க.மோகனரங்கன் கவிதைகள்

 

 

 

புகைப்படங்கள் : அனாமிகா


 

பாக்கி

விரல் சூப்புவது
கெட்டப் பழக்கமாம்
பற்றிச் சுவைத்த முலையையும்
பாதியில் பறித்துக் கொண்டு போனவள்தான்
இப்போது
இடுப்பில் அமர்ந்தபடி
வீதியை வேடிக்கை பார்த்துவரும்
தன் பிள்ளையின்
தலையில் குட்டிச் சொல்கிறாள்.
பெட்டிக்கடை மறைவில்
பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை
காலிலிட்டு நசுக்கியவன்
விட்டொழிக்கவொரு
வேளை வரவேண்டாமாயென
முனகியவாறு
காலி சட்டைப் பையை துழாவிப் பார்த்த பிறகு
சீட்டையில் பற்று வைக்கச் சொல்லிவிட்டு
எதிர்திசையில் நடக்கிறான்.


இடைவழி

எவ்வளவு தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் நிற்பதற்கு
இந்த
நடுவயதில்
எவ்வளவு நேரம்
கடக்க வேண்டியிருக்கிறது
கண்ட காட்சி
தெளிவதற்கு.


கூற்று

பாகனுக்கும் தெரியும்
யானையும் அறியும்
மனிதன் மிருகமாக
மாறுவதும்
மிருகம் மனிதனாக
எத்தனிப்பதும்
படைப்பின் நியதியை
மீறத் துணியும்
பாவமென்று
அங்குசத்தை
அழுந்தப் பற்றும்
கையின் நடுக்கத்தை
அரைக் கண்ணால் பார்த்தபடியே
கால் மாற்றி நிற்கிறது
காலம்.


பேரேடு

போதாகி
அரும்பிப்
பூக்கும் பொழுதில்
பூவொன்றையும்
நின்று பார்க்கத்
தோன்றியதில்லை
என்றாலும்
எப்போதாவது
ஏறிட்டுப் பார்க்கையில்
வானின்றும்
எதேச்சையாக
எரிந்து விழுகின்ற நட்சத்திரம்
எதுவொன்றையும்
என் கணக்கில்தான்
பற்று வைத்திருக்கிறேன்.


மண்டபம்

காலதச்சன்
உளிபட்டு
உருக்கொண்ட
ஒரு பொழுதின்
கனவது
காற்றும் மழையும்
கண்டு கண்டு
காலத்தில்
கறுத்து நிற்கிறது
யுகம் கடந்து வந்து
ஓய்வெனச்
சாய்ந்தவொரு தலைக்கு
தனது
வழுவழுப்பையும்
குளிச்சியையும்
தந்தவாறு.

One comment

  1. சாய்ந்தவொரு தலைக்கு
    தனது
    வழுவழுப்பையும்
    குளிச்சியையும்
    தந்தவாறு / உணர்ந்த நிறைவு தருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *