பாலையென்பதோர் படிவம் கொள்ளும்

                                                                                                                     

தி. பரமேசுவரி


சங்கீதமாய் இசைக்கிறது மழை. சற்றே குவிந்தோமெனில் பொழியும் மழையை உள்ளே உணரலாம். பார்க்கப்பார்க்கச் சலியாத சிலதில் மழையுமுண்டு. அத்துடன் கோப்பை சூடான தேநீர். “மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட ஓர் அழகு, மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூடவொரு அழகு” என்று நா. முத்துக்குமார் உயிர் பெறுகிறார். தேநீர் தீரத்தீரப் புத்தகத்துடன் அமர்கிறேன். நகரத்தை விட்டு வெளியேறி ஆனந்தமாய்ப் பணிபுரியும் நண்பரின் அழைப்பு. அவர் பேசுவதைத் தாண்டி, காகம் கரையும் ஓசை, மழைச்சிலிர்ப்போடு காதுக்குள் நுழைய, சின்னப் பொறாமையோடு பேசினேன். அதையுணராதவர் உற்சாகமாய், “இங்கு நல்ல மழைப்பா. மண்புழுவைப் பார்க்கிறேன். காகம், குருவி, மைனா, செம்போத்து எல்லாம் வர ஆரம்பிச்சாச்சு” என்று சொல்லச்சொல்ல தேநீர்ச்சூடு காதுவழி புகையாய் வெளிவர, புத்தகத்தைப் பிரித்தேன்.  குறுந்தொகையில் வண்ணக்கன் தாமோதரனார் எழுதிய பாடல்.

தலைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழ்ந்த தலைவன், மீண்டும் தலைவியோடு சேர விரும்புகிறான். அவளுடைய கோபத்தை அஞ்சி, தான் முதலில் செல்லாமல் பாணனை முன்னனுப்புகின்றான். ‘நிறைகருவைச் சுமந்திருக்கும் பெண்குருவி முட்டை இடுவதற்காக, ஆண்குருவி கூட்டைத் தயார் செய்கிறது. தேன்போன்ற இனிமையான தண்டுகளையுடைய கரும்பின் மென்மையான, வாசனையற்ற வெண்ணிறப் பூக்களைக் கோதியெடுத்துக் கூட்டில் பரப்புகிறது. இந்தக் குருவிகள் வாழக்கூடிய ஊரைச் சேர்ந்தவனும் இனிமையானவனும் ஆன தலைவன் உன் மீது மிகுந்த அன்புடையவன்” என்றெல்லாம் பாணன் தலைவனுக்காகப் பரிய, தோழியோ, “எல்லாம் வாய்ப்பேச்சு” என்கிறாள். ‘யாரினும் இனியன் பேரன்பினனே’ என்று தொடங்கும் அந்த ஆறு வரிப்பாடல், அகவடிவாலும் சொல்முறையாலும் உள்ளுறையாலும் அற்புதமான பாடலாகிறது. தொடக்கத்திலிருந்து தலைவனைப் புகழ்வதுபோலவே அமையும் பாடல், ‘பாணன் வாயே’ எனும் இறுதிச்சொல்லில் இகழ்ச்சிக்குறிப்பாய் மாறிப் போகிறது. குருவிக்குடும்பத்தின் காதல் வாழ்வைப் பேசி, தலைவியைச் சமாதானப்படுத்த வந்தவனை அவன் சொல்வழியே இடித்துரைக்கிறாள் தோழி.

மருதத்திணையிலமைந்த இப்பாடலைப் படிக்கும்போதே நற்றிணையின் முல்லைத்திணைப் பாடலொன்றும் நினைவுக்கு வந்தது. குறுந்தொகைக்குருவி அளவு அது புத்திசாலியில்லை. பாணனைத் தூதனுப்பாமல் தானே வந்து மாட்டிக் கொள்கிறது. அதன் பேடைக்குருவி ஈங்கைப்பூப் போன்ற தன் குஞ்சுகளோடு வாசலை மறித்து ஆண் குருவியைக் கூட்டுக்குள் வர முடியாதபடி தடுத்துத் துரத்துகிறது. குருவி கூட்டுக்குள் வர முயன்று இயலாமல் ஒதுங்கி நிற்கிறது. அப்போது தமிழ்த்திரைப்படங்களில் வருவதுபோலவே மழை பெய்கிறது. பெய்யும் மழையில் நனைந்து நடுங்கி நிற்கும் ஆணைப் பார்க்கின்ற பேடை கோபத்தை மறந்து இரக்கத்துடன் கூட்டுக்குள் வரும்படி அழைக்கிறது. இதுவும் தலைவன், தலைவிக்காகப் பேசும் பாடலே.

சங்கப் பாடல்களில் குறிப்பாக அகப் பாடல்களில் இயற்கை வருணனை இல்லாத ஒரே ஒரு பாடல்கூட இல்லையென்று உறுதியாகச் சொல்ல முடியும். புறப்பாடல்களும் பெரும்பான்மை இயற்கையின் துணைகொண்டே நிற்கின்றன. புறப்பாடல்களில் அகப்பாடல்களுக்கு இருப்பதுபோன்று முதற்பொருள், கருப்பொருள் இல்லை என்பதும் அதற்கான காரணங்களில் ஒன்றாக அமையலாம். அகப்பாடல்களில், ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ என்று புலம்புபவளோ அல்லது ‘நிலத்தினும் பெரிது வானினும் உயர்ந்தன்று’ என்று அன்பின் ஆழத்தைப் பேசுபவளோ, தான் சொல்லவரும் செய்திக்கு உறுதுணையாக இயற்கையை உடனழைத்துக் கொள்வது அதன் தனிச்சிறப்பு.

சங்கத் தமிழர்க்கு இயற்கையே கடவுள். அதனாலேயே தான் வாழ்ந்த நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு பகுதிகளாகப் பிரித்தும் குறிஞ்சியும் முல்லையும் தன் முறைமையில் திரிந்து தோற்றம் தருவதைப் பாலை என்றும் மலர்களின் பெயர்களால் அழைத்தனர். மலைக்கும் மலை சார்ந்த இடத்துக்கும் அவ்விடத்திற்கேயுரிய தனிச்சிறப்பான, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சிப்பூவின் பெயரைச் சூட்டியிருப்பது நுட்பமானதொன்று. அகத்திணைகளுக்கு மட்டுமன்றிப் புறத்திணைகளுக்கும் மலர்களின் பெயர்களே சூட்டப்பட்டன. நிலமும் காலமும் முதற்பொருள் என்று அழைக்கப்படும். நிலத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய விலங்கு, பறவை உள்ளிட்ட இயற்கை உயிர்களும் யாழ், பறை உள்ளிட்ட செயற்கைப் பொருட்களும் இணைந்ததே கருப்பொருள். அந்நிலங்களில் வாழும் மக்களின் உணர்வுநிலை உரிப்பொருள்.

அகப்பாடல்கள் அனைத்துமே இலைமறைகாயாகக் காதலை விதந்தோதும். அதனாலேயே பெற்றோர் அறியாத காதலைக் களவொழுக்கம் எனும் சொல்லால் சுட்டுகின்றனர். அதுவே பெற்றோர், உற்றோர் அறியும்போது கற்பொழுக்கமாகிறது. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் அகத்திணையை ஏழாகப் பகுக்கிறது. ஒருதலைக் காதலும் பொருந்தாக் காதலும் தவிர்த்த மற்ற ஐந்தும் அன்பின் எழுச்சியால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தோன்றும் அன்பும் இன்பமும் கலக்கமும் களிப்பும் இணைந்த வாழ்வியலைப் பேசுவது. அவர்களுக்குள்ளிருக்கும் காதலை வெளிப்படுத்தும் கையுறையாக மலர்களும் தழையாடைகளுமே இருந்தன. இப்பாடல்கள் நெஞ்சுக்கு உரைப்பதாகவும் தோழி, செவிலி, பாணன், பாங்கன் ஆகியோரிடம் தன் உள்ளத்தை, அதன் போராட்டங்களை உணர்த்துவதாகவும் அமைகிறது.

தலைவி, முல்லை நிலத்தைச் சேர்ந்தவளாகவோ நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவளாகவோ இருக்கலாம். அவளைப் பார்க்க மலைகளைக் கடந்து வருபவனாகக் குறிஞ்சித்தலைவன் இருக்கலாம். அவர்கள் சந்திப்பதோ, காதல் கொள்வதோ, ஊடுவதோ, பொருள்வயின் பிரிவோ, மீண்டும் திரும்புவதோ எதுவாயினும் அது இயற்கையைச் சார்ந்தே நிகழ்வதால் இயற்கையோடு இயைந்தே பாடப்படும். மலை, காடு, கடல், வயல், அந்நிலங்களில் வாழும் பறவைகள், விலங்குகள் எல்லாமும் சங்கப்பாடல்களில் பொதிந்திருக்கும். நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நற்றிணை, பட்டினப்பாலை என்று நூல்களின் பெயர்களே நிலத்துக்கும் காலத்துக்கும் முதன்மையளித்திருக்கும்.

கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள் பற்றிய குறிப்பு உண்டு. இந்நூல் பெருங்குறிஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. தலைவியைச் சந்தித்து இயற்கைமணம் புரிகிறான் தலைவன். அருகில் வீழும் அருவியின் தெளிந்த நீரைக் கையில் அள்ளிப் பருகும் சிறுசடங்கின் மூலம் அவளிடம் ஊரறியத் திருமணம் செய்வேன் என்று உறுதியளிக்கிறான். தலைவனுக்கும்  தலைவிக்கும் இடையிலுள்ள காதலை,  தலைவியின் செவிலித்தாயிடம்  தோழி தெரியப்படுத்துவதே குறிஞ்சிப்பாட்டின் மையம்.

பத்துப்பாட்டில் ஒன்றான கூத்தராற்றுப்படையில் இயற்கையின் இருபது வகையான ஓசைகள் பேசப்படுகின்றன. அருவி விழும் ஒலி, தன் துணையை இழந்த ஆண் யானையின் ஆற்றாமை ஒலி, தன் குட்டியை இழந்த பெண் குரங்கின் தவிப்பொலி, ஆற்றுவெள்ளத்தின் ஒலி, மலைக்காளையும் வளர்ப்புக்காளையும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் ஒலி, எருமைக்கடாக்களின் போர் ஒலி, பலாச்சுளையிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுக்க அதன்மீது கன்றுகளை மிதிக்கச் செய்யும் சிறுவர்களின் ஒலி, இந்த ஓசைகள் மலையில் பட்டு எதிரொலிப்பதால் ஏற்படும் எதிரொலி எனப் பல்வேறு ஒலிகளை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் குறிப்பிடுகின்றார்.

 

சங்க காலம் மனிதர்களும் இயற்கையும் ஒன்றிணைந்து வாழ்ந்த காலம். இயற்கையை உறவாக பாவித்துத் தன் உணர்வுகளை இயற்கையின் துணையோடு வெளிப்படுத்திய காலம். கால மாற்றத்தில் நமக்குள் இருந்த இயற்கை வெளியேறித் தனியானது. ‘நாமாக’ இருந்தது, நானும் இயற்கையும் என்று பிரிந்தது. அந்த விலகலை வெவ்வேறு காலத்து இலக்கியங்கள் மூலம் உணரலாம். அன்பின் ஐந்திணை என்றும் சிறுபொழுது பெரும்பொழுது என்றும் பிரித்துப் பொருளிலக்கணம் பேசிய நாமே பின்னாளில் இயற்கையை மறந்தோம் என்பது பெருஞ்சோகம்.

அன்று, புன்னைமரத்தைத் தமக்கை என்றது நற்றிணை. ‘விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி’  என்ற பாடலைப் பாடிய கவிஞரின் உள்ளாழத்தை வியக்கலாம். வீடுகளில் வளர்க்கப்பட்ட மாடுகளுக்கு சாத்தன், சாத்தி, கொற்றன், கொற்றி என்றெல்லாம் மனிதர்களின் பெயர்களே வைக்கப்பட்டன. ‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டை அன்போடு அழைத்து மகிழ்ந்தது சங்க காலம். மாடுகளை அடிமாடுகளாக்கி இறைச்சிக்காக அண்டை மாநிலத்துக்கு அனுப்புகிறது இற்றைக் காலம்.

நற்றிணைப் பாடலொன்றில் ஞாழல் மரத்தின் நுனியைப் பறித்துச் சிதைத்த தலைவியின் செயலைக் குற்றம் என்று பரிதவிக்கும் கவிஞரின் உள்ளம், தலைவனைப் பிரிந்த துயரத்தின் காரணமாக மனம் பேதலித்து அறிவு மயங்கிய நிலையில் அவ்வாறு செய்திருக்கிறாள் என்று அவளுக்காகவும் வருந்தும். மரக்கிளையின் நுனியைக் கிள்ளுவதே அறமற்ற செயல் எனும் பாடலை கான்கிரீட் காட்டில் இருந்துகொண்டு நாம் படிக்கிறோம்.

குறிஞ்சியும் முல்லையும் வாழ்நிலனாக இருந்த வரையிலும் மலைகளுக்கும் காடுகளுக்கும் ஆபத்தில்லை. அரசர்கள் சிறுநிலப்பகுதியை ஆண்டபோதும் பெருந்தன்மை மிக்கவர்களாக இருந்தனர். தன்னை நாடிவரும் பரிசில் புலவர்களுக்குத் தன்னுடைய நிலத்தையும் மலையையும் கூடக் கொடுத்துவிடும் பெரும்போக்கு இருந்தது. காடுகளைத் திருத்தி மருத வயல்களாகும் காலத்தில் பேரரசுகள் உருப்பெறத் தொடங்கின. படையெடுப்புகளும் சச்சரவுகளும் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களின் காலமே நீதிநூல்களின் காலமாகச் சொல்லப்படுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் நீதி இலக்கியங்கள் மனித வாழ்வை, உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அக்கறை காட்டினவேயன்றி இயற்கைக்கானதொரு பிடியேதும் அதில் இல்லை. அதிலிருக்கும் அகப்பாடல் நூலான திணைமாலை நூற்றைம்பதில் கூட, தலைவனுக்குத் தோழன் அறிவுரை கூறுவதாக வரும் பாடல், “சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அங்கே பயிர்த்தொழில் செய்பவர்கள் மற்றவர்களுடைய துன்பத்தை உணர மாட்டார்கள். அவர்களுடைய வீட்டிலிருக்கும் பெண்களை விரும்பி மணந்தால் பிறர்படும் துன்பத்தை எண்ணி வருந்த மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பெண் எடுக்க வேண்டுமா என்பதை ஆராய்ந்து தேர்க” என்று அறிவுரை கூறுகிறது. புன்னை மரத்தை உறவாக்கிய காலத்திலிருந்து நகர்ந்து மரங்களை வெட்டுவதைக் குற்றமாகச் சொல்லும் காலத்துக்கு நகர்ந்து விட்டதன் நுண்மையை இப்பாடல் உணர்த்துகிறது.

எட்டுத்தொகை நூல்களில் அனைத்துமே அகவற்பாவாக, தனிப்பாடல்களாக இருந்தது, பத்துப்பாட்டில் நீண்ட பாடல்களாக, தனி நூல்களாக உருப்பெற்றன. நீதி இலக்கியங்கள் பெரும்பாலும் வெண்பாக்களால் இயற்றப்பட்டன. குழப்பங்கள் நிறைந்த அக்காலம் நீண்ட பாடல்களுக்குத் தோதாக அமையவில்லை.

சமுதாயம் ஒரு குறித்த காலத்தில் எவ்வகை இலக்கியத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்குமோ, எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ அவ்வகை இலக்கியம் அக்காலத்தில் உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய, விட்டு விலகாத தொடர்புண்டு என்பார் வையாபுரிப் பிள்ளை. அதன்படி, இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலச் சூழலுக்கேற்பத் தோன்றியுள்ளன.

சிலப்பதிகாரம் தோன்றிய காலம், குறுநில மன்னர்கள் அழிக்கப்பட்டு மூவேந்தர்கள் உருவாகிவிட்ட காலம். சமணம், பெளத்தம் உள்ளிட்ட புறச்சமயங்களும் வலுப்பெற்ற காலம். கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் செல்லும் வழியில் அனைத்துக் கடவுள்களையும் வணங்கி வழிபட்டதைச் சிலப்பதிகாரம் பேசும். ஒவ்வொருவரும் அவரவருக்குரிய இயல்புடன் வாழ்ந்த சமயச்சண்டைகள் பெருகாத காலம். ஆதலால்தான் குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி  உள்ளிட்ட எளிய மக்களின் பாடல்களும் அதனுள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து நிறுவனமயப்பட்ட சமண, பெளத்த சமயங்களின் கருத்துகளைப் பேசும் மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்கள் எழுதப்பட்டன.

காப்பிய காலம் இயற்கை வாழ்விலிருந்து பெரிதும் நகர்ந்து நகரத்தின் சாரத்தைத் துய்க்கத் தொடங்கிய, ஆனாலும் நினைவில் காடிருந்த காலம். காப்பியங்களில் நாட்டு வருணனையில் இயற்கை வளம் பேசப்பட்டது. சிலப்பதிகாரத்தில் புகார் நகரமும் மதுரையும் விரிவாகப் பேசப்பட்டாலும் அவர்தம் வழிநடைப்பயணத்தில் இயற்கை வளமும் பாடப்பட்டது. அதுபோன்றே அனைத்துக் காப்பியங்களிலும் நாட்டு வளமென்னும் பகுதி காப்பிய உறுப்பாக அமைந்திருந்தது. திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளத்தைப் பேசும் ‘காய்மாண்ட தெங்கின் பழம்வீழ’ என்று தொடங்கும் பாடல் மிகப் புகழ் பெற்றது. பிற்காலத்துக் காப்பியமான கம்பராமாயணத்திலும்,

தண்டலை மயில்கள்ஆட தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ

எனும் கம்பரின் பாடல் மருதநிலத்தின் எழிற்கோலத்தை மாட்சிப்படுத்துகிறது.

காலம் பேரரசுகளின் எழுச்சியை, அதன் வலிமையை மக்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய சூழலமைந்த காலம். மக்களுக்காக அரசு என்று இருந்த நிலை மாறி ‘மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்’ என்றானது. அரசுகளின் பேருருவாக்கத்துக்கான தொழிலாளர்களாக மக்கள் மாறினர். அரசுகளின் அரண்மனைகள் பெரிதாகின. நாட்டை விரிவாக்கக் காடுகள் எந்தக் கேள்விகளுமின்றி அழிக்கப்பட்டன. தங்கள் பிரும்மாண்டத்தைப் பெருமைபேசப் பெருங்கோயில்களை எழுப்பினர். கற்றளிகளுக்காகவும் மலைகள் உடைக்கப்பட்டன. இயற்கையே கடவுளாக இருந்த சூழல் மாறி அரசர் முதன்மையானதுபோல பக்தி இலக்கியக் காலத்தில் அரசரின் இடத்தில் கடவுள் அமர்ந்தார்.

பக்தி இலக்கியங்களில், கோயில்களுக்கான பயணவழியில் காணும் சில இயற்கைக்காட்சிகளும்  பறவைகளின், விலங்குகளின் ஒலிகளும்கூட இறையின் பெயரை உச்சரிப்பதாகவும் பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சங்க காலத்தில் அரசர்களுக்குக் காவல் மரம் இருந்தது போன்றே கோவில்களுக்கும் தல மரங்கள் சொல்லப்பட்டன. சுந்தரர், இறைவனைப் பாடும்போது அங்கிருக்கும் அருவியையும் அதில் அடித்துக்கொண்டு வரப்படும் பொருட்களையும் பட்டியலிட்டிருப்பார். மழைக்காலத்தில் அருவிகள், மலையிலிருந்து ஓசையெழுப்பியபடி பாய்ந்து வழிந்தோடி நிலங்களையும் வயல்களையும் நனைக்கும். அவ்வாறு வருகையில் அகில், சங்கு, சந்தனத்துண்டுகள், பொன், மணி, மலர், முத்து, யானையின் தந்தம் ஆகியவற்றை அடித்து வருவதாகப் பாடுவார். அப்பாடலில் நீரின் நிறம், அதன் வேகம், அருவியின் ஒலி என மிக நுட்பமாகப் பேசியிருப்பார். கோயில்களே காடு, மரத்தடி, மலை, ஆற்றங்கரையோரம் என்று அமைக்கப்பட்டிருப்பதால் அது சார்ந்த வருணனைகளைப் பக்தி இலக்கியங்களில் பெறலாம்.

இயற்கை மனித வாழ்வை வண்ணப்படுத்துகிறது. இயற்கையின் புறத்தோற்றம் மனித வாழ்வின் அகத்தோற்றத்தோடு முயங்கிச் செழுமைப்படுத்துகிறது. அக்கால மக்கள் இயற்கையின் மெளனத்தைக்கூட உணர்ந்து சொற்களாக்கும் அரிய கலை கைவரப் பெற்றிருந்தனர். மெல்ல மெல்ல மாறிய காலச்சூழலின் பயணத்தில் இயற்கையிலிருந்து அகவயமாகவும் புறவயமாகவும் விலகினோம். சிற்றிலக்கிய காலத்தில் மனிதர்க்கும் இயற்கைக்குமான தொடர்பு பெரும்பான்மையும் அருகிப் போயிற்று. “நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன பவளக்கூர்வாய் செங்கால் நாராய்” எனும் பிற்காலத் தனிப்பாடல் தனித்தலையும் செம்போத்தென நட்சத்திர அந்தஸ்தோடு இன்றைக்கும் சிறப்பிக்கப்படுவதன் காரணம் இதுவே.

‘புலவர் பாடாது ஒழிகவென் நிலவரை’ என்று பெருமைபெற்ற காலம்போய் பொற்கிழிக்காகப் பாடும் புலவர்கள் பெருகினர். காப்பிய மரபு ஆதரிப்பார் இன்றி அழிய காப்பியத்தின் சிறு உறுப்புகளே இலக்கியங்களாயின. மனத்தின் ஆழத்துள் இயற்கை புதைய, பாடப்படும் கடவுள் அல்லது மன்னர் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் சிறு நிகழ்வுகளைப் பாடுவதாக, பெரும் மிகைகள் நிரம்பியதாக மாறிப் போனது இலக்கியம். புற்றீசல்போலச் சிற்றிலக்கியங்கள் பெருகின. எளிய மக்களுடைய பள்ளு, குறம், குறவஞ்சி ஆகியவை இலக்கிய அந்தஸ்து பெற்றன. ஆனால் குறவஞ்சியும் நமக்கு மீனாட்சியம்மை குறமாகவும் சரபேந்திர பூபாலக் குறவஞ்சியுமாகவே எழுதப்பட்டன. இக்காலத்தில்தான் நிலவுடைமை அமைப்பு உச்சம் பெற்றதோடு சாதியமைப்பும் இறுக்கமானது.

இக்காலத்தில் எழுந்த சேக்கிழாரின் பெரிய புராணத்தில் அக்காலகட்டத்தின் சமூகக் குழப்பங்களை, சாதீயச் சிக்கல்களைக் கவனிக்க முடியும். ஆகம வழிப்பட்ட சடங்குகளுக்கு எதிராகப் பேசுகின்ற, இயற்கை நீதிக்கு ஆதரவாக இருக்கக்கூடிய கண்ணப்ப நாயனாரின் கதையும் அதிலுண்டு. தீயில் மூழ்கித் தூய்மை அடைந்தபின் கோயிலுக்குள் வரச் சொல்லும் திருநாளைப் போவாரின் கதையும் அதிலுண்டு. கடவுளையே தோழனாகக் கொண்டு ஊடலுற்ற மனைவியிடம் கடவுளைத் தூதனுப்பும் சுந்தரரின் கதையும் அதில் இருக்கிறது.

இலக்கியங்களுக்கான புரவலர்கள் அருகி, புகழ்தலை வேண்டிய குறும் அரசர்களால் ஆளப்பட்ட சூழலில் பண்டை இலக்கியங்களைப் போற்றவோ பாதுகாக்கவோ இயலாதவொரு நிலை ஏற்பட்டது. அதுவே இலக்கிய, இலக்கணங்களுக்கான உரையாசிரியர் காலமானது. பரிமேலழகர், இளம்பூரணர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் பழம் இலக்கியங்களை அழியாது பாதுகாத்ததோடு அவ்விலக்கியங்களுக்கு உரைகளையும் எழுதினர். இவர்களைத் தமிழ் உரைநடைக்கு முன்னோடிகள் எனலாம்.

இதே காலகட்டத்தையொட்டி எழுந்த சித்தர் பாடல்கள் சாதி சமயச் சழக்குகளை எதிர்த்தன. சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை மறுத்து மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தனர். சமரச சன்மார்க்கத்தைத் தாயுமானவரும் வள்ளலாரும் வலியுறுத்தினர். விஜயநகர, நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பழம் இலக்கியங்கள் மடங்களால் பாதுகாக்கப்பட்டன. சைவ, வைணவ மடங்கள் தங்கள் சமயம் சார்ந்த நூல்களுக்கு ஆதரவு கொடுத்ததோடு அந்நூல்களைக் கற்பிக்கவும் செய்தன. இலக்கிய வளம் குறைந்தது. ஆதரிக்க யாருமின்றி புலவர்கள் சிறு பிரபுக்களை, நிலச்சுவான்தாரர்களை அண்டி வயிற்றுப் பெருமான் பொருட்டுத் தனிப்பாடல்கள் இயற்றினர். யமகம், திரிபு, பந்தம் போன்ற புதிய யாப்பு வடிவங்கள் தோன்றின.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய இசுலாமிய அரசின் தாக்கத்தால் இசுலாமிய மதம் பரவியது. அதையொட்டி சீறாப் புராணம் போன்ற காப்பியமும் மசலா, கிஸ்ஸா போன்ற சிற்றிலக்கிய வகைமைகளும் தோன்றின. அவர்களை அடியொற்றிய கிறித்துவ மதப் பரப்பல் மூலமாக தேம்பாவணி, சதுரகராதி போன்ற நூல்கள் இயற்றப்பட்டன. இந்த எல்லாக் காலகட்டங்களையும் கவனித்தோமானால் மனிதர்கள் எந்த அளவுக்கு இயற்கையிலிருந்து விலகி விட்டனர் என்பதையும் புலவர்கள் அரசர்களின், ஆள்வோரின், பணம் படைத்தோரின் பாவைகளாக மாற்றம் பெற்று விட்டனர் என்பதையும் உணர முடியும்.

தமிழ் மக்களுக்கு இயற்கையிலிருந்த ஈடுபாடும் பாடல்களுக்கு அதனைப் பின்னணியாக அமைத்த முறையும் மனங்கொள்ளத்தக்கது. அதிலிருந்து பல காலம் கடந்துவிட்ட போதும் தமிழர் சடங்குகளில், பண்பாட்டில், இறை வழிபாட்டில் மலர்களும் மரஞ்செடி கொடிகளும் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன.

பாரதிதாசன், வாணிதாசன் போன்ற சில கவிஞர்கள் பிற்காலத்தில் இயற்கையைச் சிறப்பித்து அழகின் சிரிப்பை ரசித்திருப்பார்கள். தனிப்பாடல்களாக, சிறு நூல்களாக இயற்கையின் ஆட்சி திரும்பத் தொடங்கிய தருணத்தை, அதன் பின் வந்த நவீன, பின்நவீனக் கவிதைகள் குலைத்தன. இரண்டு உலகப் போர்களும் அது தொடர்பான குற்றவுணர்வும் நிறைந்த மேற்கத்தியக் கவிதைக்குரலைப் பிரதியெடுத்தது தமிழுலகு. உலகம் முழுவதும் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட மாற்றம், அதன் விளைவுகளான நகரமயமாதல், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை தமிழ் இலக்கியத்தையும் பாதித்தன. முற்றிலும் இயற்கையிலிருந்து நகர்ந்த நிலையில், எல்லாவற்றையுமே பயன்பாட்டுப் பொருளாகவே பார்த்தது நவீன மனம். விளைவாக கவிதைக்குள் நம்பிக்கை வறட்சியும் துயரமும் அவலமும் வக்கிரமும் நிரம்பின. கவிதை திட்டவட்டமான வடிவமின்றிக் குறைந்த சொற்களில் கவித்துவத்தை அடைவதற்கான முயற்சியாக நின்று போனது.

இன்றைக்கு, கவிதைகளில் இயற்கை அதன் பொருளழிந்து குறியீடாக மட்டுமே மாறி விட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் கவிதைகளில் இயற்கை என்பதே பெண்ணின் குறியீடாக மாறியிருக்கிறது. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பாடல்களிலும் பெண்ணுடலை இயற்கையின் பகுதியாகக் கருதுவது உள்ளது எனினும் வெகுசில பாடல்களில் மட்டுமே அவ்வாறு பேசப்பட்டிருக்கும். ஓர் இடைவெளிக்குப் பின் எழுந்த பெண்ணெழுத்து சற்றே நின்று நிதானித்து எழுகையில் அது தன்னை இயற்கையுடன் இணைத்துப் புரிந்து கொண்டது.

நிர்வாணமான பெண்ணின் உடலினைக் காட்டுக்கு உவமித்திருப்பார் சுகிர்தராணி. அதன் மர்மம் அறியாது ஆண் தள்ளி நின்று பார்ப்பதாகவும் அக்கவிதை பகடி செய்யும். ‘குறுஞ்செடிகள் மண்டிய மலையில் பெருகுகிறது ஒரு நதி’ என்று தொடங்கி ‘இறுதியில் இயற்கை என் உடலாகிக் கிடக்கிறது’ என்று முடியும் பிறிதொரு கவிதையும் இதனை நுட்பமாக உணர்த்தும். மற்றொரு பக்கத்தில் நடனமிடும் கோலமயிலை பென்சில் டப்பாவுக்குள் அடைத்து வைத்தாலும் பிளாஸ்டிக் சுவர்களுக்குள் ஆடிக் களிக்கிறது என்று சுதந்திரம் கத்திரிக்கப்படும் வேதனையைச் சொல்லுவார் உமா மகேசுவரி. இவ்வாறு, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, அனார், தமிழச்சி, சக்தி ஜோதி என எழுதும் ஒவ்வொரு பெண் கவிஞரும் இயல்பாகத் தம்மை இயற்கையோடு பிணைத்துக் கொள்கின்றனர்.  தன்னை, தன் துயரத்தை, கசந்து வழியும் இயற்கையுடன் சேர்த்துச் சொல்லிச் செல்வர் அல்லது பேராற்றலென்று போற்றி அத்துடன் தங்களை உணர்ந்து கொள்வர்.

சங்கத்திலும் அகப்பாடல்கள் பெண்களின் குரல்களாகவே  பெரும்பான்மையும்  எழுந்திருப்பதையும் புறம் ஆண்களின் வசமாக இருந்ததையும் வைத்து ஒப்பு நோக்கினால் இன்றைய நவீன கவிதைகளில் கூட பெண்/ஆண் பாடுபொருள்களில் இருக்கும் மாறுபாடுகளை உணரலாம். தேவதேவனின் கவிதைகள் இயற்கையின் வழியில் தன் தத்துவச் சரடையே நாடும். வண்ணதாசனின் கவிதைகளில் இயற்கையின் கருப்பொருள்கள் பரவியிருக்கும். அதில் பறவையின் இறகு பேசப்படும்; மண்புழுவுக்காக இரக்கப்படும். ஆனால் இயற்கையின் ஆழஞ்செல்லாது மேலோட்டமான மெல்லிய உணர்வுகளை அழகியலோடு தொட்டுச் செல்வார். வற்றிப் போயிருக்கும் நதியின் சங்கீதத்தையும் கூடுகள் தகர்ந்து அலையும் கிளிகளின் ஏக்கத்தையும் பேசும் சுகுமாரனின் குரல் மலைநகரங்களைத் தொலைத்த ஏக்கத்தை அறியத் தருகிறது.  நானறிந்த வரையிலும் அப்பாஸ், கதிர்பாரதி, நேசமித்திரன் என்று வெகுசிலரை இங்கே சுட்ட முடிகிறது. திப்பக்காடு, தூண் பாறைகள், விக்கிரம மங்கலம், சாத்தனூர் அணை, பைக்காரா போன்ற எழில் கொஞ்சும் இடங்களை  அதன் இயற்கையழகுக்காகவே கவி புனைந்திருக்கும் யுவபாரதியும் குறிப்பிடத்தக்கவர்.

இக்காலத்தின் தனித்த சங்கக் குரலாக,  பாடினியாக  தேன்மொழி தாஸைக் குறிப்பிடலாம். மாயோன் மேயும் காடுறை உலகமும் சேயோன் மேயும் மைவரை உலகமும் அவர்தம் தொல்குடித் திணை. நீல ஆம்பல் மலர்களும் அமலைப் பூக்களும் உண்ணிப்பூக்களும் மருதாணிப் பூக்களும் மலைவேப்பம்பூக்களும் மலர்ந்திருக்கும் வனத்தில் வாழ்பவர் அவர். நவீன கவிதைக்குள் மீண்டும் சங்கத்தின் அடர்த்தியானதொரு மொழியால் கவி புனைபவர்.

ஒவ்வொரு காலத்திலும் யாரோ சிலர் இயற்கையைத் தம் பாடுபொருளாகக் கொண்டதுபோல்  நவீன யுகத்தில், நீரும் வானும் கடலும் நிலமும் விஷமாக்கப்பட்ட இக்காலத்திலும் இயற்கையை வியந்தும் இயற்கை அழிவதை வருந்தியும் பாடல்கள் புனைகின்றனர். வெகுசில குரல்களை அவதானிக்க முடியும். அணைகளும் அணு உலைகளும் மாபெரும் கட்டுமானங்களுமானதொரு பரிசோதனைக் களத்தில் வாழும் மன நெருக்கடியை கவிதையுலகம் தொடர்ந்து பேசுகிறது. இயற்கையைப் பாடுவதென்பதே  இன்று  ஓர்  அரசியல்  செயல்பாடாக  மாறி  இருக்கிறது.

——————————————–

One comment

  1. சங்க இலக்கியம் துவங்கி தற்கால இலக்கியம் என ஒப்பீடு நன்றாக இருந்தது சகோதரிக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *