நேர்காணல்

“எனது நாட்டைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்காக நான்   எழுதுவதில்லை”

நேர்கண்டவர்:  ஐசக் சாட்டனர்

 

 

 

 

 

 

 

 

 

தமிழில்: த.ராஜன்

 


துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்கின் பத்தாவது நாவல்‘The Red-Haired Woman’ கடந்த மாதம் ஆகஸ்ட், 2017ல் வெளியாகியிருக்கிறது. இந்நாவல், இஸ்தான்புல்லிற்கு வெளியே துருக்கிய நகரொன்றில் வாழும் கிணறு தோண்டுபவர்க்கும் அவரது சீடருக்குமிடையேயான நெருங்கிய உறவில் ஏற்படும் விரிசலைப்பற்றியது. துருக்கியின் வரலாறு, துருக்கி சமூகத்தின் கிராமம் மற்றும் நகர்புறத்திற்கு இடையேயான பிரிவுகள் மற்றும் பாலின உறவுகள் போன்ற அவரது முந்தைய படைப்புகளிலுள்ள கருப்பொருட்களின் நீடித்த ஆர்வத்தை இது காட்டுகிறது.

அவரது நாட்டின் சமகால அரசியல், இத்தனை ஆண்டுகளில் அவரது எழுத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அவர் வேலை செய்யும் முறை பற்றி இருவரும் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்கள். ஓரான் பாமுக், ஏன் தனது படைப்புகளை கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலமாக குறிப்பிட விரும்பவில்லை என்பதைப் பற்றியதாகவும் இவ்வுரையாடல் அமைந்திருக்கிறது.

O

ஓரான் பாமுக்: வணக்கம். நான் இஸ்தான்புல்லிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவிலுள்ள தீவில் இருக்கிறேன். காலை வேளைகளில் நீந்துவது வழக்கம். பிறகு நாள் முழுவதும் வெகுநேரம் பணிபுரிவேன். இது கோடை இல்லம். இந்த நேர்காணலுக்குப் பிறகு இந்த நாள் முடியும் வேளையில் மீண்டும் நீந்தவிருக்கிறேன். இங்கே இன்றைய நாள் முடிவடையவிருக்கிறது.

ஐசக்: நான் உங்களது ஒரு பேட்டியைப் படித்தேன். அதில் தினமும் நீங்கள் பத்து மணி நேரம் பணிபுரிவதாகச் சொன்னீர்கள். இப்போதும் அப்படித்தானா?

ஆமாம். நான் மகிழ்ச்சியாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். தவிரவும், புனைவுகள் எழுதுவதை நான் வேலையாக நினைப்பதில்லை. எப்போதும் தனது பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவனைப் போலவே அதை உணர்கிறேன்.

அபுனைவு எழுதுவதை வேலையாக உணர்கிறீர்களா?

 இல்லை. தற்போது நான்புனைவு எழுதிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் எனது மனம்அபுனைவுகளில் இருக்கும் எதார்த்தத்தைக் சுட்டிக்காட்டுவதில் அல்லாமல் புதிதான விஷயங்களைக் கண்டுபிடிப்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது.

சரி, ஆனால் நீங்கள் அபுனைவு எழுதிக்கொண்டிருக்கும்போது அதை வேலையாக உணர்கிறீர்களா?

பத்திரிக்கையாளரைப் போல உணர்கிறேன். தற்போது, இந்த வயதில், நான் எதை எழுத வேண்டுமென நினைக்கிறேனோ அதைத் தான் எழுதுகிறேன். விளையாடுவதைப் போல, கண்டுபிடிப்பதைப் போல, கேளிக்கை போலவே எப்போதும் உணர்கிறேன். நான் நிச்சயமாக ஒரு மகிழ்ச்சியான எழுத்தாளர்.

உங்களது பத்தாவது நாவலின் எழுதும் முறை உங்களது முதல் நாவலிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியபோது, காவியத்தன்மையோடும் பரந்துபட்டதாகவும், அநேகமாய் சோதனைகள் பல புரிபவனாகவும் இருந்தேன். ஆனால் இம்முறை, மெட்டாபிஸிக்ஸ் மற்றும் தத்துவத்துடன் ஒரு குறுநாவல் எழுத நினைத்தேன். ஒருகிணறு தோண்டும் குருவைப் பற்றியும்அவரிடம்பணிபயில்பவனைப் பற்றியும் கிட்டத்தட்ட ஒரு யதார்த்தமான கதை சொல்ல முயன்றேன்.

1988ஆம் ஆண்டு, கோடையில்,நான் வசித்த இடத்திற்கு அருகே இவர்களைக்கவனித்திருக்கிறேன். அதுவும் ஒரு தீவு.அப்போது எனது புத்தகங்களில் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். அவர்கள்தாம் கடைசி தலைமுறைபழைய பாணியிலான கிணறு தோண்டுபவர்கள். இஸ்தான்புல்லின் எல்லையோரத்தில் இன்னமும் அவர்கள் தொழில் புரிகின்றனர். ஏனென்றால் அரசாங்கம் தரும் தண்ணீர் போதுமானதாக இல்லை. குறிப்பாக எழுபது எண்பதுகளில். எல்லோரும் அவரவர் தோட்டத்தில் கிணறு தோண்டி அவர்களாகவே அவர்களுக்கு வேண்டிய நீரை இறைத்துக்கொண்டார்கள். கிணறு ஒன்றை தோண்டிக்கொண்டிருந்தபோது அந்த வயதான குருவிற்கும் பதின் வயது சீடனுக்குமிடையே தந்தை மகன் போன்ற உறவிருந்ததைக் கவனித்தேன். அவ்வயதான குரு கற்றுத்தந்துகொண்டிருக்கும் போதே அப்பையனை அதட்டுவார். மேலும், அவனிடம் மென்மையாகவும் பாதுகாப்பவராகவும் பாசத்தோடும் நடந்துகொள்வார்.

இரவில் நான் நகரத்திற்குச்செல்லும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் இதைப் பார்த்தேன். அவர்களது உறவால் நான் ஈர்க்கப்பட்டேன். என்னோடு அதிக நேரம் செலவிடாத, என்னை ஒரு போதும் கட்டுப்படுத்த முயலாத தந்தையால் வளர்க்கப்பட்டவனாதலால் ஒருவேளை உந்தப்பட்டிருக்கலாம். உண்மையில், என் அப்பா அப்படித் தான் இருந்தார் – என்னைப் பற்றி அவருக்கு அதிகம் தெரியாது.

உங்கள் தந்தை உயிரோடு இருக்கிறாரா? இறந்துவிட்டாரா?

இல்லை, அவர் இறந்துவிட்டார்.

எப்போது இறந்தார்?

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக.

உங்கள் புனைவுகளை எப்போதாவது அவர் வாசித்திருக்கிறாரா?

ஆம், அவர் என்னை மிகவும் ஆதரித்தார். நோபல் பரிசு ஏற்றுக்கொண்ட உரையில் என் தந்தையின் பெட்டகத்தைப் பற்றி எழுதினேன். அவர் ஒரு கவிஞர் ஆகவும் நினைத்தார். கவிதைகள் எழுதினார். அவர் வெற்றிபெறவில்லை. வெற்றியின் பின்னால் ஓடவுமில்லை. அதனால் அவர் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிய தொகுப்புகளை என்னிடம் தந்தார். அதைப்பற்றிய கட்டுரையொன்று எழுதினேன். அதுவும் ஒரு கவித்துவமான கட்டுரை.

Grand Bazaar Istanbul.

 

நீங்கள் முதன்முறை எழுதியதை அவர் வாசிக்க நேர்ந்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்ததென நினைவிருக்கிறதா?

அவர் அன்பாகவும் மரியாதைக்குரியவருமாக இருந்தார். அவர் என்னை விமர்சிக்கவில்லை என்பதால் நான் உந்தப்பட்டேன்.என்னையும் எனது சகோதரர்களையும் மேதைகளைப் போல நடத்தினார். எனது தந்தையுடனான உறவுதான் இந்தப் புத்தகத்தின் தொனியைத் தீர்மானித்தது. இந்த நாவல் – The Red-Haired Woman, உணர்வுப்பூர்வமானதாகவும் தனிநபருக்கான வேர்களையும் கொண்டிருக்கிறது. தவிரவும், சோஃபோக்லிஸின் ‘ஓடிபிஸ் ரெக்ஸ்’ மற்றும் பெர்சியன் கவிஞரான பெர்டோவ்ஸியின் ‘ஷாஹணாமே’(ருஸ்டம் மற்றும் சொஹ்ரப் இருவருடைய கதை)இவை இரண்டிற்கும் இடையேயான புனைவு ஒப்பீடாகவும் இருக்கிறது.‘ஓடிபிஸ் ரெக்ஸ்’ தந்தையைக் கொல்லும் மகனைப் பற்றியது. ஓடிபிஸூக்கு எதிரிணையாக‘ஷாஹணாமே’வைக்கொள்ளலாம்- ஏனென்றால் இங்கே தந்தை மகனைக் கொல்கிறார்.இவை மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய நாகரிகங்களின் நியமன எழுத்துகள்(Canonical Texts).

ஒவ்வொரு வருடமும் ஒரு செமஸ்டர் நான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாடம் எடுப்பேன். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் மேல் சோஃபோக்லிஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ஷேக்ஸ்பியர் என பெரிய எழுத்துகளில் இருக்கும். க்ளாசிக்ஸ் கற்பிப்பதில் கொலம்பியா சிறந்தது. “கிழக்கத்திய கிளாஸ்சிக்ஸ் பற்றி? எதையாவது ஓடிபிஸ் ரெக்ஸூடன் ஒப்பிடுவது பற்றி?” என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

ஓடிபிஸை நாம் தனிமனிதத்துடன் தொடர்புபடுத்துகிறோம். ஏனென்றால் அவன் அவனது தந்தையைக் கொன்றிருக்கிறான். மேலும் அவர்கள் இன்னமும் அவனை மதிக்கிறார்கள். தந்தை மகனைக் கொன்றதால் நாம் ருஸ்டமை சர்வாதிகாரத்துடன் தொடர்புபடுத்துவதில் முனைகிறோம். ஏன்? பெர்டோவ்சியின் ஷாஹணாமேமுழுக்கவும் ருஸ்டம் மற்றும் சொஹ்ரப் ஆகியோரைப்பற்றி, தந்தை மகனைக் கொன்றதை நியாயப்படுத்துவதைப்பற்றி. சோஃபோக்லேஸின் ‘ஓடிபிஸ் ரெக்ஸு’ம் கூட மகன் தந்தையைக் கொல்வதை நியாயப்படுத்துவது குறித்துதான். நவீனவாதிகளான நமது வாசிப்பைப் பொறுத்துதான் இவற்றைப் புரிந்துகொள்கிறோம் என நினைக்கிறேன். ஓடிபிஸை நாம் மதிக்கிறோம், நம் பச்சாதாபத்தால் அவனுடைய வேதனையைப் புரிந்துகொள்கிறோம். அவனுடைய மீறுதலையும் நாம் மதிக்கிறோம். எனவே, இந்த விஷயங்களைப் பற்றி எழுத விரும்பினேன். தந்தைகள், மகன்கள்; தந்தைகளின் பற்றாக்குறை, மகனின் தனித்துவம்.

கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதைச் சொல்வதற்காக உங்கள் படைப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள்? ஆனா-

சரி, உங்கள் கேள்வி எனக்கு புரிந்தது.

ஓகே

நான் அதைப்பற்றிய சுய உணர்வுகொண்டிருக்க விரும்பவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் மத்தியில், குறிப்பாக இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், எனது புத்தகங்கள் சர்வதேச அளவில் மொழிபெயர்ப்பாகி சென்றபோது, “கிழக்கு மற்றும் மேற்கிற்கிடையேயான ஒரு பாலம்” என எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள். நான் அதை விரும்பவில்லை. ஏனென்றால் எனது நாட்டைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்காக நான் எழுதுவதில்லை. என்னை அனுபவமற்ற புதிய எழுத்தாளராக நினைத்து எழுதினாலும் வேறு பல தீர்க்கமான காரணங்கள் இருக்கின்றன.

அதே போல நான் இஸ்தான்புல் எழுத்தாளராக இருக்கிறேன் என சொல்வதையும் கேள்விப்பட்டேன்.ஆமாம், நான் இஸ்தான்புல் குறித்துதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இஸ்தான்புல்லில் தான் வாழ்ந்திருக்கிறேன். எனது வயது 65; கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக இந்த நகரத்தில் வசித்து வருகிறேன். எனது கதைகள் இஸ்தான்புல் குறித்து இருக்கும் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அது சுயமாக திணிக்கப்பட்ட திட்டம் அல்ல, “ஓ! நான் ஒரு இஸ்தான்புல் எழுத்தாளராக இருந்துகொள்கிறேன்”.

மற்ற எல்லா எழுத்தாளர்களைப் போலவும் எனக்கு தெரிந்த மக்களைப்பற்றி எழுதுகிறேன். நான் மனிதத்தைப்பற்றி எழுதுகிறேன். இஸ்தான்புல்லிலிருக்கும் மனிதத்தைக் கடந்து வந்திருக்கிறேன்.மறைமுகமாக நான் ஒரு இஸ்தான்புல் எழுத்தாளர்தான். இரண்டாயிரமாம் ஆண்டின் முற்பகுதியில், முதன் முறையாக,நேர்மையான சர்வதேச விமர்சகர்கள் என்னை ஒரு பாலம் என அழைத்ததை நான் கண்டறிந்தேன். அதைத் தவிர்த்துவிடுவோம். பின்னர், இஸ்தான்புல் எழுத்தாளர் என்றார்கள். இது எனது திட்டம் அல்ல, ஆனால் நான் இவற்றிலிருந்து கற்றுக்கொண்டேன்.

நான் கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது உலகை உலகின் பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கு விரித்துரைக்கிறேன். இறுதியில், அவை வெற்றி பெரும்போது ஏதோ ஒன்றை விளக்குகின்றன. ஆனால் அது எனது நோக்கம் அல்ல. எனது நோக்கம் ஒரு பாலமாக இருப்பது அல்ல!

நீங்கள் உங்களை ஒரு ஐரோப்பியராக கருதுகிறீர்களா?

ஆமாம். எல்லா துருக்கியர்களைப் போலவும் நான் ஒரு ஐரோப்பியன் மற்றும் துருக்கியைச் சார்ந்தவனும் கூட. நான் ஒரு மதச்சார்பற்றவன். ஆனால் ஒரு இஸ்லாமிய கலாச்சாரத்தின் நவீன தொடர்ச்சியானவனும் கூட.எனக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆமாம் நான் மதச்சார்பற்றவன் தான். ஆனால் நான் அந்த நாகரீகத்தைச் சார்ந்தவன். அரசியல் ரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கி நுழைந்த இரண்டாயிரத்தின் ஆரம்ப காலத்தில் எனது வாழ்வை ஐரோப்பாவில் செலவிட்டுக்கொண்டிருந்தேன் – வீணாக்கிக்கொண்டிருந்தேன் – என்ற வகையில் நான் ஒரு ஐரோப்பியன் என்பதிலும் எனக்கு பெருமை தான். அது ஒரு பொற்காலம்; நிலைமை மோசமான திசையில் செல்லத் தொடங்கின. தற்போது துருக்கி உண்மையில் ஒரு தீவிர பிரதிநிதி அல்ல. ஐரோப்பாவுடன் சண்டையிட துருக்கி அழைத்துக்கொண்டிருக்கிறது. அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நிகழ்ந்த அல்லது நிகழ்ந்துகொண்டிருந்த வன்முறையைப் பற்றி உணர்வு ரீதியான உங்களது முதல் எதிர்வினை என்ன?

நான் அதைப்பற்றி கேள்விப்படவில்லை. அது நடந்துகொண்டிருக்கும் போதே நான் பார்த்தேன்.9:20 மணிக்கு தொடங்கியபோது ஊடகத்திலிருந்தும், இணையத்திலிருந்தும், பெரும்பாலும் தொலைக்காட்சியிலிருந்தும் எனக்கு செய்திகள் கிடைத்துக்கொண்டிருந்தன. அதை அதிர்ச்சியோடும் திகிலோடும் பார்த்துக்கொண்டிருந்தேன். காலை மூன்று மணிவரை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ராணுவ வன்முறைகள் வெற்றி பெறாது என்பதை உணரத்தொடங்கியிருந்தேன்.நான் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டேன். என்னால் தூங்க முடியாது என்பதை உணர்ந்து வெறி பிடித்தவனாகவும் பதட்டமானவனாகவும் இருந்தேன். அது தோல்வி அடைந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். வெளியே தெருக்களுக்கு சென்று பீரங்கி வண்டிகளைத் தடுத்து நிறுத்திய துணிச்சலான மக்களுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன். இந்த மக்கள் உங்களை என்னைப் (என்னை என்பது மேற்கு ஐரோப்பியன் என்ற அர்த்தத்தில்) போன்ற தாராளவாதிகள் அல்ல. அவர்களெல்லாம் எர்டோகனை அல்லது அவர்களின் கட்சி அல்லது அவர்களின் ஜனநாயகத்தினை ஆதரித்தனர். அவர்கள் எனது தாராளவாத மதிப்புகளை பாதுகாக்கவில்லை, ஆனால் மறைமுகமாக அவர்கள் துருக்கிய ஜனநாயகத்தை பாதுகாத்தனர்.

ஒரு வருடம் கழித்து இப்போதும் நீங்கள் அதே போல உணர்கிறீர்களா?

இல்லை, நான் இப்போது அதே போல உணரவில்லை. அந்த மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஆனால் பெரும்பாலான தாராளவாதிகளை அகற்றுவதற்காக இராணுவ வன்முறைகளை அரசாங்கம் பயன்படுத்தியது. அரசாங்கத்தை விமர்சித்த பெரும்பான்மையினர் அரசாங்க அலுவலகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இப்போது40,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் 140 பத்திரிகையாளர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புனைவுகள் எழுதுவது துருக்கியில் பிரச்சனை இல்லை, ஆனால், பத்திரிக்கையாளர்களைப் போல அரசியல் விமர்சகர்களைப் போல அரசியலில் ஈடுபட்டீர்களென்றால் உங்களுக்கு இடையூறு, அல்லது –

இதே போல உங்களது பிரச்சனைக்கும் நீங்கள் அரசியல் குறித்தும் வரலாறு குறித்தும் பேசியது தான் காரணம்.

ஆமாம். அரசாங்கத்துடன் எனக்கு பல பிரச்சனைகள் இருந்தன.எனது புனைவுகளால் அல்ல, எனது நேர்காணல்களாலும் நான் சொன்னவைகளாலும். எனது அரசியல் வர்ணனைகளை அவர்கள் எப்போதும் கேட்கிறார்கள். அடக்குமுறை சிக்கல்களைக் கையாளும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் சோவியத் யூனியனை அல்லது முப்பதுகளின் ஜெர்மனியை அடிப்படையாகக்கொண்டு எழுதுவது பழைய ஒரே மாதிரியான மற்றும் தேய்வழக்கானதாக உள்ளது. அவர்களால் காஃப்காவைப் போல கூட எழுத முடிவதில்லை.

நீங்கள் காஃப்காவைப் போல நாவல் எழுதலாம். நீங்கள் அரசாங்கத்தை விமர்சிக்காத வரை உங்களை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் நீங்கள் அரசாங்கத்தை விமர்சித்தால் – அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தினால் மட்டும் எனது பல நண்பர்கள் சிறையில் இருக்கிறார்கள். இங்கே துருக்கியில் பல துணிச்சலான மக்கள் உள்ளனர். துருக்கி, ஆளும் கட்சி அல்லது எர்டோகன் மட்டும் அல்ல, AKP கூட தான். திருப்பிச் சண்டையிடும் துணிச்சலான பரந்த கொள்கையுடையவர்களும் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில், ஆளுங்கட்சிக்கு 51 சதவிகிதம் கிடைத்தது, எதிர்க்கட்சிக்கு 49 சதவிகிதம் கிடைத்தது. இரண்டும் சமம்; இது சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன், மேலும் நிச்சயமாக இது என் நாடு.

ஒரு நாவலுக்கான பாத்திரமாக எர்டோகன் உங்களை ஆர்வமூட்டுகிறாரா? அல்லது–

இல்லை, இல்லை, இல்லை. நான் அந்த திசையில் போக விரும்பவில்லை. புத்தகத்தைப் பற்றி பேசுவோம்.

சரி, உங்களது முந்தைய புத்தகத்தைப் பற்றி கேட்கலாமா, அதாவது–

சரி. எது வேண்டுமானாலும் கேளுங்கள்.

உங்களது பனி நாவலிலிருந்து பழைய மேற்கோள் ஒன்றை வாசிக்கிறேன். அதில் ஒரு கதாப்பாத்திரம் இப்படிச் சொல்கிறது:“இந்த நாட்டில் சற்றே மேற்கத்தியமாக்கப்பட்ட மக்கள்கூட மதச்சார்பற்ற ராணுவத்தின் பாதுகாப்பின்றி நிம்மதியாக மூச்சு விட முடியாத நிலையில், தங்களை மற்றவர்களை விட சிறந்தவர்களாகவும் மற்றும் பிறரை தனக்கு கீழே இருப்பதாகவும் நினைக்கும் அறிவுஜீவிகளுக்கே இந்த பாதுகாப்பு மிகவும் அவசியமாக உள்ளது.”

 [சிரிக்கிறார்] ஆமாம்.

“இந்த ராணுவத்தின் பாதுகாப்பு இல்லையெனில், வெறியர்கள் தங்களது துருப்பிடித்த கத்திகளைக்கொண்டு அந்த மக்களையும் அவர்களைச் சார்ந்த ஒழுக்கமற்ற பெண்களையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிவிடுவார்கள்.”இப்போது நீங்கள் இதைக் கேட்கும் போது என்ன நினைக்கிறீர்கள்?

ஓகே, முதலில், ஒரு FBI ஏஜென்ட் மாதிரியான ஒருவன் சொல்வது போல அந்த புத்தகத்தில் இருக்கும்.

ஆமாம், அது ஒரு கதாப்பாத்திரம்.

இந்த நபர்தான் இளம் இடதுசாரிகளிடம் சொல்லிக்கொண்டிருப்பார், “அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் ஏனென்றால் அவர்கள் அரசியல் ரீதியான இஸ்லாம் ஆதரவாளர்களைமிகவும் மோசமாக நடத்துகிறார்கள்”. ஈரானைப் போல நாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று அந்த ஆள் சொல்கிறான். ஆனால்அவன் ஒரு வலதுசாரி மாதிரியான FBI ஏஜென்ட் என்பதை மறக்க வேண்டாம். அவன் தான் ஒருவர் பின் ஒருவராக எல்லா எதிர்தரப்பு தோழர்களையும் பின்பற்றிக்கொண்டிருந்தான். மேலும் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டாமென்றும் ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டிருந்தான்.

இவையெல்லாம் மிகவும் சிக்கலானவை. எளிதானவை அல்ல என்பதை நீங்கள் பார்க்கலாம். எந்தப் பக்கம் சரி என தெரிந்துகொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. என்னைப் பொறுத்தவரை, எனது உள்ளுணர்வு சொல்கிறது, “உனது புத்தகங்களை எழுது, உனது புத்தங்களைப் பொருட்படுத்து, உனது புத்தகங்களோடு ஓய்வின்றி இரு, மேலும் உன்னை உனது நண்பர்களின் – அல்லது அனைவரின் – கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்று”.

இது எனது கற்பனையுலகம்; இது எனது வாழ்முறை. இதை விட அதிகமாக நான் வேண்டவில்லை.

அரசியல் பகுப்பாய்வை என்னிடம் கேட்காதீர்கள். எனது பகுப்பாய்வெல்லாம் எனது புத்தங்களை எழுதி வைத்துக்கொண்டிருப்பது தான் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது, எனது நண்பர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது, மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது, மேலும், நிச்சயமாக, எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது.

துருக்கியில் கலாச்சாரம் இன்னும் மதச்சார்பற்றவாதிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக நீங்கள் சொல்லியிருந்த ஒரு பழைய நேர்காணலை நான் படித்தேன். அது மாறிவிட்டதா?

கேமல் அடாதுர்க்கின் மதசார்பின்மை மற்றும் நவீனமயமாதல் திட்டமானது பெரிய, பிரமாண்ட மற்றும் சிக்கலான மரபுவழி பத்திரிகை, விளம்பரம், நவீன தகவல்தொடர்புகள் போன்றவற்றை உருவாக்கியது.அவை துருக்கியில், மேற்கத்திய மதச்சார்பற்றவாதிகளால் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும்பட்டது. உண்மையில், ஆளும் கட்சிக்கே கூட அவர்களின் உதவியும் தேவைப்படுகிறது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

ஒரு எழுத்தாளர் என்ற வகையில், உங்கள் நாட்டில் ஏற்பட்ட கால மாற்றங்களுக்கேற்ப எதாவது வகையில் உங்களது படைப்பாக்கத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா?

நல்ல கேள்வி!

ஓ நன்றி. ஒரு வழியாக.

ஒரு எழுத்தாளனாக, நான் நிச்சயமாக மாறி வருகிறேன், ஆனால் எழுதுவதற்கான எனது உறுதிப்பாடு – அல்லது எழுதுவதன் மீதான எனது காதல், புனைவெனும் கலை சார்ந்த எல்லாவற்றின் மீதான எனது மோகம் – இன்னும் சுற்றி இருக்கிறது. ஆரம்ப ஆண்டுகளில், ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வாக்கியமும் இறுதியான வாக்கியம் என்பதாக நினைத்து, நான் கவிதையைப் போல புனைவுகள் எழுதிக்கொண்டிருந்தேன். சோதனைமுயற்சிகள், பின்நவீனத்துவம், நவீனத்துவம் என நிறைய முயற்சிப்பவனாகவும் இருந்துகொண்டிருந்தேன். மேலும் எனது ஆரம்பகட்ட நாவல்களில், எனது கலாச்சாரம், எனது மக்கள், நடுத்தர வர்க்கம், மேல்-நடுத்தர வர்க்கம், மதச்சார்பின்மை, மேற்கத்தியமயமாகிவிட்ட, ஐரோப்பிய, இஸ்தான்புல் துருக்கியர்கள் ஆகியோரைப்பற்றி அதிகம் எழுதிக்கொண்டிருந்தேன். இங்கே தான் நான் வளர்ந்தேன், இது தான் நான் எழுதியது.

The Red-Haired Womanநாவலும் கூட கொஞ்சம் அவர்களைப்பற்றி தான், கொஞ்சம் மொத்த துருக்கியைப்பற்றி. நான் துருக்கியைப்பற்றி மிக அதிகமாக எழுத ஆரம்பித்தேன். என் மதச்சார்பற்ற மற்றும் முதலாளித்துவ இஸ்தான்புல் மட்டும் அல்ல, இஸ்தான்புல்லின் நாற்பதாண்டு கால வளர்ச்சியைப்பற்றிய காவியமான ‘A Strangeness in My Mind’ நாவலில் நான் எழுதியதைப் போல பெரிய, பிரபலமான, மிகப் பெரிய இஸ்தான்புல் குறித்தும் கூட தான். இது ஒரு புதிய குறுநாவல், ஆனால் மறுபடியும் இது மாற்றத்தைப்பற்றியது. கவித்துவ மாற்றம். தவிரவும் தலைமுறையினர், தந்தைகள் மற்றும் மகன்கள் குறித்ததும். உண்மையில், இருநூறு பக்க இந்தப் புத்தகம், மூன்று தலைமுறையுடன் வருகிறது.

நீங்கள் ஆர்தர் மில்லர் மற்றும் ஹரோல்ட் பிண்டர் ஆகியோருடன் இணைந்து PEN-க்காக ஒரு உண்மை கண்டறியும் பணியைச் செய்தீர்கள். சரி தானே? எண்பதுகளில்?

ஆமாம். 1985ல், ஒரு வெற்றிகரமான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்ந்தது. நிறைய எழுத்தாளர்கள், மனித உரிமை அமைப்பைச் சார்ந்த மக்கள், இடதுசாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வதேச PEN, அமெரிக்க PEN, ஹெலின்ஸ்கி வாட்ச், சர்வதேச கருத்து சுதந்திரக் கண்காணிப்பு நிறுவனங்கள் இணைந்துஆர்தர் மில்லரையும் ஹாரோல்ட் பிண்டரையும் துருக்கிக்கு அனுப்பி வைத்தது. எனக்கு ஓரளவிற்கு ஆங்கிலப் புலமை இருந்ததாலும் இளமையான வளர்ந்து வரும் எழுத்தாளராக கருதியதாலும் என்னை அவர்களின் வழிகாட்டியாக நியமித்தார்கள். அவர்களுடன் நட்பாக இருந்த நான்கு நாட்களும் மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்தன. பெரும் களிப்பைத் தந்த அந்த நாட்கள் நினைவிலிருக்கிறது. இருந்த போதும் நிறைய மக்கள் சிறையிலிருந்தார்கள்.

இப்போதும் அதேபோல உணர்கிறீர்களா?

இப்போதும் அப்படித்தான், இன்னும் மோசமாக உணர்கிறேன். ஏனென்றால் அந்த நேரத்தில் சுரங்கப்பாதை முடிவில் ஒரு விளக்கு தெரிந்தது. நாங்கள் இராணுவப் புரட்சிக்கு பழகியிருந்தோம். ஆனால் இந்த முறை எங்களுக்கு அதிகமான சுதந்திரம் இருந்ததால் நாங்கள் திரும்பிச் சென்றோம். இது என் வாழ்வில் நடந்ததே இல்லை.ஐந்து வருடங்களுக்கு முன், எட்டு வருடங்களுக்கு முன் சிறந்த கருத்துச் சுதந்திரத்தை துருக்கி தனது வரலாற்றில் கொண்டிருந்தது. அது குறித்து சந்தோஷப்பட்டேன். இருப்பினும் அரசாங்கத்துடன் எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. அதை நான் பொருட்படுத்தியதில்லை. நான் தளராத நம்பிக்கையுடையவனாக இருந்தேன். ஏனென்றால் நான் எதிர்காலத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இன்னும் அந்த எதிர்காலத்தை என்னால் காண முடியவில்லை. அது குறித்துதான் நான் வருந்துகிறேன். ஆனால் என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம்; நான் புத்தகங்கள் எழுதுகிறேன். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

என்னை நம்புங்கள், நான் உங்களை நினைத்து கவலைகொள்ளவில்லை. கற்றுக்கொடுப்பதற்காகவோ அல்லது எதற்காகவோ நீங்கள் அமெரிக்காவிற்கோ அல்லது ஐரோப்பாவிற்கோ வருகை தந்த போது, துருக்கியர்கள் மீதான மேற்கத்தியர்களின் பார்வை எதாவது வகையில் மாறியிருக்கிறது என உணர்ந்தீர்களா? உங்களிடம் மக்கள் வித்தியாசமாக நடந்துகொண்டார்களா அல்லது துருக்கியைப்பற்றி எதாவது வகையில் வித்தியாசமாக பேசினார்களா?

இது கொஞ்சம் சிக்கலானது. 1985ல் முதன்முறையாக அமெரிக்காவிற்கு நான் வந்தபோது எனது மாஜி மனைவி Ph.D பயின்றுகொண்டிருந்தார். 1985ல் நாங்கள் நியூயார்க்கில் இருந்தபோது, துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கம் குறித்து சிறிய, மிகச்சிறிய செய்தி நியூயார்க் டைம்ஸின் 12வது பக்கத்தில் வெளியாகியிருந்தது. நியூயார்க்கின் துருக்கியர் ஒருவருக்கொருவர் அழைத்து, “நியூயார்க் டைம்ஸில் வெளியான துருக்கி குறித்த செய்தியைப் பார்த்தாயா?” என கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்களுக்கு பெருமையாக இருந்தது. இன்று அல்லது கடந்த மூன்று வருடங்களில் ஒவ்வொரு நாளும் துருக்கி குறித்த ஏதோ ஒரு செய்தி இடம்பெறுகிறது. முதலில், துருக்கியின் மீதான கவனம் அதிகரித்தது.ஆனால் அதுவும் கூட ஒரு மாற்றம்தான். ஆரம்பத்தில் இது சுவாரசியமாகயிருந்தது. ஏனென்றால் ஐரோப்பியர்களை நோக்கி இஸ்லாமியம், ஜனநாயகம் மற்றும் நவீனம் செல்வதாகத் தோன்றியது. அது நல்ல விஷயம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் அதற்கு எதிர்த்திசையில் சர்வாதிகாரவாதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும் சிறையிலடைக்கப்பட்டனர். ஜனநாயகமானது குறுகியதாக, மிகக் குறுகியதாக மற்றும் வரம்புக்குட்பட்டதாகிவருகிறது. கல்வியறிவுள்ளவர்கள், மேற்கத்தியத்தாக்கமுடைய மக்களெல்லாம் மகிழ்ச்சியற்றிருந்தார்கள். “அடுத்து என்ன நடக்கும்” என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இதுதான் மனநிலை. சொல்லப்போனால், இவை எல்லாவற்றினாலும் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக வேலை செய்துகொண்டும் எழுதிக்கொண்டுமிருந்தேன். ஏனென்றால் இந்த செய்திகளுடன் தனித்திருப்பதென்பது மன உளைச்சல் தருவதாய் இருந்தது.

அடுத்து,ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வருவோம்; நீங்கள் இப்போது வேலை செய்துகொண்டிருக்கும்போது உங்கள் அலுவலகம் அல்லதுநீங்கள் இருக்கும் கடற்புர வீடாகயிருக்கட்டும், இணையத்தைப் பார்ப்பதில்லையா? புனைவோடு மட்டும்தான் சூழ்ந்திருக்கிறீர்களா? உங்களது வேலை முறை என்ன?

நான் இப்போதிருப்பது ஒரு கோடைகால இல்லத்தில். இங்கு இண்டர்நெட் இருக்கிறது. நான் நிறைய டிவிடிக்களோடும் வாசிக்க விரும்பும் புத்தகங்களோடுமே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். ஆகவே புத்தகங்கள், டிவிடிக்கள், எனது வேலை என நான் மிக சுதந்திரமாகவும் தனியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். மேலும் இதையெல்லாம் எல்லா பொழுதுகளிலும் நிச்சயமாக செய்துகொண்டிருக்கிறேன். என் காதலியிடம் சொல்வது போல்; தன் நாட்டில் திகிலூட்டும் சம்பவங்கள் நிகழும்போது தனது புத்தகங்களோடும் திரைப்படங்களோடும் தனது எழுத்துகளோடும் மகிழ்ச்சியோடு இருக்கும் ஒருவன் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான். நியாயமற்ற முறையில் நிறைய நிரபராதிகள் சிறையிலடைக்கப்பட்டார்கள். குற்ற உணர்ச்சியின்றி இருக்கவே முடியாது, ஆகவே எல்லா நேரமும் வேலை செய்துகொண்டிருப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதும்தான் இதற்கான எனது தீர்வு. வேறு வழியே கிடையாது.

நீங்கள் கொண்டுவந்துள்ள புத்தகங்கள், டிவிடிக்கள் என்னென்னவென்று நமது வாசகர்களுக்காக சொல்லுங்கள். அவர்களுக்கு அவை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

[சிரிக்கிறார்]. ஓ! Mike Leighன் ‘Naked’. இத்தனை வருடங்களாய் பார்க்காமல் இருந்திருக்கிறேன். ‘ஓ! நீ இன்னும் பார்க்கவில்லையா? கண்டிப்பா பார்க்க வேண்டும்’ என்பதாக எண்ணிக்கொண்டேன். இத்தாலியின் சிறந்த இயக்குனரான Luchino Visconti, பல வருடங்களுக்கு முன்பாக Il Gattopardo (The Leopard) எனும் திரைப்படத்தை ஒரு நாவலை அடிப்படையாகக்கொண்டு-

Lampedusa, சரியா?

Lampedusa நாவலை அடிப்படையாகக்கொண்டு இயக்கினார். தற்போது, சிசிலியில் இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு Lampedusa பரிசு தரவிருக்கிறார்கள். மேலும் அடுத்த வாரம் நாங்கள் பாலெர்மோ செல்லவிருக்கிறோம். ஆகையால் மறுபடியும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மகத்தான நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவான மகத்தான திரைப்படம் இது. Burt Lancaster, Claudia Cardinale, Alain Delon கூட நடித்திருக்கிறார்கள். ஆனால் படங்களை விட நாவல்கள்தாம் சிறந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இதில் மாற்று கருத்து இல்லையா? நாவலைத் தழுவி உருவான படங்களில் எதுவுமே நாவலை விட சிறந்ததாக இல்லையா?

[சிரிக்கிறார்]. சில படங்கள் உள்ளன.

 

The Godfather.

உங்களோடு பேசியதில் மகிழ்ச்சி.

எனக்கும் உங்களோடு பேசியதில் மிக்க மகிழ்ச்சி. நீச்சலாடி மகிழுங்கள்.

ஓ, ஓகே. நான் நீந்தச் செல்கிறேன். மிக்க நன்றி. Bye!

——————————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *