கொரியக் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

ச்சோ ஓ-ஹ்யுன் (Cho Oh-hyun)

ஸியோரக் மூஸன் ச்சோ ஓ-ஹ்யுன் என்னும் இயற்பெயர் கொண்டவர். 1932 – ல் பிறந்தவர். ஏழு வயதில் பயிற்சிநிலைத் துறவியாக ஆனது முதல் மலைகளிலேய வசித்துவந்தவர். ஸிஜோ என்னும் வடிவத்திலான ஜென் கவிதைகள் நூற்றுக்கு மேல் எழுதியிருக்கிறார். 1977-ல் ஸின்ஹ்யூங்ஸா ஆலயத்தின் தலைமைத் துறவியாகப் பணியேற்றார். இவர் ஒரு ஓவியரும் கூட.

தற்போது முகும் ஸியோன்வொன் துறவியர் ஆசிரமத்தில் வசிக்கிறார்.
(நன்றி: விக்கிபீடியா)

ஜென் கவிதைகளின் பொதுக் குணாம்சங்களான எளிமையும் அழகும் இயற்கை பற்றிய குறிப்புகளும் தனிமையும் இவருடைய கவிதைளில் நிரம்பியிருக்கின்றன.  கால, தேச,  மொழி மற்றும் பாலின பேதமற்ற ஆதார மனநிலையொன்றை விழையும் கவிதைகள்.

தரைக்கு ஓரங்குல உயரத்தில், ஆனால் தரையையொட்டி உருளும் ஜென் சக்கரங்களுக்கு மாறாக, விமர்சனமும், புகாரும், சினமும், கசப்பும் மேவியிருக்கும் கவிதைகளாய் இவை இருப்பது மரபான ஜென் வாசகருக்கு வியப்பளிக்கக் கூடியது.

ஒலிக்கும் சொற்களுக்கு அடியோட்டமாய் இழையும் உட்பிரதியின் அழுத்தம் கவனத்தை ஈர்ப்பது. உதாரணமாக, இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இன்றைய விம்முதல் கவிதையின் ஒவ்வொரு அலகும் தனித்துவமான குறியீடுகளாக விளங்குவதைக் காணலாம்.

துறவுநிலை என்பது சமூகத்தைப் புறமொதுக்கி விலகுவது அல்ல, சமூகத்தின் உட்பிரகாரங்களுக்குள் தீவிரமாக ஊடுருவிச் செல்லுதலே என்ற திறப்பை முன்னிருத்தும் கவிதைகள் இவை.


 

மொழிபெயர்ப்பும் குறிப்பும் : யுவன் சந்திரசேகர்  


1
முன் ஏகும் வழி
ஜிக்ஜிஸா ஆலயப் பயண நாட்குறிப்பு 1

ஓடைநீர் கீழ்நோக்கிப் பாய்கிறது
பாதை சுழன்று மேலேறுகிறது

பாதங்கள் நீரில் பதிய அமர்ந்திருக்கிறேன்
கற்பலகை மீது ஓய்வெடுக்கிறது வெண்மேகம்

அகண்ட பள்ளத்தாக்கில்
என் மனம்     
குயிலின் அலறல் ஒலிக்கும்
அந்த இடத்தில்.
2
இன்றைய விம்முதல்

அறுவடைக்கால நிலா உதிக்கிறது
மேற்பரப்பையொட்டி
ஆவலுடன் மூச்சிரைக்க இரைக்க
மிதக்கின்றன கிளிஞ்சல்கள் -
நிலவின் ரேகைகளை உட்கொள்ளும் விதமாக
தமது வாய்களை அகலத் திறந்தவாறு
தமது உட்புறச் சதையை
ஒட்டுமொத்தமாய் வெளிக்காட்டியபடி.
3
குற்றமும் தண்டனையும்

ஆலயக் களங்களில் காணும்
அலைத் தடுப்புச் சுவரினருகில் நிற்கிற,
மின்னலால் தாக்குண்ட,
அந்தப் பேரீச்சை மரம்

அதன் பாவமூட்டைதான் எவ்வளவு பெரியதோ -
தாக்குற வேண்டியவன் நான்தான்


இதுபோன்ற சிந்தனைகளுடன்
மீண்டும்
கடந்து செல்ல விடுக்கிறேன்
ஒரு முழு நாளை.
4
சவரக்கத்தியின் விளிம்பில்

துறவிகள் என்று தமக்குத்தாமே எண்ணிக்கொள்ளும்
வேசைமகன்களே,
இதை யோசித்துப்பாருங்கள்: துறவியாய்இருப்பதற்கு

நீங்கள் சாகவேண்டும் - குறைந்தபட்சம் பலதடவை -
சவரக் கத்தியின் கூர்விளிம்பில்

உங்கள் கைவிரல், கால்விரல்களின் நகங்களும்
உங்கள் புருவங்களும்
எல்லாமே மடிந்து உதிர்ந்தாக வேண்டும்.
5
உரிய விதத்தில் நடப்பது

வாழ்வானாலும், சாவானாலும்
அவர்கள் நடந்துகொண்டேயிருக்கிறார்கள்
கிராமத்தவர் சூரியோதயத்தை
துறவிகள் சூரியாஸ்தமனத்தை
நோக்கி.

ஒரு ஆயுட்காலம்
வெறும் ஒரு தப்படி அளவுக்குத்தான்
நட, நட
உரியவிதத்தில் நடந்துகொண்டே யிரு.
6
நாம்சன் பள்ளத்தாக்கின் குழந்தைகள்

வெண்பனி மூடிய குளிர்காலம் கடந்தவுடன்
நாம்சன் பள்ளத்தாக்கின் குழந்தைகள்
மலையேறிப் போகிறார்கள்
பத்து லி1 என்பதே பயங்கரத்தொலைவு அங்கே
புல்தரைப் பாடும்பறவையின் முட்டைக்கூட்டைச் சுமந்து
அவர்கள் திரும்புகிறார்கள்
நிலவொளியைத் தின்றபின்னர்.
-----------------------
1பராம்பரிய சீன அளவை அலகு. காலந்தோறும் மாற்றமுற்று வந்திருக்கிறது 
எனினும், ஆங்கில மைல் அளவில் மூன்றிலொரு பங்கு. தற்காலத்தில் 
அரைக் கீலோமீட்டர் என நிர்ணயமாகியிருக்கிறது.
7
ச்சுய்மியின் ஜென்சங்கு
சாமானியனுக்கான புராதன விதி எண் 13

கேளுங்கள், கேள்விகேட்பவர்கள்
அனைவரும் மரிப்பார்கள் (சொற்களால்
கேள்வி கேட்டால்)

தொலைவில், மீண்டும் அருகில்,
ஆகாயத்தை விலக்கி வைக்கும்
சிதில வீட்டில்

எத்தனை பத்தாயிரம் பேரைக் கொன்றீர்கள்
புத்தனின் ஒற்றைக் கூர்சொல்லுடன்
அமர்ந்தபடி?
8
பாத்து2க்குள் நுழையும் கேஸா3
சாமானியனுக்கான புராதன விதி எண் 11

துக்கம் அனுசரிக்கும் பெண்களே,
அழுவதை நிறுத்துங்கள், அழுவதை நிறுத்துங்கள்.

வாழ்வென்பது வெளியிலிருக்கும் காற்று.
மரணமோ வெனில்?
ஆற்றில் உள்ள வளைவு.
இதோ, இந்தக் குடும்பச் செய்தியும் கூட -
வாழ்வின் இறுதியில்
தவிர்க்கவியலாத பிரிவே.
-----------------------------
2தென்மேற்கில் இங்கிலாந்தில் உள்ள அழகுநிலைய நகரம்.
3ஒரு வகைக் கொசு.
9
ஜோஜுவின் பெருமரணம்
சாமானியனுக்கான புராதன விதி எண் 4

புத்தனை,
-அவனை முன்னமே தேடியிருக்கவேண்டும் நான் -
காணவே யில்லை எங்கும்.
மரணதண்டனை நிறைவேற்றுபவனின் வாள்
-வாழ்வளிக்கும் அந்த வாள்-
வெற்று வானத்திலிருந்து வீழ்கிறது!
பத்தாயிரம் பேர் இறந்துபட்டனர் -
ஒருவன் மட்டும் வாழ்வைத் தொடர்கையில்!
10
தென்கிழக்குக் காற்று சொன்ன சேதி

சியோலின் இன்ஸடாங் சந்தியில்
உயரமான,நிழலற்ற மரமொன்று நிற்கிறது

இரவு வானத்தில் அதன் வேர்கள்
கிளைகளோ பூமியில்
 
தன்னில் துளிர்விடும் ஒற்றை இலையால்
அது உறையிட்டு மூடியிருக்கிறது
ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தை

 

11
அலைகள்

நள்ளிரவின் ஆழத்தில்
சூத்திரங்களைப் பாராயணம் செய்தபடி
காரிரவின் ஆகாயத்தை
அண்ணாந்து பார்க்கிறேன்,

கவனி, தன்னந்தனியாக,
தொலைதூரக் கடலின் அலறலை -

ஆயிரம் சூத்திரங்களும்
பத்தாயிரம் உடன்படிக்கைகளும்
எல்லாமே
காற்றில் பறக்கும்
வெற்று அலைகள்தாம்.
12
பேசாமல் பேசுதல்

கீழைக்கடலின் கரைமீதுள்ள
டேப்போவைச் சேர்ந்த முதிய செம்படவன்

கடலுக்குள் செல்லும்போது - கடலாக ஆகிறான்
கோவிலுக்குப் போகும்போது - கோவிலாய் ஆகிறான்

அவனது வாழ்வு எங்கெங்கு சென்றாலும்
அவன் ஓர் அலை என
அறிவீராக.
13
காட்டு நரிகள்

சொல்லற்ற பிரதிக்குள் நுழைகிறான் ஒருவன்
வெளியேறிச் செல்கிறான் ஒருவன்
இருவரும்
எதிரெதிரே சந்திக்கும்போது
காட்டு நரிகளாய் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *