விசுவாசத்தின் மறைபொருள்

 

 

 

 

 

சித்ரன்

ஓவியம்: அனந்த பத்மநாபன்


அன்புள்ள ஜான் போஸ்கோவிற்கு,

புதுக்குளம் நம் அம்மாவின் பாதங்களைப் போல் வெடித்துக் கிடந்தது. சுழல் வறட்சியின் முந்தைய ஞாபகங்களுடன் அதன் மையத்தை நோக்கி நடந்தேன். துளி நீர்ப்பசையற்று பிளந்த நிலத்தில் நாம் ஓடிய நினைவுகள். இவ்வூரைச் சொந்தம் கொண்டாட நினைவுகளைத் தவிர நம்மிடம் எஞ்சியிருப்பது வேறென்ன? நிலத்தின் ஒவ்வொரு பிளவுகளும் பால்யத்தின் பெரும்புனலுக்குள் என்னைத் தடுக்கி விழச் செய்தன. அங்கு நீ ஊரார் பாவங்களை கேட்டுக் கொண்டிருக்கும் அலுப்புற்ற அருட்தந்தையாய் இல்லை. அரைக் கால்சட்டையும் பனியனுமாய் என்னை வம்பிழுக்கும் சிறுவனாக இருந்தாய்.  அப்பாவின் சட்டைப் பைக்குள் களவாடிய நாணயங்களைக் கொண்டு ஆளுக்கொன்றென வாங்கிய இரு குச்சி ஐஸ்களையும் கையில் பிடித்தவாறு தென்கரையில் இறங்கி வடகரையை நோக்கி நீ ஓட்டமெடுத்தாய். நொண்டிச் சிறுத்தை மாயமானைத் துரத்தியதைப் போல உன்னை நான் துரத்தி வந்தேன். நீ வடகரை படித்துறை மீது துள்ளி ஏறுகிறாய். இனி துரத்தலில் அர்த்தமில்லையென முடிவெடுத்த எனக்கு சிறு கற்கள் குத்திய பாதங்களின் வலியோடு  இயலாமை ஏற்படுத்திய விரக்தியும் நீர்துளிகளாய் கண்களில் அரும்பின. சடுதியில் ஓட்டத்தை நிறுத்தி மூச்சிரைத்தவாறு திரும்பிய உன் முகமெல்லாம் வெளிர் பற்கள்.  நாம் புதிதாய் பழகிய வசைச்சொற்களை தப்பும் தவறுமாய் நான் உன் மீது பிரயோகிக்க   “இப்ப தான் டேஸ்டா இருக்கும் குட்டச்சி” என ஒன்றை என் கையில் நீட்டினாய். நம் இருவரின் நாவும் உதடுகளும்  ரோஸ் நிறமாக பனித்துண்டுகள் தொண்டையை சிலிர்க்கச் செய்து உள் இறங்கின. வெயிலில் உருகி  முழங்கை வழி வழிந்தோடும் அவற்றை நான் வேகவேகமாக கடித்து மென்றேன். நீ பனிக்கட்டி உருகி ரோஸ் நிறத்தில் சொட்டுவதை நாக்கின் மீது விழும்படி வாகாக்கினாய். நம் எச்சில் கைகளை கள்ளப் புன்னகையுடன் என் பாவாடையில் துடைத்துக் கொண்டோம். இன்னும் விரல்களில் தங்கியிருக்கும் அப்பிசுபிசுப்போடு ஆகாயத்தை நோக்கினேன். புதுக்குளத்தின் வறண்ட பிளவுகளுக்குள் செம்பருந்துகள் எதையோ தேடி மிதந்தலைந்தன.

                                                                                                 அன்புடன்

                                                                                                  பிலோமி

                       தேவாலய வளாக நாவல் பழ மரத்தில் பறவைகளின் இரைச்சலை ஒத்திருந்தது சிறுவர்களின் கூச்சல். ஆடிக்காற்றில் பேயாட்டமாடும் கிளைகளில் தொங்கிய வண்ணம் பழங்களை உதிர்க்க கிளைகளை உலுப்புவதும் பின் கனிந்த பழங்களுக்காக அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதுமாயிருந்தனர். அவ்வோசையிலும் சுயநினைவு மீளாத  ஃபாதர் ஜான் போஸ்கோ தனது சகோதரி பிலோமியின் கடிதத்தை தன் மடியில் படுத்துறங்கும் பூனைக் குட்டியைப் போல் மென்மையாய் வருடிக் கொடுத்தார். அப்போது ஜன்னல் வழியே வீசிய காற்றில் அக்கடிதம் உயிருள்ள ஜீவன் சினுங்குவதைப் போல  லேசாக படபடத்தது.

அவ்வருட வறட்சிக்குப் பிறகான பருவமழையின் சித்திரங்கள் அவரை அலைக்கழிக்கத் தொடங்கின. அப்பா மிதிவண்டியில் அவர்களை ஏற்றிச் சென்று மச்சுவாடியிலிருந்து வெள்ளாறு வரை ஒவ்வொரு குளமாக காட்டி வந்தார். எல்லாக் குளங்களும் தூண்டில்களால் நிரம்பியிருந்தன. ஜான் அப்பாவிடம் “நீரற்ற குளம் மழைநீரால் நிரம்புகையில் எங்கிருந்து மீன்கள் வந்தன?” என்றான். “வெடித்துக் கிடக்கும் பூமி மீன் முட்டைகளை அடைகாக்கும்; மழைநீர் நிரம்புகையில் முட்டைகள் பொரிந்து மீன் குஞ்சுகளாக நீந்தும்” என்றார்.  பிலோமி கர்த்தர் விண்ணுலகிலிருந்து மழை பொழிவிக்கையில் மீன்களையும் விழவைப்பதாகச் சொன்னாள். அப்பா அதை யாரோ அவளிடம் சொல்லியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவராய் சிரித்துக் கொண்டார்.  அது அப்பா அவர்களோடிருந்த கடைசி பருவமழை. அப்பாவின் பழச்சாறு கடையை சாலை ஆக்கிரமிப்பு என கையகப்படுத்த நகராட்சியிடமிருந்து அறிவிப்பு வந்த அந்நாளை ஃபாதர் நினைவு கூர்ந்தார். மரணத்தை தவிர்க்க முடியாத  தாத்தாவின் நோவுக்கு மருத்துவம் செய்து ஏற்கனவே கடனாளியாகியிருந்த  அப்பா அத்தொடர் தாக்குதலால் நிலை குலைந்தார். ‘என் செல்ல நாய்குட்டிகளா’ என அன்று அவர் தன் பிள்ளைகளைக் கொஞ்சவில்லை.  பிள்ளைகள் கவனிக்கவில்லையெனக் கருதி தன் மனைவியைப் பின்னாலிருந்து கட்டிக் கொள்ளவில்லை.  மறுநாள் விடியலில் வழக்கம் போல பாயை நனைத்திருந்த பிலோமியை வேறு பாய்க்கு மாற்றவுமில்லை. எந்த சலனுமுமில்லாமல் தன் மகளின் சிறுநீர் ஈரத்தின் மேல் கிடந்த உடல் ஏற்கனவே போதுமான அளவு சில்லிட்டிருந்ததை அம்மாவின் ஓலம்  அண்டை வீட்டாருக்கு அறிவித்தது.

பூசைகளற்ற பொழுதில் நிலவும் தேவாலய அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை பொறுக்கவியலா அருட்தந்தை சவரிராஜ் பக்கத்து அறையிலிருந்து  வேலையாள் அந்தோனியை வெறுப்புடன் அழைத்தவாறிருந்தார்.  ஃபாதரின் குரல் வீச்சு  அவரது சுருட்டுப் புகையின் நெடியுடன் ஜான் பீட்டரை நிகழ் உலகிற்கு திரும்பச் செய்தது. அவரது வெறுப்பின் குரல் உயர்ந்து செல்ல அந்தோனியிடமிருந்து எதிர்வினையேதுமில்லை. அவன் வெளியில் சென்றிருக்கக் கூடுமென்பதை உணர்ந்தவர் தனது புகையிலை மணக்கும் வாயால் அச்சிறுவர்களை விரட்ட ஃபாதர் ஜானையும் துணைக்கு அழைத்தார். மூத்தவரின் சொல்லைத் தட்ட இயலா நிலையில் ஒப்புக்கு இவர் உடன் செல்ல ஃபாதர் சவரிராஜை பார்த்ததும் “சுருட்டு சுந்தரம் பிள்ளடோய்” என்று சிறுவர்கள் கூச்சலிட்டுத் தான் பொறுக்கிய நாவல் பழங்களை பனியன்களுக்குள் சுருட்டியவாறு ஓட்டமெடுத்தனர். மரத்திலிருந்து இரு சிறுவர்கள் ஃபாதர் சவரிராஜின் மிக அருகில் குதித்ததில் அதிர்ச்சியுற்றவர் தன் ஞாபகக் கிடங்கில் பொதிந்திருந்த வசைச் சொற்களால் ஒரு சிறு மலைப் பிரசங்கத்தை அங்கு நிகழ்த்தினார்.  அவருக்கு ஏற்பட்ட கலவரத்தை ரசித்தவராய் அமைதியாய் ஜான்போஸ்கோ அருகில் நின்றிருக்க அருட்தந்தைக்கோ இதயத்தின் படபடப்பு அடங்குவதாயில்லை. அதை சமனிலைக்கு கொண்டு வர ஒரு சுருட்டால் தான் இயலுமென முடிவெடுத்தவராய் “தொலைச்சுபுடுவேன்” என இரு முறை யாருமற்ற வளாகத்தை  எச்சரித்தவாறு அறையை நோக்கிச் சென்றார்.

அந்நாவல் மரத்திற்கருகில் குழந்தை யேசு அவதரித்ததை பளிங்குச் சிலைகளால் காட்சிபடுத்தியிருந்தனர்.  ஃபாதருக்கு அன்னை மரியாளின் முகம் பிலோமியின் முகமாய் மாறிப் பின் அம்மாவின் முகமாய் மாறியது.  தென்னங்குரும்பைகள் விழுந்து நீர் தளும்பும் ஓசையெழுப்பும் கிணறு ஒன்று அவர்கள் குடியிருப்பிற்குப் பொதுவாய் இருந்தது. அதனருகே அம்மா சீரான தாளகதியில் துணி வெளுத்துக் கொண்டிருப்பாள். பிள்ளைகள் புதுக்கோட்டையை ஒரு நீர் சூழ் நகரமாய் கற்பனைகளில் விரியச் செய்திருந்த அப்பருவ மழையின் மயக்கத்தில் மூழ்கியிருப்பர். அங்கு அவர்களுக்கு ஒரு படகு இருந்தது. அதில் ஏறி ஒவ்வொரு குளத்தையும் இணைக்கும் நீர்வழித்தடத்தில் அவர்கள் பயணித்தனர். திரைப்படங்களில் பார்த்த அனைத்து விநோத மிருகங்களும் அந்நீருக்கடியில் அவர்களை எதிர்பார்த்து பதுங்கியிருக்கும். அவற்றிடமிருந்து அவர்கள் தப்பிச் செல்லும் முறைகள் கற்பனைகளின் அதீத சாத்தியங்களைக் கொண்டவை.  கதை சுவாரசியமாகும் பொழுது தன்னிலை மறந்தவளாய் அம்மா துணி துவைப்பதை நிறுத்தியிருப்பாள்.  நீர் இறைத்து தந்ததற்காக துணி வெளுத்தப் பின் பிள்ளைகளுக்கு  அவள் விளையாட்டுக் காட்டியாக வேண்டும். தனது பூவிரல்களை மடக்கி கைகளை புனலாகச் செய்து சோப்புக் குமிழ்களை பெரிய கண்ணாடிக் குடுவைகள் அளவிற்கு ஊதிக் காட்டுவாள். அக்குடுவைகள் வானவில்லின் நிறங்களை ஏந்தி ஆகாயத்தை நோக்கிப் பயணிக்கும்.

தலை உச்சியில் விழுந்த நாவற் பழக்கொட்டை அருட்தந்தையை மீண்டும் புற உலகின் மீதான பிரக்ஞைக்கு கொண்டு வந்தது. மிதிப்பட்ட நாவற் பழச்சதைகள் வெண் பளிங்குத் தரையெங்கும் தனது கருஊதா நிறத்தை அப்பியிருந்தன. குறிப்பிட்ட இடைவெளிகளில் அவர் தலை உச்சியில் சதை உறிஞ்சப்பட்ட நாவற் பழக் கொட்டைகள் விழுந்த வண்ணமிருந்தன. தலையை உயர்த்தாமல் தனக்குள்ளாக புன்னகைத்திருந்தவரிடம் வேலையாள் அந்தோனி ஓடிவந்து பெரிய ஃபாதர் அழைப்பதாகச் சொன்னான். ஃபாதர் சவரிராஜின் அறைக்குள் நுழைந்தவர் சுவரிலிருந்த மீட்பரின் சொரூபத்திலிருந்து பரிசுத்த ஆவி மேலெழுந்து சாளரத்தினூடான ஒளிப்பாலத்தில் மேற்கு வானை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நின்றார். “ஃபாதர் கொஞ்சம் வெளி வேலையாப் போறேன். நீங்க திருப்பலியைப் பார்த்துக்குங்க” என்ற குரல் அவருக்குப் பின்னால் கேட்டது. அதற்கு சரியென அனிச்சையாய் பதிலளித்தவர் பிறகு தான் சொரூபத்தின் அடியில் அணையாமல் கிடந்த சுருட்டைக் கண்டு ஆசுவாசமடைந்தார்.

ஜெபமாலையை விரல்களுக்கிடையே உருட்டியவாறு  முதியவள் ஒருத்தி ஃபாதரின் வருகைக்காக காத்திருந்தாள். அவளுக்குப் பின்னே தூரத்தில் சுவரில் சாய்ந்து நின்றிருந்த ஜூலியின் கடைசி பையன் சேவியர் தன் வாயில் சப்பிக் கொண்டிருந்த நாவற் பழக் கொட்டையை ஃபாதரை பார்த்ததும் ஜன்னலுக்கு வெளியே வீசினான்.  இருவரையும் நோட்டமிட்டவர்  பாவமன்னிப்பு அருளும் தனது அறைக்குள் சென்று அமர்ந்தார். முதலில் வந்த முதியவள் தான் செய்த பாவமாக பக்கத்து வீட்டுத் தென்னை மரத்திலிருந்து தன் வீட்டிற்குள் விழுந்த தேங்காயை ஒளித்து வைத்துக் கொண்டதாகச் சொன்னாள். சேவியர் சற்றுத் தயங்கியவாறு தனது பாவங்களாக ஜெபமாலை பாடும் போது கடுமையான தூக்கம் வந்து நான்கு முறை கொட்டாவி விட்டதாகச் சொன்னான். பிறகு நாவற் பழ மரத்திலிருந்து ஃபாதர் தலையில் நாவற் பழக் கொட்டைகளைப் போட்டதாகச் சொன்னான். ஃபாதரின் உச்சந்தலை வழுக்கை அழகாய் இருந்ததால் தன்னருகே சாத்தான் அமர்ந்து கொண்டு கொட்டைகளை வழுக்கை மீது குறி பார்த்து வீசுமாறு வற்புறுத்தியதாகச் சொன்னான். ஃபாதர் இருவரையும் உத்த மனஸ்தாப ஜபத்தை மூன்று முறைச் சொல்லி கர்த்தரிடம் பாவங்களை மன்னிக்குமாறு மன்றாடச் சொன்னார்.

ஃபாதருக்கு அன்று திருப்பலியில் மனம் லயிக்கவில்லை.  தேவாலய சுவர் உச்சியிலிருந்த சிலுவைப் பாதை கண்ணாடி ஓவியங்களினூடாய் உள்நுழைந்த மாலை ஒளி அவ்வோவிய நிறங்களின் குழைவை விதானத்தின் கீழே ஒரு மேகக் கூட்டத்தைப் போல் மிதக்கச் செய்திருந்தது. “இறை ஏசுவின் அன்பர்களே” என சபையை விளிக்கும் போதும் ஃபாதரின் கண்கள் விதானத்தை நோக்கியே சென்றது.   “சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது” என்று வழக்கமான ராகத்தில் அவர் நீட்டி முழக்காததற்கு மறுமொழியாக சபையினரும் ஆமெனை அளவோடு நிறுத்தினர். ஜூலி சேவியரோடு ஃபாதரை பார்க்க வந்தாள். வழக்கமான குடும்ப நிதிப் பிரச்சினைகளை அவள் ஃபாதரிடம் முறையிட வழக்கம் போல ஃபாதரும் அவள் வசிக்கும் வீட்டிற்கான வாடகையை அளித்தார். ஒவ்வொரு மாதமும் அது ஒரு சடங்கு போல நிகழும். அவளும் தனது நான்கு பிள்ளைகளில் ஒவ்வொரு பிள்ளையாக அழைத்து வருவாள். “இவ்வளவு கஷ்டமும் இதுகளுக்காகத் தான் இல்லென்னா போய் சேந்துரலாம்” என அவள் முடிக்கும் போது ஃபாதருக்குத் தன் அம்மாவின் நினைவு சுருக்கென்று தைக்கும். இன்று அவளது முறைப்பாடுகள் சற்று அதிகமாய் இருந்தது. பிள்ளைகளின் படிப்பிலிருந்து அண்டை வீட்டாரின் சண்டைக்கு வந்து சேர்ந்தாள். சேவியர் ஃபாதரின் அங்கியிலிருக்கும் பொத்தான்களை எண்ணத் தொடங்கினான்.  அவன் இடுப்பைத் தாண்டி முழங்காலுக்கு வருகையில் ஃபாதர் தனது அங்கியை சரிசெய்வது போல் அவனது கவனத்தை கலைத்து விட்டார். சிறுவனுக்குத் தான் கடைசியாய் எண்ணிய பொத்தான் எது என்பதில் நம்பிக்கை இல்லை. மீண்டும் கழுத்திலிருந்து ஆரம்பித்தான். ஃபாதர் திரும்பவும் அவனது கவனத்தை கலைத்து விட்டார். ஜூலி தனது முறைப்பாடுகளில் கடைசியாய் அவனைப் பற்றிக் குறை கூறும் வரையில் அவ்விளையாட்டுத் தொடர்ந்து நிகழ்ந்தவாறிருந்தது. “ஃபாதர் பொழுதன்னைக்கும் ஜாமெற்றி ஃபாக்ஸ்ல பொன்வண்டோட  திரியுறான். கொஞ்சம் நல்லா படிக்க புத்திமதி சொல்லுங்க” என்றாள்.

ஃபாதருக்கு தேவஈவு பொன் வண்டின் முதுகைப் பற்றித் தூக்கிய போது அடம் பிடிக்கும் இளம் சிசுவினுடையதாய் ஆடிய அதன் கால்கள் நினைவிற்கு வந்தன. கூடவே பிலோமியின் ஒரு கடிதமும். ஜூலியின் முறையிடலுக்கு ஒழுங்கான பதிலைத் தராமல் சிந்தனை வயப்பட்டவராய் தனது அறைக்குத் திரும்பியவர் பிலோமியின் கடிதங்கள் சிதறிக் கிடந்த பெட்டிக்குள் தான் நினைவு கூர்ந்த கடிதத்தை  தேடத் தொடங்கினார். அவரது அகம் மறுவாரம் கல்லறைத் திருநாள் குறித்த திட்டமிடல்களை நிகழ்த்தியவாறிருந்தது. பிலோமிக்கு கடிதங்களில் கால நேரங்களைக் குறிப்பிடும் பழக்கம் இல்லை. அவை சம்பிரதாய விசாரிப்புகள் ஏதுமற்று சில உணர்வு நிலைகளால் தூண்டப்பட்டு எழுதியதாய் இருக்கும். எனவே ஃபாதரும் அக்கடிதங்களை கால வரிசைப் படியெல்லாம் அடுக்கி வைப்பதில்லை. நினைவின் உள்ளடுக்குகளில் சேகரமாயிருந்த கடிதங்கள் காலத்தின் பழுப்பேறியிருந்தன.  அவர் நம்பிக்கையிழந்த தருணத்தில் கையில் அகப்பட்ட கடிதம் பின்வருமாறிருந்தது

அன்புள்ள ஜான் போஸ்கோவிற்கு,

பொன்வண்டு மரத்தை நினைவில் வைத்துள்ளாயா? இன்று மாநகரத்தின் நெருக்கடி மிகுந்த சாலையோரத்தில் அம்மரத்தைப் பார்த்தேன். சிசுவின் உள்ளங்கை இளஞ்சிவப்பை நினைவூட்டும் அதன் பூக்கள் மரம் முழுதும் பூத்திருந்தன. அதன் உண்மையான பெயர் நரிக்கொன்றையாம். பொன்வண்டு கடித்துண்ணும் அதன் இலைகள் மீது இன்னும் எனக்குத் தீராத மோகம். நாம் வேண்டியது ஒரு வண்டைத் தானே? அதன் பொன்முட்டைகள் நம் வறுமையைப் போக்கி விடும் என எவ்வளவு அப்பாவிகளாய் நம்பினோம். நமது இன்னல்களைத் தீர்க்கும் சுலபமானதொரு வழியை ஏன் அம்மா புரிந்து கொள்ள மறுக்கிறாள் என எவ்வளவு கோபப்பட்டோம். ஆனால் கர்த்தர் ஏன் நமக்கு ஒரு வண்டைக் கூட பரிசளிக்க மறுத்தார்.

                                                                                           அன்புடன்

                                                                                            பிலோமி

                       ரஷ்யன் சர்க்கஸ் வண்டிகள் ஐயனார் திடலை நோக்கி விரைந்து கொண்டிருந்த பொழுது ஜானின் வகுப்புத் தோழனும் அவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளரின் மகனுமான தேவ ஈவு தன் ஜியோமெற்றி பாக்சில் இரண்டு தங்க நிற முட்டைகளை அடைகாத்த ஒரு பொன்வண்டைக் காண்பித்தான். நரிக்கொன்றை இலைகளை மெத்தைகளாய் கொண்ட அத்தகரக் கூட்டுக்குள்  பச்சை நிறத்துடன் பொன் ரேகைகள் இழைந்த மினுக்கம். தன் உடல் வனப்பை முழுதும் காட்ட விரும்பாததைப் போல் அதன் சிகப்பு இறக்கைகள். பொன்வண்டைத் தன் உள்ளங்கையில் ஏந்தி   இருவரையும் ஒரு முறை மட்டும் தொட்டுப் பார்க்க தேவஈவு அனுமதித்தான். ஜான் அதன் தலையைத் தீண்ட  உணர் நீட்சிகளின் செய்கைகள் என்னைத் தீண்டாதே என்பதாயிருந்தது. முதுகுக்கும் தலைக்குமான புறங்கழுத்தின் இடைவெளிக்குள் சுண்டு விரலை நுழைக்க எத்தனித்த பிலோமியை வேகமாய் தடுத்த ஈவு அவை பாக்கு வெட்டியைப் போல் உன் விரலைத் துண்டித்து விடுமென்றான். பொன்வண்டை அவன் மீண்டும் பெட்டிக்குள் பூட்டிய நொடியில் தெருவில் சலசலப்பு.    பனியாரக்காரக் கிழவி காண்பவர்களிடமெல்லாம் “பொட்டலுக்கு சர்க்கஸ் வந்திருக்காம்ல” என சொல்லிச் சென்றாள். அவர்கள் மூவரும் முழுஆண்டு சமூகஅறிவியல்    தேர்வை முடித்திருந்த அந்நாளில் சமூகத்திற்கான கொண்டாட்டமொன்று அவர்களைத் தேடி வந்திருந்தது. பிலோமி அம்மாவிடம் சர்க்கஸ் வருகையை சொல்லச் சென்றாள். அம்மா சமீப நாட்களாய் அத்தெருவின் மாடிவீடுகளுக்கு பாத்திரம் கழுவும் வேலைக்குச் சென்று வந்தாள். அப்பாவின் மரணத்திற்குப் பின் குருத்தோலை ஞாயிறில் சிலுவையாய் உருமாறியது போக மீந்த தென்னங்கீற்றாய் அவள் வதங்கத் தொடங்கியிருந்தாள். பிலோமியிடம் அவளது பலவீனமான புன்னகை பிள்ளைகள் ஐயனார் திடலுக்குச் செல்லும் அனுமதியாயிருந்தது. ஆனால் பிலோமி வலுக்கட்டாயமாய் அம்மாவையும் உடன் அழைத்து வந்தாள்.

சர்க்கஸ் கூடாரத்திற்கான பலவண்ணச் சீலைகள் ஐயனார் திடல் முழுதும் விரித்துக் கிடக்க ராட்சதத் தூண்களை நிமிர்த்தும் பணிகளை தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தனர். மிருகங்களின் உறுமலும்  கர்ஜனையும் சிறுவர்களின் கூச்சலும் கேட்டத் திசையில் பிள்ளைகளது கால்கள் பரபரத்தன. சக்கரங்களைக் கொண்ட கூண்டுகளுக்குள் அடைபட்டிருந்த மிருகங்களில் முதலில் ஒரு சிங்கத்தைப் பார்த்தனர். இறைச்சியை உண்டு ஓய்வெடுத்திருந்த அது – தனது முகத்தில் காய்ந்த குருதியின் மீது மொய்த்த ஈக்களை நாவைச் சுழற்றி விரட்டியபடி இருந்தது. அதன் பிடரி மாதாக் கோயிலில் மணியடிக்கும் சகாயத்தின் தாடியை ஒத்திருப்பதாக ஈவு சொன்னான். ஆனால் அவருக்கு வழுக்கைத் தலையென்பதை பிலோமி நினைவூட்டினாள். பனியாரக்காரக் கிழவியும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். அடுத்த கூண்டிலிருந்த சிங்கத்திற்கு தாடி எங்கே என ஜான் வினவ பனியாரக்காரக் கிழவி  “அதுக்கிட்ட எங்கடா ஒன்ன மாதிரி புடுக்கிருக்கு அது பொட்டை சிங்கமுடா” என்றாள். கிழவியிடம் “என்ன ஆச்சி புள்ளகள்ட இப்படியா பேசுறது” என அம்மா மென்மையாய் கோபப்பட்டாள். அடுத்த கூண்டிற்குள் மஞ்சள் சருமத்தில் கருப்பு வரிகள் மின்னிய அமைதியற்ற புலியொன்று அவர்களை நோக்கி உரும ஈவு அதற்குமுன் புலியாட்டமொன்றை ஆடிக் காண்பித்தான். அது தனது உறுமலை சில டெசிபல் உயர்த்த ஜானுக்கு மூத்திரம் முட்ட ஆரம்பித்தது. அடைபட்டுக் கிடந்தாலும் பஞ்சவர்ணக் கிளிகள் ஒயிலாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. பிலோமி அவைகளை “மேனாமினுக்கி” என்றழைத்தாள். நித்திரையிலிருந்த வெண்கிளிகளை நோக்கி கீ…கீ… என கர்ண கொடூரமாக ஈவு குரல் கொடுக்க எரிச்சலடைந்த அவை  அசட்டையாகத் தலையைச் சாய்த்து நோட்டமிட்டு பின் தங்களது நித்திரையைத் தொடர்ந்தன. இன்னும் ஏராளமான மிருகங்கள் வண்டிகளில் வருவதாக ஒருவன் கூவிச் சென்றான்.

மேல்வானிலிருந்து மாலை சூரியன் உள்ளடங்கி விட்டது. புவி விளிம்பிலிருந்து பரவிய அதன் கதிர்கள் சிதறிய  மேகத் துணுக்குகளை ஆரஞ்சு நிறத்தில் ஜ்வலிக்கச் செய்திருந்தது. சூரியனின் கடைசிச் சாறையும் உறிஞ்சி செம்பழுப்பாய் தகதகத்துக் கொண்டிருந்த வேம்பின் கிழக்கே ஒரு கூண்டு மட்டும் தனித்திருக்க அவர்கள் ஐவரும் அதனருகே சென்றனர். கூண்டிற்குள் ஏற்கனவே இரவு கவிந்திருந்தது. இருளுக்குள் ஏதென்று அறிய முடியாத நுட்பமான அசைவுகளை உணர்ந்தனர். சில வினாடிகளில் அசைவுகள் நிற்க கருமைக்குள் தனித்த ஒரு இருள் வடிவம் புலனாகியது. ஜான் மெதுவாக பிலோமியின் காதுக்குள் “கருஞ்சிறுத்தை” என்றான். அந்த மெல்லிய குரலே அதனை இம்சித்தது போல் அவர்கள் மீது உக்கிரமான பார்வையைச் செலுத்தி கூண்டுக் கம்பிகளின் அருகில் வந்தது. கொல்லனின் உலையிலிருந்து வெளியாகும் அனலாய் அதன் வெப்ப மூச்சை தங்கள் மீது உணர்ந்தனர். தேக்கி வைத்த மூத்திரப்பை கசியவிட்ட ஒரு சொட்டு ஜானின் டவுசரை நனைத்தது. “என்னங்கடா இந்த கூண்டுக்குள்ள ஒன்னத்தையும் காணோம்” என பனியாரக்காரக் கிழவி கம்பிகளுக்குள் தன் மூக்கு நுழைய இருளை உற்று நோக்கினாள். கருஞ்சிறுத்தையின் வலதுமுன் கால் இமைப்பொழுதில் காற்றை விசிறியபடி எதையோ தாக்க என்ன நிகழ்ந்ததென யூகிக்க இயலாமல் கிழவியைத் திரும்பிப் பார்த்தனர். புரை விழுந்த கிழவியின் கண்களில் பிரமை குடியேற முன்னந்தலையிலிருந்து அவளது முகச்சுருக்கங்களில் வழிந்தோடிய செந்நிறக் குருதியைக் கண்டனர். முகம் முழுதும் குங்குமத்தை பூசிய பிடாரிச் சிலையாய் அவர்களை சற்று நேரம் வெறித்தவள் அடித்தொண்டையிலிருந்து “வ்வே…” என அலறினாள். பிள்ளைகள் வேட்டுச் சத்தத்தைக் கேட்டு மிரண்டோடும் தெருநாய்களைப் போல தலைதெறிக்க ஓடினர். பொதுவாக ஓட்டப் பந்தயமென்றால் எப்போதும் வெல்லும் தேவஈவை ஜான் முந்தியது அன்று தான். அம்மா மட்டும் கிழவியை பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று தாமதமாய் வீடு திரும்பினாள்.

சர்க்கஸ் ஆரம்பித்து ஒரு வாரமாகியது. தேவஈவு தான் ஒரு முறை சர்க்கஸ் பார்த்த அனுபவத்தை அதுவரையிலும் ஐந்து கோணங்களில் கதையாகச் சொல்லியிருந்தான். சர்க்கஸ் வெண் சுழல் விளக்குகள் இரவு வானத்தை அந்தரத்தில் சுழலும் தேவதைக் கதைகளால் நிரப்பத் தொடங்கின. ஜானும் பிலோமியும் அம்மாவிடம் அக்கதைகளை தனது கற்பனைகளின் மூலம் மெருகேற்றி தங்களை சர்க்கஸிற்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தத் தொடங்கினர். அவளும் பிள்ளைகளின் மனம் நோகாதவாறு சில நம்பிக்கை வார்த்தைகளை கூறி வைத்தாள். பனியாரக்காரக் கிழவி மீண்டும் பூவரச மரத்தடியின் கீழ் பனியாரங்களைச் சுட ஆரம்பித்தாள். தலையின் ஐந்து தையல்களை வெண்துணியால் மறைத்து தாடையோடு கட்டியிருந்தனர். பனியாரங்களை கடனுக்கு வாங்கித் தர அம்மா பிள்ளைகளை அழைத்துச் சென்றாள். பிலோமி பூவரச மரத்தின் பின் பதுங்கி நிற்க ஜான் அம்மாவின் சேலையின் பின் பதுங்கினான். பிலோமி “மண்டக் கட்டு மகாராணி” என ஜானின் காதுக்குள் கிசுகிசுத்தாள். ஜானுக்கோ பனியாரக்காரக் கிழவி மீசையற்ற வெள்ளைத் தாடி சர்தார்ஜி போல் இருப்பதாகத் தோன்றியது. கிழவியின் ஓரக் கண்ணோடு தாடையும் வெறுப்பை உமிழ “கருஞ்சிறுத்தை அடிச்சு மண்டக் காயத்தோட இதுகளத் திரும்பிப் பாத்தா தறிகெட்டு ஓடுதுங்க” என பனியாரக் கம்பியைச் சுடுவது போல் நீட்டினாள். அவர்கள் பின்வாங்கி சிரிக்க அதட்டலாக “எத்தன வேணும்” என்றாள். பிலோமி “எட்டு” என சட்டியை நீட்டினாள். “ஜான் அம்மா மாசத்துக்கு ஒரு தடவ கணக்கு முடிச்சிருங்க ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு” என ஒரு போலி கோவத்துடன்  கிழவி சலித்துக் கொண்டாள். அம்மா இத்தனை பேர் முன்னிலையில் அதைச் சொல்கிறாளே என சங்கடத்துடன் “சரி ஆச்சி” என்றாள். ஜான் பனியாரங்களை வாங்கிய பின் சட்டியை தலையின் மீது உயர்த்திவாறு அடுப்பைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி “அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ஏனெனில் இது உங்களுக்காக ஆயா சுட்ட பனியாரம்” என்றான். இம்முறை பனியாரக் கம்பியாலேயே ஜானின் புட்டத்தில் ஒரு அடி வைத்தாள்.

அவன் புட்டத்தை கிழவியிடம் ஆட்டிக் காட்டிவிட்டு ஓட்டமெடுக்க தெருமூலையில் சிறுவர்களின் ஆரவார ஓசைகளுக்கிடையே சர்க்கஸ் யானைகள் ஊர்வலமாக வந்தன. வாயில் அதக்கிய பனியாரங்களை மறந்து யானைகள் அசைந்து வருவதை அவர்கள் பார்த்து நின்றனர். அவை யாரிடமும் யாசகம் கேட்கவில்லை எவரையும் ஆசிர்வதிக்கவுமில்லை. தெருவின் எல்லா சனங்களும் வீடுகளுக்கு வெளியே கூடிவிட்டனர். “எங்கடா போவுது?” என கூச்சலிட்டுச் செல்லும் ஒருவனைப் பிடித்து ஜான் கேட்க “நைனாரி குளத்துல குளிப்பாட்டப் போறாங்க” என்றான். மொத்தம் நான்கு யானைகள். பிலோமி யானைகளின் துதிக்கைகளை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அத்துதிக்கைகளைப் பற்றிக் கொண்டு ஆலம்விழுதில் ஊஞ்சலாடுவதைப் போல் ஆடத் தோன்றினாலும் யானைகளின் பேரிருப்பு அச்சத்தை ஏற்படுத்தவே செய்தது. அதில் நான்காவது யானை அவர்களது வீட்டிலிருந்து இரண்டு வீட்டிற்கு முன்னால் சற்று நேரம் நின்று பீரங்கிக் குண்டுகளையொத்த மூன்று லத்தி உருண்டைகளை போட்டுச் சென்றது. சிறுவர்கள் யானை லத்தியின் மீது குதித்து கும்மாளமிட்டனர். அவர்களிருவரும் தங்கள் பனியாரங்களை வேகமாக விழுங்கி வெறும் சட்டியை அம்மாவிடம் நீட்ட அவள் இதமாக ஜானின் தோள்களை அழுத்தி கொஞ்சம் யானை லத்தியை அள்ளிவரச் சொன்னாள். அவன் எதற்கென வினவ அதை நன்றாக மிதித்தால் பித்தவெடிப்பு சரியாகிவிடும் என்று தனது பிளந்த பாதங்களைக் காண்பித்தாள். யானைகள் குளிப்பதை பார்க்கச் செல்லவேண்டுமெனக் கூறி நைனாரி குளத்தை நோக்கி இருவரும் ஓட்டமெடுத்தனர். குளத்தில் முளைத்த கரும்பாறைகளென அமர்ந்திருந்த யானைகளை சர்க்கஸ்காரர்கள் ஏதோ மலையாளப் பாடல்களை உரக்கப் பாடியபடி குளிப்பாட்டினர். அப்பாடல் யானைகளுக்கானதாகவோ அல்லது படித்துறையில் பாவாடை அணிந்து துணிகளை வெளுத்துக் கொண்டிருந்த பெண்களுக்கானதாகவோ இருந்திருக்கலாம். அவர்கள் யானைகளிடம் ஏதோ சைகை செய்ய அவை கரையிலிருந்த சிறுவர்கள் கூட்டத்தின் மீது தங்களது துதிக்கைகளால் பூஞ்சாரலாய் நீரைப் பொழிந்தன. சிறுவர்களின் ஆரவாரத்தைத் தாங்காமல் கரையோரத்தில் நீந்திய மீன்களெல்லாம் நீரின் ஆழத்திற்கு இடம்பெயர்ந்தன. யானைகளை மூழ்கடித்துவிட முடியாத நைனாரி குளத்தை யானைகளின் மீதே அமர்ந்து  அவர்கள் சுற்றிவர ஆசைப்பட்டனர்.

வீடு திரும்பும் வழியில் தேவ ஈவு யானை லத்தியை அள்ளிக் கொண்டிருந்தான். இவர்கள் ஒருகையில் உச்சந்தலை முடியை பற்றிக் கொண்டு மறுகையில் மூக்கைப் பொத்தியவாறு “டிக்…டிக்…யாரது? ஈவு…என்னா வேணும்? சாணி வேணும்… என்னாச் சாணி? யானைச் சாணி….” என சிரித்தனர். அவன் சூழலை சமாளிக்கும் தோரணையில் இவர்களைக் கவனிக்காதவன் போல் தீவிர முகபாவத்துடன் அள்ளிய லத்தியை வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.

அன்றைய நாட்களில் காவிரி நீர் ராட்சத குழாய்களில் புதுக்கோட்டையை வந்தடைந்திருக்கவில்லை. புதுக்குள நீரையே நகராட்சி குழாய்களில் விநியோகம் செய்தது. முற்றிலும் வறண்டாலும் தனது ஜீவ ஊற்றை புதுக்குளம் என்றும் இழந்ததில்லை. தேற்றான் கொட்டையில் தெளிந்த ஊற்று நீர் பதநீரை விடச் சுவையாய் இருக்கும் என்பாள் அம்மா. அவளுக்கு குழாய் நீரில் விருப்பமில்லை. முதலில் நகராட்சி ஊழியர்கள் குளோரின் பவுடரை சீராக கலப்பதில்லை. வாரத்திற்கொரு முறை மொத்தமாய் கலப்பதால் வடித்த சோற்றிலும் குளோரின் மணக்கும். பிறகு நீர்யானையாய் பிறந்திருக்க வேண்டிய தேவ ஈவின் அம்மா. வீட்டின் அனைத்து குடங்களையும் தனக்குச் சீதனமாய் வந்த அண்டாக்களையும் நிரப்பியது போக தூக்குச் சட்டிகளையும் நிரப்பிய பின்னரே குடியிருப்போரை தண்ணீர் பிடிக்க அனுமதிப்பாள். வேலைக்கு நேரமாகியது என அம்மா லேசாகச் சிணுங்கினால் அவளது வாடகை பாக்கி விவகாரங்கள் அண்டைத் தெருக்காரர்களைச் சென்றடையும்.

ஈவின் அப்பா அதற்கு நேர்மாறாய் நடந்து கொள்வார். தினமும் மாலை பிந்தியவுடன் கிணற்றடிக்கு வந்து ஈவை அழைத்துச் செல்பவர் அம்மாவிடம் பிள்ளைகளைப் பற்றிக் கொஞ்சம் பேசி விட்டுச் செல்வார். எந்த உதவியானாலும் தயங்காமல் கேட்கச் சொல்லுமவரின் காரணமற்ற சிரிப்புகளை மட்டும் பிள்ளைகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அம்மா பெரும்பாலும் தரையைப் பார்த்தவாறு மௌனமாய் இருப்பாள்.  அவள் கிணற்றடியில் நீராடும் போதெல்லாம் பட்டியக் கற்களின் மறைப்புக்கு வெளியே ஈவின் அப்பா காத்து நிற்பார். ஒன்றிரண்டு முறை அதை ஜான் அம்மாவிடம் சொல்ல அவளது பதற்றம் அவனால் விளங்கிக் கொள்ள முடியாததாய் இருக்கும். ஈரப் பாவாடையின் மேல் சேலையைச் சுற்றி அவள் விருட்டென்று வீட்டை நோக்கிச் செல்லும் போது உருவாகும் நீர்கோட்டுத் தடத்தை ஈவின் அப்பா சற்று நேரம் வெறித்திருப்பார்.

துக்க வீட்டில் இயல்பு நிலை திரும்ப காத்திருந்த கடன்காரர்களின் நெருக்குதல் ஒரு நாள் அப்பாவின் நெருங்கிய நண்பரிடமிருந்து ஆரம்பமானது. அம்மா ஒவ்வொருவரிடமும் தன் தலையை அடகு வைத்தாவது கடனைத் திருப்பி விடுவேனென்று நம்பிக்கை அளித்தாள். அத்தனை தலைகளுக்கு அம்மா ராவணனின் பெண் உருவாய் பிறந்திருக்க வேண்டும். அப்பா ஏற்கனவே ரொட்டிக்கார சந்து மார்வாடிகளிடம்   அடகு வைத்த நகைகள் திருப்ப வழியில்லாமல் கிடந்தன. பிறந்தகத்திலிருந்து அவளுக்கு போடப்பட்டிருந்த நகைகள் மிச்சத்தையும்  விற்று சொற்பக் கடனை அடைத்தாள். ஆனால் தகவல் பரவி எல்லோரும் நெருக்கத் தொடங்கினர். அம்மாவின் கண்கள் மூழ்கும் படகில் எதையாவது பற்றிக் கொள்ள எத்தனிப்பவளின் கண்களைப் போல் அலைபாயத் தொடங்கின.  இளையவளானாலும் பிலோமி அம்மாவின் இயலாமையை ஓரளவு உணர்ந்திருந்தாள். ஜானுக்கோ அப்பா இல்லாததன் வெறுமையை அவர் வாங்கித் தந்த தின்பண்டங்களின் நினைவுகள் மூலமே உணர முடிந்தது.

யானை லத்தியை அள்ளியதிலிருந்து ஈவை எதிர்கொள்ளும் போதெல்லாம் இவர்கள் மூக்கைப் பொத்தியவாறு பேசுவர்.   அத்தருணங்களில் ஈவின் நடத்தை பெரிய மனிதனைப் போன்றிருக்கும்.  விளையாட்டுத் துணையை நாடி வந்தவன் தன் மீதுள்ள ஏளனத்திற்குப் பதிலாய் “யானைச் சாணிக்குள்ள பெரிய ரகசியமிருக்கு….உங்ககிட்டலாம் சொல்ல முடியாது” என்றொரு  புதிரை உதிர்த்தான். அவர்கள் ரகசியங்களின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாய் கர்த்தர், அன்னை மரியாள், புனித அந்தோனியார், இயேசு மற்றும் இன்ன பிற உறவுகள் மீதெல்லாம் சத்தியம் செய்து அவனை ஏளனம் செய்யவில்லையென  உறுதியளித்தனர். ஈவு மனம் இளகியவனாய் அவர்கள் மூவர் மட்டுமிருந்த கிணற்றடியில் மிகத் தாழ்ந்த குரலில் தனது ரகசியத்தைச் சொன்னான்.  “யானைச் சாணியை உருணடையா உருட்டி அதுக்குள்ள பொன்வண்டு முட்டையை அமுக்கி வைச்சு அம்மாவாசை ராத்திரி காளை மாட்டு மூத்திரத்துல அந்த உருண்டையை கரைச்சா பொன்வண்டு முட்டை தங்க முட்டையா மாறிருக்கும்.” ஜான்பீட்டருக்கும் பிலோமிக்கும் தேவஈவு குடும்பத்தின் பொருளாதார வளமைக்கான காரணம் புரிபட ஆரம்பித்தது.

ஈர்க்கு குச்சிகளை சொருகியிருந்த அம்மாவின் காதுகளை நினைத்தபடி தங்களுக்கும் ஒரு பொன்வண்டு முட்டை தருமாறு பிலோமி ஈவிடம் கேட்டாள். தனது வாலை சிம்மாசனமாக்கிய அனுமனைப் போல் தனது கற்பனையின் சிம்மாசனத்தில் பெருமிதமாய் அமர்ந்திருந்த ஈவு “நீங்க ஏற்கனவே அஞ்சு மாசமா வாடகை தரலையாமே” என்ற பதிலைத் தந்தான். பிலோமியிடம் கர்வமில்லை. தனது குரலைத் தாழ்த்தி அவள் கெஞ்சியதை ஜானால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் “வா நாமளா பொன்வண்டைத் தேடிப் பிடிப்போம்” என்ற நம்பிக்கையை அவனால் தர முடிந்தது.

அன்றிலிருந்து ஒரு வார காலம் பொன்வண்டு மரமாய் அவர்கள் அறிந்திருந்த நரிக்கொன்றை மரங்களில் பொன்வண்டைத் தேடித் திரிந்தனர். வண்டினத்தில் இவ்வளவு வகைகள் உண்டென அவர்களை அறிய வைத்த அத்தேடல் பொன்வண்டை மட்டும் அவர்களுக்கு காட்டிச் செல்லவில்லை. ஒவ்வொரு நாள் மாலையும் அவர்களது தேடல்களை கதைகளாக்கி அம்மாவிடம் சொல்ல அவளுக்கு அக்கதைகள் உவப்பானதாயில்லை. பிலோமி ஆறுதலாய் பொன்வண்டு ரகசியத்தைச் சொல்ல முதல் இரண்டு நாட்கள் மௌனமாய் சிரித்தவள் பின் தன் பிள்ளைகளிடம் அது உண்மையல்ல எனத் தடுத்தாள். இருப்பினும் அவர்களது நம்பிக்கையை அவளால் தகர்க்க முடியவில்லை. அவர்கள் அம்மாவின் கண்டிப்பிற்கு பயந்து பொன்வண்டுத் தேடலை அவளிடமிருந்து மறைத்தனர். காலெல்லாம் செம்புழுதியையும் உடல்களில் மரமேறிய சிராய்ப்புகளையும் காணும் அம்மாவிற்கு  பிள்ளைகளின் நிர்கதி மனதைக் குடையும் .

அன்றும் தோல்வியில் முடிந்திருந்த பொன்வண்டு வேட்டையிலிருந்து அவர்கள் வீடு திரும்பிய வழியில் சர்க்கஸ் முடிய இன்னும் மூன்று நாட்கள் தான் இருப்பதாய் ஜீப் வண்டியில் கட்டியிருந்த ஒலிப்பெருக்கியில் அறிவித்துச் சென்றனர். அது அவர்களை மேலும் சோர்வுறச் செய்தது. கிணற்றடிக்கு முகம் கழுவச் சென்றவர்கள் உச்சி வானில் சுழலத் தொடங்கிய சர்க்கஸ் ஒளியைப் பார்த்தவாறு துணி வெளுக்கும் கல்லில் படுத்தனர்.  ஜான் தனது கனவுகளில் பொன்வண்டுகள் மேகக் கூட்டங்களிடையே பறப்பதாகச் சொன்னான். பிலோமியோ தனது கனவுகளில் யானை லத்தி குடுமியான் மலையளவு குவிந்து கிடப்பதாகவும் அதை ஒரு கூட்ஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டு தேவ ஈவு எங்கோ பயணிப்பதாகவும் சொன்னாள். அன்றிரவு அம்மாவிடம் சர்க்கஸ் செல்ல வேண்டுமென்ற பேச்சை மீண்டும் ஆரம்பித்தனர். ஒருவேளை உண்மையாய் இருக்கக் கூடுமோ என்று ஃபாதரை இன்று வரை ஐயமுறச் செய்யும் ஒரு பதிலை அம்மா சொன்னாள். ஊரில் தெரு நாய்கள் அதிகளவில் மாயமாவதாகவும் சர்க்கஸ்காரர்கள் இரவில் அவற்றைப் பிடித்து மிருகங்களுக்கு இரையாக்குவதாகவும் சொன்னாள். தெரு நாய்களுக்கு வெறி பிடித்திருந்தால் அவற்றை உண்ணும் சிங்கம் புலிகளுக்கும் தொற்றிக் கொள்ளுமெனவும் பிறகு சமயம் பார்த்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து வெறியைத் தீர்த்துக் கொள்ளுமெனவும் அச்சத்தைக் கிளப்பினாள்.

மறுநாள் தேவஈவு அவர்களைத் தேடி வந்து தான் இரண்டாவது முறை சர்க்கஸ் செல்லவிருப்பதாகக் கூறினான். பிலோமி ஜானைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினாள். கருஞ்சிறுத்தையின் வாய்க்குள் ஈவின் தலை அகப்பட்டுக் கொள்ள அவனது கால்கள் அந்தரத்தில் நீந்தும் பிம்பங்கள் ஜானின் மனதில் தோன்றி மறைந்தன. ஆனால் இரண்டாவது முறையும் சர்க்கஸ் பார்த்துவிட்டு அவன் முழூ ஆளாய்த் திரும்பினான். இதுவரை எந்த மிருகமும் பார்வையாளர் கூட்டத்திற்குள் பாய்ந்திருக்கவில்லையென்பதை அவர்கள் விசாரித்து உறுதி செய்தனர். இருவருக்கும் உணவைப் பரிமாறுகையில் ஜான் அம்மா தங்களிடம் பொய் சொன்னதாக குற்றம் சுமத்தினான். மளிகைக் கடையிலும் கடனளிப்பதை நிறுத்தியிருந்த வேதனையிலிருந்த அம்மா தான் சொன்னது உண்மை என வாதிட்டாள். சோற்றுத் தட்டை அவன் அம்மாவின் மீது வீசியெறிந்தான்.

பரிமாறப்பட்டிருந்த உணவை உண்ணாமல் ஃபாதர் அமர்ந்திருப்பதைக் கண்ட அந்தோனி “உடம்புக்கு சொகமில்லையா ஃபாதர்?” என்றான். வறண்ட புன்னகையுடன் மறுப்பாய் தலையசைத்தவர் மனதிற்குள் பிலோமிக்கான கடிதத்தை எழுதத் துவங்கியிருந்தார்.

அன்புள்ள பிலோமிக்கு,

இறைவனுக்கு ஊழியம் செய்ய உறுதியளித்தப் பின் இன்னும் கற்பனாவாதியாய் இருக்காதே. (இவ்வரிகளை எனக்கும் சேர்த்துத் தான் எழுதுகிறேன்). சில நினைவுகள் மீளப்பெறாமலேயே காலமென்னும் சூரைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டால் எவ்வளவு வசதியாய் இருக்கும். சமீப நாட்களாய் என் கனவுகளில் தேவாலயங்கள் சர்க்கஸ் கூடாரங்களாய் உருமாறுகின்றன. விதானத்து உச்சியில் கயிற்றைப் பற்றிக் கொண்டு அம்மா ஊஞ்சலாடுகிறாள். பார்வையாளர் மாடத்தில் அவள் இறங்க முயற்சிக்கையில் அந்த கருஞ்சிறுத்தை அங்கே அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் பதைபதைத்து விழிக்கிறேன். இதை உனக்கு எழுதும் போதும் எனது கைகள் நடுங்குகின்றன. மறுவாரம் ஊருக்குப் போய்வர தீர்மானித்திருக்கிறேன். கடவுளுடைய வார்த்தை உன்னை வழிநடத்தட்டும். ஆண்டவர் உம்மோடு இருப்பாராக.

                                                                                         அன்புடன்

                                                                                     ஜான் போஸ்கோ

                       கடிதத்தை முடித்த பின் வெகுநேரம் அவர் உறக்கத்திற்காக காத்திருந்தார். ஏனோ பிரக்ஞை அதீத விழிப்புற்று அவரை அல்லலுறச் செய்தது.  தனிமை அவரை தேவாலயத்தை நோக்கி அழைத்தது. என்ன செய்வதென அறியாமல் அவரும் அவ்வழைப்பை ஏற்றார். தேவாலயத்திற்குள் மெழுகுவர்த்திகள் அணையக் காத்திருந்தன. காற்று சருகுகளை நிறைத்திருந்தது. தீச்சுடரை பூச்சிகள் மொய்த்தவாறிருந்தன. சுவரில் தெரிந்த அதன் நிழல் நடனத்தில் வசியமுற்று நின்றிருந்தவரின் உதடுகள் “என் நாட்கள் மறைந்து போகின்ற நிழல் போல இருக்கின்றன” என்ற இறைவசனத்தை முனுமுனுத்தன. சற்று பூதாகரமான நிழல் சுவரில் தெரிய திடுக்கிற்றவர் அது ஒரு வண்டின் நிழல் எனக் கண்டுகொண்டார். அது அவரை மூன்று முறைச் சுற்றிவிட்டு நாவல் மரத்தை நோக்கிப் பறந்தது. ஏதோ பட்டம் விடும் சிறுவனைப் போல் ஃபாதர் அதன் பின்னால் ஓடினார். வண்டு மரத்தில் தன் துளையை நோக்கி மேலாகப் பறந்தது. அதைப் பிடிக்க வேண்டுமென்பதைத் தவிர அவர் மனதில் வேறு எண்ணங்கள் இல்லை. வண்டு முரலும் ஓசையின் திசையை அனுமானித்தவராய் அவர் நாவல் மரத்தில்  ஏறினார். உச்சியை அடைய இன்னும் பத்தடிகளே இருக்கையில் கிழக்கில் விரிந்த கிளையில் அதன் ஓசைக் கேட்டது. மேலாக உள்ள மெல்லிய கிளையைப் பற்றியவாறு அக்கிளையில் சில அடிகளை எடுத்து வைத்தார்.  விண்மீன்கள் நிறைந்த வானின் மதகுகளை யாரோத் திறந்ததைப் போல் காற்று வீசத் தொடங்கியது. கிளைகள் அசுரத் தனமாய் அவரைத் தாலாட்டின. ரஷ்ய நாட்டு சீனி நிறத் தேவதைகள் அந்தரத்தில் சுழன்றனர். ஒவ்வொரு முறையும் பிடி நழுவி விடுமோ எனப் பதைத்து அம்மா பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றினாள். அதன் அழுத்தத்தை ஃபாதரால் உணர முடிந்தது. கிளைகள் ஒத்திசைவாக ஆடவில்லை.  அவர் பற்றியிருந்த மேல் கிளை சற்று வேகமாய் ஆடியது. ஃபாதருக்கு தனது வார்த்தைகளே செவிகளில் ஒலிக்கத் தொடங்கின. கண்களில் நீர் பெருக அவர் அரற்ற ஆரம்பித்தார். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த  வார்த்தை  தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வானமும் பூமியும் ஒழிந்து போகும் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. மரணித்தது அப்பாவிற்குப் பதில் நீயாய் இருந்திருக்க வேண்டுமென அவளிடம் ஏன் சொன்னேன்?”  அம்மா அவ்வார்த்தைகளைக் கேட்டு சலனமற்று நின்றாள். ஆனால் அவளது கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் வழிந்தது. முகத்தை சேலைத் தலைப்பால் துடைத்தாலும் கண்ணீர் நிற்க மறுத்தது. மூக்கை உறிஞ்சிக் கொண்டே கிணற்றடிக்குச் சென்றாள். இரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே ஈவின் அப்பாவும் பின்னால் சென்றார். ஆனால் அம்மா ஈரப்பாவாடையின்  மேல் சேலையைச் சுற்றியவாறு விரைந்து வீடு திரும்பவில்லை. பொறுமையாக கிணற்றடியிலேயே சேலையை உடுத்தி விட்டு வந்தாள். சிவப்புக் கம்பளம் விரித்த சர்க்கஸ் கூடாரத்தின் கனவுலகிற்குள் பிள்ளைகளை அன்று மதியம் அழைத்துச் சென்றாள். அவர்கள் கேட்ட அனைத்தையும் வாங்கித் தந்தவள் மாலை நேரத் திருப்பலிக்கு மாதாக் கோயிலுக்கு அழைத்துச் சென்றாள். தாவீது குமாரன் கருணை இல்ல மாணவர்கள் பிரார்த்தனை பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். அம்மாவின் கண்கள் மீண்டும் பெருக்கெடுத்தன. தன்னிடமிருந்த மிச்சப் பணம் முழுவதையும் அவர்கள் வைத்திருந்த உண்டியலுக்குள் போட்டாள். மறுநாள் விடியலில் அம்மா புழங்கும் ஓசைகளைக் கேட்டு ஜான் விழிக்கவில்லை. மின்விசிறியால் மேசை மீதிருந்த காகிதம் படபடத்துக் கொண்டிருந்தது. ஜான் போஸ்கோ அதை வாசித்தான் “என் பிள்ளைகளைத் தேவன் காப்பான் என்ற நம்பிக்கையின் பெயரால் நான் கர்த்தருக்குள் நித்திரை அடைகிறேன்.” ஏதோ தேவவாக்கிற்கு கட்டுப் பட்டதைப் போல் கிளைகள் தனது ஆட்டத்தை சற்றென்று நிறுத்தின. உள் அறைக் கதவு தாழிடப்பட்டிருக்க ஃபாதர் ஜான் போஸ்கோ ஜன்னல்களைத் திறந்தார். பிளந்திருந்த அம்மாவின் பாதங்கள் புவியீர்ப்பை ஏளனம் செய்தவாறு அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்தன.

———————————————————-

சித்ரன் : இயற்பெயர் வினோத் கண்ணா. சொந்த ஊர் புதுக்கோட்டை. திருச்சியில் அரசுப் பணியில் இருக்கிறார். இவரது முதல் சிறுகதை ‘தூண்டில்’ ‘மணல் வீடு’ சிற்றிதழில் வெளியானது. ‘மேட்னி’, ‘நீர்மை குன்றும் நெடுங்கடல்’ ஆகிய சிறுகதைகள் மலைகள்.காம் இல் வெளியாகியுள்ளன. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான ராபர்டோ பொலானோவையும் மரியா வர்கஸ் லோஸாவையும் ‘கல்குதிரை’யில் மொழிபெயர்த்திருக்கிறார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *