சிலோன் சைக்கிள்

 

 

 

 

கன்னடத்தில்:

கனகராஜ்  ஆரணக்கட்டே                       

மிழில் :கே.நல்லதம்பி

 

 

 

ஓவியம் ; அனந்த பத்மநாபன்


 ஐசியூவில் இருந்த சுலேமான் விடாமல் என்னை வதைத்துக்கொண்டிருந்தார். கூடவே என் தந்தையின் முகம் என் கண் முன் வந்துகொண்டே இருந்தது. சண்முகம் கண்களில் நீர். சுலைமான் போல என்  அப்பாவும் வருந்தியிருக்கிறார். அவருடன்  நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன். அவருடைய அனுபவங்களுக்கு செவி சாய்க்காமல் தவறு செய்தேன். பிறந்த சிலோனில் எவ்வளவு கஷ்டம். வலி: பிறகு இந்தியாவிற்கு வந்து ஒரு நிலையடைய திணறல். ஐந்தாறு வருடங்களின் பசியுடன் சேர்ந்த நட்பு. இப்படி சிரமப்பட்டுக்கொண்டே கடைசியில் கர்நாடகாவின் சித்திரதுர்கா மாவட்டத்தின் ஹிரியூருக்கு வந்து ஒரு சிறிய கூரை கிடைத்து நிம்மதி அடைந்து பெருமூச்சுவிடுவதற்குள் வளர்ந்து நின்ற பெண் பிள்ளைகளின் கவலை. அதனுடன் பல  கவலைகள் சேர்ந்துகொண்டது. இதற்கு இடையிலும் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது, நிம்மதியை அளித்தது அவருடைய பெருமைக்குரிய ‘சிலோன் சைக்கிள்’. தன் உயிரைவிடவும் மேலாக அதை அவர் கவனமாக பார்த்துக்கொண்டார். அப்படியான சைக்கிளிற்கு நான் அதை செய்திருக்கக்கூடாது. அவருடைய மனதைப் புரிந்துகொள்ளாமல் தான் செய்த காரியம் அவரை எவ்வளவு வருத்தி இருக்கும்?! தன்னுடைய முட்டாள்தனத்தால், கவனக்குறைவால் நடந்த அந்த நிகழ்வு கண்டிப்பாக அவர் மனதை மிகவும் காயப்படுத்தி இருக்கும்.

 

‘மகனே, இது உங்க தாத்தா சைக்கிள்டா. சிலோன்ல உங்க தாத்தா இந்த சைக்கிள்ள போனா, அந்த பணக்கார பெரிய சாதி தமிழ்காரங்க இருக்கட்டும், அந்த சிங்களக்காரர்களும் அதிர்ந்து நிப்பாங்க தெரியுமா’ என்பார் அப்பா, நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது. தன் தாத்தா சிலோனிலிருந்து வரும்போது இந்த சைக்கிளையும் எடுத்து வந்தாராம். அவருடைய உயிர் இந்த சைக்கிளாக இருந்ததாம். மிக அகலமான சக்கரங்கள், அதற்குள் மிக தடித்த ரிம்கள், இரும்புக் கம்பிகள் போலிருந்த போக்ஸ் குச்சிகள்; முறத்தளவான மட்கார்ட், ஒட்டகத்து தலையைப்போல உயரத்தில் இருந்த சீட், இது போதாதென்று டிராக்டர் டிராலியைப்போலிருந்த கியாரியர். மூணு  இஞ்சு பைப்பைப்போல இருந்த ஹாண்டில் பார். முன்னாடி மாஸ்டர் வாய்ஸ் பக்கெட் ஸ்பீக்கரைப்போல டைனாமோ. சிறிலங்காவின் ரப்பர் தோட்டத்திலிருந்து தயாரித்தது போல இருந்த கனமான டயருக்கு காயில் சுத்தும்போது வரும் டைனாமோ விளக்கு அந்த கருப்பு இருட்டிலும் முழுநிலவின் வெளிச்சத்தைப் போல எரிந்தது. தன் தாத்தாவின் சிலோன் வாழ்க்கையில் இது முக்கிய பாத்திரம் வகித்திருந்ததாம். இந்தியாவிற்கு வந்த புதிதில் அவர் பாய் விற்க இதில்தான் ராமேஸ்வரம்  முழுதும் சுற்றியிருக்கிறார். பிறகு மீன், பொரிகடலை, பால், இப்படி பல வியாபாரங்களுக்கு இந்த சைக்கிள் அவருக்கு உபயோகமாக இருந்ததாம். அப்போது  ஒருமுறையும்  பங்க்சரோ, ட்யூப் வெடிப்போ எதுவும் ஆகவில்லை என்பது சிறப்பு. சிலோனில் அவர் பிரிட்டிஷ் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்துகொண்டிருந்த போது ஏழு வருட போனசை மொத்தமாக சேர்த்து வாங்கியதாம் இந்த சைக்கிள்.

 

என் தாத்தா இருந்தது வடக்கு யாழ்பாணத்தில். அங்கே வேளாளர், பிள்ளைமார், தேவர்கள் போன்ற தமிழ் மேல் சாதிக்காரர்களின் வயல்களில், வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தாராம். ஏனோ அங்கே இருந்து வந்து சிங்களரின் ஏரியாவிற்கு வந்திருக்கிறார். அங்கேயும் தங்காமல் கண்டிப் பக்கம் புறப்பட்டாராம். அப்போது அங்கே பிரிட்டீஷ்கார்கள் ரப்பர் தோட்டத்தை போட்டிருந்தார்கள். தோட்ட வேலைக்காக இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை கொண்டு வந்தார்கள். அவர்களுடன் எங்கள் தாத்தாவும் ரப்பர் தோட்ட வேலைகளில் ஈடுபட்டார். இப்படி சிரமப்பட்டுக்கொண்டே வாழ்ந்துகொண்டிருந்த தன் தாத்தாவின் விதியின் விளையாட்டு தீவிரமடைந்தது ஆங்கிலேயர்கள் போனபிறகுதான். சிங்கள அரசின் புதிய சட்டம் இவரைப்போன்ற நூற்றுக் கணக்கானவர்களை நிலைக்கெடச் செய்தது. இப்படி இருந்தும் தன் மகனைப் படிக்க வைக்க ஆசை. அவருடைய இந்த தீவிர ஆசையை முடக்கியது சிங்கள அரசின் புதிய சட்டங்கள். தமிழர்களின் பிள்ளைகளுக்கு அப்போதைய புதிய அரசாங்கத்தின் சட்டப்படி பத்தாவதுக்குப் பிறகு படிப்பது சிரமமானதால் பலபேர் தங்கள் பிள்ளைகளின் படிப்பை கைவிட்டார்களாம். படித்தாலும் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பது மிக அரிது. பணம் இருந்த பெரிய சாதித் தமிழ் இனத்தவர்களும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்பட்டார்கள். படிப்பை  முடித்த எத்தனையோ தமிழ் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். பிறந்த நிலத்திலேயே அனாதைகளான வருத்தம். தன் வாழ்க்கையின் கனவு  கண் முன்னால் சிதறுவதை பார்த்து தாத்தா கவலைப்பட்டார். தன் இனத்தவர்களைப் போலவே அவரும் தன் மகனின் படிப்பை நிறுத்தினார். தான் பட்ட சிரமத்தை தன் மகன் படக்கூடாதென்று தாத்தா இரவு பகலாக பாடுபட்டார். வாரத்தில் மூன்று நாலாவது கொட்டும் மழையிலும் வேலை செய்தார். மழை வரும் நாட்களில் தூரத்து எஸ்டேட்களுக்கு நடந்தே போவாரே ஒழிய சைக்கிளைத் தொடமாட்டார் என்று அப்பா சொன்ன நினைவு. விடியக்காலை நான்கு மணிக்கே கஞ்சியை குடித்துவிட்டு புறப்பட்டுவிடுவார். இப்படி காலத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் போது, நாடு முழுவதும் ஆரம்பமான சண்டை இவரையும் பாதித்திருக்கிறது. ஆயுதம் ஏந்திய ஜாஃப்னா பக்கத்து சில இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நின்றார்கள். சில சிங்கள சீப்பாய்களை அவர்கள் கொன்றிருக்கிறார்கள். சிலோன் படை இந்த மடிந்த சிப்பாய்களின் பிணங்களை தலைநகர் கொழும்புவில் காட்சிக்கு வைத்திருந்ததாம். இதைப் பார்த்த சில சிங்களர்கள் சிறுபான்மைத் தமிழர்களையும் அவர்கள் சொத்துப் பத்துக்களையும் கொள்ளை அடித்தார்கள். நாடு முழுதும் பரவிய இந்தத் தீ என் பாட்டியைப் பலி வாங்கிவிட்டது. கனத்த மனத்துடன் என் தாத்தா கண்டியை விட்டு மறுபடியும் ஜாஃப்னா – யாழ்பாணம் – திரும்பி வந்தார். சிப்பாய்களைக் கொன்ற தமிழ் இளைஞர்களின் பலம் அதிகரித்தது. சிங்களர்களால் சிரமப்பட்ட நூற்றுக் கணக்கான மக்கள் அவர்களுடன் இணைந்தார்கள். அவர்களில் அதிகம் கூலி வேலை செய்யும் என் தாத்தாவைப் போலான மக்கள்! அரசாங்கத்திற்கும் தமிழ் இளைஞர்களுக்கும் இடையேயான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தது. சில மேல்சாதித் தமிழர்கள் தங்கள் சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்றுவி‌ட்டு இந்தியா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் என்று பறந்துகொண்டிருக்க இன்னும் பலர் சொத்துக்களை விட்டு உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடினார்களாம். ஒருநாள் தாத்தா தன் மகனை தூக்கிக்கொண்டு சைக்கிள் ஏறி எங்கெல்லாமோ அலைந்து எப்படியோ இந்தியா வரும் கள்ளத்தோணியில் ஏறி இருக்கிறார். கடலின் அமைதியான இரவிலும் தூங்காமல் சைக்கிளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே  உட்கார்ந்திருந்தார் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அடர்ந்த தாடி மஞ்சள் நிறக் கண். எண்ணை காணாத முரட்டு முடி, மண்ணின் வண்ணத்து தன் அப்பா மௌனமாக அமர்ந்திருந்தார் என்பார் என் அப்பா. படகில் இருந்த மக்கள் எல்லோரும் ‘ஓ’ என்று அழுதுகொண்டிருக்கும் போது ஒரு பேச்சும் இல்லாமல் சைக்கிளையே பார்த்தபடி இருந்தார். இரண்டு பகல், மூன்று இரவுகளை உணவில்லாமல் கழித்து இந்தியாவின் இராமேஷ்வரம் வந்து இறங்கிய போது தாத்தா மயங்கி விழுந்தார். அப்பாவிற்கு எதுவும் தோன்றாமல் நடுங்கினார். ஒருவாரம் மருத்துவமனையில் இருந்துவிட்டு அகதிகள் முகாமிற்கு வந்திருக்கிறார். மருத்துவமனையில் படுத்திருந்த போதும் அவர் சைக்கிள் எங்கே என்று அடிக்கடி அப்பாவைக் கேட்டுக்கொண்டே இருப்பாராம். சைக்கிள் எங்கேயும் போகவில்லை, இங்கேதான் இருக்கிறது என்று எவ்வளவு சொன்னாலும் குழைந்தையைப் போல அடம் பிடித்து சைக்கிளைக் காட்டும்வரை முரண்டு பிடித்தார். எப்படியோ சைக்கிளைப் பார்த்த நொடியிலிருந்து தெம்படைந்தார். மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் அகதிகள் முகாமிலும் சைக்கிளுக்கு தேங்காய் எண்ணை போட்டு தேய்ப்பதை மறக்கவே இல்லை. இந்த எல்லாக் காரணங்களுக்காவோ என்னவோ என் அப்பா அந்த சைக்கிளை கடவுளைப்போல பார்க்கிறார். அவருடைய அப்பாவின் ஆத்மா அதற்குள் இருப்பதாக எப்போதும் எனக்கு சொல்லுவார்.

 

அவர் அப்பாவைப் போலவே என் அப்பாவும் அந்த சைக்கிளுக்குள் ஒட்டிக்கொண்டிருந்தார். மழை வரும் நாட்களில் வீட்டிற்குள் மழை ஒழுகாத இடத்தைப் பார்த்து நிறுத்தி, தவறிக்கூட அதன் மீது மழைத் தண்ணீர் படக்கூடாதென்று எல்லோருக்கும் கட்டளை இடுவார். எல்லா அமாவாசையும் அதற்கு பூசை செய்யாமல் ஒரு துளி தண்ணியும் அருந்தமாட்டார். அண்ணன் முருகேசன் மற்றும் என்னை ஹிரியூரின் தேர் மல்லேசுவரா கோயில் தெருவில் இருக்கும் ஜெய் பாரத் சலூனுக்கு கட்டிங் செய்ய சைக்கிளில் கூட்டிக்கொண்டு போகும்போது லௌட் ஸ்பீக்கரைப் போல பேசுவார். கட்டிங் முடித்து நடந்தே வீட்டுக்குத் திரும்பவேண்டும். கால் வலிக்குது அப்பா சைக்கிளில் போகலாம் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது. வலியைப் பொறுக்க பழகிக்கங்க சைக்கிள் மேலே தவறுதலாகவும் முடி விழுந்தரக்கூடாது.

 

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வார். மொத்தத்தில் அவர் அக்கறை சைக்கிளின் மீது அவ்வளவுதான். எப்போதும் வேகமாக மிதித்ததில்லை. கோயில் வீதியில் எங்கள் சைக்கிள் போனால் பலர் ஒரு விநாடி நின்று வியப்புடன் பார்ப்பார்கள். இன்னும் சிலர் சிரிப்பார்கள். ஆலமரத்தைப் போல இருந்த சைக்கிளில் அமர்ந்திருக்கும் எங்களுக்குப் பெருமை. கோபம், எரிச்சல், மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். என் அப்பா கன்னடம் பேசினால் இவர் தமிழர் என்பது  எளிதாக தெரிந்துவிடும். ஆனால் எங்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளமுடியாது. சலூனுக்கு முன் எங்கள் சைக்கிள் நின்றதும் உள்ளே இருந்தவர்கள், ‘வந்தாங்கப்பா தெமிள் தடியனுங்க, மொதல்ல அவங்களுக்கு கட்டிங் பண்ணி அனுப்புங்க. இல்லேன்னா அவனுங்க நம்ம தலைய பிச்செடுத்துணுவானுங்க’  என்பார்கள். எங்கப்பா வளவளான்னு பேசுவாரு. உங்கப்பா பேச்சு சிலோன் மழையைப்போல, ஒருதடவை ஆரம்பிச்சா நிக்கவே நிக்காது என்பாள் அம்மா. அவள் மௌனி, எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சிரிப்பவள். நாங்கள் இருந்தது வண்ணான் காலனியில்.  தமிழ் வீடு என்று அங்கே இருந்தது ரெண்டு. சுத்தியும் கன்னடக்காரர்கள்தான். இருபது நாயக்கர் வீடுகள் ரெண்டொரு வண்ணான் வீடு. தமிழ் ஒட்டர்களான எங்களையும் சேர்த்து மொத்தம் அஞ்சு ஒட்டர் வீடு. இப்படி இருந்தும் எங்கள் ஏரியாவை ஏன் வண்ணான் காலனி என்று சொல்கிறார்களோ தெரியாது. ஹிரியூர் பட்டணத்திற்கு வடக்கே இருந்த இந்த ஏரியாவிற்கு வந்து ஏழெட்டு வருஷம் ஆனது. மொதல்ல தமிழ் காலனியில இருந்தோம். கவுண்டர், தேவர், கண்டர், போன்ற தமிழ்  பெரிய சாதி சனங்களின் பெரிய பெரிய வீடுகளுக்கு நடுவே எங்களுடையது ஒரு குடிசை. எங்களைப் போன்ற முப்பது நாப்பது குடிசைகள். தூரத்தில் இருந்த தமிழ் பறையர் குடிசைகளுக்கும் எங்கள் குடிசைகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது. எங்களை அங்கிருக்கும் தமிழ்க்காரங்க எல்லாம் ‘சிலோன்காரர்’ என்றே அழைத்தார்கள். எங்கள் வீட்டில் மூணு எருமைங்க இருந்தது. எங்க அம்மா காலையில எருமைங்களை மேச்சு, சாயங்காலம் சில வீடுகளுக்கு பால் போட்டுக்கொண்டிருந்தாள். இப்படி ஒரு நாள் நாங்கள் பள்ளியை முடித்து வந்துகொண்டிருந்தோம். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தோம். எங்கள் எருமைகளின் சாணி நாத்தம் ரோடுவரைக்கும் அடித்தது. சண்டைச் சத்தம் கேட்டது. பயந்துகொண்டே அங்கே போனோம். அது எங்கம்மாவின் குரல். அதிர்ந்தோம். அம்மா அழுதுகொண்டே சொல்லிக்கொண்டிருந்தாள். “பாருக்க இந்த கருப்பண்ணத் தேவர் வீட்டுக்காரங்க எங்க எருமையை எப்படி அடிச்சிருக்காங்க. அவங்க வயலுக்குள்ள நுழைஞ்சிருச்சுன்னு இப்படி வாயில்லா சீவனப் போட்டு அடிக்கரதா…” அழுதுகொண்டே சொல்லிக்கொண்டிருந்த அம்மாவை யார் யாரோ வந்து சமாதானப்படுத்தினார்கள். அவளை அணைத்துக்கொண்டு நானும் அழுதேன். இது நடந்த இரண்டு மாதத்தில் அப்பா அழுதுகொண்டிருந்தார். கடனாக வாங்கிய நூறு ரூபா பணத்துக்கு கருப்பண்ண தேவர் மருமகன் வழியில் பார்த்து  சண்டைக்கு வந்து சைக்கிளைப் பிடுங்கிக்கொண்டு போனான். அப்பா அழுததை நான் பார்த்ததே இல்லை. மனது கசந்தது. அம்மா தமிழ் பள்ளி பறைய வாத்தியார் பெருமாள் வீட்டுக்குப் போய் இருநூறு ரூபாயும், கடை வைத்திருந்த சுப்புக்குட்டி தேவரிடம் நூறு ரூபாயும் கடன் வாங்கி அவளிடம் இருந்த நூறு ரூபாயையும் சேத்து அப்பாவிடம் கொடுத்தாள். அதற்கு அப்பா தன்னிடம் இருந்த நூறு ரூபாயையும் சேர்த்து சைக்கிளை திரும்ப வீட்டுக்கு எடுத்துவந்தார். அப்பாவின்  முகம் வாடி இருந்தது. எனக்கு அழுகை பீறிட்டது. மறுநாள் அரிசி வாங்கக் காசில்லாமல் எல்லாம் தண்ணியைக் குடிச்சு இருந்தோம். இது நடந்த ஒரு மாதத்தில் நாங்கள் வீட்டை மாற்றினோம். தமிழ் பேசும் ஒட்டர்கள் தூரத்து வண்ணான் காலனியில் வசித்தார்கள்.  நாங்கள் அங்கே போனோம். அன்று இரவு அப்பா பேசிய வார்த்தைகள் தெளிவில்லாமல் புரிந்து என் வயிற்றில் ரம்பம் ஓடியது. “நான் உயிரோட இருக்கறவரைக்கும் இனி கடனுன்னு கையேந்த மாட்டேன். எவ்வளவு சிரமமானாலும் பொருத்துக்கலாம். கடன் வாங்கின நம்ம சைக்கிளை இழக்க வேண்டிவரும். சைக்கள் போச்சுன்னா நா உயிரோட இருக்கமாட்டேன். என் உயிரிருக்கவரைக்கும் அது என்னோட இருக்கணும். எங்கப்பாவுடைய ஆத்மா அதில இருக்கு. நம்ம சிலோன் மண்ணோட நன்றிக்கடன் அது. அந்த மண்ணின், எங்கப்பனின் நினைவா இருக்கறது அது ஒண்ணுதான். நானோ எங்கப்பா வாழ்ந்த அந்த மண்ணுக்கு திரும்பிப் போக முடியாது. இதாவது எங்கப்பாவை, அந்த மண்ணை நமக்கு நினைவூட்டும் ரஞ்சிதா.” என்பார். அம்மாவின் கண்களில் நீர். நான் அவளுடைய மடியில் படுத்திருந்தேன். பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த மோரியின் நாத்தம் உயிரை வாங்கியது.

 

என் அப்பா தனது வாழ்க்கையில் இப்படி எத்தனை தடவை அழுதாரோ! வாழவேண்டும் என்கின்ற அவருடைய தீராத உற்சாகத்திற்கு சமுதாயம் தடைபோட்டுக்கொண்டே வந்தது. பசி, அவமானம், கோபம் இவைகளை எல்லாம் வென்ற அவரை சுற்றியிருந்த சமூகம் சீண்டிக்கொண்டே இருந்தது. இங்கேயே இப்படி என்றால் அங்கே சிலோனில், கடவுளே! அந்த சுலைமான் அங்கே எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ஓடிக்கொண்டே பயத்துடன் வாழ்க்கையை தள்ளிக்கொண்டு, அவருக்கும் என் அப்பாவிற்கும் எத்தனை ஒற்றுமை. சிறிலங்காவின் இரத்த விளையாட்டில் தன் இரு குழைந்தைகளையும் மனைவியையும் இழந்த அவருக்கு நாற்பது வயது. ஒரு பக்கம் சிறிலங்காப் படை மற்றொரு பக்கம் எல்டிடிஇ…. இவர் இருந்த ஊரை ஆர்மீ வசப்படுத்திக்கொண்ட போது இவர்கள் எல்லோரும் முல்லைத் தீவை நோக்கி ஓடினார்களாம். ஓடவேண்டும் என்பது தமிழ்ப் புலிகளின் கடுமையான கட்டளை. அவர்களுடைய பாதுகாப்பிற்கு ஆயிரமாயிரம் தமிழ் மக்களை வற்புறுத்தி இழுத்துக்கொண்டு போனார்களாம். போக மறுத்தவர்களை அங்கேயே கொன்று விடுவார்களாம். மறுபக்கம் சிறிலங்கா இராணுவம் மருத்துவமனை, வீடுகள், பள்ளிகள் மீது குண்டு மழை பொழிந்ததாம். புலிகளுடன் இவர்கள் ஒட்டம். திங்க உணவில்லை. காயங்களுக்கு மருந்தில்லை! இந்த சுலைமான் மகேசின் புலிகளுக்கு எதிராக நின்று “வேண்டுமென்றால் நீங்களே கொன்றுவிடுங்கள். எப்படியும் சாவது உறுதி, பசியாலோ இந்த சிங்கள தோட்டாக்களாலோ இறப்போம், எங்களை தனியாக விட்டுவிடுங்கள்” என்று எதிர்த்தாராம். சில பெண்களையும், பிள்ளைகளையும் மற்றும் இந்த கூட்டத்தையும் விட்டு புலிகள் மாயமானார்கள். தூரத்தில் குண்டுச் சத்தம். வானத்தில் அடர்ந்த கறுப்புப் புகை. காடு மலைகளை சுத்தி எப்படியோ யாழ்பாணம் வந்தடைந்து சில மாதம் அங்கேயே இருந்து, தலைநகர் கொழும்பு சேர்ந்து, சில தமிழ், சிங்கள  நண்பர்களின் உதவியால் அங்கே இரண்டு வருடம் பயத்துடனேயே வாழ்ந்து, கடைசியாக இந்த சவுதிக்கு வந்து சேர்ந்தாராம். கடவுளே என்ன நரகம்! இம்சை! என் அப்பாவும் தாத்தாவும் இப்படியான வலியை அனுபவித்து இந்தியா வந்து சேர்ந்திருக்கலாம். பிறந்ததிலிருந்து அப்பா வலியையே அனுபவித்தவர். மாதம் இரண்டாயிரம் சம்பாதிக்க சிரமப்பட்டார். அத்தனை சிரமங்களுக்கும் நடுவில் அவருக்கு முக்கியம் சைக்கிள்! தனக்கு என்ன நடந்தாலும் பொறுத்துக்கொள்வார். ஆனால் சைக்கிளிற்கு ஏதாவது என்றால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது தெரிந்திருந்தும் நான் ஏன் அப்படிச் செய்தேன்?

நான் பி.யூ.சி-க்கு வந்த போது அப்பா மேஸ்திரியாக இருந்தார். சைக்கிள் பழையதானாலும் தன் பொலிவைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. அதன் மீதான அப்பாவின் மதிப்பு, அன்பு மற்றும் அக்கறை இம்மியளவும் குறையவில்லை. ஆனால் எனக்குள்ளான எண்ணங்கள் மாறிக்கொண்டிருந்தன. சைக்கிள் ஓட்டப் பழகிக்கொண்டிருந்த புதிதில் இப்படியான மகிழ்ச்சி இருக்கவில்லை. பொதி சுமக்கும் கழுதையைப்போல கண்ட அந்த சைக்கிளை ஓட்ட ஒருவகையான குழப்பம். கடைக்கு சைக்களில் போக அப்பா சொல்லுவார். அவர் பேச்சுக்களை கேட்கமுடியாமல் ஒருநாள் அந்த பாழாப்போன சைக்கிளில் போனேன். நான்கைந்து வழிப்போக்கர்கள் பார்த்து சிரித்தார்கள். உயிர் போனதுபோலானது. தலையைத் தூக்காமல் மிதித்தேன். படக் என்று சங்கிலி கழன்றுவிட்டது. உயிர்போனது போலாகி பிரேக் போட்டு நிறுத்தி இறங்கினேன். தொழிற்சாலையின் யந்திரத்தின் ஒரு பாகத்தைப் போல கண்ட  அந்த சைக்கிளின் பின்பகுதியின் ஆக்சலுக்கு சங்கிலியைப் பொறுத்த வீணாக சிரமப் பட்டுக்கொண்டிருந்தேன். உடம்பு கை எல்லாம் கிரீஸ்! வேர்வை ஒழுகியது. இரு பெண்களின் கேலிச் சிரிப்பு காதுகளில் விழுந்தது. பெடல் சந்திலிருந்து ஓரக்கண்ணால் அந்தப் பக்கம் பார்த்தேன். என்னுடன் படித்துக் கொண்டிருந்த கிரநாயக்கரின் மகள் புஷ்பா! மனதிற்கு சங்கடமாகி ஸ்டாண்டைத் தள்ளி சைக்கிளை வேகமாக தள்ளிக்கொண்டே வீட்டுக்கு ஓடினேன். புஷ்பாவின் கேலிச்சிரிப்பு என் நெஞ்சை குத்திக்கொண்டே இருந்தது. அதுதான் கடைசி. மறுபடி அந்த சைக்கிளைத் தொடவே இல்லை. அப்பாவின் வசைகள் மனதிற்கு நெருப்பை மூட்டியது. வரவர இந்த பாழாப்போன சைக்கிளைப் பார்த்தால் எரிச்சலாக இருந்தது. ஒருநாள் காலேஜின் கேட் பக்கம் நின்றிருந்தபோது அப்பா அந்த கழுதை சைக்கிளில் சிமெண்ட் மூட்டைகளை வைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். பசங்கள் அதைப் பார்த்து கேலி செய்து சிரித்தார்கள். அதில் ஒருவன் ‘டே, இது இவன் அப்பாடா’ என்று எல்லோரும் கிண்டல் செய்தார்கள். விசித்திரமாக சிரித்தார்கள். எனக்கோ இடிவிழுந்து செத்துவிடக் கூடாதா என்று தோன்றியது. வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சண்டைப் போட்டேன். “இந்த பாழாப்போன சைக்கிளை ஒட்டவேண்டாமுன்னு உன் புருசங்கிட்ட சொல்லு’ என்று. அவள் என்னை திட்டினாள். அவள் மீதும் என் கோபம் வளர்ந்தது. அண்ணன் படிப்பை விட்டு அப்பாவுடன் வீடுகட்டும் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். அவனுக்கும் சொன்னேன். அவனும் என்னை வைது, ‘ஸ்கூல நிறுத்தி உன்னையும் வேலைக்கு போடணும்’ என்றான். சைக்கிள் மேலிருந்த கோபம் – வருத்தம் வீட்டில் எல்லோரையும் வெறுக்கச் செய்தது. சே! எதுக்கு நான் அப்படி நடந்துகொண்டேன்? அது அர்த்தமற்ற, முட்டாள்தனமான கோபம். என் செயல் அவர்களை எவ்வளவு வருத்தப்பட வைத்திருக்கும்? என் இந்த கெட்ட செயல் அப்பாவின் மனதை எவ்வளவு பாதித்திருக்கும்? வீட்டை விட்டு ஓடிவந்த என் கெட்ட புத்திக்கு செருப்பால அடிக்கணும். அம்மா எவ்வளவு கவலைப்பட்டிருப்பாள். அண்ணன் அழுதிருப்பான். அக்காக்கள் வருத்தப்பட்டிருப்பார்கள். சிறுவயதில் அவர்கள் எல்லாம் என் மீது எப்படி அன்பு காட்டினார்கள். அப்பா தோள் மீது வைத்து விளையாடியவர். எனக்கு சாப்பிடவைத்த பின்தான் சாப்பிடுவார். பள்ளியில் என் கிழிந்த துணிக்கு கேலி செய்தார்கள் என்று தன் வாட்சை விற்று யூனிஃபார்ம் வாங்கிக்கொடுத்தவர். இப்போது எப்படி இருக்கிறாரோ?

 

வீட்டை விட்டு ஓடிய போது என் மனது மகிழ்ச்சியால் குதித்தது. காரணம் சைக்கிள்! இருட்டில் எல்லோரும் தேடிக்கொண்டிருந்தபோது எழுந்து அந்த சைக்கிளுக்கு ஒரு கதி செய்து ஓடிவந்தேன். தேசிய நெடுஞ்சாலையில் நின்று ஒரு லாரியை பிடித்து ஏறினேன். அங்கிருந்து புறப்பட்ட என் பயணம் கனவோ என்பதைப்போல அந்த மணல் காட்டின் சவுதி அரேபியாவில் வந்து நின்றது. ஹிரியூரிலிருந்து புறப்பட்ட நான் நான்கைந்து வருடம் தமிழ் நாட்டு நாமக்கல்லில் கியாரேஜ் ஒன்றில் வேலை செய்து அந்த கியாரேஜ் முதலாளியின் உதவியால் விமானம் ஏறினேன். எப்படி இருந்த வாழ்க்கை எப்படியானது!?  வீட்டை விட்ட நாளிலிருந்து இல்லாத இந்த வீட்டின் ஈர்ப்பு இப்போது எதற்கு?! இத்தனை வருடம் இல்லாத அப்பா அம்மாவின் நினைப்பு இன்று எதற்கு? இந்தியாவில் இருந்தபோது இல்லாத இந்த ஈர்ப்பு இங்கே எதற்கு?! இனி நான்கு ஆண்டுகளுக்கு இந்தியா போகமுடியாது. அவர்கள் எங்கே இருக்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ?! என்னுடைய காரியம் அவர்களை எவ்வளவு கவலை அளித்திருக்குமோ?! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் போனால் சேர்த்துக் கொள்வார்களா? இந்த பாழாப்போன டூர் விசயம்தான் இதுக்குக் காரணம்.

அது ஆரம்பமானது இப்படி: எங்கள் காலேஜில் மூன்று நாட்களுக்கான சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். சிருங்கேரி, தர்மஸ்தளா என்று ஓராயிரம் ரூபாய். சாப்பாடு, வசதி எல்லாம் அவர்களுடையது. என் நண்பர்கள் எல்லாம் புறப்பட்டிருந்தார்கள். எனக்கும் போக ஆசை. எங்கள் ஏரியாவின் புஷ்பாவும் புறப்பட்டிருந்தாள்! அன்று சனிக்கிழமை சந்தையில் காய்கறி விற்றுவிட்டு வந்திருந்த அம்மா சோர்ந்து போய் படுத்திருந்தார். ஜுரம் இருந்தது. அண்ணன் கட்டாங்காப்பி போட்டுக்கொடுத்தான். அப்பா மாத்திரை வாங்கப் போனார். கிரிக்கெட் விளையாடிவிட்டு நான் அப்போதுதான் வீட்டுக்குப் போனேன். வெளியே சூரியன் மறைந்துகொண்டிருதான். வீட்டுக்குள் சிறிய லாந்தர் விளக்கு; கரெண்ட் போய் சுமார் நேரமானது. நான் அம்மாவிடம் டூர் விசயத்தை சொன்னேன்.  இருமிக்கொண்டே அவள் ‘உங்கப்பா வரட்டும், சொல்றேன், போவயாம, சும்மாரு’ என்றாள். அப்பா வந்தவுடன் அவள் சொன்னாள். ஆனால் அப்பா கத்திக்கொண்டே “ரஞ்சிதா, டூரெல்லாம் நம்மளப்போனவங்களுக்கு அல்ல, சும்மா இருக்கியா…. நாம மூணு பேரு பாடுபட்டாலும் மாசம் ஆயிரம் சம்பாதிக்க முடியலே, இவனுக்கு ஆயிரம் ரூபா கொடுத்து டூருக்கு அனுப்பனுமா? நம்ப ஒரு மாச வேர்வையை இவன் மூணு நாள்ல ஆட்டையைப் போடணுமா….” சொல்லி இருமினார். எனக்கு மனது கொதாகொதவென்று கொதித்துக்கொண்டிருந்தது. அம்மா “அப்படி இல்லீங்க….” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு கோபம் நெத்திக்கு ஏறியது. நான் ஏதோ சொன்னேன். அதற்கு இருவரும் வைதார்கள். பெரிய சண்டை ஆனது. அண்ணன் வந்து என் கன்னத்தில் அறைந்தான். திருப்பி நான் அடித்தேன். அவன் ஒரு அடி..நான் ஒரு அடி… என்று உச்சிக்குப் போனது. படுத்திருந்த அம்மா எழுந்துவந்து சண்டையை விடுவித்து என் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். நான் கத்தினேன். அம்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள். என் நெஞ்சம் மிக படபடத்தது. அப்பா செயலற்று நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் தலை கிர்ரென்று சுற்றியது. அம்மா கத்துவதை நிறுத்தினாள். அண்ணன் மூலையில் உட்கார்ந்திருந்தான்.  மௌனம் கொன்றது – லாந்தரில் இருந்த எண்ணை தீர்ந்து முழு வீடே இருட்டானது. அம்மா தீப்பெட்டியை தேடிக்கொண்டிருந்தாள் – அப்பா எண்ணை ஊற்ற லாந்தரை திறந்துகொண்டிருந்தார். நான் எழுந்தது அந்த இருட்டில் யாருக்கும் தெரியவில்லை. மெதுவாக அடி எடுத்து வைத்து வெளியே வந்தேன். அப்பா வாசல் பக்கம் சைக்கிளை நிறுத்தி இருந்தார். சத்தமில்லாமல் அதை ரோட்டிற்கு தள்ளினேன். சுற்றியும் பார்த்தேன். யாரும் இருக்கவில்லை. சிறிது தூரம் தள்ளிக்கொண்டு போனேன். பெரிய கல் ஒன்று தடுத்தது. கால் பெருவிரலுக்கு ஆனா வலியைத் தாங்கிக்கொண்டு, அதே கல்லை எடுத்து அந்த சைக்கிளின் மீது போட்டேன். டமார்! என்ற சத்தம். என்னென்ன ஓடைந்ததோ, என்ன ஆனதோ! அந்த இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. கல்லை தூக்கிப்போட்ட வேகத்திற்கு ஹேண்டிலில் இருந்த பெல் பிடுங்கிக்கொண்டு என் முழங்காலை அடித்தது. வலி கோபத்தை அதிகப்படுத்தியது. உடனே சைக்கிளைத் தூக்கி பக்கத்து மோரியில் விட்டெறிந்துவிட்டு ஓடினேன். மனதிற்கு கொண்டாட்டம். லாரிகளின் சத்தம் கேட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு ஓடினேன்.

சே! நான் அப்படி செய்திருக்கக் கூடாது. அந்த சைக்கிளில்தான் அப்பா எங்களை வளர்த்தார்.

தூக்கம் வரவில்லை. சண்முகம் வெளியே வந்தான். இரவின் குளிருக்கு ஊர் நடுங்கியது. தூரத்தில் பாலைவனத்திலிருந்து வீசிய காற்று என் தேகம் மனதை மட்டுமே தொடமுடிந்தது. இந்த வெற்றுக் காற்று அவன் மனதை நடுங்கவைக்க முடியாமல் ‘சகாரா’ விற்கே திரும்பிப் போனது. கேட்டுக்குப் பக்கத்தில் நிறுத்திய அவனுடைய  சைக்கிள் தெரிந்தது. அது அவனுடைய முதலாளி வாங்கிக் கொடுத்த சைக்கிள்! அதன் அருகில் சென்றான். உள்ளே எங்கோ அடங்கியிருந்த அழுகை பீறிட்டது. சைக்கிளை அணைத்த வேகத்தில் கீழே விழுந்தாலும் சைக்கிளை விடாமல் தடவிக்கொண்டே அவன் அழுதுகொண்டிருந்தான்.

*****

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *