கபீர் கவிதைகள்

 

 

 

தமிழில் : செங்கதிர்


1.வினோதமானது

துறவியே,
எத்தனை வினோதமானது
இந்தப்பிரபஞ்சத்தின் லீலை!.

நேற்றுவரை அனாதையாய் இருந்தவன்
இன்று திடீரென அரசனாகிறான்.
நாடாண்டவனோ
ஒருநாள் பிச்சைக்காரனாகி
நடுத்தெருவில் நிற்கிறான்.
எள்ளளவும் காய்க்காத மரத்தில்
சந்தனத்தின் நறுமணம் கமழ்கின்றது.

நீரில் மட்டுமே உழன்றிருந்த மீன்
இன்று காட்டின் ராஜாவாக உலா வருகிறது.
கானகத்தை ஆண்ட சிங்கமோ
சமுத்திரத்தில் விழுந்து
மூச்சுத்திணற தத்தளிக்கிறது.

குப்பையில் முளைத்த கொடியும்
காற்றின் சுவர்களில் படரும்
மல்லிகையாகிறது.
அதன் சருமத்திலிருந்து
நறுமணம் திசையெட்டும் கமழ்கின்றது.

மூவுலகிலும் நடந்தேறும்
இந்த அபத்தத்தைப் பார்க்க
குருடனுக்குப் பார்வை வாய்க்கிறது.
மேரு மலையைத் தாண்டும் சக்தி
வாமனனுக்கு கிடைக்கிறது.
அவனோ மூவுலகையையும்
தன் குறும்பாதங்களால்
அனாயசமாக அளக்கிறான்.

ஆத்ம தரிசனத்தை
ஊமையன் பகர்கிறான்.
அவனது வாயிலிருந்து
ஞானத்தின் சொற்கள் பெருகி வழிகின்றன.
ஆகாயத்தை வாகாக சுருட்டி,
பாதாளத்தின் ஆழத்தில் வீசியபின்
துயிலெழும்பி
சொர்க்கத்தின் அரியணையில்
அமர்கிறது ஷேச நாகம்.

கபீர் சொல்கிறேன்
ராமனே இங்கு ராஜா!
அவன் செய்யும் எதுவும்
எத்தனை வினோதமாயினும்
அற்புதமாகவே அமையும்.
2.நகரவாசிகளை விழுங்கினேன்

மெதுவாக
மிக மெதுவாக
ஒவ்வொருவரையும்
வாயிலிட்டு மென்று விழுங்கினேன்.
முதலில் பாட்டியை,
பின்னர் அம்மாவை விழுங்கினேன்.
அடுத்ததாகச் சாப்பிட்டேன் சகோதரனை
மாமனைத் தின்றேன்
மச்சானை விழுங்கினேன்.
மாமனாரையும்
அவரின் சுற்றத்தாரையும் சாப்பிட்டேன்.
பின்னர் மென்று விழுங்கினேன்
நகர்வாழ் மக்கள் அனைவரையும்.


கபீர் சொல்கிறேன்
நகரத்தையே உண்டு செரித்தப்பின்தான்
எனது தலைவனின்
வீடு புகுந்தேன்
3.எல்லோரும் ராமனாகிறார்கள்

மீண்டும் மீண்டும் யோசித்துக்கொள்
என்னைப் போன்ற களவாணியின் நட்பு
தேவையா என.
கசப்பைச் சுரக்கும் வேப்ப மரம்
சந்தனத்தின் கூடா நட்பால்
சந்தனமாகவே மணக்கிறது.

துண்டு இரும்பும்
ஒற்றைத் தீண்டலால்
தங்கமாக மினுங்குகிறது.

பெயரற்று வெறும் ஓடையாக
கங்கையில் வந்தடையும் ஒவ்வொன்றும்
கடைசியில் கங்கையாக மாறுகிறது.

கபீர் சொல்கிறேன்,
ராமனின் பெயரை உச்சாடனம் செய்யும் எவரும்
கொஞ்சம் கொஞ்சமாக
ராமனாகிறார்கள்.நிந்தனை
4.நிந்தனை

நிந்தனை, நிந்தனை!
மக்கள் அனைவரும்
என்னை நிந்திக்கிறார்கள்.
அழுக்கை வாரி இறைத்து
என்னை சாக்கடை ஆக்குகிறார்கள்.\
அவர்கள் அறியாத ஒன்று;
நிந்தனை எனது தாய்
நிந்தனை எனது தந்தை.

உனது பெயர் கலங்கமானால்
வைகுண்டம் வாய்க்கும் உனக்கு.
உனது பெயரின் உண்மைமுகம்
மனதின்வெளியில் தெளிவடையும்.

எத்தனை அவப்பெயர்கள்!
அத்தனையும் கேட்ட நான் பரிசுத்தமானேன்!
சேற்றை வாரி இறைக்கும்
எனது எதிரி உண்மையில்
என் அழுக்கைக் கழுவி
சுத்தமாக்குகிறான்!

என்னை நிந்திக்கும
ஒவ்வொருவரும்
எனது பிரியமான நண்பர்களாகிறார்கள்.
எதிரிகளின் மீது
கனிந்து பிரியத்தைச் சொரிகிறது
என் இதயம்.

என்னை விமர்சிப்பதை நிறுத்தும் தருணத்தில்
நீங்கள் எனது எதிரி ஆகிறீர்கள்.
எனது வாழ்க்கையின் குழப்பங்களை அதிகமாக்குகிறீர்கள்.

அவப்பெயர்
எனது பிரியமான காதலன்.
களங்கம் என்னைக் கடனாளியாக்குகிறது.
எல்லோரும் கபீரின்மேல் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
இறைத்தவர்கள்
மூழ்கிப்போனார்கள்.
நானோ கடலில் மிதந்து
கரை ஏறினேன்.
5.நெசவாளி

நெசவாளியின்
எந்த ஒரு புதிருக்கும்
உன்னிடம் விடை இல்லை.
அவனோ
தனது தறியில்
மொத்தப் பிரபஞ்சத்தையும்
ஒரு நொடிப்பொழுதில்
விரிக்கிறான்.
பிரசங்கத்தில்
வேதங்களையும் புராணங்களையும்
நீ கேட்டுக்கொண்டிருந்தபோது
நான்
எனது தறியின்
ஊடு இழைக்கான நூல்களை
அளைந்துக் கொண்டிருந்தேன்.
பூமியையும்
ஆகாயத்தையும் சுருட்டி
அவன் தறியைச் செய்கிறான்!
சூரியனையும் சந்திரனையும்
சட்டகங்களாக்கி
ஒருசேர
அசைக்கிறான்.
தனது தறியில்
நூல் இழைகளை
மாற்றி மாற்றி
நெய்துகொண்டிருக்கும்
அவனை
எனது குருவாக
வரித்துக் கொண்டேன்.

அவனது அடையாளத்தை
அந்த நெசவாளனின் சங்கேதங்களை
மின்னல் பொழுதில்
எனது வீட்டினுள்ளே
உணர்ந்தேன்.
உடனே அறிந்துக்கொண்டேன்
அவன் ராமன் என்பதை.

கபீர் சொல்கிறேன்:
எனது தறியை
உடைத்தெறிந்து விட்டேன்.
ஒரு உண்மையான நெசவாளன் மட்டுமே
நூலை நூலோடு
கோர்த்து
நெய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *