குல்தும்

நஸீஹா முகைதீன்

ஓவியம்:அனந்த பத்மநாபன்


செவ்வாய்கிழமைக் கடற்கரை வெறிச்சோடிக் கிடக்கிறது. இதுவே வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கால் வைக்க முடியாதவாறு கூட்டம் நிறைந்திருக்கும். பைக்குகளின் காதைக் கிழிக்கும் சப்தமும்,சனநெரிசலுமாக உலகின் மிக அருவருப்பூட்டும் இடமே அதுதான். வறுத்த கச்சான்,கஞ்சி,வடை எனத் தொடங்கி ஊரிலிருக்கும் அத்தனை தீனிப்பண்டங்களும் அவற்றின் மிஞ்சிய  குப்பைகளுமாக மண்ணைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.

தூரத்தில் வெள்ளைச் சாரமும், கட்டம் போட்ட சேர்ட்டும் அணிந்த இருவர் மணலில் அமர்ந்தபடி சூடான ப்ளேன்டி கிளாஸுகளுடன் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர். காக்கைக் கூட்டமொன்று  இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது. தென்னை மரங்கள் மனிதர்கள் அமரும் பகுதியை விட்டும் கொஞ்சம் விலகி இருந்தன. அருகேயிருக்கும் பள்ளிவாயலுக்குச் சொந்தமான மயான பூமியில் மையத்துப் பூக்கள் சிவப்பும்,மஞ்சளுமாக பூத்திருந்தன. பியர் டின்களின் வாசத்தை கடந்து வந்த காற்று மூக்கைத் தாவிச் சென்றதின் அரிப்பில் ஐந்தாறு முறை தும்மி முடித்தேன். மூக்கிலிருந்து சளி வடியத் தொடங்கியது. கைப்பையினுள் இருந்த டிஷ்யூப் பேப்பரினால் பெரிய இழு இழுத்துச் சீறியதும் இடது கண்ணிலிருந்து நீர் வெளியேறியது.

குழந்தையாக இருந்தபோது வெள்ளிக்கிழமைகளில் கடற்கரைக்கு மஞ்சள் சோறும், இறைச்சிக்கறியுமாக பார்சல் கட்டிக்கொண்டு வந்து சாப்பிடுவது வழமை. அப்போதெல்லாம்  நல்ல இணல் தரும் மரத்தின் கீழே பன் பாயை விரித்து அமர்ந்து கொள்வோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னஞ்சோலையாக இருக்கும். நானும் தம்பியும் ஏறி விளையாட ஏதுவாக வளைந்த மரங்களுமிருக்கும். எங்கள் வயதையொத்த சிறுவர்கள் எல்லோரும் இதையே செய்து கொண்டிருப்பார்கள். ஆளுக்கொரு மரத்தை பிடித்து ஏறுவதும், சறுக்குவதுமாக சந்தோசமாக கழிந்த நாட்கள் அவை. பால்புட்டியோடு திரிந்த காலம் அதை விட செப்பமானது. சொல்ல மறந்து விட்டேன் மாட்டுறைச்சி என்றதும் எனக்கு தொண்டை அடைக்கிறது. முந்தைய மாட்டுக்கறியில் இருந்த இறைச்சி மணம் இப்போது பச்சையாக இரத்த வாடையுடன் இருக்கிறது. உம்மா நன்றாக அவிப்பதாகவே கூறுவாள். பின்னாட்களில் சலிப்படைந்து ஏசவும் தொடங்கி  விட்டாள். இஞ்சி,ஏலம்,உள்ளி என்பவற்றை உரலில் தட்டி சேர்த்து தாளிப்பது  பச்சை வாசம் போவதற்கு தானே புறகென்ன என்பாள். அவளுக்கு சுவையாக இறைச்சி பொறிக்கவும் தெரியாது. என் மூத்தவாப்பா எச்சி ஊறும் படியாக கீலமாக துண்டுகளாக்கி மிளகாய்த்தூள், புளியம்பழம் போட்டு பிசைந்து பொறித்து தருவார். அப்படியே வாய்க்குள்  கரைந்து போகும். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் காரசாரமாக சமைக்கத் தெரிந்திருந்தது. நான்கு வருடங்களுக்கு முன் நுரையீரல் புற்றுநோய் அவரை பறித்துப் போய்விட்டது. மூத்தவாப்பா குடிக்காமல் இருந்திருக்கலாமென யோசித்ததுமுண்டு. கொஞ்ச நாட்களில் இறைச்சி சாப்பிடுவதை விட்டு விடுவேன்  என  நினைக்கிறேன்.

விளக்குக் கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சீமெந்துக் கதிரையில் சிகரெட்டும் கையுமாக இருந்தான் றிஸ்வான். என்னைக் கண்டதும் கன்னத்துக் குழிகள் தெறிக்க  சிரித்தபடி சிகரெட்டைக் கீழே போட்டு  அணைத்தான்.

” You can continue” என்றேன்.

தொடர்வதற்கு உடன்பாடு இல்லாதவனாய் தெரிந்தான். நான் அவனை வற்புறுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை அவனை அவன் வழியில் விடுவதை விட சிறந்த வழிகாட்டுதல் எதுவுமில்லை. சிகரெட் பிடிப்பதற்காக  அவனொன்றும் கெட்டவன் என்ற அர்த்தம் கிடையாது. அந்த காலத்து சினிமாக்களில் சித்தரித்தது போல கெட்டவர்கள் மட்டுமே புகைக்கவோ குடிக்கவோ வேண்டுமென்றில்லை. புகைப்பிடிப்பது அவன் இயல்பு.

“மிச்சம்  நேரமோ வந்து”

“இல்ல இப்பான்”

“ஐம் சொரி. கொஞ்சம் போஸ்ட் ஒபீஸ் போற வேல இருந்திச்சு”

“மடத்தனமா பேசாத. அஞ்சு பத்து நிமிசம் காத்துட்டு இருக்கிறது தப்பில்ல”

“ம்ம்”

“ஆனா சுணங்கும்னு தெரிஞ்சா உரியவங்களுக்கு அறிவிச்சிடனும். அந்த  மேனர்ஸ் முக்கியம்”

முகம் முழுதும் தாடி வளர்ந்திருந்தது. கையில் மணலை அள்ளி வைத்திருந்தவன் என்னை விட்டு நான்கடி  நகர்ந்திருந்தான். நீளக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்திருந்தான். அவன் அதிகமாக சிரித்துப் பார்த்ததில்லை. கோபக்காரன். தலையை  நேர்த்தியாக வாரியிருந்தான். தன் பக்கமாக வைத்திருந்த முதுகுப்பை ஓரத்தில் கிழிந்திருந்தது. சாதாரண பாட்டா செருப்பு அணிந்திருந்தான்.

றிஸ்வான் என்னைவிட இரண்டு வருடங்களே மூத்தவனென்றாலும்  குழந்தையைப் போல நான் செய்யும் அத்தனை குறும்புகளையும் பொறுத்துக் கொள்வான். மூன்று முறை கன்னங்கள் வீங்க அடியும் போட்டிருக்கிறான். இருந்தாலும் எங்களுக்கிடையிலான காதல் கடைசியாக இருக்கும் தேநீர் சொட்டுக்களைப் போலவே கொண்டாட்டத்திற்கு உரியதாக இருக்கும்.

“எதுக்கு சிகரெட் புடிக்கிற”

“போதை, அமைதி”

“என்னத்துக்கு போதை”

அசட்டையாக பார்த்தான். முழிகள் கலங்கியிருந்தன. பலம் கூடிய  எதையோ மனதிற்குள் அழுத்திக் கொண்ட புன்னகையுடன்  “என்ட உம்மா மௌத்தாகல தெரியிமா” என்றான்.

கிட்டத்தட்ட நாங்கள் பழக ஆரம்பித்து ஒரு வருடம் கழிந்து போனது. இதுவரை தான் பேசாது போன ஒன்றை பேச ஆரம்பித்தான். அதைச் சொல்லு, இதைச் சொல்லு என்று என் சுதந்திரத்தை பறித்தது கிடையாது. நானும் அவனை குடைந்தெடுப்பதில்லை.

“யாரோடையோ போய்ட்டா. நான் சின்னதா இரிக்ககுள்ளயே”

பெருநீரை வெறித்தான். அது தன் பாட்டிற்கு கரையை நக்குவதில் குறியாக இருந்தது. அலையின் உமிழ்நீரில் நனைந்தது நிலம். அவனது கைகள் காற்சட்டை பொக்கட்டினை துழாவின. அவனிடம் ஒரு சிகரெட் தான் இருந்திருக்க வேண்டும். அதையும் பாதியில் எறிந்து விட்டான். எனக்கு ஆத்திரம் முட்டியது. உடல் கூசியது.

“உங்கம்மாக்கு சின்னப்புள்ளய உட்டுட்டு போறளவுக்கு என்ன தேவப்பட்டிச்சோ”

பளார் என்று விழுந்த அறையில்  கதிரையிலிருந்து மணலுக்கு வீசப்பட்டேன். தாவணி கழுத்தில் சிக்கிக்கொள்ள பாவடை உயர்ந்ததில் முழங்கால் தெரிந்தன. றிஸ்வானைப் பார்த்தேன். முன்னெப்போதும் இல்லாத பொழிவு முகத்தில் தெரிந்தது. அலைகள்  அவசரமாக அவன் கால்களிடம் மண்டியிட்டன. தோள்கள் மேலும் அகன்று நெஞ்சு மயிர்கள் சட்டை பட்டனின் இடுக்கு வழியாக தெரிந்தன. தென்னை மரங்கள் இலேசான  சலசலப்புடன் ஓலைகளால் வெற்றிடத்தை கிழித்துக் கொண்டிருந்தன.

வெறுமனே மனித உயிர் என்பதைத்தாண்டி றிஸ்வானில் ஏதோ இருக்கிறது. அவனது இரத்தம் பாய்ச்சிய சதைகளில் பெருகும் காதலை தளம்பல் இல்லாமல் வர்ணிக்க முடியாது. கலைந்த தலைமயிர்களில் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த காதலையும் உணர்ந்ததும் எழுந்து அவனை இறுக்கமாக அணைத்து முத்தமிட வேண்டும் போல இருக்கிறது. முத்தமிட்டால் தெளிவு பிறக்கும். வானத்தை இரண்டாக பிளந்த இடைவெளியில் நடக்கும் போது ஏற்படும் பதட்டமும் மௌனமும் என்னுள் போர் செய்தன.

எதையோ நிரூபித்த பெருமிதத்தில் எனக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அவனுக்காக அறைந்தான். நிலைமையை புரிந்து கொண்டவளாய் கை கால்களை உதறியபடி எழுந்து ஆடையை நேர்படுத்தினேன். தாவணியால் தலையை மறைத்தேன். மீண்டும் அவன் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன். அவனது முதுகுப்பையை திறந்து உள்ளிருந்த பொருட்களை கொட்டி விட்டு காலால் பையை மிதித்த படி அவனது கோஸ்ட்லி வொட்சினை கடலில் தூக்கி எறிந்தேன். அவனது முகத்தில் காறி உமிழ்ந்து குற்ற உணர்ச்சியைத் தூண்டி விட்டேன்.

சிறிய இடைவெளி.பின் அவனே தொடர்ந்தான்.

“வாப்பா செரியில்ல. செஞ்சிட்டு இருந்த வேல கைவிட்டு பெய்த்து. உழச்சி தர ஏலாதுன்னு உம்மாவ விட்டுட்டு போய்ட்டாரு. மூனு வருசம் தட்டத்தனிய கஷ்டப்பட்டா. தள்ளிப் போய்ட்டா சம்பாதிச்சுக் குடுக்கத் தேவலன்னு நெனச்சிட்டாரு போல”

உம்மாவின் வேட்கைக் கருக்களுக்கு உயிரூட்டினான். அவன் மீது விழுந்தேன். தோள்களைப் பிடித்துக் குலுக்கி கைகளிரண்டையும் வரிந்து இழுத்து என் இடுப்புகளைச் சுற்றிக்கொண்டேன்.

“காதுல ரெத்தம் வருதான்னு பாரு”

மொபைல் வெளிச்சத்தில் பார்த்தவன் ஒன்றுமில்லை என்றான். முகத்தைத் திருப்பி இதழ்களை நெருங்கினான். வெப்பமான மாருதத்தில் மூச்சுக்குழல் அடைத்து நின்றது. தூய்மையான ஐநூறுகளைக் கடந்த முத்தம். கொஞ்சம் இடைவெளி. அடுத்த முத்தம்.

கழுத்தினை அழுத்தியவாறு கால்களைத் தடவி ஆறுதல் படுத்தினான். விரல்களை கோதியபடி முழங்கால்களின் பின்புற இடுக்கை வருடி விட்டான். போகலாம் நேரமாகி விட்டது என்றான். வானத்தின் செம்பிழம்பு வெளிச்சத்தில் நான் விழுந்த தடம் மட்டும் அப்படியே இருந்தது.

வீட்டிற்கு வரும் போது நேரம் ஐந்தாகி விட்டது. உம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். மழை இருட்டி இருந்தது. கொடியில் காயப்போட்டிருந்த உடுப்புகளை எடுத்து கதிரையில் வைத்து விட்டு டீவியை போட்டு சோபாவில் அமர்ந்தேன். தேமே என்றிருந்தது. மனது நிறைய குழம்பியிருந்ததால் குளித்தால் நிம்மதி வரும் போல இருந்தது. சவரைத் திறந்ததேன். காது வலி குறையவில்லை. தண்ணீருடன் எல்லாமே முதலிலிருந்து கொட்டத் துவங்கியது.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே அனுவின் வீட்டிற்கு முதல்முறையாக சென்றிருந்தேன். வெளியே டியூசன் அனுப்ப விரும்பாதபடியால் மணித்தியாலத்திற்கு நானூறு ரூபாய் என்ற கணக்கில் தனியாக மகளுக்கு படிப்பிக்குமாறு கேட்டுக் கொண்டாள் அவள். என் உம்மாவை விட ஆறேழு வருடங்கள் இளமையானவளாக தெரிந்தாள். அழகான பெரிய கண்களில் கொஞ்சமும் மலர்ச்சி இல்லை. தனது உடல் தொடர்பில் அவளுக்கு நிறைய கரிசனம் இருப்பதாக தெரிந்தது.

பழைய காலத்து வீடு பிரமிப்பாக இருக்கிறது என்றேன். பிறந்த வீட்டுச் சீதனம் என்றவள் மகளை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினாள். நாங்கள் மேசையில் எதிரும் புதிருமாக அமரந்தோம். அனு பத்தாம் தரத்தில் படிக்கிறாள். நல்ல முக அழகு வாய்ந்த அடர்ந்த நிறமானவள். மென்மையானவள். சொல்வதை இலகுவாக கிரகித்துக் கொள்வாள். மூன்று வாரங்களின் பின் எங்களுக்குள் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வீரனொருவனை இருவரும் விரும்பினோம். பிரார்த்தனை செய்யுமளவிற்கு நீண்ட மூக்கும்,கூரான நெற்றியும் கொண்டிருந்தான் அவன். படிப்பு முடிந்ததும் கொஞ்ச நேரத்திற்கு கிரிக்கெட் பற்றி அளப்போம். றிஸ்வானுக்கு கிரிக்கெட் மீது பற்று இருக்கவில்லை. நியோ கெபிடலிசம் மயிறு என்பான். அவனொரு புரட்சிக் கிறுக்கன். வாழத்தெரியாதவன்.

ஒரு திங்கட்கிழமை அனுவிற்கு கேத்திர கணிதம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இலேசான தலைவலி தொடங்கியது. வயிற்றுப் பகுதியின் நடு மையத்தை வாளால் அறுப்பது போல இருந்தது. தலைவலியோ குழப்பமோ தண்ணீர் தேவைப்படும் எனக்கு. வீட்டில் கூட ஏதாவது சிக்கல் இருந்தால் எங்கள் ஊரில் இருந்த ஊதிப் பார்க்கும் பெண்ணிடம் தண்ணீர் ஓதி வந்து வைப்பேன். தண்ணீர் சிக்கலைப் போக்கும் என்ற பெரிய நம்பிக்கை இருந்தது.

“முகத்தைக் கழுவனும் அனு”

கிணற்றடி வழியைக் காண்பித்தாள். முகத்தை நீரால் அடித்தபின் குளிர்ச்சியாக இருந்தது. கிணற்றடியை சுற்றி கிளை பரப்பிய மாமர நிழலில் அமைதியொன்று வெளிக் கிளம்பியது. மாமரத்தில் ஆணியடித்து கண்ணாடி கொழுவப்பட்டிருந்தது. ஆடையை சரி செய்யலாமென அதனருகில் சென்றேன்.

விம்பமாக தூரத்தில் அனுவின் அம்மா கையில் சிகரெட்டுடன் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். சரியாக றிஸ்வான் கடலை வெறித்தது ஞாபகம் வந்து போனது. அவள் முதுகை காட்டி அமர்ந்திருந்ததால் கண் கலங்கியிருந்தது தெரியவில்லை.

அனு இன்னும் எழுதிக் கொண்டிருந்தாள். அவளில் ஒருநாளும் எந்த வெற்றிடமோ, சஞ்சலமோ இருந்ததில்லை. தன் தாயின் புகைப் பழக்கம் அவளை எதுவுமே செய்ததில்லை என நினைத்தேன்.

“அனு உம்மா  smoke  பண்ணுவாங்களா”

“ஓம்”

என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை. எந்த தடுமாற்றமும் இல்லை. எனக்கு மேலே எதுவும் கேட்கத் தோன்றவில்லை.பாடம் முடிந்ததும் கிளம்புவதற்கு தயாராகினேன்.

“இருபத்தாறு வயசிலயே வாப்பா மௌத்தாகிட்டாங்க. வயித்துல நான் பத்து மாசம். சொந்தக்காரங்க வாப்பா வேல செஞ்ச இடத்துல இருந்து வந்த காசையும் உம்மாட்ட  கையெழுத்து வாங்கி ஏமாத்திட்டாங்க. தனியாளா என்ன படிப்பிக்காள். என்ன மட்டுமில்ல இன்னும் ரெண்டு வாப்பா இல்லாத புள்ளைகளையும். எல்லாத்தையும் மறச்சிட்டு மறந்துட்டு சகிச்சிட்டு வாழ்றா. அதனால எனக்கு தப்பா தெரியல டீச்சர். நீங்களும்…

தலையசைத்தேன். அனுவிற்கு வயதை மீறிய முதிர்ச்சி. நான் இன்னும் உம்மாவின் தாவணியைப் பிடித்தபடி திரிவேன். கொஞ்சமென்றாலும் நோப்பாளம் வந்துவிடும். ஆனால் அனு, அனுவின் உம்மா,றிஸ்வான் மூன்று பேரும் வாழ்க்கையில் எத்தனையை கடந்திருக்கிறார்கள்.

மறுநாளும் அதே நான்கு மணிக்கு றிஸ்வானைச் சந்திக்க சென்றேன். இன்னிக்கு கொஞ்சம் பேசலாம் என்று தோன்றியது. அவனது முகம் வாடியிருந்தது. வழமைக்கு மாற்றமாக இன்று நான்கு சிகரெட் எச்சங்கள் கிடந்தன. அனுவைப் பற்றி அவனுடன் பேசினேன். ஆர்வம் காட்டினான்.

“எல்லாத்தையும் சகிச்சிட்டு போற சீவனுக்கு  சிகரெட் ஒன்னும் தப்பில்ல”

என்ன சொல்வதென்று தெரியவில்லை. திணறினேன். என் பக்கத்து வீட்டு ராத்தாவின் கணவரை பற்றி யோசித்தேன். சிகரெட் என்றாலே காத தூரம் ஓடும் மனிசன் தன்னுடைய மனைவியை சின்னத் தவறுகளுக்காகவும் போட்டு வெளுத்து விடுவார். தழும்புகளுடன் வெண்மையான அவள் கைகளை பார்க்கவே அருவருப்பாக இருக்கும். வேலை விட்டு வந்ததும் வீடு சொட்டும் அழுக்காக இருக்கக் கூடாது. அவளுக்கு மாதவிடாய் என்றாலே நிற்க முடியாத வயிற்று வலி வந்துவிடும். ஆனாலும் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்தனை மணிக்கு இரவு வீட்டிற்கு வந்தாலும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால் இவள் அதையே சிறந்த மனைவியின் வேலையாக நினைக்கிறாள். தன்னுடைய டீவி சீரியலில் வரும் மனைவிமார்களை  வீணி வடிய ரசித்துக் கொண்டிருப்பாள். சமையல் பாத்திரங்களில், புது உடுப்புகளில்,மணக்கும் சலவைத்தூள் விளம்பரங்களில் அவள் என்றாவது முழுமையாகக் காணாமல் போய் விடுவாள்.

றிஸ்வான்  நல்லவன். தெளிவானவன். காதலித்தாலும்  விருப்பமின்றி தொடுவதற்கு எத்தனிக்காதவன். என் வாப்பாவின் சம்மதம் எங்கள் காதலுக்கு கிடைக்கவில்லை. றிஸ்வானை வீட்டில் கூறிய போது

“அறப்படிச்ச குடிகாரன் உனக்கெதுக்கு” என்றார் வாப்பா. வாப்பாவின் எடுகோள்கள் தப்பானவை என்பதை விட அதில் நியாயம் இருப்பதாகவும் தோன்றியது.

பேசிக் கொண்டிருந்ததில் அனுவின் வீட்டிற்கு செல்ல தாமதமாகி விட்டதால் வேகமாக நடந்தேன். கதவு திறந்து கிடந்தது. அனு என்று அழைத்தேன். உள்ளே வரச் சொன்னாள்.கண்கள் சிவத்துக் கிடந்தன.

“உம்மாக்கு மேல் சுகமில்ல”

அறைக்குள் உடம்பு கொதிக்க கிடந்தாள் அனுவின் உம்மா. பனடோல் போட்டதாக சொன்னாள். குரல் வாடிப் போயிருந்தது. ஆஸ்பத்திரிக்கு போவதே சரி எனத் தோன்றியது.

றிஸ்வானின் உதவியுடன் பதினைந்து நிமிடத்தில் வைத்தியசாலை வந்துவிட்டோம். அனு முகம் முழுக்க சூனியமாகவிருந்தது. முன்னெப்போதும் பார்க்காத அனுவின் கலக்கம் உதடுகளில்  நிரப்பியிருந்தது. றிஸ்வானுக்கும் என்னுடைய பதற்றம் தொற்றியிருந்தது. உம்மா இல்லாத நாட்களைக் கடத்தியவன் அவன்.

ஒரு வழியாக செக்கப் முடிந்தது. ஒரு வாரமாக  தொடர்ச்சியாக தோடம்பழம் சாப்பிட்டதால் உடல் தளர்ந்திருந்தது என்று விட்டு புகைக்கும் பழக்கம் இருக்கிறதா என கேவலமான பார்வை வீசினார் டொக்டர்.

“இருக்கு”

அனுவின் அம்மா தீர்க்கமாக சொன்னாள்.

“குறைச்சா நல்லம்”

பில்லைக் கட்டி விட்டு வெளியே வரும் போது திரைச்சீலை அசைவினால் விளங்கும் வழியே இன்னும் வைத்தியரின் முகம் அருவருப்பாக இருந்தது.

“இனி smoke பண்ணாதம்மா”

உம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள் அனு. தனக்குப்பின் தன் மகள் கேடுகெட்ட சமூகத்தில் தனியாக சிக்கிக்கொள்ளப்போகிறாள் என்பதையும் உறவின் பெயரிலேயே தன்னை ஏமாற்றிய மாமா,மச்சினன் என்ற கும்பல் இன்னும் சமூக காவலர்கள், மதக் காவலர்கள் என்ற பெயரில் அலைந்து கொண்டிருப்பதையும் அவள் எண்ணிக் கொண்டாள் போலும்.

மூன்று நாட்களின் பின் மீண்டும் அனுவின் வீட்டிற்கு சென்றேன். உம்மா புகைப்பிடிப்பது குறைந்திருப்பதாக கூறினாள். வீடே குதூகலமாக இருந்தது. வியாழன் இரவு என்பதால் ஊதுபத்தி கொழுத்தி இருந்தார்கள். எனக்குச் சீனி கருக்கிச் செய்த வட்டிலப்பமும்,வளவிற்குள் இருந்த மரத்தில் பழுத்த இதரை வாழைப் பழங்களும் கொண்டு வந்து வைத்தாள். இதரை வாழைப்பழங்கள் என்றால் றிஸ்வானுக்கு உயிர்.கேட்டு வாங்கச் சங்கடமாக இருந்தது. ஆனாலும் பாடம் முடிந்து வெளியே வரும் போது அந்த மாதச் சம்பளத்துடன் சேர்த்து வாழைப்பழங்களும் தந்தாள் அனுவின் உம்மா.

“எனக்கொரு கனவு. அந்த டைம்ல  பாதிக் கெழவியாயிருப்பன். சுருண்ட முடிலாம் கொட்டி அடத்தி குறஞ்சிருக்கும். இடைல இடைல ஒன்னு ரெண்டு வெள்ள முடி. ஸ்கூல் முடியிற டைத்துக்கு வெய்ட் பண்ணிட்டு இருப்பன். ஒரு பொம்புள புள்ள. என்ன போலயே சுருண்ட முடி, அகலமான கண்ணு. அவ பேரூ கூட குல்தும். அதுகூட அவட வாப்பாட உம்மாவோட பேரு. தைரியமா இருக்கனும்னு அந்தப் பேரு வச்சம். வாப்பா இல்லன்னு அவளோட க்ளாஸ் மேட்ஸ்க்கு தெரிஞ்சிருக்கும். வாப்பா ஸ்மோக்கிங் கூடக்குறய பண்ணித்தான் மௌத்தாகிட்டார்னு நான் அவள்ட சொல்லமாட்டன். ஏன்னா அவளோட வயசுக்கும், அவளோட கல்வி முறைக்கும் புகைத்தல் கேடு மட்டுந்தான். அவ அவள்ட வாப்பாவ புரிஞ்சிக்கிற டைம் வந்ததும் சொல்லுவன். எனக்கு அவளோட வாப்பா கண்ணீர் முட்டச் சொன்ன சொப்பனமான கத அது”

வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தபடி எதிர்காலம் பற்றி அவனிடம் சொல்லி முடித்தேன். முதல் முறையாக றிஸ்வானின் கைகளில் நடுக்கம் தெரிந்தது. ஆனாலும் அவனது மெச்சூரிட்டி அவனை பலப்படுத்திக் கொண்டிருந்தது. தரைப் பார்த்தான். கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.

“உண்ம என்ன தெரியிமா? smoke பண்ணினா உனக்கு வாப்பாவாக ஏலா”

திமிறினான். என் கைகளை முதுகுப்புறமாக வளைத்தான். வலியில் துடித்தேன். பின் கழுத்தை ஈரப்படுத்தினான். முகத்தை திருப்பி கண்களை நெருங்கினான். பூராகவும் சிகரெட் நெடி. என்னை விடுவித்தபடி ஓடிச்சென்று ஓங்களித்தேன். நிதானமாக அவனை பார்த்த பின் கண்களை அவனிடமிருந்து சற்றும் திருப்பாமல் உறுதியான குரலில் சொன்னேன்.

“கடைசியா சொல்றன்..இந்த வாசத்தோட என்கிட்ட வாராத. ”

———————————

நஸீஹா முகைதீன் : 1993-ல் பிறந்த நஸீஹா கிழக்கிலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர்.  இது அவரது முதல் சிறுகதை.

One comment

  1. அருமையான படைப்பு. மேலும் பல பாதிப்புகளை எதிர்நோக்குகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *