துரோகம்

சோ. தர்மன்

ஓவியம் : அனந்த பத்மநாபன்


அக்காவுக்கும், மாமனுக்கும் என் மேல் உள்ள கோபம் நியாயமானதுதான். தாய்மாமன் என்ற உறவு முறையில் வேகாரியாய் திரியும் அவர்களுடைய மகனை நான் கண்டிக்காமல் இருப்பது தவறு என்பது அவர்களுடைய வாதம். ஆனால் அவர்களுடைய மகன் பதின்மூன்றே வயது சிறுவனாயிருந்தாலும் தாய்மாமனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை எவ்வளவு கச்சிதமாக கொடுத்து வருகிறான் என்பது அக்காவுக்கும் மாமனுக்கும் தெரியாது போலும். என் எதிரே நின்று முகம் பார்த்து பேசப் பயந்து போய் ஒளிந்து கொள்வது, தப்பித் தவறி என்னைக் கண்டுவிட்டால் பற்ற வைத்த முழு சிகரெட்டையும் தூக்கி வீசி எறிந்து விடுவது, கையில் உள்ள தீப்பெட்டியை கச்சிதமாக அடுத்தவரின் கையில் திணித்து விடுவது. குடித்திருக்கிற நேரத்தில் ஊருக்கே வராமல் நகரத்தில் தங்கிக் கொள்வது.

அவன் எனக்கு கொடுக்கின்ற மரியாதைகளை நான் தொடர்ந்து பெற்று கௌரவம் அடைய வேண்டுமெனில் அவனை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும். நம்முடைய போதனைகளை ஏற்றுக் கொள்ளும் சிறுவர்கள் இல்லை என்பதும், அந்த நேரத்தில் தலையாட்டிவிட்டு, அடுத்த கணமே நம்மை ஏமாற்றுவார்கள் என்பது என் நினைப்பு. ஆனாலும் ஒரு தரம் மட்டுமாவது நீ அவனைக் கூப்பிட்டு கண்டிக்க வேண்டும் என்ற அக்காவின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டேன். அதற்கான நல்ல நேரத்திற்காக காத்திருந்தேன்.

அவன் எட்டாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நகரத்துக்கு ஓடிப்போய் சுற்றித்திரிந்து விட்டு ஊர் வந்தபோது அக்காவும், மாமாவும் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தது தான் மிச்சம். அவன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக் கொண்டான். அப்போதும் என்னிடம் வந்து தான் இருவரும் முறையிட்டார்கள். ரொம்பநாள் கழித்துத்தான் யதார்த்தமாக இருவரும் சந்தித்துக் கொள்ளும் நேரம் அமைந்தது. என் அருகே சமமாக அமர்வதற்கு கூச்சப்பட்டவனாக பவ்யமாக நின்று கொண்டிருந்தான். இன்றைக்குத்தான் அவன் முகத்தை மிக அருகில் உற்றுப் பார்த்தேன். என்னுடைய அக்காவின் முகச்சாயல் அப்படியே படிந்திருந்தது. நானும் அக்காவும் ஒரே முகச்சாயல் என்று அம்மா அடிக்கடி சொல்வாள்.

பலமுறை உட்காரச் சொல்லி வற்புறுத்தியும் உட்கார மறுத்துவிட்டான். உதடுகள் கன்னங்கரேர் என்று இருப்பதை உற்றுப் பார்த்தேன். அவன் பள்ளிக்கூடம் போகாமல் நின்று விட்டதை சொல்லிச் சொல்லி அழுத என் அக்காவின் முகம் என் மணக்கண்ணில் ஓடியது, பாவமாக இருந்தது. எதுவுமே தெரியாதது போல் பேச்சை ஆரம்பித்தேன்.

“என்னடா பொன்மாடா ஒழுங்கா படிக்கியா?”.

“—————————————————————————–”

”என்னடா ஒன்னுமே பேச மாட்டேங்க, பள்ளிகூடம் போறயா இல்லையா”.

“பள்ளிக்கூடம் போகலை”.

“எதுக்குடா பள்ளிக்கூடம் போகல”.

“படிக்கவும் புடிக்கல, இந்த ஊர்ல இருக்கவும் புடிக்கல”.

“வேற என்னடா புடிக்குது”.

“எப்பவும் கூட்டதோடு கூட்டமா இருக்கணும், கூட்டத்தோடு கூட்டமா வேல செய்யணும் போலவே இருக்கு”.

”அப்பிடி வேல என்ன வேலடா இருக்கு”.

“பல வேலைகள் இருக்கு மாமா, சீக்கிரமா ஒரு வேலைக்குப் போயிருவன், மொத்தத்துல இந்த ஊர்ல இருக்கப் புடிக்கல”.

இதுதான் கடைசியாகப் பொன்மாடன் என்னிடம் பேசிய பேச்சுகள். அதற்குப் பிறகு அவனைப் பற்றிய தகவல்கள் மட்டும் அவ்வப்போது அக்காள் மூலமாகவும், மாமா மூலமாகவும் வந்து கொண்டேயிருக்கும். பொன்மாடன் சொன்ன கூட்டத்தோடு கூட்டமாகவே இருக்கவேண்டும், கூட்டத்தோடு கூட்டமாகவே வேலை செய்ய வேண்டும் என்ற தத்துவ வார்த்தையை அக்காவிடம் சொன்னேன். உடனே பதில் வந்தது. ”அப்படின்னா, காவி வேஷ்டி உடுத்தி, ருத்ராட்சக் கொட்ட போட்டு, திருவோடு ஏந்திட்டா, வருஷம் முழுக்க கூட்டத்தோடு கூட்டமாவே இருக்கலாம், கவலையில்லாத சாப்பாடு, கூட்டத்தப்பாத்துக்கிட்டே இருக்கலாம்”.

பொன்மாடன் தனிமையை தேர்ந்தெடுக்காமல் கூட்டத்தை தேர்ந்தெடுத்ததற்காக சந்தோஷப்பட்டேன். தனிமை ஞானிகளின் பாதையல்லவா. அது எப்படி பொன்மாடனின் பாதையாக இருக்கமுடியும். கூட்டத்தோடு கூட்டமாக வாழவும் வேலை செய்யவும் எப்போதும் இயலுமா என்றும் சாத்தியமா என்றும் யோசித்தேன்.

சில மாதங்கள் கழித்து தன் மகன் டவுணில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் முறுக்கு, கோன் ஐஸ், கடலை மிட்டாய் விற்பது பற்றி அக்காள் சொன்னாள். பொன்மாடன் அவனுடைய கொள்கைப்படி சரியான வேலையை தேர்ந்தெடுத்திருப்பது பற்றியும், சரியான பாதையில் சென்று கொண்டிருப்பது பற்றியும் சந்தோஷப்பட்டேன். பல தடவை அதே திரையரங்கிற்கு நான் போயிருந்தும் என் கண்ணில் அவன் தட்டுப்படவே இல்லை. நானும் அவனைப் பற்றி அவனுடைய சகாக்களிடம் விசாரிக்கவுமில்லை. ஏனெனில் விசாரனை என்பது எப்போதுமே நல்லதிற்கில்லை என்பதே நான் அறிந்த ஒன்று.

அப்புறம் ரொம்ப நாட்களாக அவனைப் பற்றிய தகவல்கள் ஏதும் எனக்கு வரவில்லை. அக்காவும் மாமாவும் அவனை கொஞ்சங் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தார்கள். அவன் இப்போது சினிமா தியேட்டரில் வேலை செய்யவில்லை என்றும், வேறு பெரிய நகரத்துக்குப் போய்விட்டான் என்றும் பேச்சு வாக்கில் அக்காள் சொன்னாள். நான் நகரங்களுக்குச் செல்லும் போதெல்லாம் சில நேரம் கூட்டங்களில் தேடினேன்.

நாலைந்து வருடங்கள் கழித்து ஒரு முழு இளவட்டமாக ஊருக்கு வந்தபோது அக்காளும் மாமாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். என்னிடம் கூட்டி வந்தார்கள். அதே பணிவு, அதே மரியாதை, அதே பேச்சு.

”டேய்.. பொன்மாடா நாலைந்து வருஷமா எங்கடா போன”,

“சினிமா தியேட்டர் வேல புடிக்கல அதவிட்டு வெலகிட்டேன், அடுத்து ஒரு சர்க்கஸ் ஒரு மந்திரவாதிட்டப் போய் சேர்ந்து ஒரு வருஷம் வேல பாத்தன்”.

“மந்திரவாதிட்டியா”

“பயப்படாதீங்க மாமா, மண்ட ஓடுவச்சு, கூட்டங்கூட்டி, ரத்தம் கக்கி ஒருத்தன விழ வச்சு தாயத்துவிக்கான்ல அவன் கூடத்தான் ஊர் ஊரா திருவிழா கூட்டத்துல வேல செஞ்சன், அதுவும் புடிக்கல வெளிவேறிட்டன்”.

“யேல, ஒனக்கு மந்திரம் தெரியுமா, மந்திரவாதி கூட ஒனக்கு என்னல வேல”

“கூட்டத்தோடு கூட்டமாநின்னு, ரத்தம்கக்கி தரையில விழுந்து கெடக்கிறதும், மந்திரவாதி கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்றதும் தான் என்னோட வேல, வேலையும் லேசு எனக்கு பிடிச்சமான வேலையும்கூட, ஆனா கடேசியில என்னடான்னா அந்த மந்திரவாதியோட பொண்டாட்டி, நம்மரெண்டு பேரும் தனியாப் போயி தாயத்து விப்போம், ஒனக்கு மந்திரம் நான் சொல்லித் தாரன்னு நச்சரிக்க ஆரம்பிச்சா, ஓடியாந்துட்டன்.

“இப்ப என்னடா செய்யிற”

“டவுண்ல சமையல் மாஸ்டர் மணி அய்யர் இருக்கார்ல்ல, அவருகூட தான் ரொம்பநாளா இருக்கன் மாமா, தங்கமான மனுஷர் வேலையும் எனக்குப் புடிச்ச வேல, எப்படியும் அவருக்கு வேல இருந்துக்கிட்டே இருக்கும், சம்பளம், சாப்பாடு, தங்குற எடம் அம்புட்டும் அவரு பொறுப்புத்தான் மாமா, பெரிய பெரிய கல்யாணம், நல்லதுபெல்லது எல்லாமே அவருவேல தான், சமையல்ல மன்னன் மாமா”.

கோவில்பட்டி டவுணிலும் சரி, சுற்று வட்டாரத்திலும் சரி மணி அய்யரைத் தெரியாதவர் இருக்கவாய்ப்பில்லை. கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போதே மணி அய்யரிடம் தேதி வாங்கிவிட்டுத்தான் மற்ற வேலைகளை நிர்ணயம் செய்வார்கள். மணி அய்யரின் சமையல் உள்ள சில நல்ல காரியங்களுக்கு நானும் போயிருக்கிறேன். சீருடை அணிந்து பொன்மாடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருப்பான்.

மொத்தத்தில் பொன்மாடன் என்ற இளவட்டம் நல்ல பையனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும், நன்றாக வேலை பழகிக்கொள்பவனாகவும், எதிர்த்துப் பேசாதவனாகவும், மணி அய்யரின் நல்ல சீடனாகவும் இருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டேன். இதையெல்லாம் விட யாரையும் எளிதில் வசப்படுத்திக் கொள்ளும் தனித்த பேச்சுத் திறமையுள்ளவன் என்பதையும் அறிந்து கொண்டேன். இவையெல்லாம் மணி அய்யரிடம் பொன்மாடன் கற்றுக் கொண்ட பாடங்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

திடீரென்று ஊருக்கு வருவதும் பந்திபரிமாற நாலைந்து இளவட்டங்களை கூட்டிச் செல்வதும் பல நாட்களாக நடந்துவந்தது. அன்றைக்கு வந்தவன் முதன் முறையாக என்னை சந்திக்க வந்தது ஆச்சரியமாக இருந்தது.

தான் போன வாரம் மணி அய்யரை விட்டுப் பிரிந்து விட்டதாகவும், வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரிய கல்யாணத்திற்கு சமையல் வேலை ஆர்டர் வாங்கியிருப்பதாகவும், தன்னை அங்கு கட்டாயம் வரும்படி அழைத்தான்.

”பொன்மாடா ஒன்னய நம்பி யாருடா இவ்வளவு பெரிய வேலைய ஒப்படைச்சவரு”

“மாமா அவரு நம்ம மணி அய்யரோட பார்ட்டி தான். எப்பிடி என்னயப் பிடிச்சுப் போச்சுனா, போன வருசம் ஒரு பத்துப் பேரோட குற்றாலம் போனாரு. மூனு நாள் தங்கல். மூனு நாளும் மூனு வேளைக்கும் நான் தான் சமையல். அந்தப் பத்துப் பேருக்குமே என்னயப் புடிச்சுப் போச்சுமாமா. அன்னைக்கு சொன்னாரு, டேய், பொன்மாடா, எம்மக கல்யாணத்துக்கு நிய்யிதாண்டா சமையல் மாஸ்டர்னாரு, நான் வெளையாட்டுக்கு குடிபோதையிலதான் சொல்றார்ன்னு இருந்தன், ஆனா நெசத்துக்கே வந்து பத்திரிக்கைய நீட்டிட்டு பிடிவாதமா ஒத்தக்கால்ல நிக்காரு, நானும் சரின்னு தனியா அட்வான்ஸ் வாங்கிட்டேன்.”

“அய்யருகிட்ட சொல்லவேண்டாமாடா, அவருக்கு தெரியாம போறது பெரிய துரோகம்டா பொன்மாடா”.

“மனச்சாட்சினு ஒன்னு இருக்குமாமா, காடோடிப்பயலா கூட்டம் தேடி அலஞ்ச என்னயக் கூட்டியாந்து வேல சொல்லிக் குடுத்த குருவ மறக்க முடியாது மாமா, அதனால நானே போயி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனப் பெறவு தான் அட்வான்ஸ் வாங்குனன் மாமா, அவரும் சந்தோஷப்பட்டாரு”.

வருகிற ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்தேன். ஒரு ரிடையர் தாசில்தார் வீட்டுக் கல்யாணம் என்பது எவ்வளவு பெரிய நிகழ்வு என்பதை மண்டபம் நிறைந்த கூட்டங்களும், வெளியே அணிவகுத்து நின்ற வாகனங்களும் பறை சாற்றியது. ஊரிலேயே விலை உயர்ந்த பட்டுப் புடவைகளும், தங்க ஆபரணங்களும் உலாவருகிற இடமாகப் போய்விட்டது கல்யாண மண்டபம்.

பட்டுச்சேலைகள் சரசரக்க கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. இரண்டாம் பந்திக்கு இடம் பிடிக்க சிலர் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு விட்டு வருகிற அத்தனை பேருமே சந்தோஷமாக பேசி கொண்டும் சிரித்துக் கொண்டும் வருகிறார்கள். இதோ மொய்ப்பணம் கொடுக்கும் மேசையோரம் வலதுபுறத்தில் மணி அய்யர். கால்மேல் கால் போட்டபடி வெற்றிலை குதப்பிய சிவந்தவாய் சிரிப்புடன். அய்யரைப் பார்த்த பல பேர் அவரிடம் போய் பேசுகிறார்கள்.

“எங்கடா அய்யர்வாள் தட்டுப்படலையேனு பார்த்தன். நீரு என்னடானா இங்க இருகீரு, அய்யர்வாள் எல்லாமே பிரமாதம் ஒரு பிடி வசமாப் புடிச்சாச்சு” ரிடையடு போலீஸ் இன்ஸ்பெக்டர்.

“அய்யரே பேத்திக்கு நிச்சியமாயிருக்கு, பையன் ஒங்களப் பாக்க வருவான், இன்னைக்கு மாதிரியே பிரமாதப்படுத்தியிறனும்” தொழிலதிபர் சேதுராமலிங்கம் செட்டியார்.

“அய்யரே, வழக்கம் போல இன்னைக்கும் அந்தப் புளிமிளகா வேணும்னு எலையில சுருட்டிட்டா பாருங்க, ஒங்க தல தெரியலைனு பார்த்தன், ஆனா ஒரு வாய் சோறு வச்ச ஒடனேயே இது மணி அய்யர் கைவண்ணம்தானு தெரிஞ்சு போச்சு” கரைவேட்டி கட்டிய அரசியல் புள்ளியும் சக தர்மினியும்.

அத்தனை பேருடைய புகழ்ச்சிக்கும் வெற்றிலை எச்சில் ஒழுகாமல், குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார் மணி அய்யர். கொஞ்சம் தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்த பொன்மாடனின் உடம்பு முறுக்கேறியது. கண்கள் சிவந்தன. கோபத்தில் கால் கைகள் நடுக்கமெடுத்தன. இத்தனை வருடங்களாக சீடன் தவமிருந்து பெற்ற வரத்தை கச்சிதமாகக் கவர்ந்து கொண்டிருந்தார் குரு. சிஷ்யனின் திறமைகள் அனைத்தையும் அறுவடை செய்து கொண்டிருந்த குருவை அருவருப்பாகப் பார்த்தான் சீடன். திருவோட்டில் தர்மமிட்ட காசை திருடுவதுபோல் இருந்தது குருவின் செயல். இரு கைகளிலும் உள்ள கட்டைவிரல்களால் மற்ற விரல்களை நெரித்து சாபமிட்டான் சிஷ்யன். வில்லில் நாண் ஏற்ற மட்டுமல்ல கட்டைவிரல். சாதம் கிண்டும் சட்டகப்பை பிடிக்கவும் கட்டைவிரல் வேண்டும் தானே.

சட்டகப்பையால் தாக்கி அய்யரின் மண்டையைப் பிளந்த கொலைக் குற்றத்திற்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் பொன்மாடன். அவன் இப்போது கூட்டத்தோடும் இருக்கிறான், தனியாகவும் இருக்கிறான். கூட்டங்களைப் பிரிக்கும் சுவர்கோடுகளே எல்லைகளாய். கம்பித் தடுப்புக்குள் தனியாய் இருந்தாலும், தன்னை ஒட்டி நீளும் ஆயிரம் கம்பித் தடுப்புக்கள் கூட்டமின்றி வேறென்ன.

கைகளில் விலங்குமாட்டி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வழி நடத்த கோர்ட்டுக்கு வரும் தேதியறிந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பொன்மாடன் சந்தோஷமாகவும் சிரித்த முகத்துடனும் இருந்தது எனக்கு ஆச்சிரியமாகவும், வருத்தமாகவும் இருந்தது. அவனிடமே கேட்டேன்.

“இங்க கேளுங்க மாமா, வருத்தம் என்ன வருத்தம். வாழ்நாள் முழுக்க ஜெயிலுக்குள்ள கூட்டத்தோடு கூட்டமா இருக்கப் போறமங்கிறத நெனச்சா சந்தோக்ஷமா இருக்கு மாமா”.

பொன்மாடன் என்கிற விசாரணைக் கைதி ஆயுள் தண்டனைக் கைதியாக ஜெயில் முழுக்க கூட்டத்தோடு கூட்டமாக சுற்றி வருகிறான். தண்டனைக் கைதிகள் பல வேலைகள் செய்தாலும், சமையல் வேலை தெரிந்த பொன்மாடன், தனக்குப் பிடித்த சமையல் வேலையை செய்கிறான். நீண்ட நாட்களாக ஜெயில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் புது விதமான ருசியை அனுபவிக்கிறார்கள். அது மணி அய்யரின் வாசனையும் ருசியும் என்பது யாருக்குத் தெரியும்.

ஜெயிலில் மனுப்போட்டு அடிக்கடி பொன்மாடனை சந்தித்துப் பேசி வருகிறேன். போன வெள்ளிக் கிழமை பார்த்தபோது என்னிடம் பேசியவனின் பேச்சில் முதன் முறையாக இலேசான வருத்தம் தெரிந்தது.

”நீங்களே சொல்லுங்க மாமா, குரு வரம் குடுத்தப் பெறவு அந்த வரத்த சீடனுக்கு தெரியாம அபகரிக்கலாமா. நான் அவர்ட்ட சொல்லிட்டு கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனப் பெறவு தான் அட்வான்ஸ் வாங்குனன். ஆனா அய்யரு இப்படிச் செய்வார்னு நான் கனவுலயும் நெனைக்கலமாமா”.

“ஒரு தரம் நிய்யி அவர மன்னிச்சிருக்கலாமல்லடா”

என்னுடைய இந்தக் கேள்வி பொன்மாடனை உலுப்பியிருக்க வேண்டும். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான்.

“மாமா அய்யரு இது வரைக்கும் எங்களுக்கு யாருக்குமே மன்னிக்கிறதப்பத்தி சொல்லிக் குடுக்கவே இல்ல மாமா. அடுத்து நான் அன்னைக்கி அவர மன்னிச்சு விட்டுருந்தாலும் தப்பு மாமா. ஏம்னா, குருதான் சிஸ்யன மன்னிக்கனும், சிஸ்யன் குருவ மன்னிசா, சிஸ்யன் குருவாகிருவான். நான் என்னைக்குமே அவரோட சிஸ்யன் தான் மாமா, அதே சமயத்துல சிஸ்யன் பாவம் செய்யலாம். ஆனா குரு துரோகம் செய்யக்கூடாது மாமா. துரோகத்துக்கு மன்னிப்பே கெடையாது. அதுவும் குருவோட துரோகத்துக்கு தண்டனை தான் தீர்வு”.

இங்கேயும் பொன்மாடன் சீருடை அணிந்திருந்தான். நிறம் மட்டுமே வெவ்வேறாயிருந்தது. இங்கேயும் பொன்மாடன் விரும்பியபடியே கூட்டத்தோடு கூட்டமாகவே இருக்கிறான், வேலையும் செய்கிறான். ஆனால் எல்லா கூட்டங்களும் ஒன்றல்ல, வெவ்வேறான கூட்டங்கள். இங்கே கூடியிருக்கிற கூட்டங்கள் பாவங்களாலும், பழிகளாலும், அபழிகளாலும், துரோகங்களாலும், இச்சைகளாலும், காமத்தாலும், கோபத்தாலும், தன்னிலை மறந்ததாலும், விரோதத்தாலும் கூடியிருக்கின்ற கூட்டம். இக் கூட்டத்திலும் குருக்களும் உண்டு, சிஷ்யர்களும் உண்டு. ஆனால் கொடுத்தவரத்தை கற்றுக் கொடுத்த வித்தையை சிக்ஷ்யனுக்கு தெரியாமல் கபளீகரம் செய்த குரு இருக்க வாய்ப்பில்லை.

——————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *