ஊரில் இப்போது வேனிற் காலம்

 

 

அழகியபெரியவன்

ஓவியங்கள் : ஜீவா


ல்லாவின் நினைவுகளில் அம்மண உடல்கள் மண்டின. பார்க்கின்றவர்களெல்லாம் அம்மணமாகத் தோன்றினர். வகைவகையான உடல்கள். அவற்றை மனக்கண்ணில் பார்க்கும் போது  பயமும் சிரிப்புமாக வந்தது.

தாத்தனின் உடல். அத்தையின் உடல் .மாமனின் உடல். அன்ணனின் உடல். அப்பனின் உடல். பள்ளிக்கூட வாத்தியார்கள் மூவரின் தொந்தி பெருத்த உடல்கள். கூடப்படிக்கிறவர்களின் உடல்கள். நினைவில் பெருகும் மனித உடல்களை அவளால் தடுக்க முடியவில்லை.

விளையாடும் போதும், வீட்டு வேலைகளைச் செய்யும் போதும் மட்டும் கொஞ்சமாய் பின்னிட்ட அந்நினைவுகள் பிறகு சுனையூற்றாய்ப் பெருகின. தனக்கு என்னவோ ஆகிவிட்டதாக நினைத்து பீதியடைந்த எல்லா, அந்நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது எப்படி எனத் தெரியாமல் நடுங்கினாள்.

எல்லாவற்றுக்கும் காரணம் தன்னுடைய தாத்தன் முத்தன் தான் என்று அவள் நம்பினாள். அவனைப் பார்க்கும் போதெல்லாம் கோபமும் வெறுப்புமாக வந்தது. அவன் சொல்லும் வேலைகளைச் செய்வதற்கும் பிடிக்கவில்லை. அவனால் பள்ளியில் தன்னோடு படித்துக் கொண்டிருக்கும் பையன்களிடம் கூட சில மாதங்களாக சகஜமாகப் பேச முடியவில்லை. அப்பாவின் முகத்தையும், அண்ணனின் முகத்தையும் நிமிர்ந்து பார்த்தே பல நாட்களாகி விட்டது.

முத்தன் பத்துக்கழுதைகளை வைத்திருந்தான். அவர்கள் இருக்கும் ஊரான கிடங்கை மலைப்பாம்பைப் போல காடு விழுங்கியிருந்தது. ஊரிலிருக்கும் மக்கள் நகரத்திலிருந்து வாங்கி வரும் சாமான்களை தலைச்சுமையாகவோ, முத்தனின் கழுதையின் மீது பொதியாகவோ வைத்து வீடுகளுக்குக் கொண்டு வந்தார்கள்.

நெல்லைக்குத்தி வரவும், எண்ணைவித்துகளை செக்காட்டி வரவும், காய்க்கசிருகளை சந்தைக்கு இறக்கவும் முத்தனின் கழுதைகள் பெரும் உதவி புரிந்தன. சிலநேரங்களில் அவை தமது முதுகுகளில் நோயாளிகளையும், பிணங்களையும் கூட சுமக்க வேண்டியிருந்தது.

நடுத்தெரு மந்தைக்கு அருகில் பெரணிகளும் பாசிகளும் வளர்ந்திருக்கும் கருத்தச் சுவர் கொண்ட ரேஷன்கடைக்கு நகரத்திலிருந்து அரிசியும் பருப்பும் வரவேண்டுமானால் முத்தனின் கழுதைகள் தான் வேண்டும்.

தேர்தல் நேரம் வந்தால் முத்தனுக்கு அரசாங்க அதிகாரிகளின் மத்தியில் ரொம்பவும் கிராக்கி ஏற்பட்டு விடும். ஓட்டுபோடும் கருவிகளை ஊருக்கு சுமந்து வருவதும், ஓட்டுபோட்ட கருவிகளை நகரத்துக்கு சுமந்து போவதும் அவனுடைய கழுதைகள்தான். அப்போது யாராவது அவனிடம் பேச்சு கொடுக்க வேண்டும். எகத்தாளம்துள்ளும்.

“டேய். போடாப் போடா களதப்பூக்கு ! உந்தலையெழுத்தே எங்கிட்ட கீதுடா”

மற்றவர்களைத் திட்டுவதற்கு முத்தன், வெகுகாலமாகவே கழுதையின் ஜனன உறுப்புகளைத்தான் உபயோகித்து வந்தான். ஊரில் அவனைப் போலத் திட்டுவதற்கு ஆளில்லை என்று பேரெடுத்தவன் அவன். பாட்டுக் கட்டிப் பாடுவதைப் போல வசவுகளைக் கட்டி பாடுகிறான் என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள்.

மாரியம்மன் பண்டிகையின் போது முத்தன் ஊர்சனங்களுக்கு மிகவும் பாயிதாப்பட்டான். பண்டிகை முடிந்ததும் மாரியின் உருவைப் பொதிந்திருக்கும் கரகத்தை தூக்கி கொண்டு போய் ஊர் எல்லை கிணற்றில் போட வேண்டும்.

அவ்வாறு போகும் போது மாரி ஊருக்குள் திரும்பி வந்து விடக்கூடாது என்று பச்சைப் பச்சையாகத் திட்டி வழி கூட்டுவார்கள். மற்றவரின் வசவுகளுக்குப் பயப்படுவதை விடவும் மாரி, முத்தனின் திட்டுக்குத் தான் ரொம்பவும் பயந்தாள். அதனால் தான் அவள் ஊருக்குள் வந்து அம்மை, வாந்திபேதி என வாரிக்கொண்டு போகவில்லை என்று கூட கிடங்கில் வாழ்ந்த சனங்கள் நம்பிக் கொண்டார்கள்.

“வாங்கன ஓத்தாமுட்ட கொஞ்சமா நஞ்சமா? அவ வந்துடுவாளா ஊருக்குள்ள?”

ஒவ்வொரு வருடமும் மாரியம்மன் பண்டிகை முடியும் போது இப்படிப் பெருமையடித்துக் கொள்வது முத்தனின் வழக்கமாக இருந்து வந்தது. குடித்து விட்டிருந்தால் அவன் வாயிலிருந்து புறப்படும் வசவுகளை நிறுத்துவதற்கு எந்தக் கொம்பனாலும் முடியாது. தேர்தல் சமயங்களில் தனி ஆளாகத் தெருவில் நின்று தன் கட்சிக்கு வசவுப் பிரச்சரம் கூட செய்வான்.

கிடங்குக்கு ஆட்டோக்கள் வரத் தொடங்கிய நாளில் திடீரென்று முத்தன் ஒரு காலும் ஒரு கையும் வராமல் படுக்கையில் விழுந்தான். அதுவும் கூட அந்த ஆட்டோக்கள் முத்தனின் குடிசை வரைக்கும் வருவதில்லை. ஒரு மைல் தூரத்தில் இருக்கும் அல்லிச்செருவு ஆலமர நிறுத்தத்தின் அண்டையிலேயே நின்று கொண்டன.

முத்தனை கயிற்றுக் கட்டிலில் வைத்துக் கட்டித்தான் துக்கிப் போனார்கள். போய்த் திரும்பும் வரையிலும் அவன் தன்னை திடுதிப்பென்று இவ்விதம் படுக்கையில் தள்ளிய சாமிகளுக்கும் துட்ட தெய்வங்களுக்கும் தன் கழுதைகளைக் கொண்டு ஏவல் விட்டபடியே இருந்தான்.

அவன் ஏவல் விட்ட கழுதைகளுக்கு வைத்தியம் பார்த்த பெரியாஸ்பத்திரி வைத்தியக்காரனும் கூட தப்பவில்லை என்று அவனுடன் போய் வந்தவர்கள் சொல்லி மாய்ந்தார்கள்.

முத்தன் அப்படி படுக்கையில் விழுவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவன் கை, கால் வராமல் விழுவதற்கு முந்தினநாள் இரவை எல்லாவுக்கு நன்றாக நினைவிருந்தது. சாரபண்டை குன்றுக்கு கீழே தான் அவர்களின் குடிசை இருந்தது. குடிசைக்குப் பின்னால் இருக்கும் நாகமரக் கூட்டம் அந்த இரவெல்லாம் காற்றுக்கு தத்தளித்துக் கொண்டும், ஆர்ப்பரித்துக் கொண்டும் இருந்தன.

அம்மரங்களில் பழுக்கும் ருசி மிகுந்தப் பழங்களைத் தின்பதற்கு வரும் மோத்தாங்குரங்குகளும், கெண்டுக் குரங்குகளும் கூட அவ்வளவு கூச்சல் போட்டதில்லை. நாகமரங்கள் எழுப்பும் வெறிக்கூச்சலுக்கு நடுங்கினாள் எல்லா. இரவில் விழிப்பு வரும் போதெல்லாம் மரங்களின் கூச்சல் கேட்டது. இறுக்கமாகத் தன் கண்களை மூடிக் கொண்டாள். தனது பாட்டியை சபித்தாள். பாட்டி தான் ஒரு முறை அவளிடத்தில் சொல்லியிருந்தாள்.

“இந்த மரங்களெல்லாமே நான்துன்னு போட்டக் கொட்டயில மொளச்சது எல்லம்மா”

அதைக் கேட்ட போது அருகிலிருந்த முத்தன் காழ்ப்புணர்வு கொண்டு அவள் மீது கழுதைகளை ஏவி விட்டான். அவை தம் குறிகளைத் தூக்கிக் கொண்டு கிழவி மீது பாய்ந்தன. அப்போது தன் கண்களை மூடிக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டாள் எல்லா.

முத்தனின் கொடூரமான கேவலும், வீட்டாரின் அழுகையும், ஊர்ச்சனங்களின் உசுக்கொட்டலும் தான் மறுநாள் காலையில் எல்லாவை எழுப்பின. அவள் பதறியடித்துக் கொண்டு தன் படுக்கையை விட்டு எழுந்தோடி புறவாசலில் நின்று பார்த்தாள்.

அங்கு முத்தனின் கழுதை ஒன்று காட்டு விலங்கால் பீறப்பட்டுக் கிடந்தது. கழுதையின் உடலில் பாதி இல்லை. எல்லாரும் அதைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த மாத்திரத்தில் அடக்க மாட்டாமல் அழுது கொண்டு தன் பாட்டியிடம் ஓடினாள் எல்லா. முத்தன் அப்போது அவளை செல்லமாகப் பார்த்தான்.

முத்தனின் கழுதைகள் இவ்விதம் கொலையுண்ட பிறகு ஊரே கொஞ்ச காலத்துக்கு பீதியில் உறைந்து கிடந்தது. ரத்தகாஜைக் கொண்ட ஏதோ ஒரு துட்ட மிருகம் காட்டுக் கிராமத்தைச் சுற்றித் திரிவதாகசனங்கள் நம்பத் தலைப்பட்டனர். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தான் முத்தன் படுக்கையில் விழுந்து விட்டதாகவும், பாட்டி செத்துப் போனதாகவும் அத்தை வெகு காலமாக எல்லாவினிடத்தில் சொல்லி வந்தாள்.

ஆனால் முத்தன் கிணற்றில் விழுந்ததனால் ஏன் ஆகியிருக்கக் கூடாது என்று நினைத்தாள் எல்லா. கழுதை சாவதற்கு முந்தின வாரத்தில் ஒரு நாள், பொழுது அமர்ந்ததும், நல்ல போதையில் இருந்த முத்தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அத்திராமுலுரெட்டியின் கிணற்றில் விழுந்தான்.

அவன் கூக்குரல் கேட்ட மாத்திரத்தில் வீட்டிலிருப்பவர்கள் ஓடிப் போய் பார்த்தார்கள். முத்தன் கிணற்றின் அய்ந்தாவது மெட்டில் இருக்கின்ற மோட்டாருக்குப் பக்கத்தில் வாட்டமாக உட்கார்ந்திருந்தான்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஊர்ச்சனமே அங்கு கூடி விட்டது. ஆட்கள் குனிந்து பார்த்ததும் கொடூரமான வசவுகளை எடுத்து விட்டபடியே கெஞ்சினான் முத்தன்.

“டே எங்கூத்தியாருங்களே. என்ன மேல ஏத்திவுடுங்கடா”

“இந்த நெலமையில கூட இவன் வாயி அடங்குதா பாரு”

ஊர்சனங்களில் யாரோ ஒருத்தி சொன்னாள். அவன் எப்படி அங்கு போய் உட்கார்ந்து கொண்டிருப்பான்? விழுந்திருந்தால் அடிபட்டிருக்குமே? ஒரு சமயம் அந்தக் கிணற்றிலே விழுந்துச் செத்துப் போன கன்னிப் பெண்ணின் ஆவி தான் அவனை அங்கே கொண்டு போய் உட்கார வைத்து விட்டதோ? என்றெல்லாம் பலவாறு அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

திடகாத்திரமாகவும் துணிச்சலோடும் இருந்த சிலர் வடக்கயிற்றை எடுத்து வந்து கிணற்றில் இறங்கி முத்தனின் இடுப்புக்குக்கு முடி போட்டுக் கட்டினார்கள். கயிற்றை கட்டும் போது ஒருவன் கிழவனைத் திட்டினான்.

“இவ்ளோ பேசறியேடி. நீயே ஏறி வர வேண்டியது தான?”

”நாஏற்ற்….றதுகீட்டும். நீஒளுங்காகட்றாசு…னி”

கிணற்றில் இருந்தவர்கள் சிரித்த சிரிப்பில் எழுந்த எதிரொலியால் திகில் அடைந்த ஊர்மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.

முத்தனை எல்லாவுக்குப் பிடித்த காலமும் ஒன்று இருந்தது. அவன் அமரிக்கையாக வீட்டிலிருக்கும் போது குடிப்பதற்கு அப்பன் எதையாவது புட்டியில் வாங்கி வருவதைப் பார்ப்பாள். அப்போது அத்தையோடு சேர்ந்து கொண்டு காய்ந்த கறித்துண்டுகளை வறுப்பாள்.

தாத்தனும், அப்பனும், மாமனும் சேர்ந்து குடிப்பதை பார்க்கையில் தன் அண்ணன் மட்டும் ஏன் இவர்களோடு சேர்ந்து கொள்ளவில்லை என்று இருக்கும். கறியை மென்று கொண்டே கனிந்தபடி எல்லாவைப் பார்த்து ஆசைத் ததும்ப பேசத் தொடங்குவான் கிழவன்.

“எல்லா கழுதக்குட்டி, உனு மேல்ட்டுக்கு நீதான் எனுக்கு எல்லாமே”

முத்தன் அப்போது அவளுக்கு கதைகளையும் சொல்வான். அவன் சொன்னதில் எப்போதும் நினைவில் இருக்கின்ற ராஜா கதை ஒன்று உண்டு.

ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ஒரு ராணியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டைக்குக் கிளம்பிப் போனார்கள். பின்னாலேயே அவர்கள் வளர்த்து வந்த நாயும் போனது. அந்தப் பக்கமாக விலங்குகள் ஏதாவது வருகிறதா என்று நோட்டம் விட்டபடி, நடுகாட்டில் போய் பதிவிருந்தார்கள்.

அப்போது மானும், முயலும், புலியும், சிங்கமுமாக அந்தப் பக்கம் சென்றன. ஆனால் அந்த ராஜாவால் ஒரு ஜீவராசியைக் கூட அடித்து வீழ்த்த முடியவில்லை. இதன் காரணமாக அந்த ராணி அந்த ராஜாவை இளக்காரமாகப் பார்த்து வந்தாள். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வேடுவன் வந்தான். அவர்கள் கண்ணெதிரிலேயே தன் அம்பைக் கொண்டு ஒரு மானை அநாயாசமாக வீழ்த்தினான். அதை ஆச்சரியமாகப் பார்த்த ராணி அவனோடு போய் விட்டாள்.

வேடுவனோடு போய் விட்ட ராணி கொஞ்ச காலம் போன பின்பு ராஜாவிடமே திரும்பி வந்தாள். ஒரு நாள் காலையில் வேப்பங்குச்சியைக் கொண்டு தன் பல்லைத் தேய்த்த படி குடிசைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ராஜா, இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று தன் முன்னால் வந்து நிற்கும் ராணியைப் பார்த்தான்.

“நான் தட்டுமாறிப் போய் விடவில்லை. எனக்கு வாழ்க்கைப் பிச்சை வேண்டும்”என்றாள் ராணி.

”உனக்கு இரண்டு முடிகள் இருக்கின்றன. அதனால் போய் ஒரு முடியோடு வா சேர்த்துக் கொள்கிறேன்”

என்று சொல்லி ராஜா அவளை அனுப்பி விட்டான். உடனே அங்கிருந்து புறப்பட்டுப் போனாள் ராணி.

”அம்மா வீட்டுக்குப் போனால் அம்மா திடுவார்கள். புருஷன் வீட்டுக்குப் போனால் புருஷன் திட்டுகிறான். நாம் எங்காவது போய்ச் செத்து விடலாம்”

என்று போகிற வழிநெடுகிலும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு போனாள் ராணி. போகப் போகப்போக… அவளுக்கு சினம் அதிகரித்து கொண்டே போனது. வெகுதொலைவு போன பின்பு அங்கே ஒரு பாழடைந்த கோயிலைப் பார்த்தாள்.

அந்தக் கோயிலுக்கு வெளியே, தலை ஒரு வேசமும் துணி ஒரு வேசமுமாக யாராவது வருகிறார்களா என பார்த்தபடி சாமி ஒன்று பரிதாபமாக உட்கார்ந்திருந்தது. ராணியைப் பார்த்த மாத்திரத்தில் சாமியின் முகம் மலர்ந்தது.

”பல வருசங்களாக என்னை கவனிப்பார் யாருமில்லை. இருட்டில் கிடக்கிறேன். என் கோவிலை கொஞ்சம் சுத்தம் செய்து தந்து விட்டு, விளக்கு ஒன்றை ஏற்றிக் கொடுத்து விட்டு போ”

”நானே வேதனையோடு சாவதற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் உனக்கு வேறு உபசாரம் செய்ய வேண்டுமா? போ”

கோபமும் சலிப்புமாகச் சொல்லி விட்டு அங்கிருந்துப் போய் விட்டாள் ராணி. கொஞ்ச தூரம் போனதும் அவளுக்கு ஒரு சிங்கம் எதிர்பட்டது. அது ஒரு கூண்டில் சிக்கியிருந்தது. சிங்கம் ராணியைப் பார்த்துக் கேட்டது.

”என்னைக் கொஞ்சம் இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடேன்”

அதற்கு ராணி சொன்னாள்.

”நான் உன்னை கூண்டிலிருந்து விடுவித்ததும் என்னைத் தின்று விடுவதற்காகத் தானே கேட்கிறாய்? மாட்டேன் போ”

கொஞ்சத் தொலைவில் ராணி ஒரு ரோஜா செடியைப் பார்த்தாள். அதுமுள்ளடைந்துக் கிடந்தது. ராணி முள் மண்டைகளை விலக்கி விடுவாள் என்று அது எதிர்பார்த்தது. ஆனால் ராணி அப்படி செய்யவில்லை. அந்த ரோஜா செடியை திரும்பிப் பார்க்காமலேயே போய் விட்டாள்.

இன்னமும் கொஞ்ச தொலைவுக்குப் போனதும் காலில் முள்குத்திக் கொண்டு நடப்பதற்கே சிரமப்படும் ஒரு யானையையும் பார்த்தாள் ராணி. ஆனால் அந்த முள்ளை வாங்கி விடுவதற்கு அவளுக்கு மனம் வர வில்லை.

வெகு தூரம் போன ராணி வழியில் இருந்த ஒரு மாமரத்தினடியில் உட்கார்ந்து கொஞ்சம் இளைப்பாறினாள். அம்மாமரத்தில் இருந்த காய்களெல்லாம் கெட்டுப் போயிருந்தன.

”இந்தக்காய்களை பறித்துப் போட்டு விட்டு, எனக்குக் கொஞ்சம் தண்ணிர் ஊற்றி விட்டு போகிறாயா?”

மாமரம் ராணியிடம் கேட்டது.

”ஆ….நானே இங்கு வேலை இல்லாத வெக்க நாய்ப் போல போய்க் கொண்டிருக்கிறேன். நீ எனக்கு வைக்கிற வேலையைப் பாரேன்”

அங்கிருந்து எழுந்து மேலும் நடந்தாள் ராணி. நீண்ட தொலைவுக்குப் போனதும் கிழவி ஒருத்தி மரத்தடியிலே தனியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். அவளுக்கு களைப்பாக இருந்தது. கிழவியிடம் உதவி கோரி நின்றாள்.

“பாட்டி நான் ஒரு ராணி. கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும்”

“மெத்தையில் படுத்துக் கொள்கிறாயா? கோரைப்பாயில் படுத்துக் கொள்கிறாயா?”

“அது தான் சொன்னேனே. நான் ஒரு ராணி என்று. எனக்கு மெத்தை தான் வேண்டும்”

காலையில் ராணி எழுந்ததும் குளிப்பதற்குப் போனாள். அப்போது கிழவி அவளிடம் ஒரு எலுமிச்சைப் பழத்தைக் கொடுத்துச் சொன்னாள்.

“என்னைத் திரும்பியே பார்க்காமல் கிணற்றுக்குப் போய் குளித்து விட்டு, இந்தப் பழத்தை கிணற்றிலே போட்டுவிடு. பிறகு திரும்பிப் பார்க்காமல் என்னிடம் வா”

ஆனால் ராணி அப்படிச் செய்யாமல் தொண்ணூற்று இரண்டு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டு போய், அப்படியே தொண்ணூற்று இரண்டு முறை திரும்பிப் பார்த்தபடி வந்தாள். கிழவியினிடத்தில் வந்ததும் தனக்கு மாற்றுக் கட்டாக பட்டு வஸ்திரம் வேண்டுமென்றாள்.

“நானே ஏழைக்கிழவி. என்னிடம் ஏது பட்டுவஸ்திரமும், பீதாம்பரமும்? இந்தா ஒரு கிழிந்தப் புடவை”

கிழவி தந்த கிழிந்தப்புடவையோடு திரும்பி நடந்தாள் ராணி. அப்போது திடீரென சிங்கம் அவளைத் துரத்தத் தொடங்கியது. யானையும் அவளைப் பார்த்து ஓடி வந்தது. மாமரத்திலிருந்த அழுகிய காய்கள் அவள் மீது ஆலங்கட்டிகளைப் போல வந்து விழத் தொடங்கின. ரோஜா முட்கள் ராணியின் கால்களைக் குத்தின.

அவள் எப்படி எப்படியோ ராஜாவினிடத்தில் வந்து நின்றாள். அவளின் இரண்டு முடிகளும் கூட உதிர்ந்து விட்டிருந்தன. அப்போது ராஜா அவளிடத்தில் சொன்னான்.

”நீ இன்னொரு முறை போய் விட்டு வா”

குப்பில் எதையோ செய்து கொண்டிருந்த போது, பள்ளிக்கூடச் சுவரை அணைத்தபடி இருக்கும் தென்னந்தோப்பில் அப்பனும் இன்னும் சில ஆட்களும் தேங்காய் வெட்டுவதைப் பார்த்தாள் எல்லா. அதுவும் அவள் வகுப்புச் சன்னலுக்கு பக்கத்திலேயே. தென்னை மரத்தில் ஏறி தென்னங்காய்களை குலைக்குலையாக வெட்டிப் போட்டான் அப்பன். பழுத்த ஓலை, பாளைகளையும் பண்ணாடைகளையும் பிடுங்கி எறிந்து விட்டு மரத்துக்கு சிரைக் கழித்தும் விட்டான். வெட்டுக் கத்தியை புட்டியில் சொறுகிய படி வாரை இடுப்பில் மாடிக் கொண்டு அவன் தென்னைகளில் ஏறுவதையும் இறங்குவதையும் பார்க்கும் போது காட்டு விலங்காய்த் தெரிந்தான்.

பாறையைப் போல இறுகியிருந்த அவன் வெற்று உடம்பைப் பார்க்க எல்லாவுக்கு பெருமிதமாக இருந்தது. பள்ளிக் கூடத்து வாத்தியார்களுக்கு இருக்கும் சால் வயிறுகளைப் போல அப்பனுக்கும் வந்து விட்டால் எப்படி இருப்பான் என்று எண்ணி அசூயைக் கொண்டாள் எல்லா. அந்நேரம் பார்த்து அவளை சன்னல் வழியாகக் கூப்பிட்ட அப்பன் பள்ளிக் கூடத்து  வாத்தியார்களுக்கு  இளநீர் சீவிக் கொடுத்தனுப்பினான்.

“நா இப்பிடியே டவுனுவரைக்கும் போயிட்டு வரேன் எம்மாடி. சாங்காலம் ஊட்டுக்குப் போனதும் ஒங்கம்மாக்கிட்ட சொல்லிடு”

பிற்பகல் ஆன போது வந்த அறிவியல் வகுப்பில் எழுதுவதற்கு நோட்டுப்புத்தகம் எதுவும் இல்லாமல் நின்றாள் எல்லா. அவற்றை வீட்டுக்குப் போய் எடுத்து வரச் சொல்லி விரட்டினார் வாத்தியார். அரக்கப் பரக்க வீட்டுக்கு ஓடிய போது வெளி வாசலின் தடுக்கு இலேசாக திறந்திருப்பதைப் பார்த்தாள்.

இந்நேரம் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்களே என்று குழம்பினாள் எல்லா. அப்பன் டவுனுக்குப் போனான். அம்மா தேங்காய் பொறுக்கிப் போட காலையிலேயே புறப்பட்டு எங்கோ போனாள். அத்தையும் மாமனும் கட்டட வேலைக்கு. தாத்தனோ மேய்ப்புக்கு.

சத்தம் செய்யாமல் வாசலுக்குள் நுழைந்த எல்லா, ஒருக்களித்துத் திறந்திருக்கும் கதவின் வழியே வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள். நடுவீட்டில் பாயில் கிடந்த அம்மாவின் மீது யாரோ ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். திகிலடைந்த எல்லா சத்தம் செய்யாமல் தெருவுக்கு வந்து பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடினாள்.

வகுப்பில் உட்கார்ந்திருக்கையில் வீட்டில் பார்த்ததே நினைவாய் இருந்தது. வெய்யில் தாழ்ந்ததும் அவர்களை விளையாட்டுக்கு விட்டார்கள். எல்லாவின் வகுப்பு கூட்டாளிகள் மட்டும் மைதானத்தின் ஒரு பக்கமாகப் போய் தாண்டு மாட்டம் ஆடினார்கள்.

எல்லா குனிந்திருந்த போது ஒருவன் புட்டத்தில் தட்டியதால் ஆத்திரமுற்று அவனை நையப் புடைத்தாள். உடனே பிராது வாத்தியாரிடம் போனது. அவளைக் கூப்பிட்டு விசாரித்த வாத்தியார் எல்லாவை சுவர்ப க்கமாகத்திரும்பச் செய்து விட்டு வசமாக அவள் புட்டத்தில் அடித்தார்.

“ஏன் உனுக்கு பையனுங்கன்னாலே ஆகறதில்ல? எப்பப்பாரு உம் மேல பையன்களை அடிச்சதாவே புகார் வருது?”

மாலையில் வீடு திரும்பியதும் எல்லாவுக்கு அம்மாவோடு பேச பிடிக்காமல் இருந்தது. அந்த வாரத்தில் தான் அவள் பெரிய மகளை மட்டும் தன்னோடு கூட்டிக் கொண்டு எங்கோ போனாள். பின்பு அவளை அங்கும் இங்கும் பார்த்ததாக ஊர்ச்சனங்கள் பேசிக் கொண்டார்கள். வகுப்பில் தன்னுடைய தோழிகள் பேசிக் கொள்வதைக் கூட கேட்டாள் எல்லா. ஆனால் அம்மா ஏன் அப்படி போய் விட்டாள் என்று மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

பல மாதங்கள் சென்ற பிறகு அத்தையோடும் மாமனோடும் நகரத்துக்குப் போயிருந்த போது எல்லாவுக்கு அம்மாவை பார்க்க நேர்ந்தது. அம்மா எல்லாவைப் பார்த்ததும் ஓடி வந்து சேர்த்தணைத்துக் கொண்டு அழுதாள்.

“உங்கொக்கா வந்துட்ட மாதிரி நீயும், அண்ணனும்எங்கூடவந்துடுங்க”

“நாங்க அப்பன உட்டுட்டு வர மாட்டோம்”

எல்லா தன் அம்மாவை விடுவித்துத் தள்ளி விட்டு அத்தையிடம் வந்து ஒட்டிக் கொண்டாள். கொஞ்ச நேரத்துக்கு அம்மாவையே முறைத்தபடி இருந்தாள். போன முறை சொந்தக்காரர்களைப் பார்ப்பதற்காக வெளியூருக்குப் போன போது, இவள் ஏதோ ஒரு திருட்டு வழக்கில் ஜெயிலில் இருப்பதைக் கேள்விபட்டதாகத் தானே அத்தை நம்மிடம் வந்து சொன்னாள்? அம்மா சிறையில் இருக்காமல் இங்கு ஏன் சுற்றுகிறாள்? அவளுள் எண்ணங்கள் ஓடின.

படுத்த படுக்கையாய் ஆன நாள் பிடித்து முத்தனின் கூப்பாடு மெள்ள மெள்ள அதிகரித்துக் கொண்டே வந்தது. தன்னை நிர்க்கதியாய் விட்டுவிட்டுப் போன கிழவியை அவன் ஓயாமல் சபித்தான். அவன் ஏவலுக்கு பணிந்த செத்துப்போன கழுதைகள் செத்துப்போன கிழவியின் குழியைப் போய் மூர்க்கமாகத் தோண்டின.

பெண்டாட்டியை தவற விட்ட மகனைத் திட்டினான். கட்டிக் கொடுத்த இடத்தில் வாழாமல் வீட்டுக்காரனை தன் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்ட மகளைத் திட்டினான். அவனை அடிநாள் தொட்டு வஞ்சித்த ஆட்களையும், கழுதைக்குச் சுமைக்கூலி கொடுக்காமல் ஏமாற்றியவர்களையும், ஊருக்குச்சாலை போடாத கட்சிகளையும் நாளுக்கு ஒருவர் வீதம் முறை வைத்து முறை வைத்து சபித்தான்.

குடிசைக்குள் அவன் இருக்க விரும்பாததால் கழுதைகள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பட்டியின் ஓரத்தில் அவனை நிரந்தரமாகக் கிடத்தினார்கள். கோணிப் பைகளையும் பழம் புடவைகளையும் அவனுக்கு மெத்தென்றிருக்க படுக்கையில் விரித்தாள் மகள். பட்டிக்குக் குடி வந்திருக்கும் முத்தனை அங்கு ஒன்றாய் வாழ்ந்து வந்த காட்டுமாடுகளும், ஆடுகளும் ஒரு சொல்லும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டன. அவனுக்கு அணப்பாக இருக்க தென்னை ஓலைகளால் ஒரு கூரை வேய்ந்தான் மகன். தேங்காய் வெட்டுக்குப் போகையில் அதற்கான ஓலைகளை அவன் சுமந்து வந்தான்.

முத்தன் படுக்கையில் விழுந்ததிலிருந்து அவன் மகளே அவனுக்குச் சோறூட்டினாள். குளிக்க வைத்தாள், உடை மாற்றினாள். அவன் மூத்திரத்தைப் பிடித்து ஊற்றினாள். கழிவை அள்ளிக் கொட்டினாள். சில நேரங்களில் எல்லாவும் தன் அத்தைக்கு உதவுவாள்.

அசைவப் பிரியனாய் இருந்தவன் முத்தன். நடமாடிக் கொண்டிருந்த காலத்தில் அவன் வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது வேட்டைக்குப் போவான். காட்டுக்கோழி, ஜிட்டக்கோழி, முயல், மான், உடும்பு என்று எதாவது அவனுக்குக் கிடைக்கும். எதுவுமே இல்லையென்றால் அணில்களையோ, வௌவால்களையோ சுட்டுத் திண்பான்.

படுக்கையில் விழுந்த பிறகும் அவன் தன் நாவைக் கட்டவில்லை. சாப்பாடு உரப்பில்லையென்றால் மகளின் முகத்தில் சோற்றைத் துப்பினான். கொஞ்சம் கூடத் தயங்காமல் மகள் மீது கழுதைகளை ஏவினான். எல்லாவுக்கு அத்தையை நினைக்கவே பாவமாய் இருந்தது.

’எட்டிக் காயையோ, ஒட்டந்தழையையோ அரைத்துத் தந்து இந்தக் கிழவனின் கதையை இன்னும் ஏன் முடிக்காமல் இருக்கிறாள் இந்த அத்தை?’

முத்தன் படுத்திருக்கும் பட்டியின் ஒரு மூலையிலேயே படப்புக் கொம்பை பிடித்துக் கொள்ளச் சொல்லி அம்மணக்கட்டையாக நிறுத்தி வைத்து அத்தை அவனைக் குளிக்க வைப்பதைப் பார்த்திடும் போதெல்லாம் முத்தனைக் கொல்லும் எண்ணம் எல்லாவுக்கு மேலும் மேலும் வலுப்பட்டு வந்தது.

கிழவனுக்கு மலம் வராமல் போன ஒரு முறை அப்பன் யாரோ ஒருவனை ஊருக்குள்ளிருந்து கூட்டிக் கொண்டு வந்தான். வந்தவன் குடித்திருந்தான்.

“கொளந்திங்களுக்கு வராம பூட்டா மொறயாக்கீறவங்க செய்யிறதில்லையா? ஒங்கொப்பன் இப்ப கொளந்தையா மாப்ள!”

அவர்கள் முத்தனைக் கவிழ்த்துப் போட்டு எதையோ செய்வதைப் பார்த்ததிலிருந்து எல்லாவின் வெறுப்பு மென்மேலும் கூடிக்கொண்டே போனது.

எல்லாவின் அப்பனுக்கு ரஜினியை ரொம்பவும் பிடிக்கும். அம்மா போய் விட்ட பிறகு அப்பனின் அழிம்புகள் அதிகமாகி விட்டதை எல்லாவால் சகிக்க முடியவில்லை. நிரம்பவும் குடித்தான். போய் விட்டவளைத் திட்டினான். போதை அதிகமாகையில் அவளிடமும் அவள் அண்ணனிடமும் நியாயம் ஒப்புவித்தான். அவன் அப்படி பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் தங்கை கத்தினாள்.

“ஆனது ஆச்சி. போனது போச்சி. உட்டுட்டுப்போய்படுண்ணா. கொளந்திங்கக் கிட்ட போய்ப் பேசிணு”

அப்போதெல்லாம் அத்தை தன் மீட்புக்கு வருவதை நினைத்து சந்தோஷப்பட்டாள் எல்லா. ஒருநாள் அப்பன், ’நான் அடிமையில்லை’ படத்தின் டிவிடியை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் போட்டான். ஒரு ஜீவன் தான் பாட்டு வந்ததும் எழுந்து வெளியில் ஓடி நாகமரக்கூட்டத்தைப் பார்த்து, “நான் குடிப்பேன். குடிச்சிக்கிட்டே இருப்பேன். என்ன கேக்கறதுக்கு யார் இருக்கா?” என்று கேட்டான். அப்போது பெரியவன் வீட்டுக்குள்ளிருந்து கத்தினான்.

“போவ். வசனம் பேசந்து போதும். வந்து சாப்புட்டுத் தூங்குயா”

அப்பனை அண்ணன் அப்படிஅ தட்டுவதைக் கேட்டு வெகு நேரத்துக்குச் சிரித்துக் கொண்டிருந்தாள் எல்லா.

வேனிற்காலத்தில் கிடங்கில் கூத்து ஒத்திகை தொடங்கியது. அப்பனும் மாமனும் ஒத்திகைப் பார்ப்பதை தினந்தோறும் போய்ப் பார்த்து வந்தாள் எல்லா. அப்பன் எப்போதும் பெண் வேடம் கட்டுவதும், மாமன் எப்போதும் ஆண் வேடம் கட்டுவதும் ஏன் என்று கேட்பதற்கு சித்தம் கொண்டிருந்தாள் அவள். பெருமாள் கோயிலுக்கும் மாரியம்மன் கோயிலுக்கும் நடுவிலிருந்த களத்தில் கொட்டகை போட்டு ஒத்திகையை நடத்தி வந்தார்கள்.

கூத்துக்குத் தேதிக் குறித்திருந்த வாரத்தில் அந்தச் சேதி வந்து சேர்ந்தது. ஆந்திராவிலிருக்கிற மாமனின் கூடப் பிறந்தவர்களில் யாரோ ஒருவர், கள்ளிறக்கும் போது தென்னையிலிருந்து விழுந்து முதுகெலும்பை உடைத்துக் கொண்டாராம்.

திடீரென்று இப்படி ஆகிவிடுமென எல்லா கொஞ்சமும் நினைக்கவில்லை. சேதி வந்த உடனே அத்தையும் மாமனும் புறப்பட்டுப் போனார்கள். பயணம் கட்டிக் கொண்டிருக்கையில் அத்தை அவளிடம் சொன்னாள்.

“எம்மாடி நாவர வரைக்கும் தாத்தன நீ தான் பாத்துக்கனும்”

அவர்கள் போன ஒரு நாளுக்கெல்லாம் அவளுக்கு எல்லாமே மாறி விட்டதாக நினைப்பு வந்தது. காலையில் எழுந்ததிலிருந்து அப்பனும் அண்ணனும் வேலைக்குப் புறப்படும் வரையிலும் அடுப்படியிலேயே கிடந்தாள்.

முத்தனுக்குச் சோறூட்டத் தொடங்கினாள். அவனுக்குத் துணி மாற்றினாள். மூத்திரம் பெய்திருக்கிறானா எனப் பார்த்தாள். குமட்டிக் கொண்டே கழிவை எடுத்துப் போட்டாள். அது உடம்பெல்லாம் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைத்துகைக் கால்களை தேய்த்துத் தேய்த்துக் கழுவினாள். திடீர் திடீரென்று அவன் போடும் வெறிக்கூச்சலுக்கு ஓடிப் போய் நின்றாள். நாகமரங்களுக்கு கீழே தனியாக அழுதாள்.

“தாத்தா மூத்ரம் பேஞ்சிக்கிதா போய் பாருயே”

அண்ணன் கேலி செய்கையில் அழுகையும் வெறியும் வந்தது. முத்தனைக் குளிக்க வைத்திடும் வேளைகளில் பட்டியின் ஓரத்தில் அவனை நிறுத்தி அவளைத் தனியே விட்டுவிட்டுப் போனான் அண்ணன். ஒருத்தியாகவே அவனைத் தேய்த்து குளிப்பாட்டினாள் எல்லா.

கிழவனின் முன்னுடம்பில் கைவைக்கும் போதெல்லாம் அவளுக்கு நடுக்கமும் அருவருப்பும் கூடியது. அந்த கணத்தில் மட்டும் அவன் உடலில் ஏதோ ஒன்று மாற்றமடைந்து விடுவதாகப் பட்டது. அவன் குளித்ததற்கு பின்பு சோறூட்ட போகையில் முத்தன் எல்லாவின் கழுத்தை நெறிப்பதற்கு மூர்க்கம் கொண்டு நெருங்கி வந்தான். கொடூரமாக அவளைத் திட்டியதுடன் தன் கழுதைகளையும் அவள் மீது ஏவி விட்டான்.

அத்தை போனதற்கு ஒரு வாரம் கழித்து காய்ச்சல் என்று அப்பன் படுத்துக் கொண்டதும் எல்லாவை கிலி பிடித்துக் கொண்டது. அப்பனின் அம்மணத்தையும் பார்க்க நேர்ந்து விடுமோ என நடுங்கினாள் அவள். பள்ளிக்கூடத்துக்குப் போவதையும் மறந்துப் போனாள்.

முத்தன் வழி விடும் போது தாமதமாகப் போய் புட்டத்தில் அடி வாங்கினாள்.

“எப்பக்கேட்டாலும் தாத்தன குளிப்பாட்டிட்டு வந்தேன். சோறு ஊட்டிட்டு வந்தேன். அவன் என்னா உனுக்கு கொளந்தையா? இல்ல ஊட்டுக்காரனா?”

வாத்தியார் சொல்லிச் சொல்லி அடிக்கும் போது வகுப்பே சிரித்தது. கோபம் கொண்டவளாய் ஒரு நாள் வாத்தியாரை முறைத்த போது அவர் மேலும் அடித்த படி சொன்னார்.

“என்னியவே மொறைக்கிறயா? ஒளுங்கா எளுதி குடுத்துட்டு ஓடிடு”

ல்லா பள்ளிக்கூடத்திலிருந்து நின்று போன ஒரு வாரம் கழித்து அவள் எழுதி வைத்து விட்டுப்போன கடிதம் கிடைத்தது. அதை அவள் நீள்மேசை அறையிலிருந்து எடுத்து வகுப்புக்கூட்டாளிகள் வாத்தியாரிடம் கொடுத்தார்கள். கசங்கிய நோட்டில் கிழிக்கப் பட்டதாள் ஒன்றின் நடுவில் அதை எழுதி வைத்திருந்தாள் எல்லா.

‘அம்மா இல்ல. அப்பாக்கு காய்ச்சல். அத்தை ஆந்திரா. நான் அனாதை தான்-உண்மையுள்ள எல்லா’

கடிதத்தை படித்த வாத்தியார் செய்வதறியாது திகைத்தார். அதை ஒரு விடுமுறை விண்ணப்பமாக எவ்வகையில் எடுத்துக் கொள்வது என்றும் குழம்பினார்.

ஒரு மாதம் கழிந்து விட்டிருந்தது. எல்லா, முத்தனின் மூத்திரத்தோடும், மலத்தோடும், அம்மணத்தோடும் உழன்று கொண்டிருந்த போது அத்தையு ம்மாமனும் கிடங்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் வந்த சில நாட்களிலேயே முத்தனுக்கு படுக்கைப் புண்கண்டது. புங்கெண்ணையும் வேப்பெண்ணையுமாகப் போட்டும் அது ஆறவில்லை. கொஞ்ச காலத்திற்குள்ளாகவே புழுபுழுத்துச் செத்துப் போனான் முத்தன்.

தாத்தனின் சாவுக்கு வரும் பெண்கள் தன்னை எதற்குக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் என்று ஆத்திரப்பட்டபடி உட்கார்ந்திருந்தாள் எல்லா. சாவைப் பார்ப்பதற்காக வந்த அம்மாவை உறவுக்காரப் பெண்களில் சிலர் துரத்திக் கொண்டு போனதும் கூட அவளுக்கு வினோதமாகவே தெரிந்தது.

சாவுத் தீட்டுக் கழியும் வரைக்கும் தினந்தோறும் முத்தனின் குழியருகில் போய் உட்கார்ந்து அழுகின்ற அத்தையுடன் சென்று அவளை முறைத்தபடி உட்கார்ந்திருந்த எல்லா, முத்தனின் காரியம் முடிந்த மறுநாளே ருதுவாகி விட்டாள்.

“இதுவும் நல்லதுக்குத்தான் போ”

என்றார்கள் ஊர்ப்பெண்கள். எல்லாம் முடிந்து வீடு வெறுமைக் கொண்டு விட்டது. வீட்டிலுள்ளவர்கள் அவரவர் வேலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள். எல்லாரும் போனதற்குப் பிறகு வெறும் வீட்டைக் காத்திருப்பதற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. சலிப்புற்ற ஒரு நாளில், மூலையில் கேட்பாரற்றுக் கிடந்த புத்தகப் பையைப் பார்த்ததுமே பள்ளிக்குப் போகலாமென எண்ணிக் கொண்டாள் எல்லா.

அவளை வீட்டுக்கு அழைத்துக் கொண்ட பிறகு தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்த போது அது அவளுக்கு வேறுமாதிரியாகத் தெரிந்தது. எவ்விதம் இப்படி மாறினோமென்றும் குழம்பியது. வீட்டுக்கு வெளியே மாமன் போட்ட குடிசையில் உட்கார்ந்திருந்த சமயத்தில் கூடப் படிக்கின்ற பெண்கள் அவளை வந்துப் பார்த்து தமக்குள்ளாகவேச் சிரித்து கொண்டார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போனால் பையன்களும் சிரிப்பார்களோ என சந்தேகப்பட்டாள். எல்லாவுக்கு அதை நினைக்கும் போது வெட்கமாகவும் இருந்தது.

எல்லா தனது பள்ளிப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். ஊர் எல்லையிலிருக்கும் காட்டாற்றிலிறங்கி ஏறினாள். ஆற்றின் கரையோரமாகப் போகும் பாதையில் நடந்தாள்.

வழி நெடுகிலும் அடர்ந்திருந்த புரசமரங்கள் இளஞ்சிவப்பு மலர்களைப் பூத்துக்களித்திருந்தன. அங்கு மெல்லிய ரீங்காரம் ஒன்றை அவளால் கேட்க முடிந்தது. பறவைகளும், ஈக்களும் அம்மரங்களில் மொய்த்திருப்பதைக் கொஞ்ச நேரத்துக்கு நின்று பார்த்தாள்.

அவளைக் கடந்து போகும் இரு பெண்கள் பேசிக் கொள்வது நன்றாகக் கேட்டது.

“முத்தன் போனதுமே ஒக்காந்துட்டாளாம் இந்தப் பொண்ணு”

“என்னாடி அதிசியம்! முன் பொறப்பு ரொணமா? அவங்கூட வாழ்ந்திருப்பாளோ?”

அதைக் கேட்டதும் எல்லாவுக்கு வெட்கமும் கோபமும் ஒரு சேர உண்டானது. கூடவே முத்தனின் அம்மண உடலும் ஏனோ நினைவில் வந்து போனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *