ஆகக்சிறந்த கதைகள் பற்றி

 

 

 

சு.வேணுகோபால்


+2 முடித்து அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியப் படிப்பில் சேர்ந்தேன். பதினெட்டு வயதுவரை வாசிப்பு என்றால் என்னவென்று தெரியாது. ஒரு நல்ல சிறுகதை தொகுப்பையோ, நாவலையோ படித்திருக்கவில்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே எதுவும் தெரியாது. முரட்டுத்தனமான வாழ்க்கையை எனக்கு என் கிராமம் தந்தது என்பதற்குமேல் எதுவும் தெரியாது. தூங்கும் நேரம் தவிர எப்போதும் தெருவிலும் தோட்டத்திலும் கிடந்தேன். கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும்படியான சூழல். நகரத்தைச் சுற்ற பயம். தெரியாத பாதைகள். சில நாட்கள் கோரிப்பாளையம் நடைபாதையில் நடந்து விட்டு வருவதோடு சரி. பெரும்பாலும் முதலாண்டு முழுக்க மதுரை நகரத்திற்குள் எங்கும் சுற்றிவரவில்லை. ஜெயகாந்தன் அந்த ஆண்டு கல்லூரிக்கு வரவிருப்பதை முன்னிட்டு ஜெயகாந்தன் நூல்களைப் படித்தோம். தீவிரமாக வாசித்தவர்களில் நானும் ஒருவன். டேனியல்பூர் மெமோரியல் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து வாசிப்பது ஒரு தீவிர செயல்பாடாக மாறியது.

ஒரு நூல், முன்னட்டையும் இல்லை. முன்னுரையும் இல்லை. பைண்ட் செய்யப்பட்ட பின்னட்டை இருந்தது. டேனியல்பூர் மெமோரியல் நூலகத்திலேயே வகுப்புவிட்ட மாலை நேரத்தில் படித்தேன். ஒருவன் புதிதாக ஒரு வீட்டிற்குக்குடி வருகிறான். எதிர்த்த வீட்டில் கணவன் மனைவி. அவர்களுக்குள் சண்டை அடிக்கடி நிகழ்கிறது. இவன் வந்தபோது உதவி எதுவென்றாலும் கேளுங்கள் என்று சொன்னவன்தான் எதிர்வீட்டுக்காரன். ஒருநாள் மனைவியைப் பிடித்து அடிக்கிறான். அவள் வலி தாங்க முடியாது கத்துகிறான். அடி நிற்பதாக இல்லை. புதிதாக வந்தவன் பொறுக்கமுடியாமல் எதிர்வீட்டுக் கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த கணவன் நீ யார் எங்கள் பிரச்சனையில் தலையிட என்று முகத்தில் அறைந்ததுபோல் திட்டுகிறான். என் மனைவியை அடிப்பேன் உதைப்பேன் உனக்கு எந்த உரிமையும் கிடையாது பேசாமல் போ என்று கத்துகிறான். புதிதாகக் குடிவந்த எழுத்தாளன் இனியொரு தடவை அடித்தால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். மனைவியைக் கைநீட்டி அடிக்கிறாயே நீ என்ன மனுஷனா என்று கேட்கிறான். மனைவியை அடித்தால் திருப்பி அடிக்கும் வேகத்தில் புதியவன் நிற்கிறான். அந்தப் பெண் இது எங்கள் குடும்பப் பிரச்சனை நீங்கள் தலையிட உரிமையில்லை போய்விடுங்கள் என கடுமையாகப் பேசுகிறாள். இந்தப்பேச்சை எதிர்கொள்ள முடியாமல் தன் அறைக்குப் போய்விடுகிறான். கணவன், இவன் யாருடி உனக்கு சப்போர்ட்பண்ண வந்திருக்கிறான் என ஏசுகிறான். சண்டை ஓய்கிறது. வெளியே சென்ற கணவன் வரவில்லை. மாலைபோய் இருள் வருகிறது. கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு புதிதாக வந்தவன் கதவைத் திறக்கிறான். எதிர்வீட்டுப் பெண். உள்ளே நுழைந்து இந்த வெளிச்சத்தை அமர்ந்துங்களேன் என்கிறாள். வெளிச்சத்தை அணைக்கிறான். உங்கள் மடிமீது தலைவைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்கிறாள். சரியென்கிறான். அவன் மடிமீது தலை வைக்கிறாள். தன் துயரம் வடித்ததுபோல உணர்கிறாள். அவன் மடியில் இரண்டு சொட்டு கண்ணீர்த்துளிகளின் சூடுபடுகிறது.

‘போதும் இந்த கணம். நான் பெரிய ஆறுதல் பெற்றேன். விளக்கைப் போடுங்கள்’ என்று சொல்லி அறையைவிட்டு வெளியேறுகிறாள். கதையின் பல்வேறு விசயங்கள், உரையாடல்கள் மறந்துவிட்டன. ஆனால் இந்தக்காட்சி இன்றளவும் என் மனதிலிருந்து மறையவேயில்லை. கதையின் பெயர் ‘சிறிது வெளிச்சம்’ புதியவன் மாடியிலிருந்து இறங்கிவந்து அடிப்பவனைத் தடுப்பதாக நானாக ஒரு கற்பனை செய்திருக்கிறேன். மாடியிலிருந்தல்ல. எதிர்வீட்டிலிருந்து. இந்தக் கதை அன்று மாலை என்னை மிகவும் பாதித்தது. 30 ஆண்டுகள் ஆகியும் அந்த பாதிப்பு என் மனதிலிருந்து நீங்கவே இல்லை. அதன்பின் பத்தாண்டுகள் கழித்து சிட்டி ‘சிறிது வெளிச்சம்’ கு.ப.ரா.வின் மிகச்சிறந்த கதை என்று குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். தொடர்ந்து சி.சு.செல்லப்பா அது மிகச்சிறந்த கதை என குறிப்பிட்டிருந் ததையும் படிக்க நேர்ந்தது. என்னை பாதித்த கதை அதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னமே சிட்டியை, செல்லப்பாவை பாதித்திருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டேன். சில கதைகளின் சம்பவங்கள் இவ்விதம் நினைவிருந்தும் தலைப்புகள் மறந்துவிட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பு வேர்கள் மு.ராமலிங்கம் வீட்டில் கு.ப.ரா. தொகுதிகளைப் புரட்டி முடிவுகளை வாசித்து அக்கதைகளின் தலைப்புகளைக் கண்டுபிடித்தேன். அப்படி கண்டுபிடித்த கதைகளில் ஒன்று ‘புரியும் கதை’ நீண்ட காலம் தலைப்பு தெரியாமல் நினைவில் உழன்ற கதையின் தலைப்பைக் கண்டுபிடித்ததும் அப்படியொரு மகிழ்ச்சி.

தி.ஜானகிராமனின் ‘அம்மாவந்தாள்’ படித்த பாதிப்பில் அவருடைய நூல்களைத் தேடினேன். அப்படிக் கிடைத்தது. ‘கொட்டுமேளம்’ என்ற தொகுப்பு. அதில் ஒரு கதை. கோடைவிடுமுறைக்கு மாமா வீட்டிற்குச் சென்றிருந்த பையனை அப்பா அழைத்துவரப்போகிறார். பையனை அழைத்துக்கொண்டு வருகிறார். ரயில் ஏறுமுன் பையன் மாமாவையே பார்க்கிறான். மாமா சிறுவன் பார்ப்பதைப் பாராததுபோல் நகர்ந்துபோய் வேறு பக்கம் பார்க்கிறான். மாமாவிடம் எதையோ கேட்கத் தவிக்கிறான் சிறுவன். ரயில் ஏறும்வரை அந்த சந்தர்ப்பத்தை மாமா தவிர்த்துவிடுகிறான். அவன் ஒரு சைக்கிள் வாங்கித் தருவதாக உறுதி அளித்திருந்தவன். அதனை நம்பி, ரயில் ஏறும்வரை மாமாவிடமிருந்து கிடைக்கும் என ஏங்குகிறான். இறுதியில் கிடைக்கவில்லை. அப்பாவிடம் சொல்கிறான். நான் வாங்கித்தருகிறேன் என்கிறார். நீ எப்படி வாங்கித் தரமுடியும்? நீ மாதம் நூறு ரூபாய் சம்பளந்தானே வாங்குகிறாய். மாமா 300 ரூபாயல்லவா வாங்குகிறார் என்கிறான் பையன். அப்படியா சொன்னான் என அப்பா கேட்கிறார். இந்த சமயத்தில் ஆரஞ்சுபழம் ஆப்பிள்பழம் விற்றுவருவதைப் பார்த்து வாங்கித் தரச் சொல்கிறாள். அப்பா பழங்கள் வாங்கித் தருகிறார். வீட்டிற்குச் சென்றதும் அம்மாவோடு சாப்பிடலாம் எனகூறுகிறார். ரயில் புறப்படுகிறது.

இடையில் விழுப்புரத்திலோ எங்கோ வண்டி நிற்கிறது. ஆரஞ்சுபழம் சாப்பிடலாமா என்கிறான் பையன். அப்பா அப்புறம் சாப்பிடலாம் என்கிறார். ஒரு அம்மாள் 13 வயது நிரம்பிய ஒரு ஏழைப்பெண்ணுடன் ஏறுகிறாள். இவர்களுக்கிடையே விசாரிப்பு நிகழ்கிறது. அந்த சிறு பெண்ணின் அம்மா விதவை. பெரிய வீடுகளில் பத்துபாத்திரம் தேய்த்து வயிற்றைக் கழுவுபவள். இந்த சிறுபெண் டெல்லியில் இந்த அம்மாளின் தெரிந்த குடும்பத்தில் குழந்தையைப் பராமரிக்கச் சொல்வதாக கூறுகிறாள். இதுவே ஒரு குழந்தை. இது ஒரு குழந்தையைத் தூக்கிப் பராமரிக்கப்போகிறதா என்று பையனின் தகப்பனார் வருந்துகிறார். பெரியவீட்டில் அண்டி இருந்தால் இவளுக்குப் பின்னாளில் உதவியாக இருக்கும் என்று அந்த அம்மாள் சொல்கிறாள். ரயில் ஆட்டத்தில் இவரின் பையன் தூங்கிவிடுகிறான். திருச்சி நெருங்க களேபரத்தில் சிறுவன் விழித்துக் கொள்கிறான். திருச்சி ஸ்டேசன் நெருங்க என்ன நினைத்தாரோ பையனின் அப்பா தன்னிடமிருந்த 100 ரூபாயை அந்த சிறுமிக்குத் தந்து ஆசிர்வதிக்கிறார். திருச்சியில் அவர்கள் இறங்கிக் கொள்கிறார்கள். திடுக்கென சிறுவன் தன் அப்பாவிடம் “அப்பா இந்த ஆரஞ்சு ஆப்பிள் பழந்தை அந்த அக்காவுக்குத் தரட்டுமா” என்று கேட்கிறான். சரியென தலையாட்டுகிறார். குடுகுடுவென ஓடிப்போய் அந்தப் பழங்களைக் கொடுத்துவிட்டு வருகிறான். அப்பாவிற்கு மட்டும் சிலிர்க்கவில்லை. படித்த எனக்கும்தான். கதையின் தலைப்பு ‘சிலிர்ப்பு’. என் வாழ்வில் மறக்காத தலைப்பு. இந்த ரயில்காட்சி பல நாட்கள் எனக்குத் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது. இப்படியொரு உன்னத தருணத்தை அதற்கு முன் வாசிப்பில் அடைந்ததே இல்லை. இந்தக் கதையைப் பின்னாட்களில் நான் சொல்லாத இடமில்லை. 1991-ல் சுந்தரராமசாமியைச் சந்தித்தேன். அவருடைய வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்தேன். அவர் என்னென்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டார். படித்திருந்ததைச் சொன்னேன். கொட்டுமேளத்தில் எனக்கு ‘சிலிர்ப்பு’ கதையும் ‘தவம்’ கதையும் மிகவும் பிடித்தகதைகள் என்றேன். சு.ரா. சொன்னார். தி.ஜா.வின் ‘கொட்டுமேளம்’ தொகுப்பு மிகச்சிறந்த தொகுப்பு. அதில் அந்த ‘சிலிர்ப்பு’ கதை தமிழ்ச்சிறுகதையின் உச்சம் என்றார். ஏழாண்டுகளுக்கு முன் என்னை ஒருவித உன்னத எழுச்சிக்கு இட்டுச்சென்ற கதைதான் சிறந்த கதையா என்று அன்று ஆச்சரியப்பட்டேன். என்னை பாதித்தக் கதைதான் இவர்களையும் பாதித்திருக்கிறது. என்னவிதமான வாசக பொருத்தப்பாடு! இந்த இலக்கிய அனுபவம் பல ஆண்டுகளுக்கு முன்னமே சு.ரா.விற்குக்கிடைத்திருக்கிறதே. நல்ல கதை அல்லது சிறந்த கதை என்பதுதான் என்ன? வாசகனை தன் அந்தராத்மாவோடு பேசவிடுவது? பாதிப்பிலிருந்து மீளாது வைத்திருப்பது? நாம் காணாததை காண வைப்பது? எல்லாம் கலந்த கலைவெளிப்பாடுதான் கதையோ! வாசகனுள் புதிதான மனவெழுச்சியை உண்டாக்கும் கதைகளை மிகச்சிறந்த கதைகள் எனலாமோ!

ஒரு தொகுப்பின் தலைப்பு வித்தியாசமாக இருந்தது. அது ‘பச்சைக்கனவு’ ஆசிரியர் பெயர் அப்போது முக்கியமாகப்படவில்லை. அந்தத் தொகுப்பில் பல கதைகள் பிடித்திருந்தன. சிறுவயதில் கண்பார்வை போனவனின் மனக் கற்பனையில் சொல்லப்படும் இடங்கள் எல்லாம் பச்சையாகத் தெரிவதாக ஒரு கற்பனை அவனுக்கு வரும். பார்வை போன அன்று அவன் பார்த்தது பச்சை. பேச்சுக்களிலும், சொற்களிலும், தட்டுத்தடுமாறி செல்லும் இடங்களிலும் அந்தப் பச்சை வந்துவிடும். கதையின் காரணகாரியங்கள் உறவுகள் மறந்துவிட்டன என்றாலும் ஊமைப் பெண்ணுக்கும் இவனுக்கும் குளத்தின் அருகில் தனிமையில் உறவு ஏற்பட்டதும், அவள் கர்ப்பமாவதும், வெளியே சொல்ல முடியாமல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதும் என் நினைவிலிருந்து மறையவில்லை. வித்தியாசமான கற்பனைக்குள் வித்தியாசமான ஒரு உறவு நெருக்கடியையும் சொல்லியிருந்த ‘பச்சை கனவு’ மிகவும் பிடித்திருந்தது. அதில் புதைந்திருந்த சொல்ல முடியாத அப்பெண்ணின் துயரம் என்னை என்னவோ செய்தது. ஏன் இப்படியொரு முடிவு? எனக்கு அந்த வயதில் பதில் தெரியவில்லை. எழுதியது லா.ச.ராமாமிருதம். க.நா.சு. ‘பச்சைக்கனவு’ லா.ச.ரா.வின் சாதனைக்கதை என குறிப்பிடத்தைப் பின்னாளில் படித்தேன். சுந்தரராமசாமியின் பேச்சிலும் கேட்டிருக்கிறேன். இந்தக் கதையைப் படித்தப்பின் நானும் ஒரு கதையெழுத விரும்பி போனவை எடுத்தேன். ‘பச்சைக்கனவு’ கற்பனையே திரும்பி எழுந்தது. விமர்சகர்களின் கட்டுரைகளைப் படிக்கும் ஒரு பக்குவம் வந்தபின் ஒன்றை அறியமுடிந்தது. புத்தம் புதிய கற்பனை. இதுவரை சொல்லப்படாத பிரச்சனையைப் படைப்பாளி வெற்றிகரமாக கையாண்டிருக்கும் விதம் ஒரு முதல்தர கதையாக உயர்வதை இனம் கண்டிருக்கின்றனர். என்னை பாதித்த கதைகள் மிகச்சிறந்த கதைகளாக என் மன அடுக்கில் அமர்ந்தன. பல ஆண்டுகளுக்கு முன்னமே விமர்சகர்கள் அவற்றைச் சிறந்த கதைகளாக அடையாளப்படுத்தியிருப்பது எனது வாசக அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிந்தது. எது நல்ல கதை அல்லது சிறந்த கதை என என் மனம் தேர்வுகொள்வதற்கு ஆற்றல் இருப்பதாக நம்பினேன். ‘பல்லக்குத் தூக்கிகள்’ கதையைப் படித்தபோது எழுதினால் இப்படியொரு கதையை எழுத வேண்டும் என்று ஆசை தோன்றியதுண்டு. விமர்சகர்களின் சிபாரிசுகள் வழியாக இக்கதைகளை நான் கண்டடையாமல் என் மனம்போன போக்கில் வாசிக்கக் கிடைத்த நூல்களின் வழி இம்மாதிரியான ஒரு வாசக அனுபவத்தைப் பெற்றேன். அவற்றை இலக்கிய முன்னோடிகள் சிறந்த கதைகளென சொல்லியிருந்ததை கண்டபோது எனக்குப் பெருமிதமாக இருந்தது.

 

இளங்கலை முதலாமாண்டு சேர்ந்த புதிதிலேயே ஜெயகாந்தனின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். ஓராண்டிற்குள்ளாகவே 60. 70 கதைகள் படித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ‘பிணக்கு’ ‘சக்கரங்கள் நிற்பதில்லை’ ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ ‘ஒரு பகல்நேர பாசெஞ்சர் வண்டியில்’ ‘நான் இருக்கிறேன்’ ‘சிலுவை’ ‘நிக்கி’ ‘தேவன் வருவாரா’ ‘மௌனம் ஒரு பாஷை’ ‘பூவாங்கலையோ பூ’ ‘அடல்ஸ் ஒன்லி’ ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்’ ‘புதுச்செருப்பு கடிக்கும்’ ‘அந்தரங்கம் புனிதமானது’ என பல கதைகள் மறக்காமல் இருக்கின்றன.

பாலியல் தொழிலில் புதிதாக இறங்கிய ஒரு ஏழை குடும்பத்துப்பெண். வறுமையால் உழன்றவள். கணவனால் கைவிடப்பட்டவள். அந்தப் பெண்ணை இரு நண்பர்கள் உல்லாசமாக இருக்க காரில் அழைத்துச் செல்கின்றனர். அவளோடு ஒருவன் உல்லாசமாக இருக்கிறான். அந்த ஏழைப் பெண்ணுக்கு அவன் ஒரு வாக்குறுதி தருகிறான். உன்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே நீ அமைதியாக இருக்கலாம் என்கிறான். அவளுக்கு ஒரு நிம்மதி பிறக்கிறது. நாளை, இன்று கண்ட அதே கடற்கரை சாலையில் நிற்கும்படி சொல்லிப்பிரிகின்றனர். மறுநாள் அதே இடத்தில் நடுவயதைத் தாண்டிய அந்த மனிதன் அழைத்துப்போக வருவான் என்று காத்திருக்கிறாள். நேரம் போய்க் கொண்டே இருக்கிறது. வருவேன் என்று சொன்ன அந்த மனிதன் வராமலே போய்விடுகிறான். இவள் காத்திருந்து காத்திருந்து ஏமாறும் தருணம் என்னை என்னவோ செய்தது. அந்த இடத்திற்குப் போனால் அவள் நின்று கொண்டிருப்பாளோ என்று கூடத் தோன்றியது. கதையின் தலைப்பு கூட மறந்துவிட்டது. கதையின் பல்வேறு சம்பவங்கள் மறைந்துவிட்டாலும் அவளின் காத்திருப்பு மறையவே இல்லை. அவளுக்கு நேர்ந்த ஏமாற்றம் என் இளம்வயதிற்கு வேதனையாக இருந்தது. முக்கியமாக அந்தப் பெண்ணின் வறுமை அவனை இவ்விதம் தள்ளியதை மறக்கமுடியவில்லை. க.நா.சு.வோ, சு.ரா.வோ, வெங்கட்சாமிநாதனோ, இன்னும் பிறரோ இக்கதை குறித்து ஒன்றும் உயர்வாக சொல்லியிருக்கவில்லை. மிகச்சிறந்த கதையாக எனக்குத் தோன்றிய இக்கதை குறித்து முன்னோடிகள் ஒன்றும் சொல்லாததால் சிறப்பான கதை இல்லையோ? எனது வாசக அனுபவம் சிறந்த கதை இது என அறியக்கூடிய திறம் அற்றதோ என்று நினைத்திருக்கிறேன். ரொம்ப காலம் கழித்து ஜெயமோகன் ‘ஜெயகாந்தன் எழுதிய கதைகளிலே ஆகச்சிறந்த கதை இந்த ‘எங்கோ யாரோ யாருக்காகவோ?’ என்ற கதை என்று எழுதியிருந்தார். அன்று அதைப்படித்ததும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பிரபஞ்சனின் ‘நேற்று மனிதர்கள்’ என்ற தொகுப்பை 1989- வாக்கில் படித்தேன். அதில் ஒரு கதை ‘எனக்கும் தெரியும்’ என்பது ஒருவனுக்குப் பெண் தேடுகிறார்கள். அவர்களின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் இருக்கிறாள். அவனைப் பெண் பார்க்கச் செல்கின்றனர். ஏழ்மை தெரிகிறது. மணமகன் வீட்டார் எதிர்பார்த்த வசதி வாய்ப்பு இல்லை. எனவே அந்தப் பெண்ணை வேண்டாம் என்று அம்மா முடிவெடுக்கிறாள். நமக்காக காத்திருக்க வேண்டாம் என அந்தப் பெண்ணின் தகப்பனாரிடம் சொல்லவிடு என்று மகனை அனுப்புகிறாள். மகன் அம்மா சொன்ன ‘இப்போதைக்கு நேரம் சரியில்லை. திருமணம் வேண்டாம் என நினைக்கிறோம். நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என சொல்ல வருகிறான். வீட்டில் அப்பெண்ணின் அப்பா இல்லை. ஊருக்குள் அவர் போயிருப்பதைச் சொல்லி வரவேற்று அமற வைக்கிறாள். வீட்டு வேலையில் இருந்ததால் எந்தவித அலங்காரமும் இல்லாமல் வந்து நிற்கிறாள். 11ஆம் வகுப்புவரை படித்தவள். மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பமின்மையைப் புரிந்திருக்கிறாள். பெண் பார்த்துப் போனவர்கள் ஏமாற்றிய அனுபவம் அவளுக்குண்டு. பழையசீலை, எளிய முகம், சிறியவீடு, செம்மையாக வாழமுடியும் என்ற அவளின் பேச்சு என நீள்கிறது. காப்பிப் போட்டுத் தருகிறாள். அப்பா வருகிறார். “மாமா திருமணத்த எப்ப வச்சுக்கிடலாமன்னு அம்மா நாள் பார்க்கச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டுச் சூழல்காட்டிய ஏழ்மை இப்போதும் தெரிகிறது. ஏமாற்றங்களால் சோர்வுற்ற அப்பெண்ணின் சோகமுகம் தெரிகிறது. அவளின் கம்பீரம் தெரிகிறது. அவனின் புதிய முடிவு என்னை நிமிர்ந்து அமரச்செய்தது. இந்தக்கதை படித்ததும் ரொம்பப் பிடித்தது. மனநிறைவான முடிவு என்றாலும் அவளின் கோலம் என்னைத் தொந்தரவு செய்தது. இது சிறந்த கதை என்று எனக்குத் தோன்றினாலும் சிபாரிசு செய்கிற அளவு நான் கதா ஆசிரியனோ விமர்சகனோ அல்லவே. படிக்கிற மாணவன். ரொம்ப பிந்தி பெருமாள் முருகன் தொகுத்த பிரபஞ்சனின் தேர்ந்தெடுத்தக் கதைகளான ‘சித்தன் போக்கு’ நூலின் முன்னுரை இந்தக் கதையைக் ‘கவித்துவம் கடிவந்த சிறந்த கதை’ என்று எழுதியிருந்தார். மற்றக் கதைகளை விட்டுவிட்டு இக்கதைக்கு இப்படியான தொடரால் சிறப்பு செய்திருந்தது நிறைவாக இருந்தது.

எங்கள் ஊருக்கு புதிதாக ஒரு கிளை நூலகம் வந்தது. சில்லமரத்துப்பட்டி நூலகத்திலிருந்து மாதத்திற்கு 100 புத்தகங்கள் வரும். அடுத்தமாதம் இந்த 100 புத்தகங்களை எடுத்துக்கொண்டு வேறு 100 புத்தகங்கள் படிக்க அனுப்புவார்கள். அப்படி வந்த புத்தகங்களில் ஒன்று ஆ.மாதவனின் ‘கடைத்தெருகதைகள்’ அதில் 26 கதைகளுக்கு மேல் இருந்ததாக நினைவு. அதில் ஒரு கதை ‘காளை.’ ஒரு செட்டியாருக்கு இரண்டு பெண்மக்கள். ஒரு பெண் படித்துவிட்டு வீட்டில் இருப்பவள். அமைதியானவள். குடும்பப்பற்று மிக்கவள். இளையவள் கல்லூரி படிப்பில் சேர்ந்திருப்பவள். சுதந்திரமாகத் திரிபவள். அப்பாவிற்கு இளையபெண் மீது அச்சம். பெயரைக் கெடுத்து வைத்து விடுவாளோ என்று. மளிகை கடையை வைத்திருக்கும் அவர் பெரிய மகள் மீது பெருமிதம் கொள்கிறார். அவள் அம்மையைப் போல நற்பெயர் எடுப்பவள் என நினைக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின் மரச்சாமான்கள் செய்யும் ஆசாரிவீடு. சுற்றுச்சுவர்  விழுந்ததால் அந்த வீட்டு கொட்டம் தெரியும். அந்த ஆசாரிவீட்டின் வாலிபன் ஒரு பொலிகாளை வைத்திருக்கிறான். பசுக்ககளக் காளைக்குச் சேர்க்க வருவதை இவள் பார்க்க நேர்வதுண்டு. கடைக்கும் கல்லூரிக்கும் அப்பா, தங்கை சென்று வருவதால் இவள் தனிமையில் இருப்பது வழக்கம். அந்த வாலிபன் மீது அச்சம் கலந்த ஈர்ப்பு இவளுக்கு ஏற்படுகிறது. அவன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எல்லை தாண்டுகிறான். கடைசியில் அப்பாவிற்கு விவகாரம் தெரியவந்து தலைகுனிவு ஏற்படுத்துகிறது. இது கதை.

இந்தக் கதையைப் படித்து வரும்போது அந்த மூத்த மகளின் அமைதிக்கும் கண்ணியத்திற்கும் பங்கம் விளையக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் அதுதான் நேர்கிறது. மனிதர்களின் இச்சையைத் தூண்டிவிடும் சுழலாக அந்தத் தனிமை இருந்ததைக் கதையின்வழி உணர்ந்தேன். புறஉலகின் மீதான உறவு இச்சையை மட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதையும் அக்கதை உணர்த்தியது. மனிதர்களைப் பற்றிய அனுமானம் தகரும் என்பதையும் அக்கதை உணர்த்தியது. மாதவன் எழுதிய கதைகளில் மிகச்சிறந்த கதையாக அதுபட்டது. அக்கதை உண்டாக்கிய பதட்டம் இரண்டொரு நாள் தொடர்ந்து தொந்தரவு செய்தது.  அவள் அப்படி வீழ்ந்திருக்க வேண்டாம் என்றுகூட நினைத்தேன். சு.ரா.அத்தொகுப்பிற்கு தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்கள் குறித்து நீண்ட கட்டுரையை முன்னுரையாக எழுதியிருந்தார். அதில் மாதவனின் சிறந்த கதைகள் குறித்து எழுதவில்லை. ஆ.மாதவனின் இலக்கியப்பார்வை குறித்து மட்டும் சொல்லியிருந்தார். ஜெயமோகன் ஆ.மாதவனின் கதைஉலகை ‘தீமை நடமாடும் கதை உலகு’ என விரிவாக எழுதியிருந்தும் இந்தக் கதையை அக்கட்டுரையில் சிறப்பாகக் குறிப்பிடவில்லை. இந்த ‘காளை’ கதை ஒரு கதை போட்டிக்கு அனுப்பி தேர்வு செய்யாமல் விலக்கி வைக்கப்பட்ட கதை. இந்தக் ககதயைப் படித்த தி.ஜானகிராமன் மகத்தான கதை என மாதவனுக்கு கடிதமாக எழுதியிருந்திருக்கிறார். தேர்வு குழுவிற்கு இக்கதை கையாண்ட பாலியல் சிக்கல் பிடிக்காமல் போயிருக்கிறது. தி.ஜா.தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். ஜெயமோகன் ஆ.மாதவன் குறித்து எழுதிய நூலில் இக்கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். மாதவனை இரண்டாண்டுகளுக்கு முன் திருவனந்தபுரத்தில் அவரின் மூத்த மகள் வீட்டில் சந்தித்து உரையாடினேன். அப்போது இக்கதை குறித்து கிலாகித்துச் சொன்னேன். என் இளமைக்கால வாசிப்பனுபவத்தில் ஒரு மைல்கள் என்றேன். அப்போது இதன் சிறப்பை  தி.ஜானகிராமன் கொண்டாடிய கடிதம் ஒன்றே எனக்குப்போதும் என்றார். தி.ஜானகிராமன் எழுதியிருந்த கடிதத்தைப் பல்லாண்டுகள் கழித்து இப்போதுதான் மாதவன் வெளியிட்டிருக்கிறார். இருபத்தைத்தாண்டுகளுக்கு முன் படித்த கதைக்கு இப்படியொரு புகழாரம் வெளியே தெரியாமல் நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஒளிந்தே இருந்திருக்கிறது. தி.ஜா.விடமிருந்து வெளிப்பட்டிருப்பதை இப்போதேனும் அறியமுடிந்ததே என்று ஒரு மனநிறைவு ஏற்பட்டது. ஆக மிகச்சிறந்த கதை 100 ஆண்டுகளுக்குப் பின்னேனும் ஒரு கூர்மையான வாசகனால் அடையாளப் படுத்தப்படும் என்பது மதிப்பிற்குரியதுதான்.

ஆகச்சிறந்த கதை என்பது மானிட இதயத்தை மூர்க்கமாக பாதிப்பது, தொந்தரவு செய்வது, பொய்மைகளை உடைப்பது, கசப்பான உண்மைகளைத் துணிந்து சொல்வது; மரபு பிடிப்புகளால் நம்மை திக்குமுக்கடைச் செய்வது; நிர்தாட்சண்யம் அற்றது; மற்றவர் பார்க்காத உலகத்தை முதன் முதல் பார்க்க வைப்பது; அறிய மறுக்கிற அடுத்தப்பக்கத்து உண்மையை முன் வைப்பது; வாழ்வின் கவித்துவத் தருணங்களை இனம் காட்டுவது. என சில வழிகளில் சொல்லிப்பார்க்கலாம்.

இராஜேந்திரச் சோழனின் ‘எட்டுக்கதைகள்’ தொகுதியை எங்கு எடுத்துப் படித்தேன் என்று உடனடியாக நினைவிற்கு வரவில்லை. வாலிப பருவத்து இளைஞனின் உணர்ச்சியனுபவங்கள் வேறு பரிமாணம் கொள்ளும் தருணங்களை லாகவமாக எழுதியிருப்பார். அவரின் ஒரு கதை ‘புற்றில் உறையும் பாம்புகள்’ ஒரு குடியானவள் வாசல் படியில் அமர்ந்திருக்கிறாள். எதிர்புறத்தில் தள்ளியிருக்கும் வீட்டில் ஒரு இளைஞன் இவளைப் பார்க்கிறான். இவளுடைய கணவன், வீட்டு முற்றத்துப் படலை சரிசெய்வதில் ஈடுபட்டிருக்கிறான். இவள் அந்த இளைஞனை வசைபாடுகிறாள். ‘நான் என்ன அப்படிப்பட்டவளா? எப்படி பார்க்குறான் பாரு. அப்படியே கடிச்சுத் திங்கிறவனாட்டம் ஆம்பள இத ஏன்னு கேட்கவேணாமா? அவனுக்கு பயம்விட்டுப்போச்சு…’ இப்படி ஒற்றைக்குரலில் அவளின் மனவெளிப்பாடுகள் எதிர்வீட்டு இளைஞன் மீது விமர்சனமாக பொழிகிறது. அவனுக்குக் கேட்கிறதோ இல்லையோ கணவனுக்குக் கேட்கிறது. கணவன் கொட்டடியைச் சரிசெய்கிறான். மாட்டிற்குத் தண்ணீர் காட்டுகிறான். தீவனம் போடுகிறான். படியில் அமர்ந்தவண்ணம் எதிர்வீட்டு இளைஞனை வசைபாடுவதை மட்டும் அவள் நிறுத்தவில்லை. நேரமும் போகிறது. இந்த ஏசலை பொருட்படுத்தாது வேலை செய்து கொண்டிருந்த கணவனிடம் ‘நீ ஒரு ஆம்பள. இங்கேயே அவன் பாக்குறானே தட்டவேணமா’ என்கிறாள். காலையிலிருந்து அவள் பேசிய பேச்சுக்களுக்கு ஒரே ஒரு பதில் சொல்கிறான். ‘நீ பெரிய உத்தா பத்தினிதான் மூடு வாயை’ என்கிறான். கதை அத்தோடு முடிகிறது. உள் மனசின் குரலை அது எதிர்மாறலாக வெளிப்பட்ட தொனியை போகிற போக்கில் இனம் காட்டிய கதை அது. கதை முடிவின் திருப்பம் மிகச்சரியாக – மனித மனத்தினை எடைபோடும் விதமாக எழுதப்பட்ட மிகச்சிறந்த கதை அது. முடிவு தந்த அடி எனக்கு ரொம்ப புதுசாக இருந்தது. கணவன் ஏன் அப்படி ஒற்றைவரியில்  சொன்னான் என்று திரும்பத் திரும்ப யோசிக்க வைத்தது. எல்லாவற்றையும் கணவன் புரிந்துகொண்டுதான் இருக்கிறான். மனைவியின் இந்த ஆர்ப்பாட்டம் எல்லை மீறியது. உள்ளார்ந்த காமத்தின் மாற்று வெளிப்பாடு என்பதை வெகு இயல்பாக அவன் புரிந்துகொண்டுதான் அவள் வாயை அடைகிறான். பின்பு இந்தக் கதையைப் பல்வேறு தொகுப்புகதைகளில் சிறந்த கதையாக சேர்க்கப்பட்டிருப்பதைக் காணநேரிட்டது. வாசகனாக எனக்கேற்பட்ட திடுக் அனுபவம் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என நினைத்துக் கொண்டேன். மனதிற்கு மிக மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் தகைமையை எக்கதை பெற்றிருக்கிறதோ அக்கதையை மிகச்சிறந்த கதையாக கொள்ளலாமா? மற்றவர்கள் காணாத – கண்டிருந்தும் நுட்பத்தை உணரதா இடத்தை படைப்பாளி கண்டு எழுதும்போது அது ஆகச்சிறந்த கதையாக மாறுவதற்கான சாத்தியம் இருப்பதாக நம்புகிறேன். எழுத்தாளரின் பார்வை, வாழ்க்கை அனுபவம் பண்பாட்டு நுட்பம் சேர்ந்து உருவாக்குகிறது. ஒரு கதையை எப்படிச் சொல்லவேண்டும் என்ற எழுத்தாளனின் மனப்பக்குவம் கலையாக மாற்றுகிறது. அந்தப் பக்குவத்தை மீட்டிக்கொள்ளாத எழுத்தாளனின் கதைகள் சோடைபோகின்றன.

+2 தேர்வு எழுதிவிட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு மாமா முறைகொண்ட முருகவேல் சில்லமரத்துப் பட்டிக்காரர். எனது அண்ணனின் வகுப்புத்தோழர். கருதடிப்பு இயந்திரத்தை முதன்முதலாக எங்கள் கிராமத்திற்குக் கொண்டு வந்தார். சில்லமரத்துப்பட்டி நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவார். அவர் படிக்கக் கொடுத்த கண்ணதாசனின் கவிதைத் தொகு – 4 இப்போதும் என்னிடம் இருக்கிறது. அவர் கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ சிறுகதைத் தொகுதியைப் படிக்கக் கொடுத்தார். அழகிரிசாமியின் நடை ஈர்ப்பிற்குரியதல்ல. ஆனால் ‘அன்பளிப்பு’ கதை என்னை ஈர்த்தது.

கதை சொல்லி ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிபவர். தெருக்குழந்தைகள் இவரைக் கண்டால் மாமா மாமா ஒன்று ஒன்றுகூடி வீட்டிற்கு வந்து கும்மரிச்சம் போடுவார்கள். அலுவலகத்திலிருந்து வந்ததும் என்ன புத்தகங்கள் எங்களுக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள் என பையைத் துழாவுவார்கள். உரிமையுடன் மேஜையில் அடிக்கிவைக்கப்பட்ட புத்தகங்களை கலைத்துப்போடுவார்கள். ரொம்ப உரிமை எடுத்து புத்தகங்களுக்காக அவருடன் சண்டை போடுவார்கள். புத்தக அடுக்கை சில சமயம் இழுத்துப் போட்டுவிடுவார்கள். அவ்வப்போது சில குழந்தைகளுக்கு நூல்களை எடுத்து அன்பளிப்பு என்று எழுதித் தருவார். சிலருக்கு முந்தின நாள் புத்தகங்கள் கிடைத்திருக்கும். சிலருக்கு மறுநாள் கிடைக்கும். இந்தக் குழந்தைகளைவிட சற்று வயதில் மூத்த ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பையன் சாரங்கன். இந்த குழந்தைகளிடம் அவர் செலுத்தும் அன்பைப் பெற விரும்புகிறான். அவரின் புத்தக அடுக்கில் மேலை நாட்டுகவியின் ஒரு கவிதை தொகுப்பை இவன் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறான். ஒரு முறை அதை படிக்கக்கூட கேட்கிறான். அவர் இந்த புத்தகத்தைப் படிக்கிறவயது உனக்கில்லை. சில ஆண்டுகள் கழித்து தருகிறேன் என்கிறார். அவனுக்கு அதில் ஒரு ஏமாற்றம். இவனால் அந்த குழந்தைகள்போல குதித்து மல்லுக்கட்டி புத்தகங்களைப் பெறவும் முடிவதில்லை. அவன் ஒரு சமயம் தன் வீட்டிற்கு அழைக்கிறான். ஒரு ஞாயிற்றுக்கிழமை வருவதாக கூறுகிறார். சில ஞாயிற்றுக்கிழமை போகமுடியாமல் போகிறது. பையன் தெரிந்தவன். பையனுடைய குடும்பத்தினர் தெரியாதவர்கள். தெரியாதவர் வீட்டிற்கு எப்படி போவது என்று தயங்குகிறார். அவனுடைய தொந்தரவு தாங்காமல் ஒரு நாள் செல்கிறார். அவன் ஒரு புதிய டைரியை எடுத்துக் கொடுத்து ‘எழுதுங்கள்’ அன்புடன் சாரங்கனுக்கு என்று சொல்கிறான். அந்த நொடியில் ஏற்பட்ட பரவசம் நினைவிருக்கிறது. சொல்லமுடியாத துயரமா? மனிதன் மீது அளவுகடந்த நேசமா? தவறான கணிப்பா? அவனும் ஒரு குழந்தைதானா? நானும் உங்கள் மானசீகமான கூட்டாளி என்ற வெளிப்பாடா? குழந்தைகள் சூழ்ந்த அற்புத உலகில் நானும் ஒருவன் என்பதுபோல் உணர்வு. என்னென்னவோ உணர்வுகள் அந்தக் கதை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. சொல்லத் தெரியாத பேரன்பு அந்த கணத்தில் துடித்தது. நான் முதன்முதல் படித்த கதை தொகுப்பு இதுதான். அக்கதையில் குழந்தைகளின் கொட்டமும் புத்தக அடுக்கு சரிந்து விழுந்தபோது குழந்தைகளிடம் ஏற்பட்ட பயமும் அது தெரியாமலிருக்க நழுவுதலும், கதை சொல்லியின் பொய்யான மௌனகோபமும் அம்மாவின் கண்டிப்பும் எல்லாம் ஏதோ நம் வீட்டில் அப்படியே நடப்பது போன்ற அனுபவத்தைத் தந்தது. மறக்க முடியாத கதையாக மாறியது. இளம்வயதும் அந்தக் கதையும் பிரிக்கமுடியாத உணர்வில் இணைந்திருந்தது. திரும்பத் திரும்ப சாரங்கனின் தத்தளிப்பு வந்து தாக்கியது. அவருக்கு இந்த மறதி – கவனமின்மை எப்படி ஏற்பட்டது? ஏற்பட்டிருக்கக்கூடாதே என மனம் அதைச்சுற்றியே வந்தது படித்த அந்த நாள் முழுதும். ஒரு இலக்கியமானவனாக உருவானபின் எழுத்தாளர்கள் பலர் இந்தக் கதையை சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பதை படித்தபோது இக்கதையைப் படித்த மதிய நேரம் நினைவிற்கு வந்தது. நகுலன் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். க.நா.சு. கு.அழகிரிசாமியின் கதைகளைப் படித்து ‘ஐயோ இப்படி எழுதியிருக்கிறாரே’ என்று சொன்ன பிரசித்தமான வாசகம் இப்போது நினைவிற்கு வருகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேற்குத் தெருவில் விரித்து வைத்த புத்தகக் கடையிலிருந்து ஜி.நாகராஜனின் ‘கண்டதும் கேட்டதும்’ தொகுப்பு கிடைத்தது. அதில் ஒரு கதை. சேரியில் வாழும் ஒரு போக்கிரியின் கதை. அப்படியொரு வாழ்க்கையை அதற்குமுன் வேறு தொகுப்புகளில் படித்திருக்கவில்லை. பசியும் காமமும் வறுமையும் சிறு பிராயத்திலிருந்து துரத்தி கொலையில் போய் முடிகிற கதை. மிக உக்கிரமாக இருந்தது. அவன் வாழ்வோடு வரும் மரமேறும் கனவுக்காட்சி அந்த வயதில் ஒரு மயக்கமான நிலையைக் கொடுத்தது. ஜெயகாந்தன் சேரி மக்களின் வாழவினிலே மேன்மையை உயர்த்திப் பிடித்தபோது, அப்படியான மேன்மையை அடையமுடியாத எதிர்திசையில் ஓடும் கோரமான வாழ்வை சொன்னார் என்பது இப்போதைய என் பார்வை. சேரியைப் பார்த்த லட்சணம் இதுதானா? என்று ஜெயகாந்தனைப் பார்த்து கேட்பதுபோல கூட இருக்கும் ‘யாரோ முட்டாள் சொன்ன கதை.’ இப்படியான ஒப்பீடு அன்று இல்லாமலே கீழ் உலகின் வாழ்வை அக்கதை வழி புதிதாகக் கண்டது மறக்கமுடியாததாக இருந்தது. சி.மோகன் தொகுத்து காலச்சுவடு போட்ட ஜி.நாகராஜனின் முழு படைப்பினை பத்தாண்டுகளுக்கு முன் மீண்டும் படித்தேன். அதில் ஜி.நாகராஜன் தன் கதைகள் குறித்த மதிப்பீட்டில் இந்த ஒரு கதைதான் கலையழகோடு முழுமையாகக்கூடி வந்த கதை என்று கூறியிருப்பதைப் படிக்கக்கிட்டியது.

சா.கந்தசாமி தொகுத்த ‘சிறந்த தமிழ்ச்சிறுகதைகள்’, என்.பி.டி. தேர்ந்தெடுத்துப் போட்ட புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் கதைகள் இக்காலத்தில் வாசித்தவை. அவை ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட கதைகள். நானாகக் கண்டடைந்த கதைகள் அல்ல அவைகள். என்பதால் அத்தொகுப்பிலிருந்து இங்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை என விடுகிறேன். இன்னும் சிலரின் கதைதொகுப்புகளைப் படித்தேன். அத்தொகுப்புகளில் அவ்வாசிரியர்கள் காத்திரமான கதையொன்றை எழுதியிருக்கவில்லை என்பதால் பெயர் சொல்லாமல் விடுகிறேன்.

இந்த வாசிப்பின் நீட்சியில் சுந்தரராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’, சி.சு.செல்லப்பாவின் ‘வெள்ளை’, அசோகமித்திரனின் ‘விமோச்சனம்’, கந்தர்வனின் ‘ஒவ்வொரு பூவிற்கும் கீழே’ பா.செயப்பிரகாசத்தின் ‘இன்னொரு ஜேருசலம்’ கோணங்கியின் ‘கொல்லனின் ஆறு பெண்மக்கள்’ ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’ என்று பழைய தொகுப்பினையும் புத்தம் புதிய தொகுப்புகளையும் படித்தேன். அப்போது ஒரு இலக்கிய மாணவனாக ஓரளவு உருமாறிவிட்டேன். இந்தக் கட்டத்தில் என்னை பாதித்த சில கதைகளைத் தொட்டு மட்டும் காட்டுகிறேன்.

அசோகமித்திரனின் ‘காத்திருத்தல்’ கதை என்னை வெகுவாக பாதித்தது. 1993-ல் எம்.எம்.டி.ஏ. காலனியில் என் சிற்றப்பாவின் மகன் வீட்டில் தங்கியிருந்தேன். கூலிப்படை வந்து ஒருவரைத் தாக்கியது. ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டுக்குள் புகுந்து அடைத்துக் கொண்டார். அன்று பகலெல்லாம் அந்த விடலைப் பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர் இருட்டும்வரை வெளியே வரவில்லை. அக்காட்சி அசோகமித்திரன் ‘காத்திருத்தல்’ கதையில் இன்னொரு முகம் போல இருந்தது. இந்தக் கதையை அசோகமித்திரனின் நல்ல கதைகளுள் ஒன்று என்று ஜெயமோகன் பின்னாளில் சொல்லியிருக்கிறார். செல்லப்பாவின் ‘பெண்டிழந்தான்’ கதையை யாரேனும் சிறந்த கதையாக சொல்லியிருக்கிறார்களா என கட்டுரைகளில் தேடியிருக்கிறேன். நீண்டநாள் அப்படியாரும் சொல்லவில்லை. தேவிபாரதி செல்லப்பா பற்றிய கட்டுரையில் அக்கதையை சிறந்த கதையாகக் குறிப்பிட்டிருந்ததைப் படித்தபோது நிம்மதி ஏற்பட்டது. அதேபோல பா.செயப்பிரகாசத்தின் கதையான ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ என்னை ஆட்டிக்குலைத்த படைப்பு. அதனை க.நா.சு.வோ, சு.ரா.வோ. ஜெயமோகனோ குறிப்பிட்டிருக்கவில்லை. கோணங்கி அதனை சிறந்த கதையாகக் குறிப்பிட்டதை சில ஆண்டுகளுக்கு முன் படித்தபோது என் மனசில் உருவாகியிருந்த இலக்கியப் பெருமூச்சுக்கு வடிகால் கிடைத்தது.

இக்கதைகளை ஆகக்சிறந்த கதைகளாக என் மனம் தேர்ந்ததற்கு எனக்கு வாய்த்த முரட்டுத்தனமான வாழ்க்கையும் அக்கதைகளில் கனன்று எரிந்த வாழ்வின் உக்கிரமும்தான். பதினெட்டு வயதுவரை புத்தகவாசிப்பு என்ற பழக்கம் துளிகூட இல்லாமல்தான் இலக்கிய மாணவனாகச் சேர்ந்தேன். அங்கும் வழிகாட்டுதலோ தேர்வு சார்ந்த அறிதலோ அற்று தன் போக்கில் மூன்று – நான்காண்டுகளில் படிக்கக் கிடைத்த நூல்களிலிருந்து உருவான மகத்தான இலக்கிய அனுபவம் இது. எனக்கு முன்னமே – நான் பிறக்கும் முன்னமே சிறந்த கதைகளாக நிலை பெற்றிருப்பதை – முன்னோடிகளால் சிறப்பிக்கப்பட்டிருப்பதை அறியாமலே நான் அறிந்த வாசக அனுபவம் இதுதான். எப்படைப்பு என்னை உக்கிரமாக பாதித்ததோ அதுவே ஆகச்சிறந்த கதையாகக் கொண்டேன். அப்படைப்பு பல்வேறு அலைவரிசையில் மேலேந்து வந்திருப்பதை அறிய நேர்ந்தபோது வாசகனாக எனக்கு பெருமகிழ்ச்சி கிட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *