“முழுமையைத் தேடிக் கண்டடையும் அடிப்படை விடுதலைக்கான உந்துதல்”

ஹார்வர்ட் பல்கலையில் ஓரான் பாமுக் 2009-ல்  நிகழ்த்திய சார்லஸ் எலியட்
நார்ட்டன் சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு 'The Naive and  Sentimental Novelist'
என்கிற பெயரில் நூலாக வெளியானது. அதிலிருந்து'Literary Character,Plot,Time' 
கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.கட்டுரையின் முதல் பகுதி இது.
இரண்டாம் பகுதி அடுத்த இதழில் வெளிவரும்:

Literary Character, Plot, Time

    

ஓரான் பாமுக்

 

தமிழில்: பூ.கொ.சரவணன்

 

 

 


என்னுடைய இளமைப்பருவத்தில் நாவல்களைத் தீவிரமாக அணுக ஆரம்பித்தே வாழ்க்கையைத் தீவிரமாக அணுக கற்றுக் கொண்டேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதையும், நம்முடைய சொந்த முடிவுகள் நம்முடைய வாழ்க்கையைச் செதுக்கும் என்பதையும் உணர்த்துவதன் மூலம் இலக்கிய நாவல்கள் வாழ்க்கையைத் தீவிரமான முறையில் அணுக இணங்க வைக்கின்றன. முழுவதும் இறுகிய, ஓரளவிற்கு இறுக்கமான சமூகங்களில் தனிமனித தேர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால் நாவல் கலை அங்கே வளர்ச்சியடையாமல் கிடக்கிறது. ஆனால், இந்தச் சமூகங்களில் நாவல் கலை வளர்ச்சி பெறுகையில், இந்த நாவல்கள் மக்களைத் தங்களுடைய வாழ்க்கையை மறு ஆய்வு செய்யச்சொல்லி அழைப்பு விடுகின்றன. இதனை  நாவல் கலையானது தனிமனிதர்களின் சொந்த பண்புகள், உணர்ச்சிகள், முடிவுகள் குறித்து மிகவும் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட இலக்கிய விவரணைகளின் மூலம் சாதிக்கிறது. மரபார்ந்த விவரிப்புகளை ஓரங்கட்டிவிட்டு, நாம் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தால் நம்முடைய உலகமும், அதில் நாம் மேற்கொள்ளும் தேர்வுகளும் வரலாற்று நிகழ்வுகள், உலகப்போர்கள், மன்னர்கள், பாஷாக்கள், ராணுவங்கள், அரசுகள், கடவுள்களின் முடிவுகளுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை என உணர்வோம். இன்னமும் குறிப்பாக, நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் மேற்குறிப்பிட்டவற்றை விட இன்னமும் சுவாரசியமிக்கதாக மாறக்கூடிய வல்லமை பொருந்தியவை ஆகும். என்னுடைய இளமைக்காலத்தில் நாவல்களைப் பேரார்வத்துடன் வாசித்து இன்பம் பெற்றதன் மூலம், நம்பமுடியாத விடுதலையுணர்வு, தன்னம்பிக்கையைப் பெற்றேன்.

இந்தக் கணத்தில் தான் இலக்கியக் கதாபாத்திரங்கள் காட்சிக்குள் நுழைகின்றன. ஒரு நாவலை வாசிப்பது என்பது உலகத்தை நாவலின் கதாபாத்திரங்களின் கண்கள், மனம், ஆன்மாவின் வழியாகக் தரிசிப்பதாகும். நவீன காலத்திற்கு முன்னால் எழுதப்பட்ட கதைகள், காதல் காவியங்கள், இதிகாசங்கள், மாஸ்னாவிஸ் (துருக்கிய, பாரசீக, அரேபிய, உருது மொழிகளில் சந்த நயத்தோடு கூடிய ஈரடிச் செய்யுள்களில் சொல்லப்பட்ட கதைகள்) ஆகியவற்றில் கதைகள் வாசகரின் பார்வையில் இருந்தே சொல்லப்பட்டன. இந்த வகையான பழைய விவரிப்புகளில், நாயகன் ஒரு குறிப்பிட்ட களத்தில் நடமாட விடப்படுவான். வாசகரான நாம் வேறொரு களத்தில் நின்று கொண்டிருப்போம். ஆனால், நாவலோ நம்மைக் கதைக்களத்திற்குள் வர சொல்லி வரவேற்கிறது. நாம் பிரபஞ்சத்தை நாயகனின் பார்வையில், அவன் உணர்ச்சிகளின் வழியாகக் கண்டடைகிறோம். வாய்ப்பிருந்தால் அவனுடைய வார்த்தைகளின் மூலமே இந்த அனுபவத்தைப் பெறுகிறோம். (வரலாற்று நாவல்களில் இப்படிப்பட்ட கதை சொல்லலுக்கான வாய்ப்புகள் மட்டுப்படுகின்றன. கதை சொல்லப்படும் காலத்தோடு கதாபாத்திரத்தின் மொழியானது இயல்பாகப் பொருந்திப்போக வேண்டும். வரலாற்று நாவல்களில்  யுக்திகள், கதையைக் கட்டமைக்கும் கருவிகள் தெளிவாகப் புலப்படும் போது அவை வெற்றியடைகின்றன.) கதாபாத்திரங்களின் வழியாகக் கதையை அணுகுவதன் மூலம், நாவலில் படைக்கப்படும்  உலகம் நமக்கு நெருக்கமானதாக, மேலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. இப்படி நாவலில் நமக்குக் கிட்டும் நெருக்கமே நாவல் கலைக்கு எதிர்க்க முடியாத ஆற்றலை வழங்குகிறது. நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களின் ஆளுமை, அறப்பண்புகள் குறித்து மையக்கவனம் செலுத்தப்படுவதில்லை, அதற்கு மாறாக, அவர்களின் உலகின் இயற்கையே பிரதானமாகிறது. நாவலின் மைய கதாபாத்திரங்களின் வாழ்க்கை, உலகினில் அவர்களுக்கான இடம், அவர்கள் எப்படி உலகில் உணர்கிறார்கள், எப்படி உலகை காணவும், அணுகவும் செய்கிறார்கள் என்பவையே இலக்கிய நாவல்களின் கருப்பொருளாகத் திகழ்கிறது.

நம்முடைய நிஜ வாழ்க்கையில், நம்முடைய நகரின் மேயராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியின்  குணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். அதேபோல நாம் படிக்கும் பள்ளிக்குப் புதிதாக வந்திருக்கும் ஆசிரியரை பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அவர் மாணவர்களிடம் கண்டிப்பானவரா? அவர் வைக்கும்  தேர்வுகள் நியாயமானவையா? அவர் கருணை உள்ளம்  படைத்தவரா? நம்முடைய அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் நபரின் குணம் நம்முடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். அவர்களுடைய விழுமியங்கள், ரசனைகள், பழக்க வழக்கங்கள் குறித்தெல்லாம் கவலைப்படுகிற நாம், அவர்கள் எப்படிப்பட்ட பார்வையோடு அணுகிறார்கள் என்பது குறித்துக் கவலைகொள்வதில்லை. நம்முடைய பெற்றோரின் குணநலன்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. (அவர்களுடைய பொருளாதாரச் சூழல், நாம் பெறுகிற கல்வி ஆகியவையும் மிக முக்கியமான தாக்கத்தை  செலுத்துகின்றன). வாழ்க்கை துணையைத் தேர்வு செய்வது அகவாழ்க்கையிலும், நாவலிலும் பகுத்து பார்க்க கூடிய, விறுவிறுப்பான ஒரு தலைப்பு. இத்தலைப்பில் பல்வேறு விவரணைகள் ஜேன் ஆஸ்டின் முதல் தற்காலம் வரை, ’அன்னாகரீனினா’வில் துவங்கி சமகாலப் பிரபல திரைப்படங்கள் வரை நீள்கிறது. இந்த எடுத்துக்காட்டுகளை எல்லாம் நினைவுபடுத்துவதன் நோக்கம் எளிமையானது. வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக, சிக்கலானதாக இருப்பதால் நம்மை  சுற்றியுள்ள மற்றவர்களுடைய பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் குறித்துத் தீவிரமான, நியாயமான ஆர்வம் நமக்குள் ஊற்றெடுக்கிறது. இந்த ஆர்வத்தின் மூலம் நிச்சயம் இலக்கியம் சார்ந்தது அல்ல. (இந்த ஆர்வத்தால் நாம் வதந்திகளை விரும்ப ஆரம்பிக்கிறோம், ஊர்க்கதைகளுக்கு விருப்பத்தோடு செவிமடுக்கிறோம்.) இந்த மானுட ஆர்வத்தில் இருந்தே நாவலில் கதாபாத்திரத்துக்குத் தரப்படும் அழுத்தம்  எழுகிறது. மனித வாழ்க்கையை விட ஒன்றைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இலக்கியத்தில் கடந்த 150 ஆண்டுகளில் பெரிய வெளியை ஆக்கிரமித்து இருக்கிறது. சமயங்களில் இந்தத் தீராத ஆர்வம் சுய மோகமாக, ஆபாசமானதாக மாறிவிடவும் செய்கிறது.

ஹோமரை பொருத்தவரை குணம் என்பது மாற்றத்துக்கு ஆட்படாத அவசியமான பண்பாகும். ஒடிஸசை சமயங்களில் அச்சமும், உறுதியாக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றமும் ஆட்கொண்டாலும்  அவன் எப்போதுமே பரந்த மனம் கொண்டவன், இதற்கு மாறாக, பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த ஒட்டோமான் பயண எழுத்தாளரான எவ்லியா செலிபியை பொறுத்தவரை தான் பயணப்படுகிற ஊரின் பருவநிலை, தண்ணீர், இடப்பண்பு முதலிய இயற்கை பண்புகளைப் போல அந்த ஊர் மக்களின் பண்புகளும் ஒரே மாதிரியானவை. அவரால் ஒரே மூச்சில் ட்ரெஜிபான்ட் நகரத்தில் மழை கொட்டுகிறது, ஆண்கள், பெண்கள் இருவரும் கடுமையானவர்கள் என்று எழுத முடிகிறது. ஒரு நகரவாசிகள் அனைவரும் ஒரே மாதிரியான பண்புநலன்களைக் கொண்டிருப்பார்கள் என்று இன்று சொன்னால் நாம் நக்கலாகப் புன்னகைப்போம். ஆனால், நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் ராசிபலன்கள் உலகத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறந்த தனிநபர்கள் அனைவரும் ஒரே பண்போடு இருப்பார்கள் என்று நம்புகின்றன. அதைப் பல கோடி மக்களும் நம்புகிறார்கள் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

ஷேக்ஸ்பியரே நவீன கற்பனை கதாபாத்திரம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான அச்சாரத்தை போட்டார் எனப்பலரை போல நானும் நம்புகிறேன். அதற்குப் பிறகு பல்வேறு வகையான இலக்கிய எழுத்துகள் மூலமும், 19-ம் நூற்றாண்டின் நாவல்களின் மூலமும் கதாபாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு கதாபாத்திரம் ஒரே அடிப்படை பண்பை கொண்டதாக, ஒற்றைப் பரிமாணத்தில் இயங்குவதாக, பண்புநலனில் வரலாற்றோடு, சின்னங்களோடு தொடர்புடைய ஒன்றாகவே இருந்து வந்தது (மோலியேரேவின் மகத்தான அங்கதத்தைத் தாண்டி, அவரின் The Miser நாடகத்தின் முதன்மை கதாபாத்திரம் நாடகம் முழுவதும் கஞ்சனாகவே இருப்பான்) இந்த நூற்றாண்டுகால வரையறையை விட்டு வெளியேற ஷேக்ஸ்பியரும், ஷேக்ஸ்பியரின் விமர்சனமும் உதவின. முரண்பட்ட உணர்ச்சி வேகங்கள், சூழ்நிலைகளால் கட்டமைக்கப்படும் சிக்கலான உளப்பொருளாகக் கதாபாத்திரம் மாறியது. பல்வேறு நுண்மையான பண்புகளின் கலவையாக மனிதன் இருக்கிறான், அதனை எளிமைப்படுத்திவிட முடியாது என்பது தஸ்தாயெவ்ஸ்கி மனித இயல்பைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டதில் வெளிப்படுகிறது. வாழ்க்கையின் வேறெந்த அம்சத்தை விடவும் கதாபாத்திரங்களே தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் வலிமை மிக்கதாய், நாவல் முழுக்க ஆதிக்கம் செலுத்துவதாய், அழிக்க முடியாத தன்னுடைய முத்திரையைப் பதிப்பதாய்த் திகழ்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பதன் மூலம் நாம் கதாபாத்திரங்களை உணர்ந்து கொள்கிறோம், வாழ்க்கையை அல்ல. ’காரமஸோவ் சகோதரர்கள்’ எனும் உண்மையிலேயே மகத்தான நாவல் குறித்த விவாதம் மூன்று சகோதரர்கள், ஒரு ஒன்றுவிட்ட சகோதரன் என்கிற நான்கு வகையான மனிதர்கள், நான்கு கதாபாத்திரங்களைக் குறித்து விவாதிப்பதாகவே அமைகிறது. ஷில்லர் எப்படி அப்பாவித்தனமான, உணர்ச்சிவயமான கத்பாத்திரங்கள் குறித்து அசைபோட்டுக் கொண்டே இருந்தாரோ, அது போலத் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கையில் முழுமையாக அவரின் கதாபாத்திரங்களோடு கலந்து விடுகிறோம். அதேசமயம், நாம் இப்படியும்  யோசிக்கிறோம்: வாழ்க்கை இப்படி இருப்பதில்லையே.

அறிவியல் இயற்கை விதிகள் குறித்து மேற்கொண்ட கண்டுபிடிப்புகள், நேர்மறையாக்கம் (positivism) தத்துவம் ஆகியவற்றால் தாக்கமுற்ற 19-ம் நூற்றாண்டு நாவலாசிரியர்கள் நவீன தனிமனிதர்களின் ரகசிய ஆன்மாக்கள் குறித்து விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள். இதன் மூலம் ஒரு மகத்தான நாயக வரிசையை, உறுதியான கதாபாத்திரங்களைப் படைத்தார்கள். இந்த வேறுபட்ட கதாபாத்திரங்கள் சமூகத்தின் பல்வேறு முகங்களை அடையாளப்படுத்தின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலின் வெற்றி, பண்புகள் குறித்துப் பேசும் E.M.பார்ஸ்டரின் மிக முக்கியமான படைப்பான ‘Aspects of the Novel’ நூலின் பெரும்பகுதியை கதாபாத்திரம், பல்வேறு வகையான நாவல் நாயகர்கள், அவர்களை வகைப்படுத்துவது, அவர்கள் எப்படி வளர்த்து எடுக்கப்பட்டார்கள் என விவரிப்பது ஆகியவற்றிலேயே செலவிட்டார். இந்தப் புத்தகத்தை என்னுடைய இருபதுகளில் வாசித்துவிட்டு ஒரு நாவலாசிரியனாக ஆகியே தீரவேண்டும் என்கிற வேட்கை எனக்குள் பாய்ந்தது. பார்ஸ்டரின் பார்வையில் இலக்கியத்தில் கதாபாத்திரம் மிக முக்கியமானது, எனக்கு உண்மையான வாழ்க்கையில் மனித கதாபாத்திரம் அத்தனை முக்கியமானது இல்லை என்று தோன்றியது. ஆனால், அதற்குப் பிறகு எனக்கு இப்படித் தோன்றியது: நாவல்களில் கதாபாத்திரம் முக்கியம் என்றால், நிஜ வாழ்க்கையிலும் அவை முக்கியமானதாக இருக்க வேண்டும். எனக்கே வாழ்க்கையைப் பற்றி இன்னமும் பெரிதாகத் தெரியாதே. ஆனால், ஒரு வெற்றிகரமான நாவலாசிரியர் டாம் ஜோன்ஸ், இவான் கரமஸோவ், மேடமே போவாரி, பேரே கோரியோட், அன்னா கரீனினா, ஆலிவர் ட்விஸ்ட் போல ஒரு மறக்க முடியாத நாயகனை தோற்றுவிக்க வேண்டும் என்று நானே முடிவு கட்டிக்கொண்டேன். என்னுடைய இளம்வயதில் இப்படிக் கனவு கண்டாலும், காலப்போக்கில் என்னுடைய நாவல்கள் எதற்கும் அக்கதையின்  நாயகனின் பெயரை சூட்டவில்லை.

நாவலின் நாயகர்களின் பண்புநலன்கள், தனித்திறன்கள் குறித்துக் காட்டப்பட்ட மிகையான, அளவுக்கு மீறிய ஆர்வம் நாவலைப்போலவே ஐரோப்பாவில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்குப் பரவியது. புதிய வெளிநாட்டு பொம்மையான ‘நாவலை’ பார்த்துவிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களுடைய கதைகளை நாவல் என்கிற கருவியைக் கொண்டு பார்த்தார்கள். தங்களுடைய கலாச்சாரங்களிலும் ஒரு இவான் கரமஸோவ்வை, டான் குய்க்ஸோட்டை உருவாக்க தலைப்பட்டார்கள். ஐம்பதுகள், அறுபதுகளின் துருக்கிய விமர்சகர்கள், துருக்கிய எழுத்தாளர்களை இப்படிப் புகழ்ந்தார்கள், “ஒரு ஏழை துருக்கிய கிராமத்தில் கூட ஒரு ஹாம்லெட்டையோ, ஒரு இவான் கரமஸோவ்வையோ காண முடியும் என்று இந்த நாவல் புலப்படுத்துகிறது.: ரஷ்ய எழுத்தாளர் நிக்கொலாய் லெஸ்காவ் வால்டர் பெஞ்சமினால் பெருமளவில் நேசிக்கப்பட்டார். அவரின் மிகச் சிறந்த நாவெல்லாவிற்கு அவர் ‘Lady Macbeth of Mstensk’ எனப்பெயரிட்டு இருந்தது இந்தச் சிக்கல் எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்பதை நமக்கு நினைவுபடுத்த வேண்டும். (இந்த நாவலுக்கு முக்கியமான உத்வேகம் லேடி போவாரி கதாபாத்திரத்தில் இருந்தே பெறப்பட்டது. மெக்பத்தில் இருந்து அல்ல.) டச்சாம்பியனில் தயாராகும் கலைப்பொருட்களை மேற்கை சேராத நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைப்போல, மேற்கின் கலாசார மையங்களில் உருவாக்கப்பட்ட இலக்கியக் கதாபாத்திரங்களைப் பிரதி எடுக்கவேண்டிய வார்ப்பு அச்சுகளாக தங்களை பிற நாவலாசிரியர்கள்  கருதுவது நிகழ்ந்தது. நாவல் புதிதாகப் பூத்துக் கொண்டிருந்த மேற்கல்லாத நாடுகளில் இந்தப் பிரதி எடுத்தல் அங்கே இயங்கிய நாவலாசிரியர்களைப் பெருமிதவுணர்வு, திருப்தியால் நிறைத்தது. தங்களுடைய நாட்டு மக்களின் பண்புநலன்கள் மேற்கத்திய மக்களைப் போல ஆழமானதாக, சிக்கலானதாக இருக்கும் என்று அவர்கள் உணர்ந்தார்கள்.

ஆகவே, பல ஆண்டுகளுக்கு, உலக இலக்கிய, விமர்சகர்கள் சமூகம், நாவல்களில் படைக்கப்படும் கதாபாத்திரம் மனித கற்பனையின் ஒரு துளியே என்பதையும், அது ஒரு செயற்கையான கட்டுமானம் என்பதையும் மறந்தே போயிருந்தார்கள். ஷில்லர் பொருட்களில் உள்ள செயற்கைத்தனத்தைக் காண தவறிய மக்களை அப்பாவிகள் என அழைத்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இலக்கிய மைய கதாபாத்திரங்கள் குறித்து உலக இலக்கியம் எப்படி இத்தனை அப்பாவித்தனமாக இருந்தது எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். இது இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் உளவியல் சார்ந்த ஆர்வம் தொற்றுநோய் போல எழுத்தாளர்களிடையே வேகமாகப் பரவியது. அறிவியல் பொலிவை பெற்ற உளவியல் மீதான ஈர்ப்பால் இப்படிப்பட்ட அப்பாவித்தனம் ஏற்பட்டதா? உலகம் முழுக்க மக்கள் ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள் என்கிற அப்பாவித்தனமான, இழிந்த மானுட ஆர்வத்தால் ஏற்பட்டதா? மற்ற இலக்கியங்களுக்குக் குறைவான வாசகர்களே இருந்ததால், மேற்கத்திய இலக்கியங்களின் ஆதிக்கத்தால் மற்ற இலக்கியங்கள் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனவா?

பெரும்பான்மையானவர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஒன்று உண்டு. பார்ஸ்டரும் வாதிட்ட அந்தக் காரணம் என்ன? இலக்கியக் கதாபாத்திரங்கள் கதைப்போக்கை, அமைப்பை, நாவலின் கருப்பொருள்களை ஆக்கிரமித்துக் கொண்டன.  இறைவனே  புலப்படுத்திய அரும்பொருள் போலப் பல்வேறு எழுத்தாளர்கள் மாயையில் சிக்கியதை போன்ற ஒரு நம்பிக்கைக்கு ஆட்பட்டார்கள். அது, ஒரு நாவலாசிரியனின் அடிப்படை வேலை, ஒரு நாயகனை படைப்பதே என அவர்கள் நம்ப வைத்தது.  ஒரு நாவலாசிரியன் இதை வெற்றிகரமாகச் சாதித்த பின்பு, அந்த நாயகன் மேடையில் வசனத்தை எடுத்துக் கொடுப்பவன் போல நாவலாசிரியரின் காதுகளில் நாவலின் போக்கை கிசுகிசுப்பான் என நம்பினார்கள். பார்ஸ்டர் இந்த இலக்கியக் கதாபாத்திரத்திடம் இருந்து நாம் என்ன நாவலில் விவரிக்கப் போகிறோம் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அளவுக்குச் செல்கிறார். இந்தப்பார்வை நம்முடைய வாழ்க்கையில் மனித கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக, கதையைப் பற்றி உறுதியாக இல்லாவிட்டாலும் நாவலாசிரியர்கள் நாவல்களை எழுத துவங்கி விடுகிறார்கள், இப்படித்தான் அவர்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் எனக்காட்டுகிறது. நாவல் எவ்வளவுக்கு எவ்வளவு நீளமாக மாறுகிறதோ, அந்தளவுக்கு நாவலாசிரியருக்கு விரிவான தகவல்களைத் திட்டமிடுவது, அவற்றை மண்டையில் நினைவில் வைத்துக் கொள்வது,  கதையின் மையத்தைக் குறித்து ஒரு பார்வையை வெற்றிகரமாக உருவாக்குவது முதலியவை சவாலாக மாறுகின்றன.

இப்படி நாயகர்களை, அவர்களுடைய பண்புநலன்களை நாவலின் மையமாக வைக்கிற பார்வைகளை அப்பாவித்தனமாக, எந்த விமர்சனமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். இவற்றைப் படைப்பாற்றல் மிக்க எழுத்தை படிப்பதற்கான பயிற்சியின் அடிப்படை விதிகள், முறைகள் என அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இந்த  சொற்பொழிவுக்காக  அமெரிக்காவின் மகத்தான நூலகங்களில் நான் ஆய்வு செய்துகொண்டிருந்த போது நம்முடைய உளவியல், உணர்ச்சிகள் சார்ந்த கட்டமைப்பை போல , மனிதனை “கதாபாத்திரம்” என அழைப்பதே ஒரு வரலாற்றுக் கட்டுமானம் தான் என்பதை அடையாளப்படுத்தும் எழுத்துக்களை அரிதாகவே காண முடிந்தது. இலக்கியக் கதாபாத்திரங்களின் பண்புநலன்கள் நாம் நம்புகிற செயற்கைத்தனம். நாம் உண்மை வாழ்க்கையில் காணும் மக்கள் குறித்து நாம் பேசும் கிசுகிசுக்கள் போலச் சில இலக்கிய நாயகர்களின் மறக்கமுடியாத பண்புநலன்களைக் கொண்டாடும் நாவன்மை மிக்க உரைகள் வெற்று அலங்கார பேச்சு மட்டுமே ஆகும்.

நாவல் கலையின் அடிப்படை இலக்கு வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரிப்பதாகவே இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன் என்பதால் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு நாவல்களில் விவரிக்கப்படுகிற அளவுக்கு மக்களிடம் பண்புநலன்கள் இருப்பதில்லை. இந்த வார்த்தைகளை எழுதுகிற போது எனக்கு 57 வயதாகிறது. நாவல்களில் இல்லை ஐரோப்பிய நாவல்களில் நான் சந்திக்கும் எந்தக் கதாபாத்திரங்களிலும் என்னுடைய கதாபாத்திரத்தோடு ஒத்துப்போகும் ஒன்றை கண்டடையவே முடியவில்லை.

மேற்கின் நாவல்கள், இலக்கிய விமர்சனங்களில் கட்டமைக்கப்படுவதைப் போல நம்முடைய வாழ்க்கையைக் கட்டமைப்பதில் மனித பண்புநலன்களுக்குப் பெரிய பங்கில்லை. கதாபாத்திர உருவாக்கமே நாவலாசிரியரின் அடிப்படை இலக்காக இருக்க வேண்டும் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி நமக்கு என்ன தெரியுமோ அதற்கு எதிரான ஒன்றாக இருக்கிறது.

மறுமலர்ச்சிக்கு காலத்துக்குப் பிந்தைய தனித்துவமான பாணியிலான ஓவியங்களைப் போல, ஒரு கதாபாத்திரம் இருப்பது ஒரு மனிதருக்குத் தனித்துவத்தைத் தரவே செய்கிறது. அது அந்தத் தனிமனிதரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. நாவலின் தனித்துவம் மைய பாத்திரங்களின் பண்புநலன்களை விட அவர்களின் நிலப்பகுதி, சம்பவங்கள், சூழல்களில் எப்படிக் கச்சிதமாகப் பொருந்துகிறார் என்பதில் இருக்கிறது.

ஒரு நாவலை எழுதுகையில் எனக்குள் எழும் தீவிரமான ஆரம்பகட்ட உந்துதல்கள் எல்லாம்,  இதுவரை காட்டப்படாத வாழ்க்கையின் அம்சங்களை ஆராயும் தலைப்புகள், கருப்பொருள்கள் என்னுடைய எழுத்தில், வார்த்தைகளில்  வெளிப்படுகிறதா என்பதே ஆகும். நான் வாழும் இதே பிரபஞ்சத்தில் வாழும்  சக மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகள், சிந்தனைகள், சூழ்நிலைகளை வார்த்தைகளில் முதல் ஆளாக வடிப்பது என்கிற உந்துதலே என்னை செலுத்துகிறது.  ஆரம்பத்தில் இந்த வடிவமுறைகளால்,  மக்கள், பொருட்கள், உருவங்கள், சூழல்கள், நம்பிக்கைகள், வரலாறு ஆகியவற்றாலும், இவற்றை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்குவதால் , வேறொரு வடிவமைப்பு எழுவதால் உண்டாகும் சூழல்கள் குறித்துக் காட்சிப்படுத்தி, ஒத்துணர்ந்து, ஆழமாக அதனுள் மூழ்க விரும்புகிறேன். என்னுடைய இலக்கியப் பாத்திரங்கள் தீவிரமான பண்புநலன்களைக் கொண்டிருக்கின்றனவா, இல்லை மிதமான பண்புநலன்களை (என்னைப்போல) கொண்டிருக்கின்றனவா என்பதைப் புதிய உலகினில், புதிய சிந்தனைகளின் வழியாகத் தேட வேண்டும். உண்மையான வாழ்க்கையில் எப்படி ஒரு மனிதரின் பண்புநலன் தீர்மானிக்கப்படுகிறதோ அதைப்போலவே என்னுடைய நாவலின் மைய கதாபாத்திரத்தின் பண்புநலனும் தீர்மானிக்கப்படுகிறது. அவன் வாழ்கிற சூழ்நிலைகள், சம்பவங்கள் அதைத் தீர்மானிக்கிறது. நான் விவரிக்க விரும்பும் பல்வேறு சூழ்நிலைகளை இணைக்கிற கோடே கதை, கதைக்களன் என்பவை. கதையின் மைய கதாபாத்திரம் என்பவன் இந்தச் சூழ்நிலைகளால் செதுக்கப்பட்டு, அவற்றை மனதில் பதியும் வகையில் விவரிப்பவனே ஆவான்.

என்னுடைய மைய கதாபாத்திரங்கள் என்னைப்போல இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களோடு என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ள முயல்கிறேன். அந்தக் கதாபாத்திரமாகவே நான் மாறுவதாகக் கற்பனை செய்து கொள்வதன் மூலம் நாவல் நடைபெறும் உலகினை அவர்கள் பார்வையில் அணுகுகிறேன். நாவல் கலையை வரையறுக்கிற கேள்வி மைய கதாபாத்திரத்தின் ஆளுமையோ, கதாபாத்திரங்களின் பண்புநலன்களோ அல்ல. அதற்கு மாறாக, அந்தக் கதை நடைபெறும் உலகம் அவர்களுக்கு எப்படித் தோற்றமளிக்கிறது என்பதே முதன்மையான வினாவாகும். ஒருவரை புரிந்து கொள்ள விரும்பினால், அவரைக் குறித்து அறப்பார்வையைச் செலுத்த விரும்பினால், உலகம் அவரின் புள்ளியில் இருந்து எப்படிப் புலப்படுகிறது என அறிவது அவசியமாகிறது. இதற்கு நமக்குத் தகவல்களும், கற்பனையும் தேவைப்படுகிறது. ஒரு நாவலின் கலையானது அரசியல் படைப்பாக அதன் ஆசிரியர் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துகையில் மாறுவதில்லை. அதற்கு மாறாக, நம்மிலிருந்து வேறுபட்ட கலாசாரம், வர்க்கம், பாலினத்தைச் சேர்ந்த ஒருவரை புரிந்துகொள்ள முயல்கையிலேயே அது அரசியல் படைப்பாக மாறுகிறது. இதன் பொருள் அற, கலாசார, அரசியல் தீர்ப்பை எழுதுவதற்கு முன்பு தயை உணர்வு மிக்கவராக  நாவலாசிரியர் உணர வேண்டும்.

ஒரு நாவலாசிரியர் தன்னுடைய புத்தகங்களின் நாயகர்களோடு தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வது ஒரு குழந்தையைப் போன்ற குணத்தை ஒத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வரிக்கு வரி எழுதுகையில் நாம் குழந்தையைப் போல உணர்கிறோம், ஆனால், ஒன்றும் தெரியாத அப்பாவியாக அல்ல. ,என்னுடைய நாயகர்களோடு என்னை இணைத்துப் பார்க்கையில் நான் குழந்தைப்பருவத்தில் தனியாக விளையாடிய போது ஏற்பட்ட கிளர்ச்சியான உணர்வை பெறுகிறேன். மற்ற குழந்தைகளைப் போல, யாரோ ஒருவரின் இடத்தில் என்னைப் பொருத்தி பார்த்துக் கொள்கிறேன். கனவுலகினில் சஞ்சரித்து வீரனாக, புகழ்பெற்ற கால்பந்து வீரான, மகத்தான நாயகனாக என்னை நானே உருமாற்றிக்கொள்கிறேன். (ழான் பால் சார்த்தர் தன்னுடைய சுயசரிதையான LES MOTS என்கிற வார்த்தைகள்  நூலில் கவித்துவமாக ஒரு நாவலாசிரியரின் மனநிலை  குழந்தை தன்னைப் பிறரைப் போல வரித்துக் கொள்வதை எப்படி  ஒத்திருக்கிறது என விளக்குவார்.) நாவலில் நான் ஏற்படுத்தும் கட்டமைப்பு விளையாட்டுகள் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகத்தை எழுதுகையில் எனக்குள் ஏற்படுத்துகிறது. முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக நாவல்களை எழுதி என் வாழ்க்கைப்பாட்டை நடத்தி கொண்டிருக்கும் நான், குழந்தையாக விளையாடியதை போன்ற ஒரு ஆட்டத்தில் திளைக்கிற வேலையைச் செய்வதற்காகப் பேறுபெற்றவனாக உணர்கிறேன். ஒரு நாவலாசிரியனாக இருப்பது கடுமையான உழைப்பையும், சவால்களையும் கொண்டது என்றாலும் அது எனக்கு உற்சாகம் தருகிற தொழிலாகவே இருக்கிறது.

இப்படிக் கதாபாத்திரத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் செயல்முறை குழந்தையைப் போன்றது, ஆனால், அது முழுவதும் அப்பாவித்தனமான ஒன்றில்லை. ஏனெனில், அது முழுமையாக மூளையை வியாபித்துக் கொள்ள முடியாது. மூளையின் ஒரு பக்கத்தில் கற்பனையான கதை மாந்தர்களை  உருவாக்கி அவர்களை என் நாயகர்களைப் போலப் பேசவும், நடிக்கவும் வைத்து, இன்னொரு மனிதரின் தோலுக்குள் குடிபுகுந்து கொள்ள முயற்சிக்கிறது. இதற்குள் மூளையின் இன்னொரு பகுதி ஒட்டுமொத்த கட்டமைப்பு, எப்படி வாசகர் இதை உள்வாங்குவார், விவரணையை, நடிகர்களை எப்படி விரித்துப் பொருள் கொள்வார், என்னுடைய வரிகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என ஊகிப்பது என்று அது ஒரு பக்கம் இயங்கும். இப்படிப்பட்ட நுண்மையான கணக்கீடுகள் எல்லாம், நாவலின் பொதிந்திருக்கும் அம்சங்களோடு நாவலாசிரியரின் உணர்ச்சிகரமான-பிரதிபலிப்புக்குரிய பக்கத்தோடு தொடர்புடையது. இவை பால்யகாலத்தின் அப்பாவித்தனத்திற்கு நேர்மாறான சுய அறிதல் மிக்க உணர்வை புலப்படுத்துகின்றன.

நாவலாசிரியரின் அப்பாவித்தனமான பக்கத்திற்கும் (குழந்தையைப் போன்ற, விளையாட்டுத்தனமான, மற்றவர்களோடு பொருத்தி பார்த்துக் கொள்கிற பண்பிற்கும்) அவருடைய உணர்ச்சிகரமான-பிரதிபலிப்புக்குரிய (தன்னுடைய சொந்தக் குரலுக்குச் செவிமடுக்கிற, நுட்பங்கள் சார்ந்த பிரச்சினைகளில் மூழ்கிப்போகிற) பக்கத்திற்கும் இடையேயான மோதல் அல்லது ஒற்றுமைக்கு நல்ல எடுத்துக்காட்டு ஒன்று உண்டு. அது மற்றவர்களோடு தன்னைப் பொருத்திப்பார்த்து கொள்வதன் எல்லைகளை ஒவ்வொரு நாவலாசிரியனும் அறிந்தே இருக்கிறான். நாவல் கலை என்பது மற்றவர்களுக்காகக் குரல் கொடுக்கிற சாமர்த்தியம் ஆகும், அங்கே யாருக்கு குரல் கொடுக்கிறோமோ அவராகவே மாறிவிடுவது, அவரின் இடத்தில் தான் நிற்பதாக கருதிக்கொண்டு எழுதுவது. வேறொரு மனிதராக நம்மை வரித்துக்கொண்டு பேசுவதற்கு எப்படி எல்லைகள் இருக்கின்றனவோ அதைப்போல இன்னொருவரோடு நம்மைப் பொருத்திப்பார்த்துக் கொள்வதற்கும் எல்லைகள் உண்டு. கலாச்சாரம், வரலாறு, வர்க்கம், பாலினம் முதலிய அனைத்து பாகுபாடுகளையும் கடந்து எல்லாவகையான நாயகர்களையும்  உருவாக்குவது என்பது நம்மை நாமே கடந்து, முழுமையான ஒன்றை தேடி, கண்டடைவது. இந்த முழுமையைத் தேடிக் கண்டடையும் அடிப்படை விடுதலைக்கான உந்துதலே நாவல்களை எழுதுவதையும், வாசிப்பதையும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது. மேலும், அது ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப்போல உணர யத்தனிப்பதன் எல்லைகளைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

நாவல்களை எழுதுகையில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பிரதி எடுப்பது, நாவல்களை வாசிக்கையில் அவர்களைப் போல நம்மை வரித்துக்கொள்வதில் விடுதலையோடு தொடர்புடைய சிறப்பான ஒன்றுள்ளது. அந்த அறப்பார்வை குறித்து நான் சற்றே பேசலாம் என எண்ணுகிறேன். தன்னுடைய கதாபாத்திரங்களின் இடத்தில் தன்னை நாவலாசிரியன் பொருத்தி பார்க்கையில், ஆய்வுகள் செய்து, தன்னுடைய கற்பனையைப் பயன்படுத்துகையில் அவன் படிப்படியாக மாறுகிறான். அவன்  உலகத்தை நாயகனின் பார்வையில் இருந்து மட்டும் பார்ப்பதில்லை, அவனும் படிப்படியாக நாயகனை போலவே தோற்றமளிக்கிறான். நாவல் எழுதும் கலையை நான் நேசிப்பதற்கு இன்னுமொரு காரணம் அது நம்முடைய பார்வையைத் தாண்டி பயணித்து, நாம் வேறொன்றாக மாற உதவுகிறது. ஒரு நாவலாசிரியனாக, மற்றவர்களோடு என்னைப் பொருத்தி பார்த்துக்கொண்டு, அதற்கு முன்புவரை நான் கொண்டிருக்காத பண்பை பெறுகிறேன். கடந்த 35 வருடங்களில் நாவல்களை எழுதுவதன் மூலமும், மற்றவர்களின் இடத்தில் என்னை நிறுத்தி பார்ப்பதன் மூலமும், என்னை இன்னமும் நுண்மையான, சிக்கலான ஒருவனாக உருமாற்றிக்கொண்டேன்.

நம்முடைய எல்லைகளைத் தாண்டி, அனைவரையும் புரிந்து கொள்ள முயல்வது, அனைத்தையும் ஒரு பெருந்திரட்சியின் அங்கமாகக் காண்பது, முடிந்தவரை பல்வேறு மக்களோடு தன்னைப் பொருத்தி பார்ப்பது, பார்க்க முடிகிற பார்வைகளில் எல்லாம் விஷயங்களை அணுகுவது ஆகியவற்றின் மூலம் நாவலாசிரியன் சீன நிலத்தோற்றத்தின் கவித்துவத்தைப் புரிந்து கொள்ள மலை சிகரங்களைச் சென்றடையும் சீனத்து ஓவியர்களை ஓத்திருக்கிறான். சீனத்து ஓவியங்களை முதல் முறை பார்க்கும் பேதைமை மிக்க ஆர்வலர்கள்  எல்லாவற்றையும் மேலே இருந்து பார்த்துவிட்டு இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன எனக் கருதுவார்கள். ஆனால், சீன நிலத்தோற்ற ஓவிய வல்லுனரான ஜேம்ஸ் காஹில் நினைவூட்டுவதைப் போல, ஒரு குறிப்பிட்ட உச்ச புள்ளியில் நிலப்பகுதியின் சகலமும் தெரியும், அங்கு நின்றுகொண்டு ஓவியம் வரையப்படுகிறது என எண்ணுவது கற்பனையான ஒன்றே. மலையுச்சியில் நின்றுகொண்டு எந்த ஓவியனும் தன்னுடைய ஓவியத்திற்கு உயிர் கொடுப்பதில்லை. அதைப்போல, ஒரு நாவலின் உள்ளடக்கம் இப்படி அனைத்தையும் முழுமையாகப் பார்த்துவிடக்கூடிய அந்த வசதியான கற்பனை முனையைத் தேடுவதில் இருக்கிறது. இந்த வசதியான கற்பனை முனையில் தான் ஒருவரால் நாவலின் மையத்தைத் தெளிவாகப் பகுத்துணர முடியும்.

ஒரு மகத்தான நிலப்பகுதியில் கற்பனையான கதாபாத்திரம் உலவி, அதில் வாழ்ந்து, அதனோடு உரையாடி, அதன் அங்கமாக ஆகிவிடுகிறது.  இந்த வெளிப்பாடுகளே அவனையோ, அவளையோ மறக்கமுடியாத ஒருவராக மாற்றுகிறது. அன்னா கரீனினா அவளுடைய ஆன்மாவின் ஊசலாட்டங்களாலோ, அவளுடைய பண்புக்கூறுகளின் கலவையான குணநலன்களாலோ மறக்க  முடியாத ஒருத்தியாக நம்முள் பதியவில்லை. அவள் தன்னுடைய பரந்துவிரிந்த, வளமையான நிலப்பகுதியோடு கலந்து விடுகிறாள். இதனால் அந்தக் கலத்தல் அவளை அதியற்புதமாக வெளிப்படுத்துகிறது. நாவலை வாசிக்கும் போது, நாம் அந்த நிலப்பகுதியை நாயகியின் பார்வையில் காண்கிறோம், நாயகியையே அந்த நிலப்பகுதியின் செல்வமாகக் காண்கிறோம். பின்னொரு கணத்தில், அன்னா கரீனினா மறக்க முடியாத அடையாளமாக மாறுகிறாள், அவள் ஒரு சின்னத்தைப் போல மாறி தான் அங்கமாக இருந்த நிலப்பகுதியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறாள். நெடிய, செறிவான நாவல்களின் தலைப்புகள்- டான் குயிக்ஸாட், டேவிட் காப்பர்ஃபீல்ட், அன்னா கரீனினா அந்த நாவலின் நாயகர்களின் பெயராலே வழங்கி வருவது மைய கதாபாத்திரத்தின் அரை அடையாள (semi-emblematic) பணியை  அழுத்தி சொல்கிறது. அந்த அரை அடையாளப்பணி இதுதான்-ஒட்டுமொத்த நிலத்தையும் வாசிப்பவரின் மனதில் கட்டியெழுப்புவது. நாவலின் பொதுவான கட்டமைப்போ, யதார்த்த உலகமோ மட்டுமே நம்முடைய மனதில் அடிக்கடி பதிகிறது. இதனையே நான் “நிலப்பகுதி” என்கிறேன். இந்த நிலப்பகுதியின்  அங்கமே நாயகன் என நாம் உணர்கிறோம், நாம் நினைவுபடுத்திக்கொள்கிறோம். ஆகவே, நம்முடைய கற்பனையில் அவனுடைய, அவளுடைய பெயர் நாவலில் விவரிக்கப்படும் நிலப்பகுதியின் பெயராக மாறிவிடுகிறது.

மைய கதாபாத்திரங்களைத் தாங்கள் வாழும் நிலத்தின் அங்கமாக வெளிப்படுத்துவது என்கிற காலங்காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் முறையாகும். இது  குறித்து ஷேக்ஸ்பியர் குறித்த தன்னுடைய உரைகளில் கோலரிட்ஜ் இவ்வாறு விளக்கினார்: நாடகங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் ஆனவை, (‘Dramatis Personae) நம்முடைய சொந்த வாழ்க்கையில் காணும் மனிதர்களைப் போல வாசகனே புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கதாபாத்திரம் குறித்து வாசகனிடம் சொல்லக்கூடாது.” கோலரிட்ஜின் இந்தக் கருத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எட்டுத் தலைமுறை எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் அதாவது இருநூறு ஆண்டுகளாக நாவல் கலையின் அடிப்படை சவால் மைய கதாபாத்திரத்தை கட்டமைப்பதிலும், அந்தக் கதாபாத்திரத்தை வாசகன் வெற்றிகரமாகக் கண்டடைவதிலும் இருக்கிறது என முடிவு கட்டிக்கொண்டார்கள்.

இந்த வார்த்தைகளை கோலரிட்ஜ்  ஷேக்ஸ்பியருக்கு இருநூறு ஆண்டுகள் கழித்து உதிர்த்தார் என்பதையும், ஆங்கில நாவல் அப்போது தான் பிறந்திருந்தது, சார்லஸ் டிக்கன்ஸ் தன்னுடைய முதல் நாவலை எழுதும் கணத்தை நெருங்கிக்கொண்டிருந்தார் என்பதையும்  நினைவில் கொள்ள வேண்டும். நாவலை வாசிக்கையில் உண்டாகும் சவால்கள், ஆழமான மகிழ்ச்சி ஆகியவை மைய கதாபாத்திரத்தை அவனுடைய செயல்களில் இருந்து புரிந்து கொள்வதில் ஏற்படுவதில்லை. அதற்கு மாறாக, அவனோடு நம்மைப் பொருத்திப்பார்க்க முடிகையில், குறைந்தபட்சம் நம்முடைய ஆன்மாவின் ஒரு துளியோடாவது அவன் ஒத்திருக்கையில், நம்மைவிட்டுத் தற்காலிகமாக வெளியேறி வேறொரு மனிதனாக மாறி, உலகத்தை வேறொருவரின் பார்வையில் அணுகுகிறோம். ஒரு நாவலின் உண்மையான பணியானது, உலகத்தில் எப்படி வாழ்வது எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை உணர வைக்கிறது என்றால் அது மனித குணநலன், உளவியலோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால், நாவலின் கதைக்கரு வெறுமையான உளவியலை விடச் சுவாரசியமானதாக இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தின் பாத்திரப்படைப்பு நம்முடைய கவனத்தைக் கோருவதில்லை. அதற்கு மாறாக, உலகத்தின் ஒவ்வொரு வண்ணம், நிகழ்வு, பழம், மலர்தல், நம்மை உணர்ச்சிவசப்படுத்தும் ஒவ்வொரு நிகழ்விற்கு அவனோ, அவளோ எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதே கவனத்துக்கு உரியது. ஒரு நாவல் கலையின் மகத்தான இன்பம், பரிசானது மைய கதாபாத்திரத்தை போல நாம் உணர்வதில் இருக்கிறது. இந்த உணர்ச்சி ஏற்படுவது மேற்சொன்ன கிளர்ச்சி நிலைகளிலேயே பொதிந்திருக்கிறது.

மாஸ்கோவின் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் ஒரு மாதிரியாக நடந்து கொள்ளும் அன்னா கரீனினா என்கிற பெண் குறித்து ஒன்றும் டால்ஸ்டாய் விவரிக்கவில்லை. மண வாழ்க்கையில் துயருற்ற ஒரு பெண், மாஸ்கோவில் நடன விழாவில் அழகிய, ராணுவ வீரனான இளைஞனுடன் நாட்டியமாடி விட்டுக் கையில் நாவலோடு வீடு திரும்புகையில் அவளுக்கு ஏற்படும் உணர்வுகளோடு தொடர்புபடுத்திக் கொள்கிறார். அன்னா கரீனினா மறக்க முடியாத கதாபாத்திரமாகத் திகழ்வதற்குக் காரணம், துல்லியமான எண்ணற்ற சிறிய தகவல்கள் தான். அவளைப்போலப் பனி விழும் இரவினை, வீட்டின் உள்ளறையை, அவள் வாசிக்கும் (அல்லது அவள் வாசிக்க முயன்று தோற்கிற ) நாவலை காண்கிறோம், உணர்கிறோம், அவளைப்போல அவற்றில் ஆர்வம் காட்டுகிறோம். இதற்கு முக்கியக் காரணம் டால்ஸ்டாய் தன்னுடைய கதாபாத்திரத்தை செதுக்கும் விதம். டான் குயிக்ஸாட் கதாபாத்திரத்தை செர்வண்ட்ஸ் காட்டுவதற்கு மாறாக, டால்ஸ்டாய் அன்னாவை மென்மையான, குழம்பிப்போன ஒருவளாகப் படைத்து அவளோடு நம்மைப் பொருத்திப்பார்க்க வைக்கிறார். டான் குயிக்ஸாட் நாவலை படிக்கையில் நாம் வெளியே இருந்து அதைக்காண்கிற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அன்னா கரீனினாவை வாசிக்கும் போது நாமும் அவளோடு பயணிக்கிறோம். நாவல் கலையின் தனித்துவமான பண்பானது எப்படிக் கதையின் மைய கதாபாத்திரம் உலகத்தைத் தன்னுடைய சகல உணர்ச்சிகளோடு எப்படிப் புரிந்து கொள்கிறது என்பதைப் புலப்படுத்துவதில் தான் இருக்கிறது. தூரத்தில் இருந்து நாம் காண்கிற அந்த நிலத்தோற்றம் நாயகனின் பார்வையில், அவனுடைய உணர்ச்சிகளின் வழியாக விவரிக்கப்படுகையில் நாம் அவனுடைய இடத்தில் நம்மைப் பொருத்தி பார்க்கிறோம், நெகிழ்ந்து போகிறோம். ஒரு கதாபாத்திரத்தில் இருந்து இன்னொரு கதாபாத்திரத்தின் பார்வைக்கு நகர்கையில் அந்த நிலத்தின் மையத்தில் நின்றால் ஏற்படுகிற உணர்வை பெறுகிறோம். நாவலின் கதாபாத்திரங்கள் நடமாடும் நிலப்பகுதி அவர்கள் மீது நிழலாக விழுவதில்லை. அதற்குப் பதிலாக, நாவலின் மைய கதாபாத்திரங்கள் அந்த நிலப்பகுதியின் பண்புகளை வெளிப்படுத்தவும், இன்னமும் வெளிச்சம் பாய்ச்சவுமே கற்பனையாகப் படைக்கப்பட்டு, செதுக்கப்படுகிறார்கள். இதைச் சாதிப்பதற்கு, தாங்கள் வரித்துக்கொள்ளும் உலகத்தோடு அவர்கள் நீக்கமற கலந்து விட வேண்டும்.

தொடரும்…

**************

பூ.கொ.சரவணன்:  மொழிபெயர்ப்பாளர். பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ‘Image Trap’ நூலை ‘பிம்பச்சிறை’ எனத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ராஜாஜியின் ‘Ambedkar refuted’ நூலை ‘அம்பேத்கருக்கு மறுப்பு’ என்கிற தலைப்பிலும் பி.சாய்நாத்தின் பல்வேறு கட்டுரைகளை ‘PARI’ தளத்திற்காகவும்  மொழிபெயர்த்திருக்கிறார்.  சுனில் கில்னானி, ராமச்சந்திர குஹா கட்டுரைகளையும் அவ்வப்போது மொழிபெயர்ப்பு செய்து தன்னுடைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *