விழுமென்று காத்து கிடக்கிறேன்
அங்கு கனி யில்லை
கனி போல் திரண்டு திரண்டு விழுகின்றன எறும்புக்கூட்டங்கள்
இப்படித்தான் இருக்குமோ இயல்பு மாறிய உலகம்
தெரியவில்லை
என்னவானது இந்த உலகத்திற்கு ?

2
உதடெங்கும் எறும்புகள் மேய
யோனியே எறும்பு புற்றாய் போன
ஒருத்தியை கண்டேன்
யென் காதல் கடிதங்களை அவளெப்படி எதிர்கொள்ளப் போகிறாளென்று தெரியவில்லை
கொடுக்கவா
வைத்துக்கொள்ளவா யென யோசிப்பதற்குள் சிசினத்திற்குள்ளிருந்து வேகவேகமாய் கொட்டுகின்றன எறும்புகள்

3
எறும்புகள் மழைக்காலங்களில் யென்ன செய்யும் தெரியுமா
தெரியாதே
நான் சொல்லவா
சொல்லேன்
மழைக் காலங்களை தின்னும்
சில சமயம் மழைக்காலமும் எறும்புகளை தின்னும்
மகா போட்டி அது
யென்னதான் இவ்வுலகை எறும்புகள் ஒன்றுகூடி ஆக்கிரமித்தாலும்
இவ்வுலகின் அதிசயமான காலத்தை மட்டும் ஆக்கிரமிக்க முடிவதேயில்லை
நீங்கள் கூட கண்டிருக்கலாம்
எறும்புகள் ஒன்று கூடி தற்கொலை செய்வதையோ
அல்லது
எறும்புகள் ஒன்று கூடி அழுவதையோ
அதன் காரணமெலாம் இது தான்
இதுவே தான்


வே.நி.சூர்யாநாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். தற்போது பெரம்பலூரில் இயந்திரவியல் பொறியியல் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். சிற்றிதழ்களில் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார்.

One comment

 1. Arputhama iruku indha varigal!

  எறும்புகள் மழைக்காலங்களில் யென்ன செய்யும் தெரியுமா
  தெரியாதே
  நான் சொல்லவா
  சொல்லேன்
  மழைக் காலங்களை தின்னும்
  சில சமயம் மழைக்காலமும் எறும்புகளை தின்னும்
  மகா போட்டி அது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *