லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்

 

 

 

 

ஓவியம் :ரோகிணி மணி

 


அன்பென்ற கள்ளச் சாவி

உன் கூந்தலின் கருநீல வண்ணத்தை
துதிக்கும் ஒருவனும்

கருவெள்ளை விழிகளில் படகேறி
ஏழு கடல் கடப்பேன் என்பவனும்

இளங்சிவப்பு நகம் கொண்டவிரல் பற்றி
யுக யுகமாய் உயிர்த்திருப்பவனும்

உள்ளங்கை வெம்மையே
போதும் போதும் என்பவனும்

ஏளனமான விற்பனையாளர்கள்

அன்பென்ற கள்ளச்சாவி
காதல் வேடதாரிகளி்ன் சூத்திரம்
நட்போ சொல்களின் ஜோடனை

நீ விலைமதிப்பற்றவள்
ராஜ ராஜேஸ்வரி
ராணிகளின் ராணி
உன் சேடிகளுக்கு சேவகர்களாய்
பணித்து வை
பாவிகள் ரட்சிக்கப்படட்டும்.


இப்போது நீ போகலாம்

என் இருப்பை உணர்த்தும்
அந்த காட்டுப் பூவிடம்
கேட்டறி
என் பெருமையை
பிறகென் முகவரியை

புண்ணிய தலத்திற்கு செல்லும் பணிவுடன்,
அகந்தை அற்று
வெற்று காலுடன் வா
என் நிலத்தின் குளிர்ச்சியில் திளை

மழையற்ற ஒருநாளில்
என் வனத்திற்குள் நுழைய அனுமதிக்கிறேன்

துளித் துளியாய் படர்ந்து
என் தாமரை இலை மேனியை முழுவதுமாக அலங்கரி
பெரு மழை ஜொலித்து
நடுத்தண்டில் இறங்கட்டும்
மெல்ல மெல்ல

காற்றுக்கு தலை சாயும்
பசும் மூங்கில் கிளைகள்
உன்னை ஆசீர்வதிக்கிறது

தூரத்தில் சில மான்கள்
வெட்கத்தில்  முகம் திருப்பிக் கொள்கின்றன

நீ இப்போது திரும்பலாம்
உனது ராஜ்ஜியத்திற்கு
உன் அரசை
இனி ஆள முடியும்
முன்பெப்போதும் இல்லாத
கம்பீரத்துடனும்..


வனக்கடல்

என் உடல்
அடர் வனம்
நீ அறிந்தெல்லாம் சில செடி கொடிகள் மாத்திரமே,
அவை பாதையோரம் ஒதுங்கியவை.

நுகர்ந்ததும் பகிர்ந்ததும் மகிழ்ந்ததும்
சிறு துளியே
நீ காணாத பசுமை .
பறவைகள் மட்டுமே அறியும் பெருவெளி.
பின்னர்
அமிலம் ஊற்ற
அழிந்த மரங்கள்
சிற் சில
பயந்து
பதுங்கி,
முன்னேறி வருகிறாய்,
அலைந்து
களைத்து போவாய்
நீ
அழிக்க அழிக்க
(அண்ட பேரண்டமெங்கும்)`
விரிந்து விரிந்து பெருகும்
வனக்கடல் நான்.


ஊமைப் பிரியம்

எத்தனை முறை
என் மெழுகை சூடாக்குவது,
உன் பொத்தனை பற்ற வைக்க ?
மெழுகின் ஊமைப் பிரியம்
புரிவதில்லை பொத்தானுக்கு
மீண்டும் விழுந்து விட்டது.

அப்போது
வெளியே வயல்வெளியில்
தெரிந்தது பசுமையேயில்லை
பெய்த மழையில் குளிர்வில்லை
உயர்ந்திருந்த மலையில் கம்பீரமில்லை
நெடுவனத்தில் கட்புலனாகா குயிலின் குரலில் இனிமையில்லை
கண்ணில் கரு மையை மீறிக் கண்ணீர்

மீண்டும் ஒருமுறை
மெழுகை உருக்க வேண்டும்,
பொத்தான் ஒட்டுமோ ?
ஒட்டவில்லையென்றால்
போகட்டும்
மெழுகினி உருகத் தேவையில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *