மெளனன் யாத்ரீகா கவிதைகள்

 

 

 

 

 

 


 

நாட்டுக்கோழி முட்டை

அரிசியெனில் வரகரிசி என்றிருந்த நாளில்,
தானியங்களை முதிரச் செய்யும் வெய்யில் பொழுதில்,
சிட்டுப் பறக்கும் நிலத்தில் கண்டேன்
புனம் காக்கும் பெண்ணை
சிட்டோட்ட அவள் பாவித்த குரல்
பூர்வகுடியின் சாயல் கொண்டிருந்தது
சிட்டுக்களை அவள் ஓட்டவில்லை,
விளையாட்டுக் காட்டுகிறாள் என்பதை
அறிந்ததும் அவளிடம் கூடிய காமம்
ஒரு சிறுதானியம் அளவுக்கு சிறியது, ஆயினும் வலியது

தன் பாகத்திற்குரிய தானியங்கள் காண்பதும்
தட்டைகளை அசைத்து நிலத்திடம் அதைப் பகிர்வதும்
கதிர்களின் உயிர்த்துவம் காத்து
விளைச்சல் காணுதல் மன்னுயிர் பயனென்று உணர்த்துவதும் குருவிகள்தான் என்றாள் அவள்

விளைவித்தல் பயன் உண்ணத்தான் என்பதால்
சிட்டுக்கள் பங்கு போக மீந்தது
முற்றத்தில் காயும்தானே என்றேன்

ஆமாம், என் குடில் முன் வந்து
காயக் காய மாறிக்கொண்டேயிருக்கும் சிறுதானியங்களின் நிறங்களில் மயங்கி அகலாதிருப்பது உன் வீட்டு நாட்டுக்கோழிகளா என்றாள்
ஆமாம், அதை விரட்டும்
கை வளையல் சத்தம் உன்னுடையதா
பெட்டைப் பிடித்து முட்டை சோதித்தாயா? என்றேன்
ஆமாம், கொண்டவன் பிரிவில் கொடிபோல் வதங்கி
மடிவதும் பிழைப்பதுமாய் இருக்கும் மதினி ஒருத்திக்கு
மார்ப் பசலைப் போக ஓர் வைத்தியத்திற்காய் என்றாள்

அன்றிரவு அவள் வீட்டுப்
பஞ்சாரத்தில் அடைத்தேன்
கன்னிப் பெட்டைகள் ரெண்டு.


குமாரத்திகளின் வயிற்றில் இருக்கும் அற்புத சூல்

பாம்பு உரித்துப் போட்ட படத்தைப்போல்
தோல் சுருங்கிய என் தந்தைவழித் தாயிடம்
உன் வயதென்ன என்றேன்
நம் நெல் வயலுக்கும் எனக்கும் சம வயதென்றாள்
அவ்வளவு முதியதா நம் நெல்வயல் என்றேன்
இல்லை, அவ்வளவு இளையவள் நானென்று சொன்னேன் மக்கா என்றாள்

அப்புறம் ஏன், நிலமும் நீயும்
வெடித்து சுருங்கிப் போயிருக்கிறீர்கள்?

தினமொரு நெல்லிக்கனி தின்றவள் போல்
வாளிப்பும் செழிப்பும் படர்ந்தது என் வனப்பு
நிலமும் அப்படித்தான் இருந்தது
நீர்மைப் பெருகி நின்றதொரு காலமது

அப்படியானால், இந்நிலத்தில் பொங்கிப் பிரவாகித்த பெரு
வெள்ளக் காட்சிகள்
உனக்குத் தெரிந்திருக்கும்!

ஆமாம், மதகில் இரைச்சலுறும் இரவில்
என் உடற்கட்டை அசைக்கும்
கடுங்குளிர்க் கண்டிருக்கிறேன்.
இந்நிலம் சூல் கொண்ட அத்தகையப் பருவங்களில்
என் சூலகம் திறக்க எளிய வழியில் வந்தன
உன் பாட்டனின் மகரந்தத் துகள்கள்
நீ அதன் புதிய குட்டி

ஒரு வனத்தை உருவாக்கும் சூலிடம்
காற்றும் மழையும்தான்
மகரந்தங்களை அழைத்துக்கொண்டு வருகின்றன
என்னிடம் ஒரு மருத வனத்திற்கான
அற்புத சூல் இப்போதும் இருக்கிறது
அதை நான் என் வம்சத்தின் இளைய குமாரத்திகளின் வயிற்றில் வைத்துக் காப்பாற்றி வருகிறேன்

தூளியில் உறங்கிய இவ்வீட்டின் புதிய குட்டியை
அத் தாயின் மடியில் கிடத்தினேன்
அவள் கைகள் அச் சிறு கொழுந்தின்
வயிற்றைத் தடவிக் கொடுத்தபடியிருந்தன
தான் பத்திரப்படுத்திய சூல்
பாதுகாப்பாக இருப்பதுபோல்
ஒரு பாவனை அவள் முகத்தில்
அதில் அப்படியொரு மலர்ச்சி!

பருவக் காற்றில் திரிகிறேன்
 
நீள் உறக்கத்தில் இருந்தது ஊர்
உறைய வைக்கும் குளிர் மாதத்தின்
பருவக் காற்றில் திரிந்ததென் காமம்
துவர்ப்பேறி அடர்ந்திருந்த சாமத்தின் ஜீவ கூட்டம்
குரல் கொடுத்து எழுப்பிற்று என்னை

மோகிக்கும் சூழலைச் சாத்தியமாக்கிய
இலைகள் உதிர்ந்து மிதப்பதன் மௌனம்
உந்தியதென்னை உன்னிடம்
தாழிட்டுக்கொண்ட திசைகளைத் திறந்து
ஒரு பூனையை விடவும் மெதுவாய்
சப்தமற்று நெருங்குகிறேன் உன் குடில்

ஆடு புழுக்கையிடும் சத்தத்திலும்
கேட்க வாய்க்கிறது உன் நாசிக்காற்று
குறுக்கிப் படுத்து உதறல் போக்கும்
குழந்தையின் இயல்புசார் உடலை
உற்றறிந்து மோகித்து அழிகிறதென் குளிர்

அருகில் எங்கோ கிளைமாறி அமர்ந்த
பறவையின் இருப்பு
உன் விழிப்புக்குச் சாத்தியமற்றது எனினும்,
நீ உணரக்கூடிய வாய்ப்புமுண்டு
நடுக்கத்தை அதிகரித்துக் கடந்த
மேற்கத்திக் காற்றில் ஊதலின் குணம் கண்டேன்
வெளித்தெரிந்த பாதங்களை உள்ளிழுத்துக் கொண்டு
போர்வையைச் சமன்படுத்திய நீ
என் இருப்பைக் கிரகித்தாய் அன்பே!

அதற்குப் பின் மீந்திருந்த
இரவையும் குளிரையும்
உன் கண்களில் தேக்கி
பார்த்துக் கொண்டிருந்தேன் நான்


 ஒரு மரத்தின் கதை

கண் முன் ஒரு மரம்
முறிவதை நான் பார்த்திருக்கிறேன்
அந்த மரத்தை வெட்டியவன்
அது ஓலமிடுவதாகச் சொல்லிக்கொண்டான்

மரத்தை வெட்டுவதைப்போல் எளிமையானதாயில்லை
அதன் வேர்களைத் தோண்டியெடுப்பது
அம்மரத்தைத் துண்டு செய்ய
நான்கு மனிதர்களும், இரண்டு அரமும்,
நான்கு கோடரிகளும், ஐந்து வெட்டரிவாள்களும்
துணை நின்றன

அதை ஏற்றிச் சென்ற லாரி
ஆயிரம் டன் எடையுடைய
ஒரு மாபெரும் மரத்தைச்
சுமக்கிறோமென்ற பிரக்ஞையற்று போயிற்று

மரம் நின்றிருந்த இடத்தை
பள்ளம் மூடாமல் வைத்திருந்தனர்
ஒரு மழைக்கு நிரம்பிய அப்பள்ளம்
அடுத்தப் பருவ மழை வரும் வரைக்கும்
கால்நடைகளின் ஊருணியாயிருந்தது

வெட்டப்பட்ட அன்றுதிர்ந்த
எண்ணிக்கையற்ற இலைகளை
மரம் தன் மரணத்தின் சாட்சியாய்
விட்டுச் சென்றிருப்பதை  யாரும் அறியவில்லை

கதவாக, சன்னலாக, மேசையாக
மரம் உருமாறி விட்டதாக
அதனைப் பங்கிட்டுக் கொண்டவர்கள்
நம்பிக்கொண்டிருந்தனர்

ஆனால், நான்
அதன் விதையொன்றைக் கண்டறிந்தேன்
ஒரு வனத்தின் ஆகிருதியோடு
என்னிலத்தில் அது வளர்கிறது
அசையும் அதன் சின்ன இலைகளில்
இப்போதும் கேட்பது போலுள்ளது ஓலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *