அனார் கவிதைகள்

 

 

 

 

 

ஓவியம் : ரோகிணி மணி


ஒற்றை முத்தம்

களங்கமின்மையின் பளிங்கொளியாய்
மலையுச்சியில் சரிந்துகிடந்தாய்
பிரிதெடுக்க முடியாதவாறு
பள்ளத்தாக்கின் கருங்குழிகளை
ஒளியால் பூசுகிறாய்

மரங்களின் இடைவெளிக்கூடாக விழுந்த
இறந்தகால வெட்கங்களின்
வெளிச்சத் தீற்றல்களை
திரும்ப நினைத்து நாணமுறுகிறேன்

என் விலாவிலிருந்தே கேட்கின்றன
நம் ரகசிய வெட்டுக்கிளிகளின் கீச்சிடுதல்கள்

மௌனம் உருவாக்கிய பாறைத் தழும்புகளை
ஊடறுத்துக் கொட்டும் அருவிக்குள்
என்றோ தந்துபோன ஒற்றை முத்தம்
கூழாங்கற்களில் உருண்டு
உரசிச் சத்தமெழுப்புகிறது

கற்களின் இடுக்குகளுக்குள்ளே
தாபத்திவலைகளின்
நீர் வளையங்களாகிறேன்

உன் கண்கள் ரகசியங்களுடன்
சுழலும் பொழுதெல்லாம்
இரவின் சதுப்பு நாணல்களுக்குள்
புதைகின்றன நட்சத்திரங்கள்


இரவுக்குள் கூர்ந்து பார்க்கிறேன்

சாப இலைக் குவியல்களில்
கருகும் மனதின் தணலை
இரவுக்குள் கூர்ந்து பார்க்கிறேன்

சுழல் காற்றிடையே கலைந்தே போகின்ற
கனவுகளின் திரள் வடிவத்தை

மௌன மெழுகினால் கட்டப்பட்டு
களஞ்சியமாகித் தொங்கும்
துயரின் தேன்கூடுகளை

ஏற்ற இறக்க வளைவுப் பாதையில்
பயண வடுக்களை சாந்தப்படுத்தும்
மயிலிறகு வருடலை

மழைத் துளிகளைவிட
அதிகமான துளிகளால் குவிக்கப்பட்டிருக்கும்
சொற்களெனும் குருத்து மணல் குன்றுகளை

சாப மரத்தையே
விழுங்கிக் கொண்டிருக்கின்ற சர்ப்பத்தை

வெள்ளைத் திட்டிலிருந்து
வண்ணத்துப் பூச்சிகள் எதற்காகத் தோன்றின
நட்சத்திரங்களின் தோலில்
மென்நிறங்களை தடவி விடுகிறேன்

எதிர்க்கரையில் தெரியும்
இரு தீ கொழுந்துகளைப்பற்றி
ஒளிர்வாய் உயர்ந்து எரியும் மனமே…….
தக தகக்கும் ஜின்னின் இரு தோகையாம்


ஒன்றாகி எரியும் சுடர்

உன் பொருட்டு
அந்தப்பாடல் என்னை தழுவிக் கொண்டிருந்தது

உயர்ந்து செல்லும் புகைபோல
மிதக்கின்ற படிகளில்
உன்னோடு
உயர உயர நடக்கின்றேன்…

என் கண்ணீர் திரண்ட திரையில்…
உன் நெற்றியை முட்டிக் கொள்கிறாய்

இருண்மைகளின் நிர்க்கதிக்கு முன்னே
நீ எனும் ஒற்றைச் சுடர்
அணையாதிருந்தாய்

நிறுத்தப்பட்டு
மறுகணம் ஆரம்பிக்கும்
இரு தாளத்தின் சத்தங்களுக்கிடையே
நெடுங்காலம் உறங்கிப்போயிருந்தேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *