தீபு ஹரி கவிதைகள்

புகைப்படங்கள் :  அனாமிகா

1.
மூளையின் ஒரு பாதியை
எண்களால் நிரப்பியிருந்த
ஆசிரியை ஒருவரை
நான் என் ஏழாவது வயதில் சந்தித்தேன்.
ஐந்திலிருந்து ஆறுக்கு நகர்ந்துகொண்டிருந்த
நிமிடமுள்ளின் மீது
அவள் என்னை நெடுங்காலம்
நிறுத்தி வைத்திருந்தாள்.

2.
மலைகளை விட உயரமான ஒருவனை
மலைகளை விட நிசப்த்தமான ஒருவனை
மலைகளை விட ஆழமான ஒருவனை
நான் நேசித்தேன்.
ஒரு நல்ல அதிகாலையில்
அவன் எனை
அந்தரத்தில் ஒரு வானவில்லாக மாற்றினான்.

3.
யாருக்கும் எலும்புக்கூடுகளைக் காதலிக்கத் தெரியவில்லை.
எலும்புக்கூடுகள் அமைதியாய்க் காத்திருக்கின்றன.
அவைகளோடு கைகோர்த்துக் கொள்ள,
பசையற்று வறண்ட அவைகளின் வாயில் முத்தமிட,
நெஞ்செலும்புகளுக்கிடையில்
பாடம் செய்யப்பட்ட பூவைப்போல
உலர்ந்து கிடைக்கும் அதன் இதயத்தை உற்று நோக்க,
யாரும்வரவில்லை.
ஆனாலும் எலும்புக்கூடுகள்,
நெடியபொழுதுகளில்,
தம்மைக் காதலிக்க வரப்போகும்
காதலன்களை எண்ணியபடி
அமைதியோடு காத்திருந்தன.
சிலசமயங்களில் தம் எலும்புகள் நொறுங்கும் வண்ணம்
தற்புணர்ச்சிகளில் ஈடுபட்டன.
சில சமயம் தம் மண்டையோட்டில்
குறிக்கப்பட்டிருந்த நினைவுகளில்
அந்தபெயரற்றவனின் குறிப்புகளைத் தேடித் கொண்டிருந்தன.
கடற்பொங்கி நகர்தகர்த்த
நள்ளிரவொன்றில்
ஆகாயம் வரை வளர்ந்திருந்த மரமொன்றின் கிளைப்பற்றி
நிலவிலிருந்து இறங்கி வந்த ஒருவன்
இனி எலும்புக்கூடுகளைக் காதலிக்கும்
மனுஷகுமாரர்கள் பிறக்கப் போவதில்லை
என்று அறிவித்துப் போனான்.
பிறகு எலும்புக்கூடுகள்
தத்தம் உதடுகளிலிருந்த சிரிப்பை வழித்து
அவற்றை
ஒரு நாணயத்தைப்போல,
லாவகமாக
பள்ளத்தாக்குகளில் எறிந்தன
பின் வந்த எல்லா இரவுகளிலும்
அவை அங்கே மரகதம் போல ஜொலித்தன.

4.
சொல்வதற்கு
இரண்டுகாதுகள் அற்ற ஒருவன்
ஒரு நல்ல பகல் பொழுதில்
தன் காதுகளை
கையில் எடுத்து
அவற்றிடம் உதட்டைக் குவித்துப் பேசத் தொடங்கினான்.

5.
எனது மூளையை
சரிபாதியாக,
கச்சிதமாக வெட்டி
இரு ஒழுங்கற்ற வடிவக் கோப்பைகளாக்கி
உன் கையில் தருவேன்.
முதல் கோப்பையில் என் காதலை நிரப்பிக்குடி
இரண்டாவது கோப்பையில்
உன் வெஞ்சினத்தை நிரப்பிக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *