குறுங்கதைகள்

கே.டி. ஷாகுல் ஹமீது

 

 

 

 

தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

ஓவியம் :அனந்த பத்மநாபன்


கருணை

 

“யாரோ கதவைத் தட்டின மாதிரி இருந்தது…”

“கடவுளே… தட்டின மாதிரிதான் எனக்கும் கேட்டது…!”

லாட்ஜ் ரூமின் நான்கு சுவர்களுக்கிடையில் வந்து சேர்ந்தபோது எங்களுக்குள்ளிருந்து உறை அவிழ்ந்து போன பயமும் சந்தேகங்களும் நடுக்கமும் மீண்டும் திரும்பி வரத் துவங்கின. கட்டிலின் இரண்டு பக்கங்களிலிருந்து நாங்கள் நடுங்கியபடி எழுந்தோம். நடுவே, எங்கள் மனதைத் தூண்டிய நீல நிற விரிப்பு மின்விசிறிக் காற்றில் நீலநீர்த் தடாகத்தைப் போல சிற்றலைகளை எழுப்பியது.

“தோ, தட்டறாங்க”

“அய்யோ, என்ன பண்றது?”

உண்மையில் இந்த இடத்துக்கு நாங்கள் வந்தது ஆலய தரிசனத்துக்காக அல்ல. பக்தி என்பது இப்போது எல்லோருக்கும் ஒரு திரைதானே. நடுநிசியில் பஸ் இறங்கிய உடன், பயந்து நடுங்கிய எங்கள் உடல்கள் எப்படி ஒரு லாட்ஜ் அறையை ஏற்பாடு செய்துகொள்வது என்கிற சிந்தனையால் பொங்கி வழியத் துவங்கின. அதிர்ஷ்டவசமாக ஒரு ஆள் எங்களை ஒரு நல்ல லாட்ஜுக்கு இட்டுச் சென்றான்.

“நீங்க போய் திறந்து பாருங்க”

“நானா?”

”அப்பறம் பொம்பளை நானா போகணும்?”

இரட்டைக் குழந்தைகளின் தந்தையான நானும் ராணுவ வீரனான கணவனுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் அனுப்பிவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்ட அவளும் இங்கே வந்து சேர்ந்ததன் ரகசியம் புரிந்திருக்கும் தானே?

”நான் கதவைத் திறக்கப் போறேன்”

“ம்ம்ம்”

“கோவில் தரிசனத்துக்காக வந்த தம்பதி இனி நாம”

“ம்ம்ம்”

கதவைத் திறந்து முகத்தை முன்நோக்கி நீட்டிய என்னால் அங்கே யாரையும் பார்க்க முடியவில்லை. மெல்ல கீழே பார்த்தேன். ஒரு சிறுவன்! பின்நோக்கித் திரும்பியபோது அவளின் இறுக்கமான முகம் தளர்ந்து தளர்ந்து சிரிப்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. கதவருகில் சிறுவன் கழன்று விழுகிற ட்ரவுசரை மேலே இழுத்து விட்டபடி நிற்கிறான். அவள் என் அருலி வந்துவிட்டாள். பெருமூச்சுகளின் அடங்காத காற்று எங்களுக்குள்ளிருந்து வெளியே அலையலையாய் வீசிக்கொண்டிருந்தது. சிறுவனின் தலைக்கு மேலாக தலையை நீட்ட வராந்தாவின் இரு பக்கமும் பார்த்தோம். சில அறைகளுக்கு முன்னால் இதே போல் சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

“நான் உள்ள வரட்டுமா?” சிறுவன் கேட்டான்.

“வேண்டாம்”

“வேண்டாம். கிளம்பு, கிளம்பு.”

நாங்கள் கதவை சாத்தினோம். நீல விரிப்பு எங்களை வசீகரிக்கிறது. படுக்கையில் அமர்ந்த உடன் நீலத் தடாகத்தின் மேலாக கைகள் ஊர்ந்து சேரத் துவங்கின. சட்டென்று போன் ஒலித்தது. லாட்ஜ் ஓனர் பேசினார்:

“அந்தப் பையனை உள்ளே கூப்டுக்கலையா?”

“இல்லை.”

“போலீஸ் ரெய்டு வந்தாலும் வருவாங்க. முன் ஜாக்கிரதையா…”

“ச்சே… எங்களைப் பத்தி என்ன நினைச்சீங்க நீங்க?”

“சாரே, நாலஞ்சு வருசமாச்சு நாங்க லாட்ஜ் ஆரம்பிச்சு. உண்ணியைப் பார்த்தாலே தெரியுமே ஊர்ப் பஞ்சம். சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். இனி உங்க இஷ்டப்படி செய்யுங்க.”

போனை வைத்துவிட்டார். ரிசீவரில் கேட்ட சத்தங்களைக் கேட்ட அவள் ஓடிச்சென்று கதவைத் திறந்தாள். சிறுவன் வராந்தாவில் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பிடித்து உள்ளே இழுத்து கதவை அடைத்தாள்.

அவன் அறையின் மூலையில் அமர்ந்துகொண்டான். போர்வை வேண்டுமா என்று கேட்டபோது வேண்டாம் என்று தலையாடினான். சுவரை நோக்கி முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டான். நாங்கள் கட்டிலில் இருந்தபடி அவனைப் பார்த்தோம். நான் விளக்கை அணைக்கத் தயாரானபோது அவள் தடுத்தாள்:

“வேண்டாம்… அப்பூ….” அவள் தொடர்ந்தாள்: “என் அப்பு மாதிரி இருக்கு இவனோட முடி. அதே வயசுதான் இருக்கும் இவனுக்கும்.”

நான் கட்டிலில் சாய்ந்து படுத்தேன். ஜன்னல் கண்ணாடியினூடே நிலாவும் அறைக்குள் வெளிச்சத்தை வாரி இறைத்துகொண்டிருந்தது. நிலா வெளிச்சத்தைப் பார்த்தபடி அவள் பேசுகிறாள்.

“அப்பு பாட்டிகிட்ட என்னைக் கேட்டிட்டுருப்பான் இல்லையா? ராத்திரில என்னைப் பிரிஞ்சு அவன் படுத்ததில்ல. என் அப்பு அழுதிட்டிருப்பானா?”

”தூங்கியாச்சா?” அவள் என் நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள்: ‘குழந்தைகளை நெனச்சிட்டிருக்கீங்களா?”

”இல்ல. என் தம்பிய நெனச்சேன்.” நான் சொன்னேன். ”அந்தப் பையனோட வலது காலை கவனிச்சியா? மெலிஞ்சுபோய்… நடக்கும்போது நொண்டறான். போலியோ. எனக்கு போலியோ வந்த ஒரு தம்பி இருந்தான். நாந்தான் அவன் கைபிடிச்சு அவனை தினமும் ஸ்கூலுக்குக் கொண்டு போனேன்.”

“அவன்…?”

“செத்துட்டான். பத்தாவது வயசில. மஞ்சள் காமாலை.”

அவள் என் நெஞ்சில் தலை வைத்துப் படுத்தாள். நான் அப்போதும் ஜன்னல் இடைவெளியில் துண்டு ஆகாயத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களின் நிசப்த நிமிடங்களை குதிரை வண்டிகளின் சத்தங்கள் இடையிடையே துண்டித்துக் கொண்டிருந்தன.

பாதசாரிகளின் குரல்கள் கேட்கத் துவங்கியபோது நான் எழுந்தேன். ஜன்னலைத் திறந்து கீழே பார்த்தேன். கோவிலுக்குப் போகும் வழியில் ஆட்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையே குதிரைவண்டிகளும் போகின்றன. கடைகள் திறக்கப்படும் சத்தம். காற்று சுகந்த தூபங்களின் மணத்தோடு கடந்து போகிறது. அவள் என்னருகே வந்து கீழே பார்த்தபோது கோவிலில் இருந்து பாட்டு கேட்க ஆரம்பித்தது.

நாங்கள் பைகளைத் தோளில் மாட்டிக்கொண்டோம். தரையில் படுத்துக் கிடக்கிற சிறுவனைப் பார்த்தோம். அவன் சுருண்டு சுருங்கிப் படுத்திருக்கிறான். நான் அவன் காலடியில் அமர்ந்தேன். கால்களைப் பார்த்தேன். மென்மையாகத் தடவிக் கொடுத்தேன். அவள் அப்போது அவனுடைய முடியிழைகளினூடே விரல்களால் அளைந்துகொண்டிருந்தாள்.

கோவிலிலிருந்து வெடிக்கட்டு ஓசைகள் முழங்குகின்றன. நாங்கள் எழுந்தோம். கதவைத் திறந்து வெளியே வந்தோம். கதவை அடைக்கும்போது இன்னும் ஒரு முறை அவனைப் பார்த்தோம். வராந்தாவின் இருட்டில் நடந்து, கீழே போகும் படிக்கட்டுகளில் இறங்கிப் போகும்போது ஒரு சிறுவன் அழும் சத்தம் கேட்டது. நான் அசைவற்று நின்றேன். பின்னால் உள்ள படியில் அவளும் நிச்சலனமாகிவிட்டிருந்தாள்.

“அப்பூ…!”

”அவன் எதாவது கெட்ட கனவு கண்டிருப்பான்.”

”அவன் தானா? இல்ல, வேற ஏதாவது ரூம்ல இருக்கற பையனா?”

“வா, நாம போகலாம். விடியறதுக்கு முன்னால…”


சித்திர வேர்கள்

அலைந்து திரிந்தபடியான பயணத்தின் இடையே எப்படியோ அந்த நகரத்தை அடைந்தான் அவன். செய்தித்தாள் பார்க்கலாம் என்று நூலகத்தின் படிகள் ஏறினான். ஆங்கில நாளிதழ் தேடிக்கொண்டிருக்கும்போதுதான் சுவரில் இருந்த சித்திரம் அவன் கண்களை சுழலில் சிக்கவைத்தது. ஓவியத்தின் அருகில் சென்ற அவன் கேன்வாசில் இருந்த ஓவியனின் பெயரின் மேல் விரல்களை ஓட்டினான். ஓவியத்தில் இருந்த தபேலாவில் மெல்லத் தட்டினான். மெல்ல மெல்ல பொங்கி இரைந்து வரும் பெரும் ஆட்கூட்டத்தின் கூச்சல் காதுகளை நடுக்கியது! தபேலாவின் தோலைப் பிளந்துகொண்டு இரண்டு திரிசூலங்கள் மேலெழும்பியபோது அவன் திரும்பி ஓடினான், படிகள் இறங்கினான். நகரத்தின் ஏதோ பாதிகளின் வழியே ஓடிக்கொண்டிருக்கிறான் அவன்…!

கடைசியில், கடற்கரையின் மணலில் சென்று வீழ்ந்தான். குளிர்ந்த கடல்காற்றில் மூச்சுவாங்கியபடி தலையை உயர்த்திப் பார்த்தபோது, முகத்திலிருந்து உதிர்கின்ற மணல்தரிகளுக்கிடையே கடலின் முடிவிலியில், அவன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கிற ஓவியரைக் கண்டான்.

“ஹுசேன் சாப்…! ஹுசேன் சாப்…!” அவன் உரக்க அழைத்தான். அலைகின்ற வெள்ளை முடியோடு, பச்சைச் சாயம் ஒழுகும் பிரஷ்ஷோடு ஓவியர் திரும்பிப் பார்த்தார்.

“சகோதரா…. இங்கே மிக சுகமாயிருக்கிறது. யாருக்கும் பயப்படாமல் ஓவியங்களை வரைந்துகொண்டேயிருக்கலாம். இதோ என் புதிய ஓவியங்கள்.” ஓவியர் பிரஷ்ஷை ஆட்டி அழைத்தபோது ஆகாயக் கேன்வாஸில் நிறைய ஓவியங்கள் தெளிந்து தெரிந்தன.


 சா நிலம்

புதிய மருந்துகளைப் பற்றி அவன் இதயநோய் நிபுணரிடம் விவரித்து முடித்தபோது அவர் சிறு புன்னகையுடன் அவனை நோக்கி ஒரு லிஸ்ட்டை நீட்டினார். அவன் அதில் கண்களை ஓடவிட்டு புன்சிரிப்புடன் குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து விடைபெற்று, பெரிய பையுடன் பைக்கில் ஏறி வீற்றான்.

பைக்கின் குளம்பொலிகள் நின்றது பெரிய துணிக்கடையின் முன்பாக. பெண்களின் உள்ளாடைப் பிரிவுக்கு வழி நடத்தப்பட்டான். லிஸ்ட்டில் இருந்த கம்பெனிகளின் உள்ளாடைகளின் விலை பார்த்து கண் திருகிப் போனான். லிஸ்ட்டில் குறிப்பிடப்பட்ட அளவுகள், நிறங்கள், எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்த்து வாங்கினான். பைக்கில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தான்.

வான்முட்டும் அபார்மெண்டின் முன் இருசக்கரவாகனத்தை நிறுத்தி லிஃப்டை நோக்கிச் சென்றான். லிஃப்டின் குளிரோடு மேலே எழுந்தான். அந்த ஃப்ளாட்டின் காலிங் பெல்லை நோக்கி அவன் விரல் நீட்டினான். கதவைத் திறந்த பெண்மணி அவனிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு பதிலுக்கு பெரிய ஒரு பிளாஸ்டிக் பையை அவனிடம் நீட்டினாள்.

“ஸாரி. இது பழைய அண்டர்கார்மெண்ட்ஸ். மேடத்தோடதும், குழந்தைகளோடதும். போற வழில எங்கயாவது டிஸ்போஸ் பண்ணிட்டா பெரிய உதவியாயிருக்கும்னு மேடம் சொல்லச் சொன்னாங்க”

உப்பிய பையிலிருந்து வந்த அழுகிய நாற்றத்தோடு, லிஃப்ட்டுக்கும்… பைக்குக்கும்… ரோட்டுக்கும் அவன் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தான்.

எங்காவது அதைக் களைந்து விட நகரம் முழுக்க அலைந்தான். இறுதியில் ஆற்றோரத்தை அடைந்தபோது அவன் அதை வீசி எறிந்தான். உடனே அவனுடைய செல்போன் சப்தமிட்டது. டாக்டர்தான்.

“தேங்க்ஸ். உங்க கம்பெனியோட புதிய ப்ராடக்ட்ஸை நான் எடுத்துக்கிட்டேன்.”

“டாக்டர், அப்புறம்…”

“அதையும் வீட்ல சொன்னாங்க. நீங்க அதை டிஸ்போஸ்…”

“செய்துட்டேன் சார். இதோ இந்த ஆத்துக்குள்ள”

“தேங்க்ஸ் அ லாட்”

”சார்… நான் உங்ககிட்ட சொல்லிருந்தேனே, எங்க கம்பெனியில் உள்ள சில தடை செய்யப்பட்ட மருந்துகள்…”

“ஓகே. நீ நதியில டிஸ்போஸ் பண்ண மாதிரி நான் அதையெல்லாம் மனித இதயங்கள்ல…”

அவன் சிரிப்போடு செல்போனை மேலே உயர்த்தியபோது மலினப்பட்டுப் போன ஆற்று நீரில் அந்த பிளாஸ்டிக் கவர் வட்டமடித்து சுழன்றுகொண்டிருந்தது.

***********

கே.டி. ஷாகுல் ஹமீது : பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த கே.டி. ஷாகுல் ஹமீது எழுத்தாளர், ஓவியர், திரைக்கதாசிரியர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். சிறுகதைகளுக்காக பல பரிசுகளைப் பெற்றவர். கதைத் தொகுதிகள்: காதலும் ஃபுட்பாலும், கருணம் முதல் சாந்தம் வரை, தாரகைகள் குண்டடிபட்டு விழுந்த இரவு. கேரளத்தின் பல பகுதிகளிலும் ஊட்டியிலும் ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். மலையாள இலக்கியத்தின் முக்கியக் கதைகளை அடிப்படையாக வைத்து வாஸ்துஹாரா என்கிற ஓவியக் கண்காட்சி மிக முக்கியமானது. துருத்து, தி ரோட் போன்ற குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *