வீதிகள்

 

சுரேஷ் பிரதீப்

ஓவியங்கள் : அனந்த பத்மநாபன்.


தேவர் கண்டநல்லூரில் இருந்து உட்பிரியும் சாலைச் சுழல்களை பிரவீணா அறிந்ததே கிடையாது. மேப்பளத்தில் இருந்து தினம் சைக்கிளில் தான் அவள் படித்த ஜி.ஆர்.எம் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆறு வருடங்களாக சென்றிருக்கிறாள். இருந்தும் ஒரு நாள் கூட அந்த தார் சாலையில் இருந்து அவள் இறங்கியதே இல்லை. இறங்கத் தோன்றியதும் இல்லை. அதற்கு நேரம் இருந்ததும் இல்லை. அப்பள்ளியின் சீருடையான பச்சை நிற தாவணியை ஒழுங்காக அணிந்திருக்கிறோமா என்று பார்ப்பதற்கே காலையில் புறப்படும் போது நேரம் சரியாக இருக்கும்.

“அனிதாவும் அங்குனதான படிக்கிறா? உன்ன மாதிரி சிங்காரிச்சு கிட்டா நிக்கிறா? சட்டுபுட்டுன்னு கெளம்பல” என்று எரிச்சல்படும் அம்மாவிடம் அவள் படிப்பது வேலுடையார் மேல்நிலைப் பள்ளி எனவும் அங்கு மாணவிகளுக்கான சீருடை சுடிதார் எனவும் அவளுக்கு சொல்லத் தோன்றும். எரிச்சல் மீதுறும் போது அனிதாவின் அம்மா மாதம் அறுபதாயிரம் சம்பாதிக்கும் பள்ளி தலைமையாசிரியை என்றும் சேர்த்துக் கொள்ளத் தோன்றும். எல்லாம் தோன்றுவது மட்டும்தான். அவள் எதையும் சொன்னது கிடையாது. அனிதா உறவுக்கார பெண் வேறு. இதைச் சொன்னால் அவள் மீதும் அம்மாவின் வன்மம் திரும்பி விடும் அதனாலேயே நான் சொல்லாமல் இருக்கிறேன் என சுய சமாதானம் செய்து கொள்வாள்.

காற்றடிக்கும் மாதங்களில் தாவணியுடன் சைக்கிள் ஓட்டுவது மேலும் எரிச்சல் தரக்கூடியது. சரியான காரணம் சொல்லத் தெரியாமல் “அப்பா லெவன்த் வேலுடையார்ல் சேத்து விடுப்பா” எனக் கெஞ்சியிருக்கிறாள். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்புவரை அந்த பச்சை தாவணியுடன் படித்துத்தான் வெளிவந்தாள் பிரவீணா. அதன் பிறகு அவள் சைக்கிள் மிதிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் அவளை நுணுக்கமாக சோதிக்கும் அம்மாவை நினைத்தால் எரிச்சலாக வரும். ஆனால் வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டாண்டுகளில் அவள் வீட்டுக்கு வருவதும் குறைந்து போயிருந்தது. அதோடு வருகிற சமயங்களில் அவள் அம்மாவிடம் அவள் காட்டும் கடுமை கூடிக்கொண்டே போனது.

தூங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் சில ஒளிக்கீற்றுகள் விழுந்தன.

“அவதான் தூங்குறான்னு தெரியுதுல்ல. அப்பொறம் என்னாத்துக்குடி ஜன்னல தொறந்த” என்று கிசுகிசுத்தபடியே அதிராத காலடிகளுடன் வந்து அம்மா ஜன்னலை சாத்தினாள். அப்பா அலைபேசியில் உரையாடியபடி சத்தமாக சிரித்த போது ஒரு “ப்ச்” வழியாக அவரை அடக்கினாள். சில வருடங்களுக்கு முன் தங்கை பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது தான் அப்படி அடக்கப்பட்டது அவளது நினைவில் மின்னியது. புன்னகையுடன் எழுந்து அமர்ந்தாள். அணிந்திருந்த பனியனுடன் வெளியே செல்லவிருந்தவளை “அக்கா” என்ற தங்கையின் குரல் மீண்டும் உள்ளிழுத்தது.

 

கொள்ளைப்புறம் பதமான சூட்டில் வெந்நீர் அளந்து வைக்கப்பட்டிருந்தது. ஆற்றினைப் பார்த்தபடி இருக்கும் கொள்ளைப்புற வாசலில் அமர்ந்தபடியே அவிழ்ந்து கிடந்த கூந்தலுடன் பல் துலக்கிக் கொண்டே வீட்டின் ஓசைகளை கேட்கத் தொடங்கினாள். பல வருடங்களுக்கு முன் பழக்கப்பட்டுப் போன சொற்களும் ஓசைகளும் அந்த வீட்டிலிருந்து எழுந்து கொண்டிருந்தன. ஒருவேளை உள்ளே எழுந்து சென்றாள் ரெட்டை ஜடையுடன் நின்றபடியே சூடான இட்லிகளை வாய்க்குள் பிய்த்துப் போட்டுக் கொண்டிருக்கும் தன்னை காண முடியுமோ என்ற பிரம்மை தட்டியது. அதற்கு மேல் அந்த எண்ணங்களுக்கு இடமளிக்க விரும்பாதவளாய் வாய்க் கொப்பளித்து விட்டு வீட்டினுள் நுழைந்தாள். துவைத்து அயர்ன் செய்யப்பட்ட தங்கையின் சுடிதாரும் சூடான காப்பியும் அருகருகே இருந்தன.

“குளிச்சிட்டு போட்டுக்கவா?” என்றாள்.

“இல்லக்கா குளிக்கிறவர இதப் போட்டுக்க. அதுக்கப்புறம் உன்னோட டிரெஸ் எதாவது நான் அயன் பண்ணிக் கொண்டாறேன்” என்றாள் தங்கை. அவ்வுடையை அணிந்த போது கை இயல்பாகவே சென்று கூந்தலை முடிச்சிட்டுக் கொண்டது. மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளியின் திசையில் பயணித்தாள். தேவர்கண்டநல்லூரின் திருப்பம் நினைவில் எழுந்தது. அப்போதும் ஒரு பயம் உள்ளுக்குள் இருக்கவே செய்தது. வீம்புக்கென உள்ளே நுழைந்தாள். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் முகப்பு ஒருவித நேர்மறை உணர்வை அவளுள் உருவாக்கியது. அந்தப் பயணம் எவ்விதத்திலும் சுவாரஸ்யம் தரப்போவதில்லை என்பதை நுழைந்த சில நிமிடங்களிலேயே மனம் உணர்ந்து சோர்வு கொள்ளத் தொடங்கிவிட்டது. வேண்டுமென்றே பல்வேறு தெருக்கள் வழியே திரும்பினாள். ஒன்றிரண்டு கூரை வீடுகளைத் தவிர பெரும்பாலும் பசுமை வீடுகளே காணப்பட்டன. காலை நேரத்திலேயே தெருக்களில் ஆட்கள் இல்லை. புதுப்பெண் என அவளை யாருமே உற்றுப் பார்க்கவில்லை. வங்கிழடுகள் எதையும் எந்த வீட்டு வாசலிலும் காண முடியவில்லை. டியூஷனுக்காக காலையிலேயே அவளைக் கடந்து செல்லும் மாணவர்களைத்தான் அதிகம் காண முடிந்தது. அவள் கடந்து வந்த சாலை குறுகியதாய் இருந்தாலும் மேடுபள்ளங்கள் அற்றதாக இருந்தது.

அதை கவனித்த போதுதான் தன் மனம் எதை எதிர்பார்க்கிறது என உணர்ந்தாள். யாரோ ஒரு கணவன் மனைவியை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியபடி அடித்துக் கொண்டிருக்க வேண்டும். சாலையில் தனக்கு பின்னே வரும் ஆடவன் வேண்டுமென்றே தன் வண்டியில் ஹாரன் அடிக்க வேண்டும். ஏதோவொரு முதியவர் தன்னை நிறுத்தி “எந்தூட்டு புள்ள ஆயி” என்று விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் தன் மனம் கற்பனை செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தாள். அவளுக்குத் தெரிந்த ஒரு வீடு தென்பட்டது. அவள் சிறுமியாக இருந்தபோது வந்திருந்த வீடு அது. அப்போது அந்த வீட்டின் அத்தை பஞ்சாயத்து தலைவராய் இருந்தார்கள் என்பதை பின்னர் தெரிந்து கொண்டாள். இவள் வீடு போல அல்லாமல் விசாலமான மாடி வீடாக அது இருந்தது. மேலும் முதல் முறை அரைநாள் “பெரிய கலர் டிவியில்” அவள் படம் பார்த்ததும் அந்த வீட்டில் தான். அந்த அத்தையிடம் அம்மா ரொம்ப நேரம் சினேகமாய் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த அத்தை சாப்பிட சொன்னபோது மட்டும் தீர்மானமாக மறுத்துவிட்டாள். இறுதியாக அந்த அத்தை வாசலில் வந்து வழியனுப்பிட்டு இவர்களை பார்த்து நின்றதை பிரவீணா மட்டும் திரும்பிப் பார்த்தாள். அந்த  விழிகள் நினைவில் எழ அவள் உடல் மெல்லிய சிலிர்ப்பை அடைந்தது. அங்கிருந்து வலப்புறமாக இரண்டு சந்து திரும்பினால் பிரதான சாலை வந்துவிடும் என்பது அவள் எவ்வளவோ தடுத்தும் நினைவில் வந்துவிட்டது.

வேண்டுமென்றே சைக்கிளை இடப்புறமாக ஒடித்தாள். சாலையின் அகலம் அங்கு குறைவது போல இருந்தது. வீடுகள் சீரற்ற இடைவெளியில் இருந்தன. அதுவரை மனதில் இருந்த எதிர்பார்ப்பு குறைத்த ஒரு மெல்லிய நமைச்சல் அவளிடம் தோன்றியது. வீதிகள் முன்பு போல சுத்தமாக இருக்கவில்லை. நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல அக்காட்சிகள் உற்சாகம் தருவதாய் இல்லை. அவ்வீதிக்கு பொறுத்தமே இல்லாமல் உயரமான ஒரு பள்ளிவாசல் நின்று கொண்டிருந்தது. ஆடம்பரமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் அதனருகிலேயே உடலை நான்காக மடித்து உட்செல்ல வேண்டிய குடிசைகளும் சற்றே பெரிய கான்கிரீட் வீடுகளுமென அவ்வீதி ஒழுங்கற்றுப் பரவியிருந்தது. ஒரு புளியந்தோப்பினை கடக்கும் போது கடுமையான மலநாற்றம் எழுந்தது. அதன்பிறகு சாலை குண்டும் குழியுமாக மாறத் தொடங்கியது.

பிரவீணா ஒரு வீட்டைக் கடந்து போது மெல்லிய மன அதிர்வை உணர்ந்து படபடக்கத் தொடங்கினாள். அதற்கான காரணத்தை அவள் ஊகித்து முடித்த போது “ப்ரவீ…ஏய்…..உன்னத்தாண்டி……ப்ரவீ…..” என்றொரு குரல் கேட்டது. அது அனிதா தான் என அவளது ஓரப்பார்வை அவளைத் தீண்டிய கணமே பிரவீணா உணர்ந்து கொண்டாள். இருந்தும் ஏன் புறக்கணித்துச் செல்ல விழைந்தோம் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நைட்டியை எடுத்து சொறுகியபடி கூட்டிக் கொண்டிருந்தவள் பிரவீணா சைக்கிளை நிறுத்தியவுடன் இறங்கி வந்து கைகளைக் கோத்துக் கொண்டு “நல்லா இருக்கியா ப்ரவீ ” என்றாள்.

உண்மையில் அவ்வளவு சிரிப்புடன் உலராத கைகளுடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அனிதா அப்படி கேட்டது பிரவீணாவுக்கு அழுகையை வரவழைத்தது. அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

“ம் நல்லாருக்கேன் நீ ?” என்றவள் வார்த்தையை முடிக்கும் முன்னே எச்சில் விழுங்கினாள்.

“ம் பாத்தா எப்படித் தெரியுது?” என சற்றே ஒய்யாரமாக அவளை விட்டுத் தள்ளி நின்றாள் அனிதா.

பொறாமைப்படும் அளவுக்கு அழகாக இருந்தாள். காதோரம் சுருண்டிருந்த முடிகளில் இருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. குளித்த மஞ்சளுடன் கலந்து அவள் உடல் வாசனை மீண்டும் பிரவீணாவுக்கு அவளை அணைத்துக் கொள்ளும் உந்துதலை அளித்தது. அவள் அணிந்திருந்த பூப்போட்ட நைட்டி வியர்வையில் நனைந்திருந்தது.

நேரடியாகவே கேட்டாள்.

“ஆத்துக்காரர் என்ன பண்றார்?” என.

மெல்லிய திமிருடன் நின்றிருந்த அனிதா லேசாக வெட்கப்படுவது போன்று நடித்தாள். பிரவீணா சிரித்துவிட்டாள். அவர்கள் இன்னமும் சாலையில் தான் நின்று கொண்டிருந்தனர். அதை இருவரும் உணர்ந்த கணமே தங்கள் வார்த்தைகளில் போட்டு வைக்க வேண்டிய உறைகளை தேடத் தொடங்கிவிட்டனர். எந்நேரமும் பேசும்போது இந்த உறையை கழற்ற முடிவதேயில்லை. ஒரு அழுகைக்கோ புணர்வுக்கோ முன் மட்டும் வார்ததைகள் சற்றே உறைகளை கழற்றிக் கொள்கின்றன. அப்படி கழற்றியதற்காக அஞ்சி வெட்கி மீண்டும் மீண்டும் மேலும் மேலும் உறைகளை அணிந்து கொள்கின்றன.

அனிதாவின் முகம் மெல்லிய சங்கடத்தை வெளிப்படுத்தியது. இப்போது அவள் அணைத்து முத்தமிடக்கூடியவளாக தோற்றம் தரவில்லை. ஒருவேளை தான் சென்ற பிறகு அவள் அப்படி மாறிவிடக்கூடும் என பிரவீணா எண்ணிக் கொண்டாள்.

அனிதாவின் வீடு சுத்தமாக இருந்தது. உள்ளறைகளில் இருந்து சிலர் எட்டிப்பார்த்து விட்டு கொள்ளைப்புறம் சென்று ஏதோ கிசுகிசுத்தனர். ஹாலின் மையத்தில் கிடந்த ஒரு நாற்காலியில் பிரவீணாவை அமரச் செய்துவிட்டு மின்விசிறியைத் தட்டிவிட்டு அனிதாவும் அவள் அருகில் அமர்ந்து கொண்டாள்.

சட்டையின் முதல் பட்டனை போட்டவாறு “வாங்கம்மா” என்று சிரித்தபடியே கடந்து சென்றார் ஒரு பெரியவர்.

“ஆசையோட அப்பா” என்றாள் அனிதா.

ஆசை யாரென்றே தெரியாதவளாய் பிரவீணா விழித்தாள்.

“ஸ்கூல்ல என்னோட சீனியர்  ஆசைத்தம்பி  உனக்கு கூட தெரியுமே” என்றாள்.

சற்றே நிதானித்து யோசித்த போது தெரியவே செய்தது. நல்ல பேச்சாளன். அனிதாவோடு ஒன்றாக வீட்டுக்கு திரும்பி வரும் சமயங்களில் பின் தொடர்வான்.

தலைமையாசிரியையின் திடீர் நெஞ்சுவலி அனிதாப் பற்றி கேட்டபோது அம்மா முகத்தில் எழுந்த அச்சமூட்டக்கூடிய வெறுப்பு இப்போது அனிதாவின் உடலில் ஏற்பட்டிருக்கும் சங்கடமான நெளிவுகள் என பிரவீணா ஒரு நொடியில் அனைத்தையும் இணைத்துப் புரிந்து கொண்டாள்.

“இப்போ நீ என்ன பண்ற?” என்று சற்றுக் கடுமையாகவே கேட்டாள் பிரவீணா.

இயல்பிலேயே சற்றே பயந்த சுபாவம் கொண்ட அனிதா மிரண்டு போனவளாய் திருச்சியில் வேலை பார்ப்பதைச் சொன்னாள்.

“உன் ஹஸ்பண்ட்?” என்றாள் இன்னும் கடுமையாக.

“அவரும் அங்கதான்” என ஏதோ குற்றம் செய்துவிட்டவளைப் போலச் சொன்னாள் அனிதா.

பிரவீணாவின் மனம் கனிந்தது. அவள் கையைப் பற்றி தன் கைக்குள் எடுத்துக் கொண்டு “எதாச்சும் ப்ராப்ளமா” என்றாள்.

துடித்த உதடுகளில் அழுகையைத் தேக்கிக் கொண்டு இல்லை எனத் தலையாட்டினாள். அப்போது அவளைக் கடந்து சென்ற பெண்ணின் பார்வையில் இருந்து அவளுடைய அழுகை அவ்வீட்டில் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை எனப் புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தும் அனிதா நெளிந்து கொண்டுதான் இருந்தாள்.

அழும் குழந்தை ஒன்றினை “ரோ..ரோ..ரோ…ரோ இல்லடா இல்லடா தங்கம். அம்மா இங்குன இருக்கு…அம்மா பாரு அம்மா பாரு” என்று ஒரு பெண்மணி தூக்கிக் கொண்டு வந்தாள். அவள் குரலோ அந்தக் குழந்தையின் அழுகையோ அச்சூழலை இளகச் செய்தது. பிரவீணா ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அனிதாவைப் பார்த்தாள். ஆனால் தன் பார்வையில் ஒரு செயற்கையான உவகைத் தெரிவதாக அஞ்சி “அப்போ மேரேஜ் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுதா?” என்றாள்.

அனிதா மெலிதாக சிரித்தபடி ஆமோதித்தாள்.

உடையை நெகிழ்த்திக் கொண்டு பால் கொடுத்தபடியே “இவனுக்கு பெறந்த முடி எடுக்கத்தான் இப்ப ஊருக்கு வந்திருக்கோம்” என்றாள். இதுவரை அவளிடம் இல்லாத ஒன்று அவள் குரலிலும் உடலிலும் ஏறியிருப்பதை பிரவீணா கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அது விரும்பத் தகுந்ததாக இல்லை. பாத்திரங்கள் உருளும் ஒலி கொள்ளைப்புறமிருந்து கேட்டது.

“என்னிக்கு பங்ஷன்?” என்று மெல்லிய சோர்வுடன் கேட்டாள் பிரவீணா.

“வர்ற புதன் கெழமடி. நீயும் வந்துடு…” என்றவள் வார்த்தையை முடிக்காமல் எச்சில் விழுங்கினாள். அடிக்கடி கொள்ளைப்புறம் திரும்பப் பார்த்துக் கொண்டாள்.

ஆசை அந்நேரம் திண்ணை சுவற்றில் கை ஊன்றி செருப்புகளை கழற்றி உள்நுழைந்தபடியே எதையும் பார்க்கும் முன் முலையூட்டிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்தான். பிரவீணா பொங்கியெழும் ஒரு பொறாமையுணர்வை அடைந்தாள். பரிவும் அக்கறையும் கொந்தளிக்கும் விழிகள் அவை. அருகே அமர்ந்திருந்த தன்னைக் கண்டு அவன் மெல்லிய குழப்பம் ஒன்றை அடைவதை பிரவீணா உணர்ந்தாள்.

ஆனால் அவளை அடையாளம் கண்டு கொண்டவனாய் “நீ பிரவீணா தானே” என்று சிரித்தபடியே வந்து கை நீட்டினான். அச்செய்கை அவ்வீட்டிற்கு அதீதமெனப்பட்டது. மேலும் அனிதாவும் அந்த கைக்குலுக்கலை விரும்பவில்லை என அவள் முகம் காட்டியது. பிரவீணா முறுவலித்தபடியே கை கொடுத்தாள். ஒட்டு மொத்தமாக தன்னைச் சந்தித்தில் அனிதா மகிழ்ந்து விடவில்லை என்ற எண்ணத்துடன் பிரவீணா அங்கிருந்து புறப்பட்டாள். அவளுக்கு செவ்வாயுடன் விடுப்பு முடிய இருந்தது. இருந்தும் ஒரு நாள் நீடித்துக் கொண்டு அனிதாவின் வீட்டிற்குச் சென்றாள். தங்கையைக் கூப்பிட்டதற்கு அவள் மறுப்பு சொல்லக்கூட வாய் திறக்கவில்லை. அவளுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெகுநாள் கழித்து புடவை அணிந்து கொண்டு அங்கு சென்றாள். புடவையின் சரசரப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.

சைக்கிளில் வந்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள். மாலையின் இறங்கு வெயில் சுள்ளென முகத்தை அறைவது எரிச்சல் தந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறோம் என மூளை வேறு ஒரு பக்கம் குடைந்தபடியே இருந்தது. அனிதாவின் வீட்டை அடைவதற்கு முன்பே கனன்று கொண்டிருந்த அடுப்புக்குழிகள் தென்பட்டன. அங்கு சிறிதாக பதிட்டை செய்யப்பட்டிருந்த ஒரு கற்சிலைக்கு ஒலைக்கூரை வேயப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபடியே அனிதாவின் வீட்டைப் பார்த்தவள் ஒரு நொடி பிரம்மித்து நின்று விட்டாள். முதல் முறை வந்தது போல் அல்லாமல் முகப்பே மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அணுகி மட்டுமே அறியக்கூடிய வகையில் ஒரு மெல்லிய வயலின் ஒலியும் அவ்வொலியில் இருந்து கசிகிறதோ என்று மயங்க வைக்கும் சந்தன மணமும் அவ்விடத்தைச் சூழ்ந்திருந்தன. தன் நெஞ்சு பதற்றம் அடைவதை அவள் உணர்ந்தாள். யார் விழிகளிலும் படும் முன் திரும்பி ஓடிவிட விரும்பினாள். ஆனால் பெண்கள் கூட்டம் ஒன்றை அதிரச் சிரிக்க வைத்தபடி நின்றிருந்த ஆசை அவளைப் பார்த்துவிட்டான்.

“வா பிரவீணா” என அவளருகே ஓடிவந்தான். அப்பெண்களின் தரத்துக்கு உடையணியாமல் வந்த தன்னை பிரவீணா நொந்து கொண்டாள். ஆனால் வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவள் எண்ணம் வேறாக இருந்தது. ஆசையின் வீட்டை சற்றே பயந்த சுபாவம் கொண்டதாக கற்பனை செய்து வைத்திருந்தாள். அவள் அணிந்திருந்த எளிய புடவையே அங்கே தன்னை மிளிர்வுடன் காட்டிவிடும் என்று தனக்கிருந்த தன்னம்பிக்கையை நினைத்துப் புன்னகைத்தாள். ரத்தம் உறிஞ்சப்பட்ட ஆட்டெலும்பு போல அவள் உடலில் ஒரு எடையிழப்பு நிகழ்ந்தது. அனிதாவை இதுவரை பார்க்காதது ஆறுதலாய் இருந்தது. அந்த ஆறுதலை மனம் உணர்ந்த மறுநொடியே அவள் விழிகள் அனிதாவைக் கண்டு கொண்டன.

துயராக உறைந்த ஒரு வன்மத்தை உதட்டில் தேக்கி அவள் தன்னை நோக்கிப் புன்னகைப்பதைக் கண்டபோது தனக்குள் ஒரு மெல்லிய நடுக்கம் ஓடுவதை உணர்ந்தாள். இதெல்லாம் வெறும் கற்பனை என மனம் ஒதுக்கி மெல்லிய ஆறுதலை அடைந்தாலும் அந்த நடுக்கம் உண்மையான ஒன்று என்பதை மட்டும் அவளால் மறுத்துக் கொள்ள முடியவில்லை.

என்ன செய்து கொண்டிருக்கிறேன்? ஏன் இங்கு வரவேண்டும்? இவர்களெல்லாம் எனக்கு எவ்வகையிலும் தொடர்பற்றவர்கள். அப்போது எனக்குத் தொடர்புள்ளவர்கள் என யாரைச் சொல்வேன்? அம்மா? அப்பா? புவனா? ரவி? யாரைத்தான் சொல்லிவிட முடியும்? நான் தனியாகத்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன். அனிதாவும் அப்படி தனியாகத்தான் இருக்கிறாள் என்ற எண்ணம் ஒரு புன்னகையாக அவள் முகத்தில் விரிந்தது. அப்புன்னகை அவளுக்கு அனைத்தையும் வேறு தளத்திற்கு மாற்றிக் காட்டியது. அங்கிருக்கும் பெண்களில் பலர் அவள் முகம் கண்ட முதல் நொடி மெல்லச் சுருங்குவதை அவள் கண்களால் இப்போது காண முடிந்தது. இயல்பாக இல்லை என உணர்ந்தவர்கள் மேலும் மேலும் இயல்பாக நடிக்க முயன்றனர்.

“டி….என் செல்லம்….” என அனிதாவை நோக்கி கைவிரித்தபடி சென்று அவளை அணைத்துக் கொண்டாள். சந்தன மணம் வீசிக் கொண்டிருந்த அவள் மகனை  மணத்தை முகர்ந்தபடியே தன்னம்பிக்கையுடன் முத்தமிட்டாள். பின் ஒவ்வொருவராக அவர்களின் பாவனைகள் கலைந்து போகும் வரை அவர்களிடம் ஒரு மெல்லிய பதற்றம் உருவாகும் வரை அவள் வருகையை அவர்கள் பெருமையாக எண்ணும் வரை புன்னகையுடன் பார்த்து நலம் விசாரித்தாள். இவற்றை செய்து கொண்டிருப்பவளை வெறுப்புடன் விலகி நின்று அவளே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இனியில்லை இனியில்லை” என உள்ளம் கூச்சலிட்ட போதும் அவ்வீட்டில் இருந்த ஒவ்வொரு பெண்ணின் பலகீனமான இடம் நோக்கியே அவளது சொற்களும் விழிகளும் எழுந்தன. இரு கைகளிலும் வாட்களைச் சுழற்றிபடியே மண்டைகளை உருளச் செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை அவளுக்குத் தட்டியது. தன் மொத்த நஞ்சும் இறங்கி அங்குள்ளவர்கள் கட்டுண்டு நிற்பதைக் கண்டாள். அதில் திருப்தியுற்ற பிறகே அனிதாவின் பக்கம் திரும்பினாள்.

“அப்புறம் அனிக்குட்டி…பையனோட பேரையே சொல்லலையே நீ?” என்றாள்.

“துருவன்” என குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னாள் அனிதா.

“ஓ நிலைபெயராதவன். உண்மையில் அப்படியொரு பெருநிலை சாத்தியம் என நினைக்கிறாயா?” என்று ஆங்கிலத்தில் அவளிடம் கேட்டாள்.

“அதெல்லாம் முடியும்” என்றாள் அனிதா வீம்புடன்.

“உனனைப் போல். விரும்பியவனையே கரம்பிடித்தல் யார் எதிர்த்தாலும் அப்படித்தானே?” என்று கேட்டபோது அக்கேள்வி இவ்வளவு நேரம் தன்னுள்ளே இருந்ததை தானே உணராமல் இருந்தது பிரவீணாவுக்கு வியப்பளித்தது.

“ஒருவேளை நீ எப்படி நடந்து கொள்ள வேண்டுமென என்னிடம் கேட்டால் என்னைப்போல் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிடாதே என்றுதான் சொல்வேன்” என்று முகத்தில் எந்த உணர்வு மாறுதலும் இல்லாமல் சொன்னாள்.

“யத்தா கறி மீனெல்லாம் சாப்புடுவியல்ல? இந்த புள்ள தான் ராலத் தவிர எதையுமே தொடமாட்டேங்குது” என்று பவ்யமாக அவர்கள் பேச்சினுள் உள்நுழைந்தாள் ஆசையின் அம்மா.

பிரவீணா தான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொல்ல முனைந்தாள். ஏதோவொன்று எச்சரிக்கை கொள்ள அவள் அனிதாவைப் பார்த்தாள். அவள் பலமுறை கண்டு நடுங்கிய திசைதிருப்பி விட முடியாத ஒரு முகம் அனிதாவில் நிகழத் தொடங்கியிருந்தது.

“உங்கள யார் இப்போ இங்க வரச்சொன்னா. உங்க ஊட்ல சோறு திங்க வந்திருக்காளா இவ? இங்கயெல்லாம் கை நனைக்கிற அளவுக்கு அவ ஒன்னும் கொறஞ்சு போகல.நா ஒருத்தி பத்தாதா உங்களுக்கு. எந்தங்கச்சியும் இந்த எழவுல வந்து விழணுமா? மரியாத கெட்ரும். உள்ள போயிடுங்க” என்றவள் உறைந்து நின்ற பிரவீணாவை நோக்கி ” போடி இங்கேர்ந்து. உன்ன எவடி இங்க வரச்சொன்னா? எவடி உன்ன வரச்சொன்னா? நா செத்தா கூட இந்தூட்டுப் பக்கம் வந்துடாதா” என தலையில் ஓங்கி அடித்துக் கொண்டாள்.

“அய்யோ அய்யோ” என தலையில் அடித்துக் கொண்டவளை பதறியவனாக சமாதானம் செய்ய ஓடும் ஆசையைக் கடந்து பிரவீணா வீட்டை விட்டு வெளியேறினாள். வீட்டில் போய் படுத்துக் கொண்டு சத்தமாக அழ வேண்டும் போல் இருந்தது. வீதி முடியாமல் அவள் முன்னே விரிந்து கிடந்தது.


சுரேஷ் பிரதீப் :  திருவாரூர் மாவட்டத்தின் தக்களூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். அஞ்சல் துறையில் பணிபுரிகிறார்.  ‘ஒளிர்நிழல்’ எனும் நாவலும்  ’நாயகிகள் நாயகர்கள்’ எனும் சிறுகதை தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *