காத்திருப்பு

 

 

 

 

தமிழ்நதி

ஓவியம் : ஜீவா

புகைப்படங்கள் ; அனாமிகா


வெயில் எரிக்கும் ஜூலை மாதத்தின் பின்மதியப் பொழுதொன்றில், அப்போதுதான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சாப்பிடவென்று குசினிக்குள் அமர்ந்த கோகுலனை, அம்மாவிடமிருந்து பிரித்து ஜீப்பினுள் இராணுவம் எறிந்தபோது அவனுக்கு வயது பதினேழு. உள்ளங்கைக் குழி கொள்ளுமளவு எண்ணெய் வைத்து வாரினாலும் அடங்காத அடர்ந்த தலைமயிரில் ஒருவனும் கால்களில் இருவருமாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் எறிந்தார்கள். அப்போது கோகுலனின் அப்பா வயலுக்குப் போயிருந்தார். கதறியபடி ஜீப்பினருகில் ஓடிச்சென்ற ஞானம்மாவை ஒருவன் ஓங்கி அறைந்தான்.  உலர்ந்த சருகொன்று கிளையிலிருந்து மண்ணில் வீழ்வதென அவர் ஓசையெழுப்பாது புழுதியில் சரிந்தார். ஜீப்பின் கதவு அவருடைய வாழ்வின்மீது அறைந்து சாத்தப்பட்டது. எழுந்தபோது அவரது கணவர் இடிந்துபோனவராக அருகில் அமர்ந்திருந்தார். வீடு இருண்டு கிடந்தது. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி ஆறாம் ஆண்டு வெளியேறிய ஒளி மறுபடியும் அந்த வீட்டுக்குள் திரும்பிவரவில்லை.

அதன்பிறகு ஞானம்மா உறங்கியதேயில்லை என்று ஊருக்குள் ஒரு கதையுண்டு. ஆனால், எப்போதாவது உறங்குகிறார். அதனால் உயிரோடு இருக்கிறார். பெரும்பாலும் கோழித்தூக்கம். அசதியினாலோ கவலை மிகுதியினாலோ அவர் கண்ணயரும்போது முற்றத்தில் ‘அம்மா!’ என்று அவன் அழைப்பது கேட்கும். எழுந்து ஓடுவார். படலையை நெருங்கும்போதே தெரிந்துவிடும் அவன் இல்லை என்பது. ஆண்டுக்கணக்கில் நடந்துகொண்டேயிருப்பவரைப் போல தளர்ந்துபோன உடலைச் சுமந்துகொண்டு திரும்பிவருவார்.

“அம்மா! பசிக்குது. சாப்பாட்டைத் தாணை”

“அம்மா! என்ரை சீப்பைக் கண்டனீங்களா?”

“அம்மா! இண்டைக்கு ரியூசன் இருக்கு. நேரஞ் செண்டுதான் வீட்டை வருவன்”

கோகுலனின் குரலை அவர்களால் சிறைப்பிடித்துக்கொண்டு போக முடியவில்லை. அது வீடெங்கும், வளவெங்கும் நிறைந்து நின்று அம்மாவைக் கூப்பிட்டது. குரல் ஒலிக்கும் திசைகளில் தலை திரும்பும். கால்கள், குரலுக்குரியவனைத் தழுவுதற்காய் எழுந்தோடும். கோகுலனை இராணுவம் பிடித்துக்கொண்டு போகும்போது ஞானம்மாவுக்கு முப்பத்தேழு வயது. சிரமப்பட்டேனும் ஓட முடிந்தது. ஆண்டுகள் வளர்ந்து, தலை வயதுக்கு மீறி வெளுத்து, தோல் சுருங்கி, கண்களில் பூ விழுந்த பிறகு அவரால் ஓடமுடியாது போயிற்று. இருந்த இருப்பில் தலையை மட்டும் திருப்பி “இந்தா வாறன் அப்பன்” என்றபடி தரையில் கைகளை ஊன்றி எழுந்திருப்பார்.  இது நெடுநாள் தொடர்ந்தது. கோகுலனின் தகப்பனால் இந்தப் பரிதாபத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை.

“அவனை விட்டிடுவாங்கள். நீ உன்ரை மனசை விட்டிடாதையப்பா!” அவர் மன்றாடிக் கேட்பார். கண்கள் நிறைந்து பெருக ‘உண்மையாகவா?’ என்பதாக ஞானம்மா பார்ப்பார். அப்படிப் பார்க்கும்போது, ஒரு தாயின் கண்கள் குழந்தையினுடையதாக மாறியிருக்கும்.

ஆனால், மனைவியின் வேதனையை அவரால் உணரமுடியும். ஊரையும் உறவுகளையும் மீறி இரவோடிரவாக ஞானம்மாவைக் கூட்டிக்கொண்டு விசுவமடுவுக்கு ஓடிப்போனபோதிருந்த காதல் இன்னும் குறையவில்லை. அடைக்கலம் கொடுத்த நண்பனின் வயல் காவற்கொட்டிலில் நிகழ்ந்த கலவியில் கருவான பிள்ளை கோகுலன். மல்லாந்து கிடக்கையில், கிடுகினூடே தெரிந்த நிலவு ஒரு கீற்றாக மாறி தன் வயிற்றினுள் தங்கியதாய் ஒருதடவை ஞானம்மா தன் கணவரிடம் சொன்னார். மூன்று மாதக் குழந்தையான கோகுலனைக் கையிலேந்தி யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியபோதும் உறவுகள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

கோகுலனுக்குப் பிறகு வயிற்றில் தங்கியதெல்லாம் அழிந்தன. இவன்தான் மிஞ்சிய ஒற்றைக்குஞ்சு! தாயின் நிறத்தையும் தகப்பனின் உயரத்தையும் கொண்டு பிறந்திருந்தான். சுருள் முடியும் மருட்டுகிற கண்களும் கொண்ட அழகன். கோயில் திருவிழாக்களில் அவனுடைய வயதுக்குத் தோதான பெண்கள் அவனைப் பாராததுபோல பார்ப்பதை அம்மா பெருமையோடு கவனித்திருக்கிறார்.

அவர்களிலொருத்தியின் புகைப்படத்தை, அவன் பிடித்துச் செல்லப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு பாடப் புத்தகங்களைத் தூசி தட்டும்போது ஞானம்மா கண்டெடுத்தார். அவள் நாவல் நிறப் பாவாடையிலும் சிவப்பு நிறத் தாவணியிலும் வெட்கப்பட்டுக்கொண்டு நின்றாள். அந்தப் புகைப்படத்தை எடுத்தவன் கோகுலனாகவே இருக்கவேண்டும். அந்தப் பெண், அபிராமி, முருகன் கோயில் கணக்கப்பிள்ளை சிவசேகரத்தின் இரண்டு மகள்களில் மூத்தவள். கோயிலின் பின்புறம் வயல்வெளிகளுக்கு அப்பால் அவளுடைய வீடிருந்தது.  கோயில் தூண்கள் ஏதாவதொன்றில் சாய்ந்தபடி இரகசியமாக கண்ணீர் சிந்துபவளாக மாறிவிட்ட அவளை ஞானம்மா கவனிக்கத் தொடங்கினார்.  ஞானம்மாவைக் காணுந்தோறும் அந்த அழகிய கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும்.

‘முருகா! இந்தப் பிள்ளையளைச் சேத்து வை’ அம்மா இறைஞ்சினார்.

ஒருமுறை, அபிராமி தற்செயலாகவோ வேண்டுமென்றோ ஞானம்மாவுக்கருகில் வந்து அமர்ந்தபோது அவளது கைகளைத் தொட்டு “கெதியா வந்திடுவான்” என்றார். பிறகு, கோயிலிலிருந்த எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படி பெருங்குரலெடுத்துக் குமுறியழுதார்.

அந்தப் பெண் அதிர்ச்சியோடும் துக்கத்தோடும் மருண்டபடி எழுந்து நின்றது. ஞானம்மா, தரையில் தலை அடிபட மயங்கி விழுந்தார்.  அங்கிருந்தவர்கள் அவரைத் தூக்கி சுவரில் சாய்த்து தண்ணீர் தெளித்து வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள்.

தன் கணவர் நித்திரையில் செத்துக் கிடந்ததை ஒரு அதிகாலையில் ஞானம்மா கண்டுபிடித்தார். மரணம் அவரை பிரிவின் நெருப்பிலிருந்து விடுவித்திருக்கவேண்டும். அப்படியொரு புன்னகையோடு கிடந்தார்.

ஞானம்மாவுக்கும் சாவதற்கு விருப்பந்தான். இப்படி அனுதினமும் காத்திருப்பதை விட மரணம் உத்தமமென்றே எண்ணினார். ஆனால், திடீரென்று ஒருநாள் இந்தப் படலையை கோகுலன் தன் வழக்கப்படி ஓசையெழத் தள்ளிக்கொண்டு வந்து “அம்மா” என்று கூப்பிடும்போது தான் இல்லாமற் போனால் அவனுடைய மனம் துயரத்தில் சுருங்கிப்போகுமே… ஐயோ! அந்தக் காட்சியை அவரால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை!

நோயிலிருந்தும் தீமைகளிலிருந்தும் பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளையை ஒரு நொடியில் யாரோ வந்து தன் கைகளிலிருந்து கவர்ந்துகொண்டு செல்லமுடியும் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு நூலைப் பிரித்தால் சரசரவென பிரிந்துகொண்டேபோகும் துணியைப் போலாகிவிட்டார்.

சிறைச்சாலைகளின் வழிகளெல்லாம் அவருக்கு இப்போது தெரியும். மேலும், சில சிங்கள வார்த்தைகளையும் கற்றுக்கொண்டுவிட்டார். கோகுலனை அவர் தேடித்திரியாத முகாம்களில்லை; சிறைச்சாலைகளில்லை எனும்படியாக அலைந்தார். இந்த உலகத்தில் அப்படியொருவன் பிறக்கவே இல்லையென்ற முகபாவத்தோடு எல்லோரும் கைவிரித்தார்கள்.

சிறைச்சாலைகளின் வாயிற்காப்போன்களுக்கு ஞானம்மாவின் முகம் பரிச்சயமாகிவிட்டது.

“ஆ… அந்த மனுசி திரும்பவும் வந்திட்டுது” ஒருவன் அலுப்போடு சொல்கிறான்.

“இல்லாத பிள்ளையைத் தேடித் திரியும் தாய்” மற்றவன் சற்று பரிதாபத்துடன் முணுமுணுக்கிறான். பதிலளிப்பதற்காக சலிப்பு படர்ந்த முகத்தோடு அவன் எழுந்து நிற்கிறான். நொடியில் பதிலைத் தயார்செய்து இயந்திரத்தனமாக ஒப்பிப்பான்.  விடிவதற்கு முன்னால் எழுந்திருந்து நானூறு கிலோ மீற்றர்களைக் கடந்துசென்று அந்த அசிரத்தையான பதிலைக் கேட்டுவிட்டு நள்ளிரவுக்கு சற்று முன்னதாக வீடு திரும்புகிறார் ஞானம்மா. அகாலத்தில் தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டால், ‘பாவம் இந்த மனுசி’ என்ற வார்த்தைகளோடு ஊர் புரண்டு படுக்கிறது.

ஞானம்மாவின் அவலத்தையும் அலைச்சலையும் காணச் சகிக்காத பக்கத்து வீட்டு கணேசரத்தினம் மாஸ்டர் அவரைக் கூட்டிக்கொண்டு அலைகிறார். அவருக்கு சிங்களம் தெரியும்.  ஒருதடவை போனபோது, வெலிக்கடைச் சிறைச்சாலையின் அதிகாரியொருவர் கணேசரத்தினத்தைத் தனியாக அழைத்து, கோகுலனை ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாங்கள் விடுதலை செய்துவிட்டதாகக் கூறினார். புகைப்படத்தைப் பார்த்து ‘இவன்தான்’ என்று அந்த அதிகாரி உறுதியாகச் சொன்னார்.

கணேசரத்தினம் குழம்பிய முகத்தோடு ஞானம்மாவிடம் திரும்பிவந்தார்.

“என்னவாம்?” அடிவயிறு கலங்கக் கேட்டார்.

“அவனை எப்பவோ விட்டிட்டாங்களாம்”

“எப்பவோ எண்டால்…?” ஞானம்மாவின் முகத்துக்கு அந்தப் பரிகாசப் புன்னகை கொஞ்சமும் பொருந்தவில்லை.

“தொண்ணூற்றைஞ்சிலை”

ஞானம்மா சிரித்தார். அவருடைய கணவர் குடித்துவிட்டு வந்து குடிக்கவில்லை என்று கள்ளச்சத்தியம் பண்ணும்போது ஒரு சிரிப்புச் சிரிப்பாரே… அந்தச் சிரிப்பு!

தொண்ணூற்றைந்தில் யாழ்ப்பாணமே வன்னிக்கு இடம்பெயர்ந்து போனபோது ஞானம்மா போகவில்லை. பெண்களும் ஆண்களும் முதியவர்களும் கர்ப்பிணிகளும் நோயாளிகளும் பூப்பின் உதிர மணம் மாறாத சிறுமிகளும் வளர்ப்புப் பிராணிகளும் வாகனங்களும் மாட்டுவண்டிகளும் சைக்கிள்களுமாய் வீதிகள் நெரிசலில் திணறின. நீரேரிகள் சனவெள்ளத்தால் நிறைந்தன. மழை வேறு அவர்களைத் துரத்தியது. ஆனால், அவையெவற்றாலும் ஞானம்மாவின் வைராக்கியத்தை அசைக்கமுடியவில்லை.

அன்று கந்தஷஷ்டி விரத கடைசி நாள். ஞானம்மா கோயிலுக்குப் போய்விட்டு வந்திருந்தார்.

“அம்மா நீங்கள் வரேல்லையா?” வேரைப் பெயர்த்துக்கொண்டு உயிர்ப்பயத்தோடு வெளியேறி ஓடிய சனங்களில் சிலர் நின்று கேட்கத்தான் செய்தார்கள். கணேசரத்தினம் மாஸ்டரும் அவருடைய மனைவியும் எவ்வளவோ வற்புறுத்தியும் ஞானம்மா அவர்களோடு போக மறுத்துவிட்டார். ஊரே காலியானபிறகும் அவர் தன் மகனுக்காகக் காத்திருந்தார்.

“வெளிக்கிடேல்லையா?” என்று போராளிகள் வந்து அருட்டியபோதும் அவர் அசையவில்லை.

“நான் எங்கையும் போகேல்லையே! பிடிச்சுக்கொண்டு போனவன் விட்டிருந்தா என்ரை மேன் என்னைத் தேடி வராமல் வேறை எங்கை போவான்?” சீறிப் பாய்ந்தார்.

‘இந்த மனுசிக்கு விசர்’ கணேசரத்தினம் முணுமுணுத்தார்.

வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் பிறகொருகாலம் திரும்பிவந்தார்கள்.  ஞானம்மா உயிரோடுதானிருந்தார்.

அவரைக் காணும் ஊராரின் கண்களில் சிறைப்பிடிக்கப்பட்டவனின் தாய் என்ற வலியை விட்டுச் செல்கிறார். கோயில்களில் தங்கள் பிரார்த்தனைகளோடு அவருக்காக வேண்டிக்கொள்பவர்கள் இன்னும் அற்றுப்போய்விடவில்லை. “சாப்பிட்டுப் போவெனணை” முகாம் முகாமாக மகனைத் தேடித் திரிந்து களைத்து ஊருக்குள் நுழைந்து எங்காவது காலாறி நிற்கும்போது எவராவது ஞானம்மாவைக் கேட்பர். மறுத்துவிடுவார். அனுதாபச் சோற்றை அவர் ஒருநாளும் விரும்பியதில்லை.

“கோகுலனை இயக்கப் பெடியளோட சித்தங்கேணியில கண்டனான்” பண்டத்தரிப்பிலிருந்து ஒரு உறவினர் வேகாவெயிலில் களைக்கக் களைக்கச் சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்து சொன்னார்.

ஞானம்மா அவரை ஒரு பார்வை பார்த்தார்.

“முதல்ல தேத்தண்ணியைக் குடியுங்கோ” ஞானம்மாவின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லாததைக் கண்ட அவர் வெறுத்துப்போனார்.

வடமராட்சியில் இயக்கக் கூட்டமொன்றில் கோகுலன் உரையாற்றியதைத் தான் கண்டதாக வேறொருவர் சொன்னார்.

அவர்களுக்கெல்லாம் ஞானம்மா மீண்டும் மீண்டும் ஒரே பதிலையே கூறினார்.

“என்ரை பிள்ளை என்னைப் பாக்க வராமல் எங்கையும் போகாது”

வேலியோரத்தில் கிளைபரப்பி நிற்கும் தேக்கு மரத்தைக் காட்டிலும் அவரது நம்பிக்கை வைரம் பாய்ந்தது.

ஒருநாள் விடிகாலை. விறாந்தையில் குறைநித்திரையில் கிடக்கிறார் ஞானம்மா. படலையையோ வீட்டையோ அவர் பூட்டுவதில்லை. சில பழைய உடுப்புகளையும் கோகுலனின் பாடப்புத்தகங்களையும் காணி உறுதிகளையும் தவிர அங்கு களவுபோக ஏதுமில்லை. தலைமாட்டில் நிழலாட்டம்… ‘கனவு’ புரண்டு படுக்கிறார்.

விறாந்தைக் கதவை யாரோ மெதுவாகச் சாத்தும் சத்தம். துருப்பிடித்த திறாங்குகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கிறீச்சிடுகின்றன.

“ஆரது?”

எழுந்தமர்கிறார். சட்டென எழுந்ததால் கிறுதியில் தலை சுற்றுகிறது. என்றாலும் சமாளித்துக்கொண்டு பார்க்கிறார். ஒருவருமில்லை. முற்றத்திற்குப் போகிறார். அங்கும் யாருமில்லை. தெருவிலோடிப் பார்க்கிறார். பசு மாடொன்று தெருவோரத்தில் முளைத்திருந்த புல்லை சாவதானமாகக் கருமிக்கொண்டிருந்ததைத் தவிர்த்து ஒரு சிலமனுமில்லை.

ஆனால், வாசலருகில் மோட்டார் சைக்கிள் வந்து போன தடயம்.

‘யாராயிருக்கும்? ஒருவேளை… ச்சாய்!’ மீண்டும் நப்பாசையோடு தெருவில் விழிகளை ஓட்டுகிறார்.

எங்கிருந்தோ தாலாட்டின் ஓசை…

“மகனே… என் மகனே!” வயிறு விம்மித் தணிகிறது.

அந்த இரண்டறை வீட்டில் ஓரறை கோகுலனுடையது. ஒவ்வொரு நாட்களும் சில மணித்தியாலங்களையாவது அந்த அறைக்குள் செலவழிக்கிறார். அவனுடைய பொருட்களுடன் இருப்பது அவனுடன் இருப்பதைப் போல இல்லைத்தான். ஆனாலும், ஏதோவோர் ஆசுவாசம்.

கோகுலன் போனபிறகு அந்த றேடியோவை யாரும் தொடுவதில்லை. பாடல்கள் செத்துப்போன வீடாய் அது மாறிவிட்டது. கோகுலனின் தகப்பன் உயிரோடு இருந்த காலத்தில் செய்தி கேட்கக்கூட அதை அவர் போடுவதில்லை. அவனுடைய புத்தகங்களை சேலைத் தலைப்பினால் தூசி தட்டி, இருந்தது போலவே மறுபடியும் அடுக்கிவைக்கிறார் ஞானம்மா. அவனை அவர்கள் பிடித்துச் செல்லும்போது ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு சேர்ட்களையும் ஆரம்பத்தில் துவைத்துத் துவைத்து கொழுவி வைத்தார். அப்போது அவன் சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டுவிடுவான் என்று அவருக்கு நம்பிக்கையூட்டப்பட்டிருந்தது. அடிக்கடி துவைத்ததில் அந்த சேர்ட்கள் நைந்துபோகவும் அவற்றை மடித்து அவனுடைய சூட்கேசினுள் வைத்துவிட்டார்.  அதிலொன்றை, கைது செய்யப்பட்ட அன்று மாலை அவன் ரியூசனுக்கு அணிந்துசெல்வதாக இருந்தான். அவனுடைய றலி சைக்கிள் தாழ்வாரத்தில் சாத்தியபடி நின்று துருப்பிடிக்கத் தொடங்கியது. நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வதாய் எத்தனையோ பேர் வந்து கேட்டார்கள். ஞானம்மா மறுத்துவிட்டார்.  நாளடைவில் இரும்புத்துகள்களாக உதிர்ந்து முடிந்தது சைக்கிள். அவனுடைய எந்தவொரு நினைவையும் அவர் கலைக்க விரும்பவில்லை. அவன் விட்டுச் சென்றது போலவே திரும்பிவரும்போதும் அவனுடைய அறையும் பொருட்களும் இருக்கவேண்டும். அவன் ஆச்சரியப்படும்போது, “என்னணை அம்மா” என்றபடி ஒருவிதமாக தலையை பின்னுக்குச் சரித்து செல்லம் வழியச் சிரிப்பான். அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் ஆண்டுகளாக அம்மா காத்துக்கொண்டிருக்கிறார்.

நீண்ட நாட்களாக அபிராமியையும் கோயிலில் காணவில்லை. அவளுக்கு இருபத்தேழு வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை என்று கோயிலுக்குள் சில பெண்கள் கூடியிருந்து கதைத்தது ஞானம்மாவின் காதுகளில் விழுந்தது. கேட்டும் கேளாதவர் போல இருந்தார். அபிராமிக்கு இருபத்தெட்டு… இருபத்தொன்பது… முப்பது… என்று வயது கூடிக்கொண்டே போக அந்தப் பெண்களின் வம்பும் வளர்ந்தது. அவளைப் பார்க்க வரும் மாப்பிளைகளிலெல்லாம் ஏதாவதொரு குற்றங் கண்டுபிடித்து மறுதலித்துவிடுகிறாளாம். தான் மட்டுமே அறிந்த இரகசியமொன்று குறுகுறுக்க அம்மா தனக்குள் சிரித்துக்கொண்டார்.  மூத்தவளுக்குக் கல்யாணம் நடக்காமல் இளையவளுக்கு எப்படிச் செய்வது? சிவசேகரத்தாரின் மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக கிணற்றடி வரை ஓடி, யாரும் பிடிக்கப்போகாததால் வழியிலேயே நின்றுவிட்டாராம். இதைச் சொன்னதும் அந்தப் பெண்கள்தான். அவர்கள் ‘தாயைக் கொல்லப் போகிறாள்’ என்று அபிராமியை வசைபாடத் தொடங்கிவிட்டார்கள். உறுத்தலும் நம்பிக்கையும் கலந்தவோர் உணர்வுடன் ஞானம்மா அந்த வசையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘அவனைப் பாத்த கண்ணாலை வேறொருத்தனைப் பாக்கேலுமே! என்ரை பிள்ளை திரும்பி வந்தோடனை சிவசேகரம் வீட்டை போய் அந்தப் பெட்டையைக் கைப்பிடியாய்க் கூட்டியந்திடோணும்’

அவருடைய கற்பனை மீதொரு கல் விழுந்தது. சின்னக் கல் இல்லை; பாறாங்கல். அபிராமிக்கு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக கல்யாணம் நடந்தது.  முப்பத்தொரு வயதுப் பெண்ணுக்குத் தோதாய் முப்பத்தைந்து வயது மாப்பிள்ளை. கனடாக்காரன். சிவசேகரமும், கிணற்றுக்குள் பாயப்போய் இடைநடுவில் நின்றுவிட்ட அவருடைய மனைவியும் வீடு தேடி வந்து திருமண அழைப்பிதழைக் கொடுத்தார்கள்தாம். ஞானம்மா போகவில்லை. மகனின் காதலியை மற்றொருவனின் மனைவியாகப் பார்க்க அவருடைய மனம் ஒப்பவில்லை. அபிராமியையும் அவளது புருசனையும் கடைத்தெருவில் ஒருநாள் கண்டார். பழைய அபிராமி இல்லை அவள். பிஞ்சுத்தோல் முற்றி, கழுத்தெலும்பு வெளித்தள்ளி ஆளே மாறிப்போயிருந்தாள். புருசனோடு பேச்சும் சிரிப்புமாக வந்தவளின் சிரிப்பு சட்டென உறைய குற்றவுணர்வோடு கோகுலனின் அம்மாவைப் பார்த்தாள். பதிலாக, ஒரு வெறும் பார்வையை எறிந்துவிட்டு அவர் வீடு வந்து சேர்ந்தார்.

‘அவன் வரமாட்டானெண்டு நீயும் முடிவு செய்திட்டியா?’ பொருமினார்.

‘அவளுந்தான் என்ன செய்வாள்?’ பெருமூச்செறிந்தார். கோகுலனை அவர்கள் பிடித்துக்கொண்டுபோகும்போது அபிராமிக்கு பதினாறு வயதிருக்குமா? பதினைந்து நெடிய ஆண்டுகள் அவள் காத்திருந்தாள். அவன் வரவேயில்லை.

‘ஐயோ! என்ரை பிள்ளை இந்த விசயத்தைக் கேள்விப்பட்டால் கவலைப்படுமே!’

அறைக்குள் போய் கோகுலனுடைய புகைப்படத்தை எடுத்து, ஆறுதல் சொல்வதுபோல சேலைத் தலைப்பால் துடைத்தார். திருநெல்வேலி பேபி ஸ்ரூடியோவில் எடுக்கப்பட்ட படம் அது.  உடலை இறுக்கும் கட்டம் போட்ட சேர்ட்டும், அகல விரிந்த பெல்பொட்டமுமாக அவன் சிரித்துக்கொண்டு நிற்கிறான். இப்போது தோள்கள் அகன்று, மார்பு விரிந்து, சிறைப்பிடிக்கப்பட்டபோது அரும்பத் தொடங்கியிருந்த மீசையும் தாடியும் அடர்ந்து பெரிய ‘ஆம்பிளை’யாயிருப்பான். இந்தப் புகைப்படத்தில் ஒரு பிரதி எடுத்து, பெருப்பித்து, கனமான அட்டையில் ஒட்டி, அவன் கைதுசெய்யப்பட்ட திகதியை எழுதி, “எனது மகன் கோகுலன் எங்கே?” என்று கணேசரத்தினம் மாஸ்டர்தான் எழுதிக்கொடுத்தார்.

“எமது பிள்ளைகளை விடுதலை செய்”

“கைது செய்தவர்களே காணாமற் போக்கினார்கள்”

“அப்பா எப்போது வருவார்?”

என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுக்கிடையில், ஞானம்மா தனது அட்டையை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் கலந்துகொள்ளும் அநேகருக்கு ஞானம்மாவின் முகம்  பரிச்சயமானதாகிவிட்டது. ‘அன்ரி’என்று கூப்பிட்டவர்கள் இப்போது ‘ஆச்சி’என்று விளிக்குமளவிற்கு  முதிய தோற்றம் கொண்டுவிட்டார். முதுகில் மெல்லிய வளைவு. அன்றொருநாள் ஊர்வலத்தில் தடுமாறி விழப்போனபோது, ஒரு சிறிய பெண்- பதினைந்து வயதிருக்கும் – ஞானம்மாவின் கையைப் பிடித்து ‘கவனம் ஆச்சி’என்றாள். ‘எனக்கொரு பேத்தி இருந்தால்…’ அவருடைய கண்கள் கசிந்தன.

காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு மயங்கிக் கிடந்தார். அங்கிருந்தவர்கள் இனிமேல் வரவேண்டாமென்று அன்பு கலந்த கண்டிப்போடு சொல்லிவிட்டார்கள்.  பதினெட்டு ஆண்டுகளாகத் தன் மகனைத் தேடியலைந்த தாயொருவர் போன மாதந்தான் இறந்துபோனார். ஏக்கமும் அலைச்சலும் அந்தத் தாயைத் தின்றுவிட்டன.

‘அவனை இந்தக் கண்களால் காணும்வரை நான் சாகமாட்டேன்’

வாசற்படியில் போய்க் குந்துகிறார்.

முற்றத்தில் குவிந்து கிடக்கும் சருகுகள் காற்றில் ஓடிப் பிடித்து விளையாடுகின்றன. பள்ளிக்கூடத்திற்குப் போகும் பிள்ளைகளின் உற்சாகக் குரல்கள். கீச்சுக் கீச்செனக் கத்துகிறது ஒரு குருவி. அதற்குப் பதில் கொடுப்பதென மற்றொரு மெல்லிய கீச்… கீச்…

‘இந்த உலகம் எவ்வளவு சந்தோசமாயிருக்கிறது!’

கோகுலன் நட்டு வளர்த்த பூக்கன்றுகள் முகம்வாடிக் காய்ந்து கடைசியில் செத்தேபோயின. முருங்கையும் மாமரங்களும் தென்னைகளும் மனிதரின் துக்கம் அறிந்தவை. யாரும் பராமரிக்காமலே தம்பாட்டில் பூக்கின்றன. காய்க்கின்றன. உதிர்கின்றன. மாம்பழக் காலத்தில் கிளிக்கூட்டத்தின் அட்டகாசம். பள்ளிக்கூடம் விட்டுப் போகும் பெடியங்கள் மாங்காய் பிடுங்கவென்று வருகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் முருங்கைக்காய் பிடுங்கவென வருகிறாள்.

“ஏதாவது செய்தி கிடைச்சுதா?” கேட்பாள்.

சிலசமயம் பதிலளிப்பார். பெரும்பாலும் மௌனம். அவளும் பதிலை எதிர்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. இப்போதெல்லாம் கதைப்பதென்பதே ஞானம்மாவுக்கு அலுப்பான விடயமாகிவிட்டது. ஊரும் அவரை மறந்துதான் போய்விட்டது. எப்போதாவது வருகிற உறவினர்களுங்கூட இப்போது வருவதில்லை. அவரவர் சோலி அவரவர்க்கு.

கணவர் இறந்த பிறகு வயலை குத்தகைக்கு விட்டுவிட்டார். நெல் வருகிறது. விற்றதும் எலிகள் கொறித்ததும் போக மிகுதி சோற்றுக்காகிறது. தேங்காய்களைப் பொறுக்கி வீட்டின் பின்புறத்தில் குவித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை பாவிக்கப்படாமலே கொப்புறாவாகிவிட்டன.

காற்றில் கற்பூரமாய் ஞானம்மாவின் உடல் கரைகிறது. தோல், அடித்தடித்துத் தோய்க்கப்பட்ட பழந்துணிபோல தொங்குகிறது. கன்னங்கள் மகிழ்ச்சியின் புதைகுழிகளென உட்குழிந்துபோயின.

சனங்கள் ஊரிலிருந்து இடம்பெயர்ந்து செல்வதும் திரும்புவதுமாய் எத்தனை போர்மூட்டங்கள் வந்து கலைந்துவிட்டன! ஊரில் வாழமுடியாமல் எவ்வளவு பேர் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்! எத்தனை மழைக்காலங்கள், கோடைகள் கழிந்துபோயின!

ஒவ்வொரு மழைக்காலமும் வீட்டுக் கூரையின் பொத்தல்களை அதிகரித்துக் கடந்து செல்கிறது. வீட்டுக்குள் இருப்பதும் வெளியில் இருப்பதும் ஒன்றுதானென்றாகிவிட்டது. கழிந்த மாரியில் கோகுலனின் புத்தகங்கள் இருந்த இடத்தில் மழைத் தண்ணீர் சிந்தியது. மழை விட்டதும் அடுப்படியில் அமர்ந்து ஒவ்வொரு பக்கமாக காயவைத்தார். வேலிக் கதியால்களிற் பல உக்கிச் சரிந்துவிட்டன. வேலியென்ற பெயரில் ஒப்புக்கு ஒரு மறைப்பு. அவ்வளவுதான். அக்கம்பக்கத்தில் எழுந்துவிட்ட நவீனமான வீடுகளுக்கு மத்தியில், சிதிலங்களோடு, நிற்கமுடியாமல் நிற்குமொரு முதியவளைப் போல நின்றுகொண்டிருக்கிறது அந்த வீடு.

ஞானம்மா அதில் காத்திருக்கிறார்.

…………………

கோகுலன் பிடித்துச் செல்லப்பட்டு இந்த ஆண்டுடன் இருபத்து நான்கு ஆண்டுகள்.

ஞானம்மாவுக்கு இப்போது அறுபத்தொரு வயது. பின்மதிய நேரம்… விறாந்தைக் கதவடியில் நிழலாடியது. ‘மகனே என் மகனே…’ தள்ளாடியபடி போய்ப் பார்க்கிறார். அவனில்லை. வாசலில் நின்றவனுக்கு அவனை நினைவூட்டும் ஏதோவொரு சாயல். பிச்சைக்காரனில்லை. பார்த்தாலே தெரிகிறது. ஆனால், கலைந்த தலை, கசங்கிய ஆடைகள், வியர்வை நாற்றம், பசியினாலோ களைப்பினாலோ கவலையினாலோ அந்தக் கண்கள் உட்குழிந்திருக்கின்றன.

“பெரியப்பா இருக்கிறாரா?” களைத்த குரலில் கேட்கிறான்.

“ஆர்?” பார்வை மங்கிவிட்ட விழிகளை இடுக்கியபடி ஞானம்மா கேட்கிறார்.

“வட்டக்கச்சி கனகராணியின்ரை மகன். அற்புதன்”

கனகராணி, சுப்பிரமணியத்தாருக்கு மச்சாள் முறை. முன்னொரு காலத்தில் கனகராணிக்கு அவரைக் கலியாணம் செய்துகொடுப்பதற்கு பெரியவர்கள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், சுப்பிரமணியத்தின் காதலம்பு இடம் மாறிப் பாய்ந்தது. ஞானம்மாவைக் கூட்டிக்கொண்டு விசுவமடுவுக்கு ஓடிப்போனார். கனகராணிக்கு அதிலொன்றும் மனவருத்தமில்லை. ஒரு வருசத்திலேயே வேறொரு இடத்தில் அவளை மணமுடித்துக் கொடுத்தார்கள். அவள் தன் புருசனோடு சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்துபோனாள். கடைசியாக வரும்போது கோகுலனுக்கு பதினான்கு வயது. கனகராணியின் மகன் அற்புதனுக்கு ஓரிரு வயதுகள் குறைவாக இருக்கலாம். எண்பத்து மூன்றாமாண்டுக்குப் பிறகு அவர்களோடான தொடர்பறுந்துபோயிற்று.

“அவர் செத்துப் போய்ட்டார்” யாருக்கோ நடந்ததைச் சொல்வதுபோன்று எங்கோ பார்த்தபடி ஞானம்மா சொல்கிறார். மரணம் துயரப்பட முடியாத தொலைவுக்குப் போய்விட்டது.  இருப்புக்கும் இன்மைக்கும் இடையில் கிடந்து கிழிபடுவதை விட மரணம் உத்தமம்.

“அவருமா?”

ஞானம்மாவுக்கு களைப்பாக இருக்கிறது. நிற்க முடியவில்லை. நிலைக்கதவை ஆதரவுக்குப் பிடித்துக்கொள்கிறார்.

“முள்ளிவாய்க்கால்ல பதுங்குகுழியிலை குண்டு விழுந்து எங்கடை வீட்டாக்கள் எல்லாரும் செத்துப் போயிட்டினம். அப்பா, அம்மா, தங்கச்சி ஒருத்தருமில்லை. ஒரு வருசமாச்சு. நான் மட்டுந்தான் மிச்சம்” தொண்டை முடிச்சு விம்மியது. அழுகையை மறைக்க தலைகுனிந்து கண்களை மறைத்தான். சாறத்தின் நுனியால் கண்களைத் துடைத்தான்.

“உள்ளுக்கை வா தம்பி” ஈரக் குரலில் கூப்பிடுகிறார் ஞானம்மா. இழப்பினால் விழைந்த ஒட்டுறவு அது. அவன் வாசலிலேயே நிற்கிறான்.

“கோகுலன் எங்கை?”

“அவனை எப்பவோ ஆமி பிடிச்சுக்கொண்டு போட்டுது. இன்னும் விடேல்லை”

பின்மதியங்களுக்கேயுரித்தான மோனத்தை தன் சக்கரங்களால் கலைத்தபடி ஒரு வாகனம் இரைந்துகொண்டு போகிறது.

“பெரியப்பா இருந்திருந்தால்….?” அவன் எதையோ சொல்லத் தொடங்கி குரல் தளம்ப நிறுத்துகிறான்.

“நான் போறன்”

படலை வரை போய்விட்டான். ஞானம்மா கூப்பிடுவாரென்று அவனும், அவன் திரும்பிவருவானென்று ஞானம்மாவும் நினைக்கிறார்கள்.

“நில்லப்பன்” அவர்தான் முந்தினார். ‘அப்பன்’ இந்த வார்த்தையைச் சொல்லி எத்தனை நாளாகிறது!

“எங்கை போறாய்?”

“தெரியாது… எங்கையாவது”

“இஞ்சை என்னோட இரு”

“சரி அம்மா” பெரியம்மா முறைதான். ஏன் அம்மாவென்று அழைத்தானென்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படி அழைப்பதே அவனுக்குப் பிடித்திருக்கிறது.  ஞானம்மாவின் இறுகிய முகத்தில் ஒரு இளக்கம்.

கதவை விரியத் திறந்து உள்ளே அழைக்கிறார். தாழ்ந்த இறப்பு, அவன் நல்ல உயரம். “தலை இடிச்சிடும் அப்பன்” அவர் இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை. பரிமாறுகிறார். முருங்கைக்காய்க் குழம்பு, முருங்கையிலை வறை.

“அம்மா! நீங்கள் சாப்பிட்டீங்களா?” பசியடங்கியதும் கேட்கிறான்.

அம்மாவின் செவிகளை ஏதோ ஞாபகம் நிறைத்திருக்கிறது. பதிலளிக்கவில்லை. அவனுடைய கை சாப்பாட்டை அளைகிறது. மீண்டும் கேட்கிறான்.

“ஓம். நீ சாப்பிடு” என்கிறார்.

கோகுலனைப் போல தலைமயிர் நல்ல அடர்த்தி. இறுகிய உடல்வாகு. அகன்ற தோள்கள். துருத்தி வெளித்தெரியும் விலாவெலும்புகளுள் பட்டினியின் பல கதைகள். அவனுடைய ஆரோக்கியம் முள்ளிவாய்க்காலிலிருந்து இன்னும் மீளவில்லை.

பிறகொருநாளும் அவனுடைய குடும்பத்தைப் பற்றி ஞானம்மா ஒரு கேள்வியைத்தானும் கேட்டதில்லை. எறிகணை வீழ்ந்து பற்றியெரியும் பதுங்குகுழியொன்றின் ஞாபகத்தை அவன் வாழுங்காலம்வரை மறக்கப்போவதில்லை என்பதை அவர் அறிவார்.

இதென்ன… திடீரென்று அந்த வீட்டில் இரவு எட்டு மணி தாண்டியும் விளக்கு எரிகிறது. வழக்கமில்லாத வழக்கமாய் மீன் குழம்பு வாசனை.

அற்புதன் வேலைக்குப் போகிறான். கூலி வேலை. தோட்டத்தையும் அவன்தான் பார்த்துக்கொள்கிறான். கத்தரி, மிளகாய், புகையிலை… சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. அற்புதன் களைத்துச் சோர்ந்து வீடு திரும்பும்போது வாசற்படியில் ஞானம்மா அமர்ந்திருக்கிறார். அவனைக் கண்டதும் அவருடைய முகத்தில் ஒரு வெளிச்சம். அவனுக்கு மட்டுமென்ன? ஞானம்மாவின் சேலைத் தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொள்கிறான். உள்ளுக்குள் அவனுக்கென்று துவாய் இருக்கிறதுதான். போன மாதம் வாங்கியது. இது வேறு. அம்மாவின் வாசனையை கடைகளில் வாங்கவோ தறியில் நெய்யவோ முடியாது.

ஊராருக்கு அனுதாபம் வற்றித்தான் போய்விட்டது. இதர மனிதருக்காகக் கவலைப்படுகிற ஆட்கள் குறைந்துபோயினரா? இல்லை! அவர்களுடைய குற்றவுணர்விலிருந்து விடுபட ஒரு காரணம் கிடைத்துவிட்டது. மகனைக் காணாமற் போகக் கொடுத்த தாயும், தாயை இழந்த மகனும்… எல்லாஞ் சரி! வாழ்க்கை சுற்றிவளைத்து மறுபடியும் நேர்கோட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு பிசிறல்! வாத்தியங்கள் சேர்ந்திசைக்கும்போது ஒரேயொரு வயலின் தனியாக இழையுமே… அதுபோல ஒத்திசையாமல் ஒரு பிசிறல்!

அற்புதன் நேரம் பிந்தி எழுந்திருக்கிறவன். அவனுக்கு துளி வெளிச்சமிருந்தாலும் உறக்கம் வராது. சாமியறை, கடவுளர்களாலும் நெல் மூட்டைகளிடையே ஓடித்திரியும் எலிகளாலும் நிறைந்திருக்கிறது. இருளும் குளிரும் நிறைந்த கோகுலனின் அறை வந்த முதல் நாளே அவனை ஈர்த்துவிட்டது. ஆனால், ஞானம்மாவோ கோகுலனின் அறையைப் பூட்டிப் பூட்டி வைக்கிறார். பூட்டிய கதவு அற்புதனை அந்நியன் என நகையாடுகிறது. அதைப் பார்க்குந்தோறும், சொல்லாமல் கொள்ளாமல் மறுபடியும் வட்டக்கச்சிக்கே போய்விட்டாலென்ன என்று அற்புதனுக்குத் தோன்றியதுண்டு. ஆனால், புருசனைச் சாகக்கொடுத்து, பிள்ளையைத் தேடித்திரியும் ஒரு நலிந்த மனுசியை, வறுமை தாண்டவமாடும் சிதிலமடைந்த வீட்டில் தனியே விட்டுவிட்டு எப்படிப் போவது?  இரக்கத்திற்கும் தன்மானத்திற்குமிடையில் அவன் தடுமாறுகிறான். ஆனால், இரக்கம் மட்டுந்தானா? அதையும் கடந்த ஏதோவொன்று அவனைத் தடுக்கிறது. கடைசியில், தலைவாசல் மூலையில் வைத்த உடுப்புப் பையை அங்கேயே விட்டுவிட்டான். தாழ்வாரத்தினோரம் சாத்தப்பட்டிருந்த சாக்குக் கட்டிலைத் தூக்கிக் கொண்டுபோய் மாமரத்தடியில் போடுகிறான். அடர்ந்த முது மரம். இரவுகளில், இருட்டையோ நிலவையோ வெறித்தபடி அவன் இறந்த காலத்தில் வாழ்கிறான். அல்லது சாகிறான்.

“இந்தாப்பன்” அன்று அற்புதன் வேலையால் திரும்பியதும் ஒரு கிண்ணத்தை நீட்டுகிறார் ஞானம்மா. பாயசம்.

“இண்டைக்கு கோகுலன்ரை பிறந்தநாள்”

“உனக்கெப்ப பிறந்தநாள்?” கேட்பாரென்று அற்புதன் எதிர்பார்த்தான்.  கேட்கவில்லை. பதிலாக, தன்னுடைய மகன் பிறந்த இனிப்பைக் குடிக்கிறவனைப் பரவசத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கிறார்.

“பிறந்திருக்கேக்கை வடிவெண்டா அப்பிடியொரு வடிவு. ஓவியக்குஞ்சு… அக்கம் பக்கத்துப் பொம்பிளையளெல்லாம் தூக்கித் தூக்கிக் கொஞ்சுவாளவை. கண்ணூறு பட்டிடும். பிள்ளை இரவிரவா அழுவான்.”

அற்புதன் இந்தப் பாராயணத்தை பல தடவைகள் கேட்டுவிட்டான். அவனுக்குள் எரிச்சல் மண்டியது. மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குப் போனான்.

முற்றத்தில் பூக்கன்றுகளின் ஒய்யாரத் தலையசைப்பு. அவனுடைய கைவண்ணந்தான். மாலையானதும் அதற்குள் குந்தியிருந்துகொண்டு அவற்றுக்குப் ‘பரியாரம்’ பார்க்கிறான். கோகுலன் இருந்தபோதுகூட இப்படி இல்லை எனும்விதமாய் அவை செழித்தாடுகின்றன.

ஞானம்மாவுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை.

‘மகனே… என் மகனே…’

அவனை எங்கே கண்டுபிடித்தாரென்று தெரியவில்லை. அல்லது ஞானம்மாவை அந்த மனிதன் தேர்ந்தெடுத்தான். உருண்டுதிரண்ட குள்ளமான உருவம். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். இளநீல நிற சட்டைப் பையினுள் ரூபாய் நோட்டுக்கள் தெரிந்தன. தனது பெயர் விசாகேஸ்வரன் என்றான். கையிலிருந்த தங்க மோதிரங்களை திருகிவிட்டபடி, பிரதேசங்களைக் கலந்துகட்டியதொரு தமிழில் கதைத்தான். அதன் சாரம் இதுதான்: கோகுலன் இருக்குமிடம் அவனுக்குத் தெரியும். அவனைப் பிடித்து வைத்திருப்பவர்களைச் ‘சரிக்கட்டி’ வெளியில் எடுத்துவிட ஐந்து இலட்சம் ரூபாய் வேண்டும்.

அந்த விசாகேஸ்வரனை, காணாமற் போனவர்கள் தொடர்பான ஊர்வலங்கள் நடக்குமிடங்களுக்கு ஞானம்மாவை அழைத்துச்சென்று விடும்போது அற்புதன் கண்டிருக்கிறான். அவ்விடத்தையே சுற்றிச் சுற்றி வரும் அவனை புலனாய்வாளர்களில் ஒருவன் என்று அற்புதன் நினைத்திருந்தான்.  அவனோ, வலியைக் கொடுப்போருக்கும் அனுபவிப்போருக்குமிடையிலான இடைத்தரகன். துயரத்திலிருந்து காசு கறப்பவன்.

“அதெல்லாம் நாங்கள் பாத்துக்கொள்ளுவம். நீங்கள் போங்கோ” அற்புதன் சத்தம் போட்டு விரட்டிவிட்டான். பிறகொருநாள், அற்புதன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஒரு புகைப்படத்தோடு அவன் திரும்பிவந்தான். கோகுலனுக்கு நாற்பது வயதாகிவிட்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு தோற்றத்தையுடையவன் அவனால் கொணரப்பட்ட புகைப்படத்திலிருந்தான்.

“அஞ்சு லட்சம் குடுத்தா வெல்ல ஏலும்”

“மூண்டு நாள் கழிச்சு வாங்கோ. அற்புதனைக் கேட்டிட்டுச் சொல்லுறன். அவனுக்கு இதிலை விருப்பமில்லை”

“அவன் குடுக்கவேண்டாமெண்டுதானே சொல்லுவான்?” விசாகேஸ்வரன் இலேசுப்பட்ட ஆளில்லை. பொடி வைத்துக் கதைக்கிறான்.

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என்ரை பிள்ளை திரும்பக் கிடைச்சால் காணும்” ஞானம்மா அவனிடம் சொல்கிறார்.

இரவுகளில் மூக்குறிஞ்சும் சத்தம்… சிலசமயம் இரவைக் கிழித்து வெடித்துக் கிளம்பும் அழுகை.

“வயலை விற்போம்” மூன்றாம் நாள் காலையில் உறுதியாகச் சொன்னார்.  பேருருக்கொண்டு எழுந்தாடும் தாய்மையை எதிர்த்து அற்புதனால் ஒரு வார்த்தையும் கதைக்கமுடியவில்லை.

“விக்க வேண்டாம். அடகு வையுங்கோ. காசு வரேக்கை நான் மீட்கிறன்”

அந்த வயல் விளைச்சலில் குறை வைத்ததில்லை. அடுத்த வருசம் அதை அற்புதனே எடுத்து பயிர்செய்வதாக இருந்தான். இதற்குள் விசாகேஸ்வரன் குறுக்கிட்டுவிட்டான்.

“நான் வியாழக்கெழமைகள்ல விரதமிருக்கிறவென். ஒரொரு சிலையா எடுத்து குளிப்பாட்டி பூசை செய்து…” விசாகேஸ்வரன் சொல்வதை ஞானம்மா கண்கள் சுடர்விடக் கேட்டுக்கொண்டிருந்தார்.

வீரகேசரி பத்திரிகையில் சுற்றப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாயை அவனிடம் கொடுக்கும்போது அற்புதன் உடனிருந்தான்.

“தெய்வ நம்பிக்கையுள்ளவை ஏமாற்றமாட்டினம்” என்று, விசாகேஸ்வரன் காசோடு வெளியேறிய பிற்பாடு ஞானம்மா அற்புதனிடம் கூறினார்.

‘அந்த வயல் ஒரு சீதேவி. மீட்க முடியாமற் போனால்…’ அற்புதனின் மனம் ஆற்றாமையில் எரிந்தது.

அற்புதன் சந்தேகப்பட்டது சரி! ஐந்து இலட்சத்தைச் சுருட்டிக்கொண்டு விசாகேஸ்வரன் மாயமாகிவிட்டான். அவனுடைய அலைபேசி தொடர்பெல்லைக்கு வெளியில் அவன் இருப்பதாகக் கூறியது. பிறகு அவனை யாழ்ப்பாணத்தின் எந்தவொரு ஊர்வலத்திலும் அற்புதன் காணவில்லை. ஆனால், ஆறு மாதங்களோ ஒரு வருசமோ கழித்து மீண்டும் வருவான், மற்றொரு இரையைத் தேடி, மற்றொரு புகைப்படத்தோடு.

“அவனை எங்கையாகிலும் கண்டனோ… வெட்டிச் சாய்ப்பன்” அற்புதன் கறுவினான்.

‘படிச்சுப் படிச்சுச் சொல்லியும் கேளாமல் ஏமாந்துபோனேனே…’ ஞானம்மா அற்புதனின் முகத்தில் ‘முழிக்க’ முடியாமல் சில நாட்கள் படுத்துப் படுத்துக் கிடந்தார்.

“உடம்பு சரியில்லை. தலை சுத்துது. வயித்துக்கை என்னவோ செய்யுது” பொய் சொன்னார்.

‘காணாமற் போனவர்கள் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று, பொங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ரணில் சொன்னபிறகு ஞானம்மா உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டுவிட்டார்.  அவரால் எழுந்து நடமாடக்கூட முடியவில்லை.

செய்தியை செய்தியால் அறுக்க நினைத்தான் அற்புதன்.

“விசயந் தெரியுமா?”

அசிரத்தையோடு கண்களைத் திறந்து பார்த்தார். படுக்கையருகில் வைக்கப்பட்ட கஞ்சி ஆறிப்போய்க் கிடந்தது.

“ஜனாதிபதி மைத்திரி, ரெண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு, தன்னைக் கொலை செய்ய வந்தானெண்டு குற்றஞ் சாட்டப்பட்ட ஜெனிபன் எண்ட பெடியனுக்கு பொதுமன்னிப்புக் குடுத்து வெளியில விட்டிட்டாராம்”

ஞானம்மா விறுக்கென்று எழுந்து அமர்ந்தார்.

“மெய்யோ?”

“நானேன் பொய் சொல்லுறன்? இந்தப் பேப்பரைப் பாருங்கோ”

“இந்த மனுசன் உள்ளதுக்குள்ள பரவாயில்லை. எதுக்கும் எழுதிப் பாப்பம்” உடனடியாக எழுந்து ஜனாதிபதிக்கு கோழிக்கால் கிறுக்கல் எழுத்தில் ஒரு கடிதம் எழுதுகிறார் ஞானம்மா. கணேசரத்தினம் மாஸ்டரை அவருடைய மகள் ஸ்பொன்சரில் கனடாவுக்குக் கூப்பிட்டுவிட்டாள். இல்லாவிட்டால் அவரைக் கொண்டு எழுதுவித்திருப்பார்.

“மழைக்காலம் வரப்போகுது” செய்தி தந்த உற்சாகத்தில் ஞாபகமூட்டுகிறார்.

“புதன்கிழமை ஆக்களை வரச்சொல்லியிருக்கிறன்”

கடந்த மழைக்காலத்தில் கோகுலனுடைய அறைப் பகுதி கூரையை காற்றும் மழையும் சேதப்படுத்திவிட்டன.  இற்றுப் பொடிந்த உத்தரத்துத் தடிகளையும் மாற்றவேண்டியிருந்தது. அந்த வேலைக்காக மட்டும் அவ்வறைக்குள் தன்னை அனுமதித்த ஞானம்மாவில் மெல்லிய கோபம் படர்வதை அற்புதன் உணர்ந்தான். சிறுமைப்படுத்தப்பட்டதான உணர்வு. அங்கிருந்த பொருட்களை விறாந்தைக்கு மாற்றிவிட்டு கூரையைப் பிரிக்க முற்பட்டபோது கறுப்புநிற பொலித்தீன் பொதியொன்று கூரையினுள் செருகப்பட்டிருக்கக் கண்டான். மறைத்து வைக்கப்பட்ட அந்தப் பொதியை மழை தன் வலுத்த நீர்க்கைகளால் வெளித்தள்ளியிருந்தது. வேலையை இடையில் நிறுத்திவிட்டு கூலியாட்களுக்கு தேநீர் கொடுக்கும்படி ஞானம்மாவைப் பணித்தான்.

பொதியினுள் சில புகைப்படங்கள், துண்டுப்பிரசுரங்கள், சிவப்பு மட்டையிடப்பட்ட சிறிய புத்தகம்… புகைப்படங்களில், ஊருக்குள் இயக்கமென்று அறியப்பட்ட இளைஞர்களோடு கோகுலன் நின்றான்.

“அவனுக்கு புலியளோட தொடர்பிருந்திருக்கு. துண்டுப் பிரசுரமெல்லாம் வைச்சிருந்திருக்கிறான்” அன்றிரவு சாப்பிடும்போது அம்மாவிடம் சொன்னான்.

“இயக்கத்திலை இருந்தவங்களெல்லாரையுமா ஆமி பிடிச்சுக்கொண்டு போயிட்டான்?”

ஞானம்மாவுக்கு இயக்கம், துப்பாக்கி, விடுதலை, துண்டுப்பிரசுரம் எதைப் பற்றியும் தெரியாது. தன்னிடமிருந்து தனது மகனைப் பிரித்தெடுக்க யாருக்கும் உரிமையில்லை. அவருக்குத் தெரிந்த நியாயம் அவ்வளவுதான்.

அன்றிரவு அற்புதனுக்கு கடுங் காய்ச்சல் கொதித்துப் பொழிகிறது. நெற்றியில் வைக்கிற கையில் நெருப்பு பற்றிக்கொள்ளுமோ எனும்படி சூடு.  ஞானம்மா அவனுக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறார். முருகனுக்கு நேர்த்தி வைத்து ஒரு ரூபாய்க் குற்றியொன்றை அவனுடைய மணிக்கட்டில் கட்டிவிடுகிறார். திருநீற்றினை அள்ளி நெற்றியில் அப்புகிறார்.

காய்ச்சல்காரன் சிரிக்கிறான்… இறந்துபோன தாயை கனவில் காண்கிறானா? ஒரே சிரிப்பு!

மஞ்சள் கரைசல் நுரைத்து வழியும் சுவர்கள்… வீட்டினுள் பறந்து திரியும் குட்டிக் குட்டி விமானங்கள்… மிளாறி எரியும் நெருப்பு… அதனுள் நின்றபடி தங்கச்சி கத்துகிறாள்… சிரிப்பு கண்ணீராக மாறியது. நினைவு திரும்பியபோது, நெற்றியில் படிந்திருக்கும் அம்மாவின் கையை இறுகப் பற்றிக்கொள்கிறான் அற்புதன்.

‘பிறகு இந்தக் கைகள் அவனையல்லவோ ஆதூரமாகத் தொடும்’ காய்ச்சலிலும் காய்கிறது உள்ளம்.

‘கோகுலன் திரும்பி வந்துவிடக்கூடாதெண்டு நான் நினைக்கிறனா? ஐயோ! அது எவ்வளவு பாவம்!’ விழியோரங்களில் கண்ணீர் வழிகிறது.

“ஒண்டுமில்லை… சுகமாயிடும் அப்பன்”

அற்புதன் குணமாகி வேலைக்குப் போகத் தொடங்கியதும் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார் ஞானம்மா.

“இனியாவது கலியாணம் செய்துகொள்ளப்பன். கடைசிகாலம் நோய்நொடி வந்தால் பாக்க ஒருத்தருமில்லாம நீ தனிச்சுப்போவாய்”  அறுபத்தேழு வயதில் எண்பது வயதின் முதுமைக்கோலம் பூண்டுவிட்ட அவர் சொல்கிறார்.

அற்புதன் சிரிக்கிறான். அவனுக்கும் வயது கொஞ்சமில்லை. ஐம்பதை நெருங்குகிறது. காதோரங்களில் நரைக் கற்றை. அகன்ற தோள்கள் ஒடுங்கத் தொடங்கிவிட்டன.

“எனக்கு கலியாணம் வேண்டாம் அம்மா”

“காலத்தே பயிர் செய்திருக்கோணும்”

அவன் மௌனமாக இருக்கிறான்.

மனைவியாக வருபவள் அம்மாவைச் சரிவரக் கவனித்துக்கொள்வாளா? பிள்ளைகள் அம்மாவை மனம் நோகப் பண்ணினால்…

……………….

மாமரக் கிளைகளினூடே வழியும் நிலவு துக்கத்தைக் கூட்டுகிறது. துக்கத்தின் பேரிரைச்சல் தூக்கத்திலும் ஒலிப்பதுவாய்… அற்புதனால் உறங்கமுடியவில்லை. தவேந்திரனைச் சந்தித்து ஏழெட்டு நாட்களிருக்கும். அன்றிலிருந்து அம்மாவின் கண்களைத் தவிர்த்து விரைந்தோடிக்கொண்டிருக்கிறான்.

அன்று மாலை, வேலை முடிந்து இவன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். வாசகசாலை முடக்கில் திரும்பும்போது, யாரோ பின்னின்று அழைப்பது கேட்டது. நின்றான். கேற்றைப் பிணைத்திருந்த தூண்களிரண்டிலும் நந்தி வைத்துக் கட்டப்பட்ட புராதன வீடு அது. யாழ்ப்பாணத்தின் அநேக வீடுகளைப் போல அந்த வீட்டிலும் வெளிநாட்டுக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்ட இரண்டு வயோதிபர்கள் வாழ்ந்தார்கள். அவ்விடத்தைக் கடந்துசெல்லும்போது அவர்களது ஊசலாட்டத்தை அவன் கண்டிருக்கிறான். மற்றபடி அங்கிருப்பவர்களை அவனுக்குத் தெரியாது. அங்கிருப்பவர்களை மட்டுமென்ன… அந்த ஊரில் அவனுக்கு அம்மாவைத் தவிர யாரையும் தெரியாது.

அழைத்தவருக்கு இவன் வயதுதான் இருக்கும். தெரு விளக்கின் வெளிச்சம் படாவிட்டாலும் பளபளக்கிற முகந்தான். வெளிநாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும். காக்கி நிற அரைக் காற்சட்டையும், கருநீல நிறத்தில் தொளதொளவென்றொரு சேர்ட்டும் அணிந்திருந்தார்.

“நீங்கள்தானே கோகுலன் வீட்டிலை இருக்கிறது?”

அவருக்கு எப்படித் தெரியுமென்று தெரியவில்லை. அது ஒரு விசயமுமில்லை. சிறிய ஊர்களில் காற்றில் விதைகள் பரவுவதைப் போல கதைகள் பரவிவிடும்.

“ஓம்…”

“அம்மா எப்பிடி இருக்கிறா?”

“இருக்கிறா”

மாலை நேரத்திற்கேயுரிய காற்று விசயந்தெரியாமல் தலையைத் தடவியது.

“பாவம்” அந்த மனிதர் பெருமூச்செறிந்தார்.

“நீங்கள்?” தயக்கத்தோடு கேட்டான் அற்புதன்.

“என்ரை பேர் தவேந்திரன். கோகுலனும் நானும் படிக்கிற காலத்திலையே நல்ல சினேகிதம். இயக்கத்துக்கும் ஒண்டாத்தான் போனனாங்கள். பிறகு நான் இயக்கத்துக்குத் துண்டு குடுத்திட்டு கனடாவுக்குப் போயிட்டன். அவன் வீரச்சாவெண்டு கேள்விப்பட்டதும் அம்மான்ரை ஞாபகந்தான் வந்திச்சு. அவன் அவவை நினைச்சுக் கவலைப்படாத நாளில்லை.”

‘வீரச்சாவு!’ திக்கென்றது.

“எப்ப?”

“சரியா ஆண்டு ஞாபகமில்லை. ரெண்டாயிரத்தொண்டு ஜனவரியிலை எண்டு நினைக்கிறன். கொஞ்சம் இருங்கோ” வீட்டுக்குள் போனார்.  ‘விநாடிகள் ஏனிப்படி நீள்கின்றன?’ கால்கள் நடுங்கின. கேற்றைப் பிடித்துக்கொண்டு நின்றான் அற்புதன்.

திரும்பி வந்த அவரது கையில் ஒரு பத்திரிகை இருந்தது. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகை அது.

அவர் பிரித்துக் காட்டிய பக்கத்தில் அற்புதனுடைய கண்கள் நிலைத்தன.

வீரவணக்கம். பதினைந்தாவது ஆண்டு நினைவு. கோகுலன் சுப்பிரமணியம்! அன்னை மடியில்: 1969 மண்ணின் மடியில்: 2001.  அஞ்சலிக் கவிதையொன்று. அதன் கீழ் மேலதிக தொடர்புகளுக்கு ‘அபிராமி’ என்றிருந்தது.

“நான் போன கிழமைதான் இஞ்சை வந்தனான். ஊருக்குள்ளை ஆருக்கும் இந்த விசயந் தெரியாதாம்”

“இல்லை. தெரியாது” உதடசைந்தது. குரல் ஒலித்ததாவென அவனும் அறியான்.

“நீங்களும் சொல்லாதையுங்கோ…”

கரிக்குருவியொன்று கீச்சிட்டுக் கத்தியபடி பறந்தது. ‘கெட்ட சகுனம்’ அற்புதன் சஞ்சலப்பட்டான். ‘ஆனால், இனி நடக்க என்னதான் மிச்சமிருக்கிறது?’

“இந்தப் பேப்பரை எனக்குத் தாறீங்களா?” தயங்கியபடி கேட்டான்.

“ஓ… வேணுமெண்டா வைச்சிருங்கோ”

கோகுலன் எப்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான்?  எப்போது இயக்கத்தில் சேர்ந்தான்? அவனுக்காகவே உயிரை உடலில் தேக்கிக் காத்திருக்கும் தாயைத் தேடி ஏன் வரவில்லை? அஞ்சலிக் குறிப்பை அந்தப் பத்திரிகைக்கு அனுப்பிய அபிராமி யார்?

தலையணைக்கடியிலிருந்த பத்திரிகையை மீண்டும் எடுத்துப் பார்த்தான் அற்புதன். ‘அம்மாவிடமுள்ள அதே புகைப்படம். அவன்தான்’

அம்மாவிடம் இதைக் காட்டுவதா வேண்டாமா? ஐயோ மனுசி அழுதழுது செத்துப்போகுமே…! இல்லாவிட்டாலுமென்ன… ஓட்டை விளக்கினூடே கசியும் எண்ணெயென சிறுகச் சிறுகக் கசிகிறது அவருடைய உயிர். எண்ணெய் தீர்ந்து தானாய் அணையட்டும். கையை வீசி படக்கென்று அணைக்கவேண்டாம்.

அம்மா… உன்னையும் நான் இழப்பேனாகில்…. துயரம் அவனை உலுக்கியது. உறவேதுமில்லாத் தனியனாக இந்த உலகில் வாழ்வதென்பது எத்தனை சிரமம்! மாலை சாய்ந்து வீடு திரும்பும்போது யாருமற்ற வெறுமையை எதிர்கொள்வதென்பது மரணத்திற்கு சமானமானதாயிற்றே! அந்தக் கொடுமைக்கு வீதியில் வாழலாமே!

‘அம்மா உன்னுடைய மகனைத் தேடியலையாதே. அவன் இறந்துவிட்டான் என்றொரு வாக்கியத்தால் ஓருயிரைக் கொல்லமுடியுமா? யார் கண்டது? கேட்ட நொடியே வீழ்ந்து இறந்துபோனால்… இல்லை. வேண்டாம்’ அந்தப் பத்திரிகையை தாழ்வாரத்தின் இறப்பினுள் கண்மறைவாக செருகிவைத்தான்.

அன்றைக்கு விடிகாலை நாலரை மணிக்கே அடுப்பெரிகிறது. குசினி வரிச்சு மட்டைகளினூடே தெரியும் நெருப்பின் தழல்நாக்குகள்.

“ஜனாதிபதி யாழ்ப்பாணம் வாறாராம்”

“அந்தக் கூட்டத்திலை போய் நீங்கள் இடிபடவேண்டாம்” அற்புதன் கடுமையாகவே சொல்கிறான்.

ஞானம்மா ஒன்றுஞ் சொல்லவில்லை. அந்த மௌனத்தின்; பொருள் மறுப்பு.

கூட்டத்தில் வழக்கம்போல முன்னால் நிற்கிறார் ஞானம்மா.

“எனது மகன் கோகுலன் எங்கே?” நைந்துபோன அட்டை மறுபடியும் கேட்கிறது.

ரணிலாவது காணாமற்போனவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றார். ஜனாதிபதியிடம் ஏதொரு பதிலுமில்லை. அவர் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மூட்டை கட்டிக்கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டுப்போகிறார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அற்புதன் சட்டியை, பானையை திறந்து திறந்து பார்க்கிறான்.

“சமைக்கேல்லையா?”

“இல்லை. ஜனாதிபதியின்ரை கூட்டத்துக்குப் போனனான்”

அவனுடைய முகம் விகாரமாக மாறுகிறது. தாழ்வாரத்தை நோக்கி வேகமாகச் சென்றான். திரும்பிவரும்போது அந்தப் பத்திரிகை அவனுடைய கையிலிருக்கிறது. அதை அங்கிருந்த கதிரையில் வீசியெறிகிறான்.

“பார்… பார்… கோகுலன் எப்பவோ செத்துப்போயிட்டான்.”

அற்புதனுக்கே தன் செயலைப் பார்க்க உள்ளுக்குள் அருவருப்பாக இருக்கிறது.

‘சீச்சீ! நானும் ஒரு மனுசனா?’ மறுகுகிறான்.

ஞானம்மா பத்திரிகையை எடுத்துப் பார்க்கிறார். கோகுலன்தான். கைது செய்யப்பட்டபோதிருந்த அதே வெள்ளந்தி முகம். அரும்பத் தொடங்கிய மீசை… வயிற்றினுள் புகுந்த நிலவின் கீற்று உதிர்ந்துபோயிற்றா? இனி நித்திய அமாவாசை!

‘அம்மா… நான் கேவலமானவன். கேடுகெட்டவன்’ மாமரத்தடியில் குற்றவுணர்வோடு சுருண்டுகிடக்கிறான் அற்புதன்.

‘உனக்காகவுந்தான் அம்மா. இல்லாதவனைத் தேடி நீயுந்தான் எத்தனை மைல்கள் நடப்பாய்? எத்தனை ஆண்டுகள் காத்திருப்பாய்?’

‘ஆனால், அதற்காக மட்டுந்தானா?’ உள்மனதில் ஒரு முள் அசைந்தசைந்து வேதனையைக் கூட்டுகிறது.

கோகுலனுடைய படத்தின் முன் குத்துவிளக்கொன்றை ஏற்றிவைத்துவிட்டு அதன்முன் அம்மா படுத்துவிட்டார். “என் மகன் கோகுலன் எங்கே?” என்ற வாசகத்தை உரித்தெடுத்துவிட்டார். பொழுது கருகுகிறது. விறாந்தை இருண்டு கிடக்கிறது. முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்னம் வீட்டினுள் புகுந்த அதே இருள். மேலும் அடர்ந்து…

அற்புதன் வெளியில் சுற்றிவிட்டு வந்து மாமரத்தடி சாக்குக்கட்டிலில் அமர்ந்திருக்கிறான். சாப்பிடவில்லை. சாப்பிடுவதற்கு அங்கு என்னதானிருக்கிறது? ஞானம்மா எழ முயற்சிக்கிறார். முதுகுத்தண்டில் கடும் வலி. கைகால்கள் கனத்த பிணம்போல தூக்கமுடியாமல் சோர்ந்து சோர்ந்து விழுகின்றன. உடலும் உயிருமற்றவராய்க் கிடக்கிறார். அற்புதன் இடையிடையே வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறான். அவனுக்குள் பயம் இரைச்சலிடுகிறது. மூச்சு விடுவதன் அடையாளமாக அம்மாவின் வயிறு உயர்ந்து தாழ்கிறது. இரவு… காலை… மதியம்… பொழுது கரைகிறது. மறுநாள் மாலையாகி இருள் சூழத் தொடங்கவும் உடலைப் பெயர்த்துக்கொண்டு எழுந்திருக்கிறார். அற்புதன் வேலைக்குப் போகவில்லை. மாமரத்தடியில் படுத்திருக்கும் அவனது முதுகை படியில் குந்தியிருந்துகொண்டு வெறித்துப் பார்க்கிறார் ஞானம்மா.

ஏதோ நினைவு வந்தாற்போல, கதிரையில் கிடந்த அந்தப் பத்திரிகையை மீண்டும் எடுத்துப் பார்க்கிறார்.

‘இரண்டாயிரத்தி ஒண்டு… அந்த வருசக் கடைசியிலைதான் அபிராமிக்குக் கலியாணம் நடந்தது. கோகுலன் இல்லையெண்டு தெரிஞ்சதுந்தான் கலியாணங் கட்ட ஒத்துக்கொண்டியா? அட! என்ரை தங்கக் கிளியே!’ கண்களைத் துடைத்துக்கொள்கிறார்.

பிறகு குசினிக்குள் போகிறார். முப்பத்தொரு ஆண்டுகளில் முதன்முறையாக அவருக்கு அவ்வளவு பசிக்கிறது. பசியென்றால் குடலைக் குடல் தின்னும் பசி!

“இந்தத் தேங்காயைக் கொஞ்சம் உரிச்சுத் தா மோனை”

குரல் கேட்டு அற்புதன் எழுந்திருக்கிறான். இந்தப் பிரளயம் எவரையும் காவுகொள்ளாமல் கடந்துவிட்டதா?

“உங்களைக் கண்டபிறகு இயக்கத்துக்குப் போக மனம் வராதெண்டபடியாலைதான் இங்க வராமல் நேரை இயக்கத்திலை போய்ச் சேர்ந்திருக்கிறான்” ‘சமாதானம் இத்தனை பலவீனமாக இருக்கக்கூடாது’ என்று அதைச் சொன்னபோதே அற்புதனுக்குத் தோன்றியது.

“அதில்லை. என்ரை பிள்ளைக்கு எவ்வளவு அடி அடிச்சிருந்தால் அவன் என்னைக்கூடத் தேடி வராமல் இயக்கத்துக்குப் போயிருப்பான்!”

‘ஆ! இப்போதும் நீதான் வென்றாய்!’

குசினிக்குள் புட்டு அவிகிறது. முட்டைப் பொரியல் மணக்கிறது. அற்புதன் தலைவாசலுக்குள் போய் கொடியில் தொங்கும் அம்மாவின் சேலையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறான். தறியில் நெய்யவோ கடைகளில் வாங்கவோ முடியாத அம்மாவின் வாசனை!

——————————————-

2 comments

  1. ஆஹா அற்புதமான மனதை தொட்ட கதை.. ஒரு வித பதைபதைப்பை ஏற்படுத்தியது.. பத்மநாபபுரம் அரவிந்தன் ..

  2. அருமையான கதை. நான் முதல்முதலாக தமிழ்நதியின் படைப்பினை வாசித்தேன்; இனி அவரது கதைகளைத் தொடர தயாராகிவிட்டேன். அதே சமயம் விமர்சனம் செய்யுமளவுக்கு விவரமானவன் நானில்லை. இக்கதை நடந்த, இன்றும் நடந்து வருகின்ற நிகழ்வாகவே இருப்பது தெளிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *