கவிஞர் போலும் சித்தர்

 

 

 

போகன் சங்கர்


 இன்றைய தமிழகக் கருத்துச்சூழலை அதிகம் பாதித்தவர்களை நாம் அறியாமலே இருக்கிறோம் என்று ஒருமுறை நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தில் சொன்னார். ‘அயோத்திதாசரை  நாம் இழந்து பிறகு அகழ்ந்து எடுக்க வேண்டியதாயிற்று. இதே போல ஆபிரஹாம் பண்டிதர் என்று சொன்னால் இன்றும்  கூட பலருக்கு தெரியாது. சிலருக்கு அவர் வெறுமனே தமிழ்  இசை நூல் ஒன்றைக் கொண்டு வந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல தென்ன்னிந்திய சைவ சித்தாந்தக் கழகத்தின் கருத்தியல் பங்களிப்புகள் பற்றி தெரியாமல் இருக்கிறோம். பிரம்ம ஞான சபை என்று தமிழில் அழைக்கபட்ட தியோசபிகல் சொசைட்டியின் பாதிப்புகள் இந்தியா இலங்கை இரண்டு நாடுகளிலும் இன்னமும் உணரப்பட்டுக்கொண்டு இருக்கிறது” என்றார் ”அதே போல சமூக தளத்தில் அய்யா வைகுண்டரின் கருத்துகள் பற்றி இப்போது கூட அவர் சார்ந்த சமூகம் தவிர பெரிய கவனம் எதுவும் இல்லை.”

உண்மை தான். வரலாறு என்பது அன்றைய தேவைகளுக்கேற்ப ஆள்பவராலும் ஆளத்துடிப்பவராலும் உருவாக்கப்படுவது.அவர்களது இலக்குகளுக்கு புறம்பான உதவாத ஊறு செய்யக்கூடிய கருத்தாக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆளுமைகள்  மறக்கப் படுகின்றனர்.

ராமலிங்கம பிள்ளையும் பின்னர் அருள்பிரகாச வள்ளலார் என்றானவருமான வடலூர் மனிதரும் அவ்விதம் ஒருவரே. வடலூரில் பெரிய பொட்டலின் நடுவில் அமைதியாக நிற்கும் சத்திய ஞான சபை என்று அழைக்கப்படும் பிங்க் நிற கட்டிடம் தமிழகத்தில் ஒரு காலத்தில் பெரிய கருத்துப் புயலின் மையமாக இருந்தது என்று சொன்னால் இன்று சிலருக்குச் சிரமமாக இருக்கலாம்.

பத்தொன்பாவது  நூற்றாண்டில் முதலில் சைவ மதத்துக்குள் ஏற்பட்ட ஒரு உள்கலகமாகவும் பிறகு அது பெரிதாகி பொது சமூகத்திலும் நீதிமன்றங்கள் வரை பேசப்பட்ட ஒரு விசயமாகவும் வள்ளலார் குறித்த அருட்பா மருட்பா விவாதம் வெடித்தது. அதன் முழு வரலாற்றையும் தமிழ் ஆய்வாளார் ப சரவணன் ’அருட்பா/மருட்பா’ என்ற நூலாகவும் அந்த நூலுக்கான ஆதாரப் பிரதிகளை  அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு என்ற பெரிய தொகை நூலாகவும் பதிப்பித்துள்ளார். இந்த நூல்கள் தமிழ்ச் சமூகம் எப்படி ஒரு மனிதரின் பால் பிளவுபட்டு நின்றது என்று விரிவாகப்  பேசுகின்றன.

வள்ளலார் ஆரம்பத்தில் மரபார்ந்த சைவ சமயத்துக்குள் நின்று பிறகு அதன்மீதூறவும் நின்றவர். அவர் தன பாடல்களில் ‘சாதி சமய சழக்கை விட்டு ‘மேலேழுமாறு வலியுறுத்துகிறார். இறையை முடிவிலா ஒளி என்கிறார். மனிதன்  சாக வேண்டிய தில்லை என்கிறார்.  அவன் எந்த மதச் சடங்குகளையும் செய்யவேண்டியதில்லை. மிகப்பெரிய தருமம் பிறர்க்கு உணவளித்தலே என்கிறார்.  அவரது சத்திய  ஞான சபையில் இன்றும் அணையா அடுப்பு ஒன்று மூண்டு  மூண்டு  பசித்து வருகிறவருக்கு அன்னம் அளித்து  வருகிறது.

அன்றைய  சமூகத்துக்கு  இரண்டு  அதிர்ச்சியூட்டும்  கருத்துக்கள். மனிதனுக்கு சாதியும் மதமும் தேவையில்லை. மனிதன்  சாக வேண்டியதில்லை !விளைவாக  அவருக்கு  கடும்  எதிர்ப்பு  ஏற்பட்டிருக்கும்  என்பதில் வியப்பில்லை.  எதிர்ப்பு ஈழத்திலிருந்து  ஆறுமாக நாவலர் வடிவத்தில் வந்தது. நாவலர் ஒரு வினோதமான குணங்களின் எரிமலைக் கலவை. முதல்முதலாக தமிழில் விவிலியத்தை மொழிபெயர்த்தவர், தமிழ் நவீன உரை நடையின் தந்தை,மேடைப்பேச்சின் தந்தை,முதல் நவீனத் தமிழ்ப்பதிப்பாளர் என்பதோடு கடுமையான சைவ சமய சனாதனி என்ற முகமும் அவருக்கு உண்டு. பொதுவாக இன்று அவரது கடைசியாகக் குறிப்பிடப்பட்ட முகமே நினைவு கூறப்படுகிறது. அவர் வள்ளலாரைக் கடுமையாக எதிர்த்தார்.வளளாரின் திருமுறைகள் – குறிப்பாக  ஆறாம் திருமுறைக்குப்  பிறகு -இருளின் பாடல்கள் என்று விவரித்தார். தன்னைக்கடவுளாக்கிக் கொண்டு  மற்றவர்களையும்  வழிகெடுக்கும்  பித்தர்  என்று விமர்சித்தார். அவரது  சீடர்கள்  இன்னும் கடுமையாக வசை பொழிந்தனர். மாற்றுவசைகளும் பொழியப்பட்டன. நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றன. ‘விவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு மாற்றி மாற்றி இரு தரப்பினரும் உயிரோடிருப்பவர்க்கு ‘இன்னார் மரணம் அடைந்துவிட்டார். வருந்துகிறோம்’ என்று உத்திரக் கிரியைப் பத்திரிகைகள் அடித்து விநியோகித்தனர். அவர்களது ஒழுக்கக் கேடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இரு தரப்பினரின் குடும்பப் பெண்கள் கூட வசைக்குத் தப்பவில்லை.விஷயம் முற்றியபோது நீதிமன்றங்கள் தலையிட்டுக் கண்டித்ததும் மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக்கொடுத்த வரலாறும் உண்டு.இந்த விவகாரத்தில் ஏறக்குறைய அன்றிருந்த எல்லா தமிழ்ச் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் எதோ  ஒரு  விதத்தில் சம்பந்தமுற்றிருந்தனர் என்பது இன்றறிய  வியப்பாக இருக்கலாம். திருவிக, உவேசா , மறைமலை அடிகள் என்று பட்டியல்  நீள்கிறது.

 

ஒரு தனிமனிதரின் பாடல்கள் ஏனித்தனை பாரதூரமான விளைவுகளை உருவாக்கின என்பதை குறிப்பிடத்தக்க தலித் வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கவுதமன் தனது நூலான ‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ‘என்ற நூலில் விவரிக்கிறார்.அவர் ஏறக்குறைய வள்ளலாரை சாதி சமயத்துக்கு எதிராக எழுந்த முதல் குரல் என்று வகைப்படுத்துகிறார். ஆகவே இந்த கூச்சல் வெறுமனே ஒரு தனிமனிதரின் ஆன்மீகப் பிரமைகள் குறித்தான  கூக்குரல்கள் அல்ல என்று சொல்கிறார். அது ஒரு நீண்ட ஒரு வரலாற்றுக்கண்ணியை  உடைப்பது  தொடர்பானது என்கிறார்.

வள்ளலாரின் ஆறாவது திருமுறைகள் வரை அவர் மரபான சைவமதக் கட்டுக்குள் தான் இருக்கிறார். ‘நீறு அணியாத வீணரைக்’ காணும்போதெல்லாம் மனம் விம்மி விலகியோடிப்போகிறார்.  நடுவில் ஏதோ

நிகழ்கிறது. அகக்காட்சி, அல்லது அவர் செய்த சிவயோகம், மூலிகைகள்… அதன் பிறகு அவர்தான் இறைவனை கண்டு விட்டதாகவே  எண்ணுகிறார். ஒளிவடிவில். விரைவில் தான் சாகா உடலுக்குள் புகப்போவதாகவும் சொல்கிறார்.

உடலைக் காப்பாற்றிக்கொள்வதற்க்கான  அவரது அப்பியாசங்கள்  இதன் பிறகே கடுமை கொள்ள ஆரம்பித்தன. அவரது வரலாற்றை எழுதிய ஊரனடிகள் இவற்றைப் பற்றி விரிவாக விவரிக்கிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொள்வதைக் குறைத்துக் கொண்டு வந்தார். வெந்நீரில் சர்க்கரைதான் அவரது விருப்ப உணவு. குளிர்ந்த நீர் கூடாது என்று அவர் நினைத்தார். குளிப்பதற்கும் அதுவே.உடலில் உள்ள அக்கினி வெளியே சென்றுவிடக் கூடாது என்று அவர் நினைத்தார். இறந்தபிறகு உடலை எரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். உடலைஅழியாது வைத்துக்கொள்ள கல்ப மூலிகைகளை உண்ணுமாறு சொன்னார். வேறு சில அவரது உடல்/மனப் பழக்கங்கள் விநோதமானவை. மூன்றுமணி  நேரம் தான் தூங்குவார். அப்படி

தூங்கினால் ஆயிரம் வருடம் வாழலாம் என்று அவர் நம்பினார். எப்போதும் ஒருவித அச்சத்தோடு இருப்பார். யாராவது உரத்துப் பேசினால் கூட நடுங்குவர். அழுகுரல் கேட்டால் நடுங்குவர்.யாரையாவது காண நேர்ந்தால் அவர் என்ன விதமான துயரத்தை அடையப்போகிறாரோ சொல்லப் போகிறாரோ என்று உருகுவார்.துயரத்தைக் கண்டு மட்டுமில்லாது நல்லுணவு ,நல்ல படுக்கை,,செல்வம் போன்றவற்றைக் கண்டு கூட அவர் நடுங்கினார். பெண்களைக் கண்டால் நடுங்கினார். பரிசுப்பொருட்கள்  தந்தால்  நடுங்கினார். கொடுத்தவர் போகிற வரைக்குக் காத்திருந்துவிட்டு போனபிறகு ரொம்ப தூர எறிந்தபிறகுதான் அவரால் உறங்க முடிந்தது. கொலை,கொள்ளை போன்ற செய்திகளைக் கேடடால் நடுங்கினார். கொலைக்கருவிகள் பற்றிக் கேடடால்  நடுங்கினார். யாரவது ‘பசி’ என்று சொன்னாலே உள்ளம்  நைந்து கண்ணீர் விட்டார். குடிகாரர்களைக் கண்டால்,புலால் உண்பவர்களைக் கண்டால் தெருவில் பலமாக செருப்பு தேய்த்து தேய்த்து நடப்பவர் கண்டால்.. போர் பற்றிக் கேட்டால்  அவரது வயிற்றில் நெருப்பு பிடித்தது  வலி ஏற்பட்டதாக அவர் சொல்கிறார்.

உண்மையில் வள்ளலாரின் இந்த ஆளுமைக்கு கூறுதான் ராஜ்கவுதமனைப் போல என்னையும் கவர்ந்தது. ராஜ் கவுதமனின் நூலின் இரண்டாம் பகுதி இது பற்றித் தான் பேசுகிறது.

வள்ளலாருக்கு கிறித்துவத் தாக்கம் உண்டு என்ற கருத்துக்கள் இருக்கின்றன. ராஜ் கவுதமனும் சரவணனும் எழுத்தாளர் கோணங்கியும் இது பற்றி குறிப்பிடுகின்றனர்.

 

ப.சரவணன்

உடலைப் புதைக்கக் கூடாது ,இறந்தவரை ஆண்டவர் வந்து எழுப்புவார் என்ற அறைகூவல்கள், மத்திய கால புனிதர்கள் போல இன்பம் கண்டு அஞ்சும் மனப்பான்மை கடவுளை ஒளியாகக் கருதுவது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு ஒரு கிறித்துவ பாதிப்பை வள்ளலாரில்  காண உந்தியிருக்கலாம்.

வள்ளலார் விவிலியத்தைப் படித்திருக்கிறார் என்பதில் மறுப்பில்லை. ஆனால்கடவுள் ஏழு நாள்களில் உலகைப்  படைத்தார் என்பதற்கு அவர் சைவ சித்தாந்தமொழியில்தான் விளக்கம் சொல்கிறார்! இறைவனை ஒளியாகக் காணுவது வேதத்திலேயே ஆரம்பித்துவிட்ட ஒன்றுதான்.

மேலும் இறைவனை புருவ மத்தியில் ஒளியாகக் காணுவது யோக சம்பிரதாயமாகும். உடல்களை புதைக்க வேண்டும். எரித்தழிக்கக் கூடாது போன்ற  விஷயங்களும்  இந்திய  யோகா மரபில் குறிப்பாக நாத, சித்த மரபில் சொல்லப் படுகிறவை தான். உடலை கல்ப காலத்துக்கு வைக்கச் சொல்லப்படும்அப்பியாச  முறைகள் பற்றி காஷ்மீர் சைவத்தின் தரிசனங்களுள்  ஒன்றான  குலதரிசனத்தில் விரிவாக பேசப்படுகிறது. ஏக இறை தரிசனமும் அதில் பேசப்படுவதுதான்.  திருமூலர் அங்கிருந்து  வந்தவர்  என்பது  குறிப்பிடாததக்கது. இன்று பிரபலமாக இருக்கும் ஒன்றே குலம்  ஒருவனே தேவன் என்ற முழக்கம் திருமந்திரத்திலிருந்து பெறப்பட்டதாகும். வள்ளலாரின் பல மெய்ப்பாடுகள் பற்றி குண்டலினி யோக நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அவரது அதீத பரிவுணர்ச்சியையும் அச்சத்தையும் ஒருவர் அவரது அனாகதம் எனும் இருதயச் சக்கரம் பூரணமாக மலர்ந்ததன் விளைவாகச் சொல்லமுடியும். சாதி சமயத்தை மறுத்தல் ,இறைவனை ஒருமையாக ஒளியாகக் காணுதல் ,மாந்தர்  மேல் பரிவுணர்ச்சி, புலனின்பங்கள் மீதான பேரச்சம், சாகா உடல் பற்றிய விருப்பம், இவை எல்லாமே சித்த மரபில் நெடுங்காலம் இங்கு புழங்கி  வந்தவையே

இந்த நேரத்தில் இதற்கு  இணையான வேறொரு நபரை வேறொரு இயக்கத்தை வேறிடத்திலிருந்து காட்டுவது இதை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். கேரளத்தின் புகழ் பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி நாராயணகுருவைப் பற்றி  நாம்  கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அவரது குரு  ஒரு தமிழர் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அவருக்கு மட்டுமில்லாமல் சட்டாம்பி சுவாமிகள்,  அய்யன்காளி  ராஜாரவிவர்மா போன்றவர்களுக்கும் அவரே குரு. அவர் அய்யா வைகுண்ட சுவாமிகளுடன் இணைந்து யோகப் பயிற்சிகள்  செய்தவரும் கூட. கேரளத்தில் மிகப்பெரிய சமூகப் புரட்சியை  விதைத்தவர் அவர். அவரது சீடர்களில் எல்லா இனத்தவரும் வர்ணத்தவரும் மதத்தவரும் இருந்தார்கள். அவரது போதனையைத் தான் நாராயணகுரு ‘ஒரு ஜாதி ஒரு மதம்  ஒரு  தெய்வம் ‘ என்ற  புகழ் பெற்ற  கோஷமாக  வளர்த்தெடுத்தார்.

ராஜ்கெளதமன்

 

இன்று  தூத்துக்குடி  மாவட்டத்தில்  இருக்கும்  நாகலாபுரத்தில்  பிறந்தஅய்யாவு  என்கிற தைக்காடு  சுவாமிகள்  கேரளத்தில் மிகப் பெரிய ஒருஇயக்கத்தைத் தோற்றுவித்தார். இவரும் வள்ளலாரைப் போலவே சைவ  பின்னணியில் வந்தவர் என்பதும் அதிலிருந்து சித்தர்கள் சிந்தனைகளுக்கு மேலெழுந்தவர் என்பதும் காணத்தக்கது. இதே நேரத்தில் குமரியில் பெரிய சமூகப் புரட்டிப்போடலுக்கு வித்திட்ட வைகுண்டரும் இவரும் வள்ளலாரும் சம காலத்தவர்கள் என்பது உற்று நோக்கத்தக்கது. தைக்காடு சுவாமிகளின் சமாதி இன்றைக்கு திருவனந்தபுரத்தில் உள்ளது. அவரது சமாதி தைக்காடு சிவன் கோவில் என்றழைக்கப்படுகிறது. தைக்காடு சுவாமிகள் சென்னையிலும் கொஞ்ச காலம் வசித்திருக்கிறார்  என்பதையும் காணவேண்டும். வள்ளலார் அங்கிருந்த அதே காலகட்டம். இவரது யோக முறை சிவராஜயோகம் என்றழைக்கப்படுகிறது.

ராஜ்கவுதமனின்  நூல் ராமகிருஷ்ண  பரமஹம்சர் பற்றி புகழ்பெற்ற உளவியல்  நிபுணரான  சுதிர் காக்கர்  எழுதிய நூலை  எனக்கு  நினைவுக்கு கொண்டு வந்தது. அதில் அவர் ராமகிருஷ்ணரின் குண விசித்திரங்களை உளவியல் முறையில் விளக்க முயல்கிறார். psycho biography எனப்படும் உளவியல் வரலாறு மேற்கில் ஒரு பாணியாகும் ஒருவரது வாழ்க்கையை உளப்பகுப்பாய்வு முறையில் நோக்கி எழுதுவது. ஹிட்லர் போன்ற சரவாதிகாரிகள் முதல் ஏசு போன்ற இறைதூதர்கள் வரை இந்த நோக்கில் எழுதப்பட்டிருக்கிறார்கள்

சார்த்தரின்  ‘வரலாறு என்பது தனி மனித வரலாறே’  என்ற  இருத்தலியல் பிரகடனத்துக்குப்  இந்தப் போக்கு  அதிகமானது.

சுதிர் காக்கரின்  ராமகிருஷ்ணர்  பற்றிய  நூல்  அவரை  ஏறக்குறைய  ஒரு மன நோயாளியாகச் சித்தரிக்கிறது  என்ற எதிர்ப்புகள் எழுந்தன.  ஆனால் இந்த வகைமையின் எல்லை அது.  ராஜ் கவுதமனின் வள்ளலார் பற்றிய இந்த நூலும் அந்த அபாயத்தை சந்திக்கிறது. ஆனால் நவீன மனமுடையவர் ஒருவர்  வள்ளலார் போன்ற ஒருவரை அப்படித்தான் பகுத்துக்கொள்ள  முடியும். சாகமாடடேன் செத்தாரை எழுப்புவேன் என்பவரை இன்று எங்கே வைக்கமுடியும் ? ஆகவே  இன்று  ஒரு உளவியல் மருத்துவர்  இன்று  அவரை  chronic  paranoia வினால்  பாதிக்கப்பட்டவர்  என்று சொல்லலாம். கூடவே அவருக்கு நிறைய hallucinations,grandeur mania போன்ற பிரச்சினைகளும்   இருந்தன என்றும் சொல்லலாம்.

ஆனால் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய ‘அவரது கருணை உணர்ச்சியையும் மனப்பிரமைகளில் சேர்க்க முடியுமா? என்பது கேள்வி. லக்கான் ,கல்லிங்காம் போன்ற எதிர் உளவியல் மருத்துவ நிபுணர்கள் மனநோய் என்பது குணவேறுபாடு  அல்ல அளவுவேறுபாடுதான் என்கிறார்கள். அதாவது  இயல்பான  எல்லோருக்குள்ளும் மனநோய்க்கூறுகள் என்று சொல்லப்படுகிற விஷயங்கள் இருக்கின்றன. நாம் தினசரி வாழ்வில் அதை சிறிய அளவில்  வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.  அளவில்

அதீதப்படும் போது தான் நாம் நோய்க்கூறுள்ள மனிதர் என்று அறியப்படுகிறோம்  என்கிறார்கள்.

இந்த விஷயம் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. தெருவில் கந்தலுடன் குப்பைத்தொட்டி அருகில் அமர்ந்திருக்கும் மனிதருக்கும் எனக்கும் பொதுவான விஷயங்கள் இருக்கின்றன என்பது மிக்கது தொந்தரவு அளிக்கும் ஒரு விஷயம்தான்.

ஆனால் அது உண்மை எனில் வள்ளலார் முதலான சித்தர்களுக்கும் பித்தர்களுக்கும் பொதுவான சில விஷயங்களும் இருக்கும், அதைக் கொண்டு நாம்  அவர்கள்  அனைவரும்  ஒரே  தரத்தினர்  என்று சொல்லமுடியாது என்றும்  தோன்றியது.

இந்த சிந்தனையோடே  நான்  வேறு விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். படித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவரின் வெளிவராத கவிதைத் தொகுப்பைப்  பார்வைக்காக  என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்.  அதில் ஒரு கவிதை என்னை ஈர்த்தது.  கடுங்கோடை நாள் ஒன்றில் காற்றுக்காக வெளிவந்த நல்ல பாம்பு ஒன்று மனிதர்களால்  அடிபட்டுச் சாவது பற்றி மிகுந்த  பரிவுடன்  எழுதியிருந்தார்.

எனக்குத் தோன்றியது, வள்ளலாரை உளவியலாளர்களை விட சமயவாதிகளை விட மொழி வல்லுனர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் விட கவிஞர்களால்  நன்கு புரிந்து கொள்ள முடியும்.

—————————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *