கடித இலக்கியம்

சுரேஷ்குமார இந்திரஜித்சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், 
கோபி கிருஷ்ணன், பிரம்மராஜன், கோவை ஞானி, பிரமிள், 
கால சுப்பிரமணியன், சுஜாதா ஆகியோர் சுரேஷ்குமார இந்திரஜித்க்கு 
பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

சுந்தர ராமசாமி

Santa Cruz, CA 95065 USA

31.8.93

அன்புள்ள சுரேஷ்,

நானும் குடும்பத்தினரும் இங்கு நன்றாக இருக்கிறோம். வித்தியாசமான மனிதர்கள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரப் பின்னணி. பார்க்கவும், நினைக்கவும் கற்றுக் கொள்ளவும், முகஞ்சுளிக்கவும், ஒப்பிட்டு ஏங்கவும் நிறைய விஷயங்கள். பிறப்பு வளர்ப்பு எப்படி இருந்தாலும் கற்றுக் கொள்ளும் திறன் மட்டும் இருந்துவிட்டால் வெறும் இந்த சமூகத்தில் பழைய எச்சங்கள் தொடராமல் மேல்நிலைக்கு வர முடியும். இது மிகவும் அபூர்வமான விஷயம். முக்கியமாக ***(தெளிவாக இல்லை) பிரிவுகள் உறுதிப்பட்டு கிடக்கும் நம் பின்னணி சார்ந்த பார்வையில் இதுவும் இது போன்ற வேறு சில அபூர்வமான விக்ஷயங்களையும் இணைத்துப் பார்க்கும்போது வேறு பல குறைகள் இருந்தாலும் சரி நம்மைப் பார்க்கிலும் வெகுவாக முன்னேறி போய்விட்ட சமூகம் என்றுதான் தோன்றுகிறது.

வாரக் கடைசிகளில் எங்காவது ஒரு இடத்திற்கு சுற்றிப் பார்க்கப் போகிறோம். அதிகமும் மேற்குக் கரையோ ***. மற்ற நாட்களில் படிக்க புத்தகங்கள் நிறைய இருக்கின்றன, எழுத முடியவில்லை. தமிழுக்கும் இந்த மண்ணுக்கும் காற்றுக்கும் ஒத்துவராத மாதிரி.

நான் இங்கு இருப்பது அறிந்து ஒரு சில அன்பர்கள் – நேர்ப்பழக்கம் இல்லாதவர்கள்  – தொடர்பு கொண்டார்கள். அதிகமும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுடைய அழைப்பை ஏற்று டொரண்டோ(கனடா)வும் லண்டனும் போகவிருக்கிறேன். கனடா போக விசா கிடைத்துவிட்டது. லண்டன் விசா கைக்குக் கிடைக்கவில்லை. 7/9 இல் கிளம்பி 20/9 வாக்கில் திரும்ப வந்து சேரவேண்டும். 26/9இல் சென்னை திரும்புகிறேன்.

எப்படி இருக்கிறீர்கள்? எழுத்து / படிப்பு நண்பர்கள் முகங்கள் நினைவுக்கு வராத நாளே இல்லையென்று சொல்லிவிடலாம். கோலகல ஸ்ரீநிவாஸ் உங்கள் கதைகள் பற்றி எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன். அது சரிதான். சிவராமனுக்கும்(மதுரை) உங்களைப் பற்றி உயர்ந்த எண்ணம். பல தடவை சொல்லியிருக்கிறார். நீங்கள் நம்பிக்கையுடன் எழுத வேண்டும். சிறுகதை தொகுப்பு வெளி வந்திருக்கும். நாவல் அளவில் நீங்கள் எழுதிப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தமிழ்நாடும் இந்தியாவும் வெகுவாகத் தொலைந்து போய்விட்ட நிலை. ஒன்றுமே தெரிவதில்லை. மனங்கொள்ளும்படி ஒன்றும் இராது என்றும் தோன்றுகிறது.

திலீப் விலாசத்துக்கு என் பெயருக்கு எழுதினாலும் கடிதம் என்னை வந்து சேர்ந்துவிடும். செப்/அக்டோபர் இல் மதுரை வர வேண்டும்.

என் அன்பான வாழ்த்துகளுடன்

சுரா


சுரா
E11 அண்ணா நகர் கிழக்கு
சென்னை- 102

அன்புள்ள சுரேஷ்,

உங்கள் 21/5 கடிதம், முன்னுரை. முன்னுரை படித்து, மீண்டும் படிக்கும்படி இருக்கிறது. நவீன எழுத்தின் புகை மூட்டம் இல்லாமலும், தெளிவாகவும், நட்பைத் தாண்டி நம்பிக்கையை பதிவு செய்வதில் உறுதிகாட்டுவதாகவும் இருக்கிறது. யதார்த்தத்தை எந்திர ரீதியில் பதிவு செய்வது படைப்பாளியினால் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். எழுத/அல்லது படைக்கத் தூண்டுவதே சாராம்சம் சார்ந்த போதத்தின் போதைதான். படிக்கும்போது வாசகன் ஈர்ப்பாக உணருவது சர்மங்கள் உதிர்ந்து சாரம் வெளிப்படும் அழகைத்தான். உங்களுடைய படைப்பு நம்பிக்கைகளை காற்றுக்கும் மழுப்பலுக்கும் ஊகங்களுக்கும் விட்டுக் கொடுத்துக் கொண்டிராமல் கறாராக பதிவு செய்திருப்பது மிகவும் நல்ல விஷயம். தொடர்ந்து படைப்பு ரீதியான விஷயங்களைப் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. மனதைத் தொடும் புத்தகங்களின் மதிப்புரைகள் மூலமாக போதிய பயிற்சி பெற்று நேரடியாகக் கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கலாம்.

நான் நாளைப் போகிறேன்.

நீங்கள் எனக்கு ஏதும் எழுத விரும்பினால் திலீப் விலாசத்துக்கு எழுதுங்கள்.

இன்று மாலை சிவராமனை ராமகிருஷ்ணன் வீட்டில் சந்திக்க இருக்கிறேன்.

அன்புடன்,

சுரா.

ஜே.ஜே. சில குறிப்புகளின் மலையாள மொழிபெயர்ப்பு எனக்கு நேற்று இங்கு கிடைத்தது. ரவிவர்மன் சுருக்கமாகவும் மர்மங்களைத் தொடுவதாகவும் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஜெயமோகன் மலையாளத்தில் பின்னுரை சுமார் 30 பக்கங்கள் தமிழ் நவீன இலக்கியம் பற்றியும் தமிழ் கலாச்சாரப் பிரச்சனைகள் பற்றியும் சொல்கிறார்.

ஜே.ஜே-ஐ படிக்கும் மலையாள வாசகனுக்கு உபயோகமான பின்னணியை உருவாக்கும், சிரத்தையாக எழுதப்பட்டிருக்கும், முன்னுரை. பதிப்பு, தமிழ் பதிப்பின் கார்ட்டூன் போல் – அதே மேலட்டை – இருக்கிறது.

மார்த்தாண்டன் இரண்டு மூன்று முறை போனில் பேசினார். நன்றாக இருக்கிறார்.


சுந்தர ராமசாமி                                                                                                        நாகர்கோவில்,

14.10.93

அன்புள்ள சுரேஷ்,

உங்கள் 6.10.93 கடிதமும் சிறுகதைத் தொகுப்பும் கிடைத்தன. இம்மாதம் முதல் தேதி நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம்.

கனடாவிலும் லண்டனிலும் ஈழத் தமிழர்களைச் சந்தித்தேன். அவர்கள் நிலை மிக மோசம். மத்திய அரசு பற்றியும் தமிழக அரசியல்வாதிகள் பற்றியும் தமிழ் கலாச்சாரவாதிகள் பற்றியும் மிகுந்த குறையுடன் இருக்கிறார்கள். சென்னையில் கோமலைச் சந்தித்து விவரம் கூறி ஈழத்துத் தமிழர்களின் உணர்வுகளை எந்தவிதத்தில் நாம் பகிர்ந்து கொள்ளலாம் என்பது பற்றிய என் யோசனைகளையும் சொன்னேன். ஒரு சில காரியங்களைச் செய்வதாக கோமல் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.

உங்கள் சிறுகதைத் தொகுப்பை இனிதான் படிக்க வேண்டும். இங்கு கொஞ்சம் வேலைகள் குவிந்திருக்கின்றன.

நீங்கள் உங்கள் நாவலை அவசியம் எழுதி முடிக்க வேண்டும். தன்னை முழுமையாகப் போட்டு எழுதுவது தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வரவேண்டும். நீங்கள் சிறுகதைகளில் நிறுவியுள்ள தரம் உன்னத எழுத்துக்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை தொடுகிறது.

தமிழுக்கு மிக மோசமான காலம். ஒவ்வொரு நேரத்திலும் உண்மைவாதிகள் மௌனம் சாதிப்பதும் பிரச்சாரவாதிகள் தலைவிரித்து ஆடுவதும் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. நீங்கள் செயல்படும்போது உங்கள் செயல்பாடு மற்றொரு உண்மைவாதியைத் தூண்டுகிறது. நீங்கள் மிக ஊக்கமாகச் செயல்படவேண்டியது இன்றையத் தேவை.

உங்கள் மனைவிக்கும் குழந்தைக்கும் என் அன்பு.

அன்புடன்,

சுரா


சுந்தர ராமசாமி                                                                                                                        நாகர்கோவில்

24.11.93

அன்புள்ள சுரேஷ்,

உங்கள் கடிதம். உங்களுக்குப் பதில் எழுதிய பின் உடல்நிலை மேலும் மோசமாயிற்று. காய்ச்சல், இருமல், ஜலதோஷம் என்று. ஒரு வாரம் சரியான அவஸ்தை. இன்றுதான் சரியாகி விட்டதுபோல் ஒரு உணர்வு. காய்ச்சலோடு படித்துக் கொண்டே இருந்தேன். இந்த பத்து நாட்களிலும் நிறையப் படித்தேன்.

நாகராஜனைப் பற்றி நீங்கள் நீண்ட கட்டுரையை குறுகிய காலத்தில் எழுதியிருக்கிறீர்கள். ஈடுபாடு காரணமாக முன்கூட்டியே பல விஷயங்கள் மனதில் இருந்திருக்கலாம்.

நீங்கள் தொடர்ந்து எழுதுவது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது. என்னையும் எழுத ஊக்கப்படுத்துகிறது. எழுதும் வடிவத்தைப் பற்றி முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் அந்த நேரத்தில் உவப்பான வடிவத்தைத் தேர்ந்து எழுதலாம். சரியாகவும் ஆழமாகவும் சொல்லவேண்டும் என்று இருக்கும் வரையிலும் எழுத்து சுலபமாக இருக்கப் போவதில்லை. சரியாக வெளிப்படுத்திக்கொண்டு விட்டோம் என்று உணர்வு ஏற்படும்போது தோன்றும் சந்தோஷம் பெரிய விஷயமாகவும் இருக்கிறது.

நான் அடுத்த மாதம் 11, 12 தேதிகளில் மதுரையில் இருக்கலாமா என்று யோசிக்கிறேன். உறுதிப்படுத்துவது பின்னால்.

நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக் குதிரை’ படித்தீர்களா? நான் பாதி படித்தேன். அதற்குள் புத்தகம் காணாமல் போய்விட்டது. தேடிக் கொண்டிருக்கிறேன்.

அன்பான வாழ்த்துக்களுடன்,

சுரா


சுந்தர ராமசாமி                                                                                                                        நாகர்கோவில்,

11.8.89

அன்புள்ள இந்திரஜித்,

உங்கள் கடிதம், கதை, கவிதைகள் எல்லாம் கிடைத்தன. கிடைத்த தகவலை மார்த்தாண்டனுக்கு எழுதி தெரிவிக்கச் சொல்லியிருந்தேன்.

ஒரு மாதமாக கடையில் கடுமையான வேலை. மலிவு விற்பனை என்று போடுகிறோம். சமீபத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க இந்த நாடகம் அவசியமாக இருந்தது. இந்த மும்முரத்தில் ஒன்றுமே படிக்கவில்லை.

இன்று காலை – வெள்ளி – உங்கள் கவிதைகளையும் கதையும் படித்துப் பார்த்தேன். இலேசாக. இன்னும் இரண்டு மூன்று முறையேனும் படிப்பேன். கவிதைகள் நம்பிக்கை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. தொடர்ந்து நீங்கள் கவிதைகள் எழுத வேண்டும் என்று வலுவாகவே உங்களிடம் சொல்லத் தோன்றுகிறது. பிரசுரம் பற்றி முடிவு செய்ய நான் இன்னும் இரண்டொரு தடவைகள் படிக்க வேண்டும். படித்துவிட்டு மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

லக்ஷ்மணன் திருமணத்தின் போது நான் வெகுவாக உங்களை எதிர்பார்த்தேன். நண்பர்களை சந்திப்பது இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. தனிமையில் இருக்கிறேன் என்ற எண்ணம்தான். அதில் ஒரு ஆசுவாசமும் இருக்கிறது. ஆனால் மிகவும் விரும்பும் புத்தகங்களைக் கூட உடனுக்குடன் படிக்க முடியவில்லை. அது தான் உள்ளூர வருத்தமாக இருக்கிறது.

காலச்சுவடின் சந்தா, இரண்டாவது வருடம், அதிகம் நிறைவு தருவதாக இல்லை, முதல் வருடம் தீர்ந்து போனவர்கள் சரிபாதி தான் புதுப்பித்திருக்கிறார்கள். புதிய சந்தாக்கள் சில வந்து கொண்டிருக்கின்றன.

உங்களுடைய புதிய பழக்கங்கள் – உடற்பயிற்சி, குளியல், இத்யாதி – உற்சாகத்தை அளிக்கின்றன. உங்களைப் பற்றி, ‘மனப்பிரமைகள் தான் அதிகம்’ என்று சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். இந்த உண்மையை மேலும் உணருவதின் மூலம் இந்த மனப்பிரமையிலிருந்து நீங்கள் பூரணமாக விடுதலைப் பெற்று விடலாம்.

இங்கு நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம்.

மார்த்தாண்டனிடம் மதிப்புரையை அனுப்பி வைக்க சொல்லுங்கள்.

இப்போது இந்தக் கடிதத்தை எழுதி முடித்த நிலையில் உங்கள் கவிதைகள் மூன்றையும் திரும்பிப் படித்தேன். மூன்றில், ‘இரவில் கண்ட குடும்பம்’ சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இது போன்ற காட்சிகளைப் பார்த்து பல சமயம் நான் மிகுந்த சங்கடங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். அந்த அனுபவங்களை புரட்டுகிறது இந்தக் கவிதை. நீங்கள் தொடர்ந்து கவிதைகள் எழுத வேண்டும். அன்றாடம் மிகச் சிறந்த கவிதைகளை மட்டும் – ஒரு சிலவற்றையேனும் – படிக்க வேண்டுமென்றும் சொல்வேன்.

அன்புடன்,

சுரா


சுந்தர ராமசாமி                                                                                                        நாகர்கோவில்

24.3.94

அன்புள்ள சுரேஷ்,

உங்கள் சென்னைப் பயணம் உபயோகமாக அமைந்திருப்பதான உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது. விஜயகுமாரின் முயற்சிகள் வெற்றி பெற உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

தமிழ்க் கவிதைத் தொகுப்பு பற்றி யோசித்ததும், மார்த்தாண்டன்/சுகுமாரன் ஆகியோரிடம் ஒப்படைத்ததும் மிகவும் நல்ல விஷயங்கள். தொகுப்புக்கு முன்னுரை மிகவும் முக்கியம். கவிஞர்கள் பற்றிய விபரங்களும், தேர்வு செய்யும் கவிதைகள் சார்ந்த பிரசுர விபரங்களும் இடம் பெற வேண்டும். பொதுவாக நவீனக் கவிதை சார்ந்து வெளிவந்திருக்கும் தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தனிக் கவிஞர்கள் பற்றி வந்திருக்கும் கட்டுரைகள் பற்றியும் பட்டியல் தர வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் தொகுப்புகளில் பல்வேறு தகவல்கள் தருவது மரபாகிவிட்டது. இது போன்ற மிகச் சிறந்த தொகுப்பு ஒன்றைத் தேர்வு செய்து அதை முன் மாதிரியாக வகுத்துக் கொள்ள வேண்டும். மார்த்தாண்டனுக்கு எழுதுங்கள்.

‘மார்க்சியம் – கிழக்கும் மேற்கும்’ வேர்கள் ராமலிங்கத்திடம் கிடைக்கும். மதுரையிலிருந்து வரும் நண்பர்கள் எல்லோரும் மார்க்சியம் – கிழக்கும் மேற்கும் நூலையும் அம்பை, திலீப், சுரேஷ், ஜெயமோகன், கோணங்கி ஆகியோருடைய சிறுகதைகளையும் படித்து விட்டு வரவேண்டும். முடிந்த வரையிலும். ’இந்திய டுடே’ அரவிந்தன் மேற்படி சிறுகதை ஆசிரியர்கள் பற்றி கட்டுரை படிக்க இப்போது இசைவு தெரிவித்திருக்கிறார். தற்காலக் கவிதை பற்றி ஜெயமோகன் ஒரு குறிப்பு எழுதுகிறார். நாவல் குறிப்பு பற்றி என்னிடம் மாற்று யோசனை இல்லை.

’மார்க்சீயம் – கிழக்கும் மேற்கும்’ பற்றி உங்கள் சந்தேகங்களையும் எதிர் நிலைகளையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கல்லிடைக்குறிச்சிக்கு காலை 10/10.30 வாக்கில் வந்து சேருவது சிரமம் என்று சிவராமன் எழுதியிருந்தார். இதுபற்றி லல்லிக்குத் தெரிவித்தபோது கல்லிடைக்குறிச்சியிலிருந்து புறப்படும் நேரத்தை 11.30 ஆக வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார். மதுரை நண்பர்களைப் பார்த்தால் சொல்லவும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இறுதியாக நான் ஓரு சுற்றறிக்கை அனுப்புவேன்.

ஹமீது நெல்லையில் இருக்கிறார்.

எம்.டி.எம். பற்றிய விஷயங்கள் எல்லாம் அப்போதே தெரியும். அதைப் பற்றி எழுதவோ பேசவோ கஷ்டமாக இருக்கிறது. நினைக்காமலே இருக்கவேண்டும் என்று பார்க்கிறேன்.

என் வீட்டு நூல் நிலையத்தை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறேன். என் உணர்வில் இல்லாமல் மறைந்து போன பல புத்தகங்களும் வெளியே குதித்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கரைந்த நிழல்கள், தலைமுறைகள், மானசரோவர்(அசோகமித்ரன்), தூவானம்(ஆ. மாதவன்) என்று சில புத்தகங்கள் படித்தேன். கனடாவிலிருந்து வெளிவரும் ‘புன்னகை’ என்ற இதழுக்காகவும், மலையாள ‘மாத்ருபூமி’ இதழுக்காகவும், இரண்டு பேட்டிகளுக்கான பதில்கள் எழுதினேன். மாத்ருபூமிக்காக கேள்விகளைக் கேட்டிருந்தவர் ஜெயமோகன்.

கண்ணன் சென்னையில் இருக்கிறான்.

இங்கு வெயில் கடுமை.

என் அன்பார்ந்த வாழ்த்துகளுடன்,

சுரா.


சுந்தர ராமசாமி                                                                                        நாகர்கோவில்,

4.3.94.

அன்புள்ள சுரேஷ்,

நம் கூட்டம் பற்றி : கலந்து கொள்கிறவர்கள்: லல்லி, ஹமீது, மணிவண்ணன், சிவராமன், வீமன், சு.ரா., விஜயகுமார், சுரேஷ், கண்ணன், ஜெயமோகன், அரவிந்தன், யுவன், தண்டபாணி, சலபதி, ஆனந்த், மு. ராமலிங்கம், மகாலிங்கம். இவர்களில் மகாலிங்கம், ராமலிங்கம், தண்டபாணி, யுவன், அரவிந்தன், சலபதி ஆகியோருக்கு கூட்டம் பற்றிய விபரம் இனிதான் தெரிவிக்க வேண்டும். ஆனந்த், சலபதி, கண்ணன் ஆகியோருக்கு வருவதற்கு இடையூறுகள் இருக்கக் கூடும்.

கூட்டம் கல்லிடைக்குறிச்சி பக்கம் மாஞ்சோலை எஸ்டேட்டில் நடைபெறுகிறது. தேதி ஏப்ரல் 14,15,16,17. 14ம் தேதி வந்து சேருவதற்கும், 17ம் தேதி திரும்புவதற்குமாக. மீதம் 15,16ம் விவாதம். அனைவரும் 14ம் தேதி வியாழக்கிழமை கல்லிடைக்குறிச்சியிலிருந்து வேன் வைத்து மாஞ்சோலை போகிறோம். மாஞ்சோலையில் தங்கும் வசதியும், உணவு வசதியும் உள்ளன. தங்க ஏற்பாடுகள் லல்லி செய்திருக்கிறார்.

கட்டுரைகள் : ‘கல்வி பற்றி எஃப். ஆர்.லீவிஸ்’ என்ற தலைப்பில் சிவராமனும், ‘டி.எச். லாரன்சின் புனைக்கதை அல்லாத எழுத்து’ பற்றி வீமனும் கட்டுரை படிக்கிறார்கள்.

கோணங்கி, சுரேஷ், ஜெயமோகன், அம்பை, திலீப் ஆகியோரின் சிறுகதை பற்றி ஹமீதிடம் கட்டுரை கேட்டிருக்கிறேன். 16ம் தேதி பிற்பகல் எஸ்.என். நாகராஜனுடன் கலந்துரையாடல். நாகராஜனுக்கு இன்னும் அழைப்பு அனுப்பவில்லை.

இக்கடிதம் கிடைத்ததும் உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்து உதவுங்கள்.

அன்புடன்,

சுரா


சு.ரா * 151 கே.பி. ரோடு * நாகர்கோவில் 629001

அன்புள்ள சுரேஷ்,

உங்கள் கடிதம் கிடைத்தது. பாம்பன்விளைக்கு உங்களால் வர இயலாது என்பது ஏமாற்றம் தருகிறது.

மார்த்தாண்டனுக்கு உடல்நிலை சரியில்லை. இங்கு ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சென்ற ஒரு வாரம் சிகிச்சை நடந்தது. இன்று கிராமத்துக்குப் போகிறார். தொடர்ந்து ஒரு சில வாரங்களுக்கு மருந்தும் ஓய்வும் தேவையாக இருக்கும். எடை 33 கிலோ. உடல் மிகவும் மெலிந்துவிட்டது. நுரையீரல்களும் ஈரலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இன்று காலை அவரைப் பார்த்தேன். இனிமேலாவது அவர் கவனமாக இருக்க வேண்டும்.

என் அன்பார்ந்த வாழ்த்துகளுடன்,

சுரா


சு. ரா * 151 கே.பி. ரோடு * நாகர்கோவில் 629 001

                                                     7.5.96

அன்புள்ள சுரேஷ்,

உங்கள் கடிதங்கள். மார்த்தாண்டனை கிராமத்தில் கண்ணன் போய் பார்த்துவிட்டு வந்தான். முன்னேற்றம் இருக்கிறது என்றான்.

இன்று அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தில் மிகவும் ஆறுதலாக எழுதியிருக்கிறார். புதிய வாழ்க்கை மேற்கொள்ளப் போவதாக உறுதி தந்திருந்தார்.

எதிர்காலத்தில் இன்று அவர் ஆசைப்படும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சந்தர்ப்பங்கள் உருவாக்கும் சதிக்கு எதிராக தன்னை மீட்டுக்கொள்ள மிகுந்த வைராக்கியம் வேண்டியிருக்கும். அது அவருக்கு கூடவேண்டும்.

கணையாழியில் என் எழுத்தைப் பிரசுரிப்பதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் தொடர்பு மிக மோசம். கடிதம் எழுதினால் பதில் தர மாட்டார்கள். ஒரு பிழைத்திருத்தம் சொன்னால் அதற்கும் பதில் வராது. உறவு வைத்துக்கொள்வது மிகக் கஷ்டம். என்ன கோளாறு என்பது தெரியவில்லை. எனக்கு அலுப்பாக இருக்கிறது, அதுதான் நான் எழுதவில்லை.

பாம்பன்விளை வர இயலாது என்று எழுதியிருக்கிறீர்கள். கடைசி நிமிஷத்தில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து நீங்கள் வரும்படி ஆகுமா? சிறு சாத்தியமேனும் உண்டா?

நீங்கள் மார்த்தாண்டனைப் பார்ப்பது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும். நான் இங்குதான் இருப்பேன்.

மீண்டும் நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறேன். இன்னும் வேகம் கூடவில்லை. கூடும். கூட வேண்டும்.

என் அன்பார்ந்த வாழ்த்துகளுடன்,

சுரா.


சுந்தர ராமசாமி                                      நாகர்கோவில்,

                                                     4.3.92

அன்புள்ள சுரேஷ்,

உங்கள் 1.3.92 கடிதம். உங்கள் மனைவிக்கும் குழந்தைக்கும் பெரிய காயங்கள் இல்லை என்பதை அறிந்ததில் மிகுந்த ஆசுவாசம். ஈருளிகளை கவனமாக ஓட்டவேண்டிய காலம். ஐம்பது வயதாகிவிட்டவர்கள் இளைஞர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் தேசிய வாசகம் இது.

‘எலும்புக்கூடுகள்’ நேற்று இரவு படித்தேன். முதல் பற்றுதல் வெகு அழகாய் உருவாயிற்று. இன்றிரவு மீண்டும் படிப்பேன். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை படைப்பின் குணங்களைக் கண்டடைவது சந்தோஷத்தை உருவாக்குகிறது. மீண்டும் எழுதுவேன்.

உங்கள் பெயருக்கு இதழ்களை அனுப்புகிறேன். அதுதான் நல்லது. 19 இதழ்கள். கூடச் சில பிரதிகள் உங்கள் கைவசம் இருந்தால் தேவை ஏற்படும்போது பயன்படும். (பார்சல் எடுப்பது அசௌகரியமா?}

‘கனவு’ நான் பார்க்கவில்லை. படித்துவிட்டீர்கள் என்றால் அனுப்பி வையுங்கள்.

அன்புடன்,

சுரா.


சுந்தர ராமசாமி                                                                                                        நாகர்கோவில்,

                                                                                                                                                9.3.92.

அன்புள்ள இந்திரஜித்,

இப்போது உங்கள் கதையை மீண்டும் படித்தேன். சுருதி முதலிலிருந்து கடைசி வரையிலும் நன்றாக இருக்கிறது. உட்குரலில் ரீங்காரம் வெகு சுத்தம்.

இதுபோன்ற கற்பனைகளில் வழக்கமாக வரும் பிழைகள் – வாசகர் பார்வையில் தகவல்கள் விளக்கப்படுகிறது; அல்லது அவற்றின் திணிப்பு; நம்ப வைக்கும் முயற்சியில் அதிகத் தகவல்கள் தருவது; தன்னை இயற்கையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியாத நிலை- ஆகிய சோடைகள் இல்லை.

உங்களைப் பொறுத்தவரை புதிய வாசல் திறப்பது போலவே இருக்கிறது. பல கதைகளில் கூடி வராத அவஸ்தைக்குப் பின் வெளி விழுந்ததுபோல். கதை அதிகாரம் திரட்டும் பொய்மைக்கு எதிராக நிற்பதால் மொழி, பின்னணி, கலாச்சாரக் குறுகல்கள் இவற்றிலிருந்து விடுபட்டு வரலாற்றைப் போய் அணைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் நிறைய மன விரிவுகளுக்கான சாத்தியங்கள் கிடைக்கின்றன. எந்த மொழிக்குப் போனாலும் இழப்புக்கள் இன்றி ஒரு வாசகன் இதை படிக்க முடியும். நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் எழுதி வரவேண்டும். உங்கள் இருப்பும் செயல்பாடும் அவற்றின் வித்தியாசத்தினாலும் ஆழத்தினாலும் அர்த்தப்படும் என்று நினைக்கிறேன்.

என் வாழ்த்துக்கள்,

சுரா


ராஜமார்த்தாண்டன்

 

ராஜமார்த்தாண்டன்
இடையன்விளை

28.4.96

அன்புள்ள சுரேஷ், நலம்தானே.

வீட்டில் அம்மா, உங்கள் துணைவியார், குழந்தைகள் நலம்தானே. எழுதுங்கள்.

இங்கு என் மனைவி ரெங்கா, குழந்தைகள் அஜிதா, பிரதீப் நலம். அஜி, எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வு எழுதியிருக்கிறார்.

நிற்க,

உடல்நிலை மோசமாகப் பாதிக்கப் பட்டிருப்பதால் தற்சமயம் ஒரு மாத விடுப்பில் இம்மாதம் 17-ம் தேதி முதல் ஊரில் இருக்கிறேன்.

இம்மாதம் 16ம் தேதி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டி.பி-யினால் இடப்பகுதி நுரையீரல் பகுதி பாதிக்கப்பட்டுவிட்டது தெரிந்தது. ஊர் வந்துவிட்டேன், விடுப்பில். இங்கு ஒரு பிரபல மருத்துவமனையில் ஐந்து நாள்கள் தங்கி ஸ்கேன் போன்ற எல்லாப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. லிவர் லேசாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அபாயகரமாக ஏதுமில்லை. எனவே, மருந்து, சத்தான உணவு, ஓய்வில் பூரண குணம் ஏற்பட்டு விடும். இரண்டு, மூன்று மாதங்கள் ஆனாலும் ஆகலாம். வாரம் ஒருமுறை மருத்துவமனை சென்று பரிசோதித்துவிட்டு வரவேண்டும். இதுதான் இப்போதைய என் நிலைமை. எனவே, மீண்டும் சென்னைக்கு வேலைக்குப் போக எப்போது முடியும் என்பது கொஞ்ச நாள் பொறுத்துத்தான் தெரியும்.

எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். பாலசுந்தரம்(பேராசிரியர்) (பெயர் குழப்பமாக இருக்கிறது. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தமிழ் பேராசிரியர்) என் ‘பிரக்ஞை’ வால்யூம் இருக்கிறது. அதை வாங்கி, எனக்கு அனுப்பி வைத்தால் நன்றியுடையவன் ஆவேன். நிறைய வாசிக்க நேரம் உள்ள நிலையில் இருக்கிறேன்.

கவலை கொள்ளும்படி ஏதும் இல்லை. நாளுக்கு நாள் தேறி வருகிறேன்.

அன்புடன்

அ. ராஜமார்த்தாண்டன்.

அ. ராஜமார்த்தாண்டன்,
இடையன்விளை,
சந்தையடி அஞ்சல்
Pin : 629703
கன்னியாகுமரி மாவட்டம்.


 

சென்னை
27.4.94
ராஜமார்த்தாண்டன்

அன்புள்ள சுரேஷ்,

நலம் நலம்தானே.

குறத்தி முடுக்கு, மற்ற மரணம் புத்தகங்கள் கிடைத்தன. நன்றாக வந்திருக்கின்றன. அச்சு அமைப்பு இன்னும் தெளிவாக இருந்தால் நன்றாக இருக்கும். பிசிறு தட்டுவது போன்ற உணர்வு.

குறத்தி முடுக்கு – நானே மதிப்புரை எழுதலாம் என்றிருக்கிறேன். மற்ற மரணம் – மதிப்புரைக்கு அனுப்பிவிட்டேன். இரண்டு மதிப்புரைகளுமே விரைவில் வெளிவர ஏற்பாடு செய்கிறேன்.

கவிதைத் தொகுதிக்கான வேலைகளில் கவனம் செலுத்தி விடுகிறேன். நீங்கள் அனுப்பிய சு.ரா.வின் லிஸ்டில் உள்ளவற்றில் ஒரு சில தவிர ஏனைய தொகுதிகள் என்னிடம் உள்ளன. முடிந்தவரை அனைத்துத் தொகுதிகளையும் படித்து விடுவதாக உத்தேசம்.

தொகுப்பு வேலை மே மாதம் முடிந்துவிடும். பின்னர் சுகுமாரனுடன் விவாதித்து இறுதி வடிவம் கொடுக்கப்படும். விரிவானதொரு முன்னுரையும் எழுதலாம் என்றிருக்கிறேன். கவிதைகள் முடிவான பின்னமும் கவிஞர்களிடம் ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பலாம் சென்றிருக்கிறேன். எனவேதான் ஒப்புதல் கடிதத்தின் மாதிரிப் படிவம் இதுவரை அனுப்பி வைக்கவில்லை.

வர்க்ஷாவுக்கு புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கி அனுப்புவதில் என்னுடைய உதவி தேவைப்பட்டால் எழுதவும். ***** விழா குழுக்கும் எழுதியுள்ளேன்.

சு.ரா சென்னை வந்திருந்தபோது தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அடுத்த வாரம் ஊருக்குச் செல்லும்போது நேரில் சந்திப்பேன்.

வீட்டில் அம்மா மற்றும் அனைவரையும் அன்புடன் கேட்ட்தாகச் சொல்லவும்.

அன்புடன் / அ. இராஜமார்த்தாண்டன்


ஜெயமோகன்

அன்புள்ள இந்திரஜித்,

வணக்கம். கடிதம் கிடைத்ததா? ஒரு சந்தோஷச் செய்தி. எனது திருமணம் 8/8/1991 அன்று நடந்தது. மனைவி பெயர் S. அருண்மொழி நங்கை. மதுரை விவசாயக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். வாசகியும் தோழியுமாக இருந்தாள். ரசனையும் அறிவும் உடையவள். அவள் வீட்டில் சில பிரச்சினைகள் ஆதலினால் பதிவு மணம் புரிந்து கொள்ளும்படி ஆயிற்று. இப்போது திரிசூரில் இருக்கிறோம். நன்றாக. மீதி பிறகு.

-ஜெயமோகன்.


அன்புள்ள சுரேஷ்,

உங்கள் கடிதம்.

நான் உங்களை சந்திக்க முடியாமை பற்றி ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். நாம் மீண்டும் சந்திப்போம். நிறைய பேச வேண்டும்.

ராஜமார்தாண்டன் சந்திப்பு பற்றி எழுதிய போது நல்லதொரு கட்டுரையாடல் அமையும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கும் சில எல்லைகள் உள்ளன என்பது உண்மையே.

என் படைப்புகள் பற்றிய உங்கள் கருத்து உங்கள் கோணத்தில் சரியானதுதான். படைப்பாளிகள் தங்கள் படைப்பின் வடிவிலேயே உவகை பார்க்கிறார்கள். அவர்களுக்குள் ஊறிய படைப்பு நியதிகளை பிற படைப்பிலும் போட்டுப் பார்க்கிறார்கள். ஆனால் அது சரியான வாசிப்பு அல்ல. எந்தப் படைப்பாளியும் நல்ல வாசகன் அல்ல; இல்லையா? நீங்கள் சொன்ன கருத்து ’இந்திரஜித்’தின் கருத்து. சுரேஷினுடையது அல்ல.

எனது கதைகள் வலுவான Plot உடையவை. பிளாட்டுகளுக்காக காத்திருக்கும் தன்மை உடையவன் நான். என்னில் இருந்து விலகிய ஒரு சூழலில், ஆதியந்தம் உடைய Plotக்குள் தான் நான் என்னை கூற முடிகிறது. அதேசமயம் மற்ற முக்கியமான சிறுகதை ஆசிரியர்களைப் போலவே நானும் ஒரே கதையையே மீண்டும் மீண்டும் கூறுகிறேன். வலுவான Plot சில தேவைகளுக்காக. முதல் தேவை எனது மனம் Concrete ஆனது என்பதே. Concrete ஆன படைப்பையே என்னால் முன்வைக்க இயலும். மனம் நேரடியாக முன்வைக்கப்பட இரு வழிகளையே காணமுடியும் 1) கோணங்கி போல Abstract ஆன கதை சொல்லல். 2) உங்களைப்போல படிமம் வழியாக கூறுதல். இரண்டுமே மொத்தமாக Abstract கலைக்கு உள்ளே வருபவை. தமிழில் ஒரு வலுவான குழு Abstractness ’மட்டுமே’ கலை என்று கூறி வருகிறது. பிரமிளை விட்டுவிடுவோம். தன் எழுத்தை நிறுவி மற்ற எழுத்துக்களை ******(கடிதம் ஸ்கேன் செய்யப்பட்டதில் இரு சொற்கள் சரிவரத் தெரியவில்லை.)  கோணங்கி கூட அப்படித்தான். அமூர்த்த கலை மேலும் கூர்மையையும், உன்னத கணங்களையும் அடைய முடியும் எனினும் மூர்த்த கலையே ஒரு கலாச்சாரத்தின் ஜீவனும், அடிப்படையுமாக இயங்க இயலும். மாற்றமற்ற விதி இது. மூர்த்த கலைக்கு முன் ஒரு எதிர்வினையே அமூர்த்த கலை. மூர்த்த கலையானால் ;போதிய அளவு’ தொடமுடியாத ‘ஒருசில’ தளங்களை மட்டும் மேலும் உத்வேகத்துடன் தொடமுயல்வதே அமூர்த்த கலை. புதுமைபித்தன், தி.ஜா, பாரதி, சு.ரா, அசோகமித்திரன் எல்லாரும் மூர்த்த கலையின் கலைஞர்கள். மவுனி, பிரமிள், கோணங்கி, நகுலன், நீங்கள் எல்லாரும் அமூர்த்த கலையின் கலைஞர்கள். அமூர்த்தம் மிகக்குறுகிய எல்லை உடையது. அமூர்த்த கலைஞர்கள் மிகவும் குறைவாகவே எழுத இயலும். ஒரு குறிப்பிட்ட தளங்களுக்கு மேல் எழுதப் பட்டால் அமூர்த்த கலை வெகு வேகமாய் அபத்தமாக ஆகிவிடும். பிரமிள், நகுலன், மவுனி, கோணங்கி, நீங்கள் அனைவரும் இப்படி ஆகியிருக்கிறது. அமூர்த்த கலையின் Negative அம்சமே இதற்கு காரணம். கலாசாரத்தின் Negative அம்சத்தை இது பூர்த்தி செய்கிறது. ஆனால் கலாச்சாரம் நன்னம்பிக்கை, எதிர்பார்ப்பு, அழகு, வெளிச்சம், கனவு என சகல தளங்களிலும் பெருமளவு பாஸிட்டிவ் ஆனது. Concrete ஆக எழுதுபவன் மனசை முன்வைக்க, ஆழம் என்பது அதுதானே, சில சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. கூறலின் நேரடித்தன்மை அவனுக்கு இல்லாமல் போனதனால் அவன் மறைமுக அம்சங்களை கண்டு பிடிக்கிறான். இதற்குத்தான் Plot தேவையாகிறது. பிளாட்டுக்குள் தன்னை பொருத்தி விலகி நின்று கூற வேண்டியுள்ளது. Concrete ஆன கலை உடைய எவனும் தொடர்ந்து புதுக் களங்கள்/ புது சூழல் / புது விசயம் / புது உத்தி / புது கூறல்நடை/ புது கதாபாத்திரங்கள் என்று தேடியபடியே இருப்பான். அவனுடைய Naration அமூர்த்த கலைஞர்கள் அளவு Personal ஆக இருக்க இயலாது. எனவே Narrationஐ தொடர்ந்து மாற்றியபடியே இருப்பான். தமிழில் இதன் உச்சக்கட்ட பரபரப்பை புதுமைப்பித்தனில் காணலாம். அதை ‘பிரமிக்க’ வைக்கும் முயற்சி என எடுத்துக் கொள்ளலாகாது. அம்முயற்சியே கலையை முன் எடுத்து செல்கிறது. புது களமும், புது Narrationம் இல்லாதபடி நின்று விடும். மூர்த்த கலைஞன் செத்துப் போனவன்தான். கூடுமானவரை தன் படைப்பை impersonal ஆக மாற்றுவான். அது இன்னொரு இடத்தில் அதே விகிதத்தில் Personal ஆவதற்காகவேதான்.

என் படைப்புகளில் எப்போதும் Mansizeக்கு சற்றுப் பெரிய கதாபாத்திரங்களைப் படைத்து வருகிறேன். வேண்டுமென்றே அல்ல. என் இயல்பான மன அளவு இது. Fancy அளவு இல்லாத கதையே நான் எழுதியதில்லை. Fantacy என்றுகூட கூறலாம். இதில் இலக்கண வரையறையாக ரியலிசத்தை இழுக்கலாகாது. ரியலிசம் இலக்கியத்தின் சவலைப்பிள்ளை என்பது என் கருத்து. எனதல்ல. கம்யூ – காஃப்கா காலத்தில் உதயமாகி இன்று லத்தீன் அமெரிக்கா வழி உலகை ஆளும் கருத்துதான் அது. கதை சொல்லலின் ஆதி அம்சமே ‘அற்புதம்’தான். Concrete கதைசொல்லி அதை முற்றிலும் தவிர்ப்பது அறிவுடைமை அல்ல. உலகின் மிகப்பெரிய ரியலிச சிகரங்கள் தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி இருவரிலும் இத்தகைய அமானுட சித்தரிப்புகள் எவ்வளவு உள்ளன. காலத்தை வென்று நிற்பதும் அந்த அம்சம்தான். இந்திய மரபிலும் ரியலிசம் இல்லை. நமது மிகப் பெரிய படைப்புகள் நமது புராண இதிகாச மரபின் கூறுகளை கொண்டு உருவானவையே. தாராசங்கரின் ஜீவன்மஷாய்(ஆரோக்கிய நிகேதனம்) இந்திய உரைநடை உலகு படைத்த மிகச்சிறந்த கதாபாத்திரம் இல்லையா? அதற்கு இணையாக நாம் மகாபாரதத்தில் தானே தேட முடியும்? அல்லது மணிந்திரநாத்! (நீலகண்ட பறவையை தேடி) நமது மரபு, உரைநடையின் சாத்தியக்கூறுகள் இவற்றை இணைப்பதே படைப்பின் முன் உள்ள சவால். ஆனால் இது மூர்த்த கலையின் பிரச்சினை. அமூர்த்த கலை தன் சிறு உலகின் ஆழங்களை விட்டு வெளியேறுவதே இல்லை. என் ஆளுமையில் என் கலாச்சாரப் பின்னணியில் பெரும் இடம் வகிக்கும் கதைகள் உண்டு. அமானுடக் கதாபாத்திரங்களின் திரை விலக்கி காட்சி தரும் முகம்தான் என மனம் முழுக்க. என் படைப்பில் என் ஆளுமையே இருக்கும். என் Romanticism, என் fantacy என் கனவுகள் இவையே. நிகழ்கால இலக்கிய மரபுகளை என் படைப்பு மேஜை மீது அமர விடமாட்டேன். உண்மையில் மாபெரும் அமானுட கதாபாத்திரங்கள் கிரீடமும் புஜகீர்த்தியும் சுட்டியும் சாமரமுமாய் எழுந்தருளும் மகத்தான human tragedy ஒன்றை ஒரு epicஐ படைக்க வேண்டுமென்பதே என் சாஸ்வத கனவு. ரப்பரில் எல்லா கதாபாத்திரங்களிலும் படைப்பு மனசின் அல்லல்கள் உள்ளனவா? லாரன்ஸில் மட்டும்தானே. அது எனது Proxy. மற்றபடி அந்தந்த கதாபாத்திரங்களின் வரம்புகள் மீறப்படவே இல்லை என்பது என் கருத்து.

-ஜெயமோகன்


பிரியமுள்ள இந்திரஜித்

உங்கள் கடிதம் கிடைத்தது.

உங்களுக்கு ஓய்வு கிடைக்காத சூழல் வருத்தமாக இருக்கிறது. எனக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இருந்தும் போதவில்லை. முதலில் வேலைபார்க்கவே பிடிக்கவில்லை. இவ்வளவிற்கும் மனம் தேவைப்படாத வேலை. வேலை நம்மை இழுத்துச் செருகிவிடுவது பற்றி யோசிக்கவே கசப்புதான்.

உங்கள் கட்டுரையை கூடிய சீக்கிரம் RPS விலாசத்திற்கே அனுப்பிவிடுங்கள். கையிலிருக்கும் படைப்புகளை நான் அனுப்பிவிட்டேன். கண்ணனைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது பிடித்திருந்தது. ஆனால் படைப்புப் பொறிகள் தென்படும் எவரும் படைப்பிற்கு வருவார்கள் என உறுதியாக கூறமுடிவதில்லை. நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். அப்படி அதற்கு மேல் ஒரு உத்வேகமும் நம்பிக்கையும் வேண்டியுள்ளது. அதற்கு Middle classஐ சேர்ந்திருக்க வேண்டுமோ என்றும் சிலசமயம் தோன்றுகிறது.

காலச்சுவடு அச்சுக்கு போகிறது என சுரா கூறினார். Page போட்டுப்பார்த்த போது 400 பக்கம் வந்ததாம். மிகுந்த வருத்தத்தோடு 100 பக்கம் வெட்டிவிட்டார். நிறைய படைப்புகள். இன்னொரு இதழாக கொண்டுவருவது பற்றி யோசிக்கிறார்.

’ஜே. ஜே. சில குறிப்புகள்’ மலையாளப் பதிப்பு அச்சாகிவிட்டது. ஜனவரியில் வெளியீடு நடப்பதாக இருந்து சு.ராவிற்கு நேரமில்லாததனால் பிப்ரவரிக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது. நான் தமிழ் நாவலும் ஜே. ஜேயும் பற்றி ஒரு பின்னுரை அதில் எழுதியிருக்கிறேன்.

பிரியத்துடன்

ஜெயமோகன்.


அன்புள்ள இந்திரஜித்,

நலம்தானே?

நானும் நலம்.

இங்கு சற்று அவசரமான எழுத்து வேலைகள். எனவே கடிதங்கள் எழுதுவது நடுவே தடங்கலாகி விட்டது.

ஒரு விசயத்தில் உங்கள் உதவி கோரியே இக்கடிதம்.

சு.ராவின் 60வது ஆண்டு இது. எனவே ஒரு மலர் பற்றி யோசித்தோம். பலர் விலகிவிடவே தனித்து விடப்பட்டேன்.

இப்போது கனவு–18 இதழை சுரா சிறப்பிதழாக கொணர்வது பற்றி யோசித்துள்ளோம். ஆர்.பி.எஸ் ஆர்வமாக உள்ளார். சு.ராவின் படைப்புகள் பற்றி உங்கள் கட்டுரையோ குறிப்போ கிடைக்குமெனில் மிகவும் மகிழ்வோம். ஆகஸ்ட் 30க்குள் அனுப்ப முடிந்தால் நல்லது.

அதே சமயம் சு.ரா பற்றி எழுத்தில் எதையாவது கூறி commit பண்ணிக்கொள்ள பெரும்பாலோர் தயங்குவார்கள் என்பதால் எதையும் நான் வற்புறுத்துவதாக இல்லை. உங்கள் பங்கேற்பு பற்றி மிகவும் ஆவல்படுகிறேன்.

இவ்விசயம் உங்களைத்தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். இது ஒரு talk ஆக மாறுவது சில சமயம் சிலரால் சு.ராவை அவமானப்படுத்த பயன்பட்டுவிடும். மேலும் சு.ரா இதை இதழ் அச்சாகும்முன் எக்காரணத்தினாலும் அறியக்கூடாது என்று விரும்புகிறோம். அவர் இதை எப்படி எதிர்ப்பார் என நான் அறிவேன்.

தன்னடக்கம் மிகுந்த கவிஞர்களை கவுரவிக்கும் கடமை சமூகத்திற்கு உண்டு. இதில் உங்கள் பங்குமிருக்க வேண்டுமென விரும்புகிறோம். பிறகு உங்கள் விருப்பம்.

விளம்பரங்கள் சில கிடைத்தால் புத்தக வடிவிலேயே இதழை கொண்டு வரமுடியும் என்ற எண்ணமும் எங்களுக்கு உள்ளது.

அன்புடன்

ஜெயமோகன்.


தருமபுரி  30-10-93

அன்புள்ள இந்திரஜித்,

நலமா?

நானும் நலமே.

உங்கள் தொகுப்பை படித்து முடித்தேன். இதழ்களில் வந்தபோது அவ்வளவாக கவராத பல கதைகள் கூட மறுமுறை படிக்கையில் திருப்தி தந்தன. திரை எலும்புக்கூடுகள், மறைந்து திரியும் கிழவன், விரித்த கூந்தல், தமூரி ரிடாகாவின் பேட்டி, சிறுமியும் வண்ணத்து பூச்சிகளும் போன்ற பலகதைகள் நன்றாக உள்ளன. அறிக்கை நன்றாக வந்து இறுதிப்பகுதியில் வேறுவிதமாக – திறப்பாக – ஆகிவிட்டது. சந்திப்பு போன்ற சில கதைகள் சாதாரணமானவை. உத்திகளில் நீங்கள் செய்யும் புதுவிதமான பயணம் பற்றி வேறுவகையில் விரிவாக எழுத வேண்டும். பொதுவாக தொகுப்பு நன்றாக உள்ளது.

என் தொகுப்பு முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றிய உங்கள் அபிப்பிராயம். நான் என் கலைப்புகளுக்கான காரணத்தை அதிலேயே குறிப்பிட்டிருந்தேன். தீவிரமான அனுபவத்தளம் இல்லாத அறிவுபூர்வமான எழுத்துதான் போர்ஹே முதலியவர்களின் பிரச்சினை என்று. இலக்கிய விமர்சகர்கள் மிக விரிவாக குறிப்பிட்ட விசயம்தான் இது. அதுபோல கேளிக்கை என்ற சொல். அதை நீங்கள் entertainment என்ற பொருளில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கதை சொல்லல் என்ற சம்பவம் ஆதியில் ஏற்படுவதற்கு அதற்குரிய entertainment அம்சமே காரணம். இன்றும் உலகில் எங்கும் கதை சொல்லலில் அதுவே பிரதான காரணம். சிந்தனை பகிர்வும், ஞான வளர்ச்சியும் அதில் சேரலாம். ஒழுக்கத்தையும் அறத்தையும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அதன் ஆதி நோக்கம் entertain செய்வது நிச்சயமாக அதற்கு அன்னியமாகி போகாது. எந்த வடிவமும் அதன் ஆதி நோக்கத்தை மீறி நகராது. கேளிக்கை என்பதை வெகுஜன ரசனை பொழுதுபோக்கு – உல்லாசம் போன்ற ஏதோ பொருளில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும்.

பிரியத்துடன்

ஜெயமோகன்


தருமபுரி.

அன்புள்ள இந்திரஜித்,

நலமா?

நானும் நலமே. வீட்டில் துணைவியும் குழந்தைகளும் நலம்தானே?

பயங்கர அலைச்சல். பயணங்கள். பையனும் குழந்தையும் இப்போது பட்டுக்கோட்டையில். பையனுக்கு 11ம் தேதி பெயர் சூட்டு விழா. அஜிதன் என்று பெயர். அஜித கேசகம்பளன் என்ற ஆதி பௌதீகவாதியின் நினைவாக எழுதப்பெற்ற என் நாவலின் ஒரு நல்ல கதாபாத்திரம்- பௌத்தன் –பெயரும் அஜிதன் தான்.

16ம் தேதி எனக்கு கோவையில் லிலி தேவசிகாமணி இலக்கியப் பரிசு தரப்படுகிறது. ‘திசைகளின் நடுவே’க்காக.

ஏப்-20வாக்கில் அருணா வேலைக்கு சேர வேண்டும். பிரச்சினை கூடவே இருந்து கவனித்துக் கொள்ள கிழவிகள் ஏதும் இல்லை என்பதே. தனிமையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டு வேலைக்கு ஆள் வைக்கலாம். குழந்தையை கவனித்துக் கொள்ளத்தான் ஆள் வேண்டும். அதுதான் அலைச்சல்.

நலம் நாடும்

ஜெயமோகன்.


அன்புள்ள சுரேக்ஷ்குமார் இந்திரஜித்,

உங்கள் கடிதம் கிடைத்தது. என் கதை பற்றி உங்கள் கருத்து கூர்ந்து கவனிக்க வைத்தது. ரொமாண்டிசிசம் இருதன்மை வாய்ந்தது. லௌகீக தளம் சார்ந்த விஷயங்கள் மீது அபக்குவத்தன்மையின் விளைவாக எழுகிற மனமயக்கம் ஒன்று. இதுதான் கலையின் ஒருமையை குலைப்பதும் ஆழத்தை இல்லாமல் செய்வதுமான ரொமாண்டிசிசம். இன்னொன்று வாழ்வுக்கு அப்பால் உள்ள(?) சிலவற்றுடன் தொடர்பு கொள்ள உந்துதலுடன் மேலேழும் மன எழுச்சி. Spritual Romanticism என்று அரவிந்த்கோஷ் கூறும் நிலை. இரண்டாவது ரக மன எழுச்சி கலைக்கு ஆழத்தையும் வீச்சையும் தருவது. இதுவும் லௌகீக முதிர்ச்சியின் பார்வையில் அபத்தத்தன்மை உடையதுதான். ஆனால் இந்த அபத்தமே பெரிய படைப்புகளை, பெரிய கனவுகளை, சாத்தியமாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் மானுட இனம் பொறுமை/கோபம்/குரூரம் போன்ற மனவக்கிரங்களை பூரணமாக ஒழித்துவிடும் என்று நம்பும் தஸ்தாயெவ்ஸ்கியிடமும் சரி நூறு வருடங்களில் உலகில் போரே இல்லாமலாகிவிடும் என நம்பிய தல்ஸ்தோயிடமும் சரி அதி மானுட, உயர் மானுட சிருஷ்டி நோக்கி மானுடம் நகர்வதாக நம்பிய அரவிந்தரிலும் சரி செயல்படுவது இந்த மனோபாவம்தான். தூய லௌகீகதளம் பெரிய படைப்புகளை பிறக்க வைக்க முடியாது. பெரிய, பிரமிப்பு சார்ந்த கதாபாத்திரங்களை படைக்காத பெரிய படைப்பாளிகள் இல்லை – விதிவிலக்கு காஃப்கா காம்யூ. ஆனால் இவர்களை பெரிய படைப்பாளிகள் என நான் நம்பவில்லை. அவர்களுடைய சிறிய உலகங்கள் விரைவாக மானுடப் பிரக்ஞையிலிருந்து உதிர்ந்து வருகின்றன.

எனது பிரக்ஞையில் எளிய ரொமாண்டிசிசம் இல்லை என்றே நம்புகிறேன். ஆனால் எனக்கு வழிபட கனவுகள் உண்டு. அக்கனவுகளை ஏந்திய அதிவடிவ கதாபாத்திரங்களும் உண்டு. இதை எனது பெரிய பலமாக வரமாக எண்ணுகிறேன். பெரும்கனவை பயிரிடவே எழுத விரும்புகிறேன். எளிய சிக்கல்களில் புழங்க விரும்பவில்லை. இதை என் தூய இந்திய / கீழைதேச மன இயல்பாகவும் காண்கிறேன். கலையில் இது வர முயல்கிறேன்.

ஜே.ஜே.-யின் கனவுக் காட்சிகளில் இருண்மையின் உக்கிரத்துக்கு பிறகு அதே உக்கிரத்துடன் உதயமும் வெளிப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். நமது பார்வையின் தன்மை முந்தையதை தீவிரமாக ஏற்கிறது. பிந்தையதின் ஒளியை அவநம்பிக்கையுடன் பார்க்கிறது. சம்பத்தின் ’தூய அழகியல்’ தரிசனத்தின் சாரத்தை ஜே.ஜே.யும் தயக்கத்துடன்தான் ஏற்க முயல்கிறேன். நீங்கள் இந்த இடங்களை தெளிவாக எழுதவில்லை என்பது உண்மையே.

ஜெயமோகன்

தருமபுரி.


அன்புள்ள சுரேஷ்குமார்,

உங்கள் கடிதம் கிடைத்தது. நலம்தானே? நானும் அருணாவும் நலம். கனவு கட்டுரை பற்றி விரிவான அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன் தங்களிடமிருந்து. இங்கு கற்று விச்ராந்தியான நாட்கள். நாவல் எழுதுவதில் இடைவெளி. எனவே படிப்பு, சில கட்டுரைகளை செப்பனிடுவது. திருவண்ணாமலை சென்றிருந்தேன். கூட்டம் நிறைய. பவா. செல்லத்துரை இனிய எளிய நண்பர். சிறந்த குழு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார். மிகவும் அசலானதாக ஏதும் இல்லைதான். ஆனால் சில நல்ல வாசகர்களை சந்தித்தேன்.

கோமல்/சா.கந்தசாமி/இந்திரன் ஆகியோரை சந்தித்தேன். இவர்களுள் இந்திரன் நாம் நினைப்பதை விடவும் ஆழமானவர் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இன்னொரு கடிதம் போட்டிருந்தேன். அது கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்தமாதம் 4ம் தேதி அனேகமாக சு.ராவின் ஜே.ஜேயின் மலையாளப் பிரசுரத்திற்காக கேரளா போகவேண்டியிருக்கும்.

நடுவே அவசரமாக ஒரு சிறு நூலை தமிழிலிருந்து மொழி பெயர்த்து மலையாளப் பிரசுரத்திற்கு தந்தேன். ராமகிருஷ்ணன் என்ற பெயருடைய ஒரு இயற்கை உணவு நிபுணர் அம்பாசமுத்திரம் பக்கம் சிவசைலம் எனும் ஊரில் வாழ்ந்திருந்தார். அவர் எழுதியது. வேக வைக்காத இயற்கை உணவை ஒரு மருத்துவமாகவும் வாழ்வு முறையாகவும் வலுயுறுத்தி வந்தவர். இயற்கை உணவு ஆசிரமம் ஒன்றையும் நடத்தி வந்தார். இன்றும் அது உள்ளது.

அவருடைய சீடர்கள் உலகமெங்கும் உள்ளனர். கேரளாவில் வரும் 26ம் தேதி அதை பிரசுரிக்கின்றனர்.

வேறென்ன

ஜெயமோகன்
தருமபுரி
636701


நண்பர் இந்திரஜித் அவர்களுக்கு,

உங்கள் கடிதம் கிடைத்தது. உங்களைப் பார்த்து ஒருவருடம் தாண்டிவிட்டது. அப்போது அறிமுகமான பலர் இன்று நல்ல நண்பர்களாக உள்ளனர். மதுரை வந்திருந்தால் உங்களை சந்தித்திருக்கலாம். கருத்தரங்குக்கு வர இயலவில்லை.

கவிதைகளை சற்று பிந்தி தொகுக்கலாம் என ஒரு எண்ணம். கதைகளை தொகுக்க வேண்டும். பிரசுரகர்த்தர் கிடைக்க வேண்டும். உங்கள் கதையை நிகழில் படித்தேன். சித்திர விவரிப்பு அழுத்தமற்ற, தீவிரத்துடன் உள்ளது. உங்களுடைய விகேஎம் பாணியில். எனக்கு எப்போதும் பிடிக்கும் நுட்பம் இது. அழுத்திச் சொல்வதே என் பாணி என்பதனால்தானோ என்னவோ.

நண்பர் கோலாகல ஸ்ரீனிவாஸைப் பார்ப்பது உண்டா? அவருடைய கட்டுரை பற்றி பேசப் படுகிறது பரவலாக.

ரப்பர் நாவல் உங்களுக்கு ஒரு பிரதி அனுப்ப எண்ணினேன். முடியவில்லை. பிரசுரகர்த்தரிடம் மீண்டும் சில பிரதிகள் கேட்டுள்ளேன். அனுப்ப முயல்கிறேன். நாவலை நீங்கள் படித்து எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

சமீபத்தில் கோணங்கி இங்கு வந்திருந்தான். அவனுடன் சென்னை சென்று கச்சேரிகள் கேட்டேன். ஆற்றூர் ரவி வர்மா வந்திருந்தார். காஞ்சிபுரம், வேலூர் எல்லாம் போய்த் திரும்பினோம். அற்புதமான சிற்ப வெற்றிகள் கொண்ட அழகான ஊர் அது.

சுந்தர ராமசாமிக்கு கடிதங்கள் எழுதுகிறீர்களா? காலச்சுவடு கடைசி இதழ் தயாராவதாய் எழுதியிருந்தார். அவர் உடல் நிலையும் சரியாக இல்லை.

அன்புடன்

ஜெயமோகன்.


அன்புள்ள சுரேஷ்குமார்,

உங்கள் கடிதம். அதில் நான் உங்களை எதிர்கட்சியாக கருதி பேசியிருப்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி இல்லவே இல்லை. உங்கள் படைப்புகள் மூலம் உங்களை, எழுதவரும் முன்பே அறிந்தவன் நான். நாம் சமமான மனநிலைகளில் பயணிப்பவர்கள். அதே சமயம் நமது படைப்பு நிலைகள் மாறுபட்டவை. உங்கள் கடிதம் ஒரு கேள்வியை முன்வைத்தது. அதை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அதற்கான எனது பதிலை எழுதினேன். தயார் நிலை பதில் அல்ல. எழுத எழுத உருவாகி வந்தது. அதன் அடிப்படை sketch தான் உங்களுக்காக  எழுதியது. பிற்பாடு மெதுவாக விரிவாக சிந்தித்து அதை மனதில் பதிவு செய்து கொண்டேன். இன்று ஒருமுறை abstract writing and Tamil பற்றி எழுதுவேன். எனது கட்டுரைகள் இப்படி உருவானவையே. பொறி பெரும்பாலும் என்னுடன் interact செய்யும் என்னைவிட பெரிய/இணையான மனங்கள் மூலமே நிகழ்கிறது. உங்கள் கடிதம் அப்படி ஒரு நிமித்தம். அது எனக்கு உத்வேகத்தை அளிப்பது. வழக்கமாய் சு.ரா, கோணங்கி, ஆற்றூர் ரவிவர்மா, கல்பற்றா நாராயணன், பி.கே. பாலகிருக்ஷ்ணன், டாக்டர் எம் கங்காதரன் முதலானவர்களின் கடிதங்களும் உரையாடலும் இப்படிப்பட்ட பொறிகளை தாங்கி வரும்.

விவாதம் என்பதன் பயனே இப்படித்தான். பாராட்டுகளை சம்பிரதாயமாக தெரிவிப்பது தேவை இல்லை. என் எழுத்து பற்றி நல்லெண்ணம் உடையவர் நீங்கள் என்று எனக்கு தெரியும். அதை குறிப்பிடுவதனால் பிரயோசனமும் இல்லை. Creative ஆக மோதுவதே பிரயோசனகரமானது. இதில் கோபதாபங்கள் கூடாதென்பதே முக்கியம் (நமது முன்னோடிகள் அப்படி இருக்கவில்லை) என் கடிதத்தில் நிலை வாதமாக நான் கண்டது பிரமிளை. Abstract writingஐ அடிப்படையாக காண்பவர் அவர். கோணங்கி இக்கருத்தால் பாதிக்கப்பட்டவர். அவர்கள் நியாயம் புரிகிறது. அதற்கு எதிர் நியாயம் இது. இலக்கிய தரிசனத்தில் ஒரு சரியும் மீதி தவறுகளும் என்ற விஞ்ஞான கருத்து சரியாகாது. ’அசலான அனைத்துமே சரியானவையே’.

என் படைப்பு பற்றிய சப்பைக்கட்டுகளை நான் முன்வைக்கவில்லை. அது அபத்தம். என் படைப்புகளை உங்கள் கருத்தின் அடிப்படையில் திரும்பிப் பார்த்தேன். அது படைப்பாளிக்கு இன்றியமையாத மனப்பயிற்சி. Abstract writing பற்றிய எனது கருத்துகள் உங்கள் படைப்புலகை திரும்பிப் பார்க்க உங்களை தூண்டும் என்று எதிர்பார்த்தேன். உங்கள் படைப்புகளை முன்வைத்து படிமங்களின் correctness – abstractness பற்றி யோசித்தேன் நிறைய. அமூர்த்த படிமங்கள் முடிவேயற்றவை(விரித்த கூந்தல்) மூர்த்த படிமங்களுக்கு திட்டவட்டமான எல்லை உண்டு. படைப்பில் அதீதத்துவம் பற்றிய தாவல் உள்ளபோது அமூர்த்த படிமங்கள் மிகவும் கை கொடுக்கின்றன. எனது படிமங்களுக்கு மூர்த்த தன்மை மட்டுமே உண்டு(சவுக்கு) காரணம் அதீதத்துவம் பற்றிய தாவல் இல்லை. அதே சமயம் முழுமை பற்றிய பிரக்ஞையுடன் கூடிய செயற்பாடு concrete writingலேயே அடைய முடியும். ஒருவிதமான ஆரம்ப நிலை சிந்தனைகள் இவை. உலகெங்கும் அசல் சிந்தனைகள் விவாதம் வழியாகவே உருவாகியுள்ளன. சம்பிரதாயமான உரையாடல் இதற்கு உதவாது. நாம் விவாதங்கள் நடத்துவதாக இருப்பின் இது இப்படியே அமைய வேண்டும், இல்லையா?

உங்கள் கடிதங்கள் creative ஆன கேள்விகளை முந்தைய கடிதத்தைப் போல – எழுப்புவதையே நான் விரும்புகிறேன். அவை என்னை ‘எழுப்ப’ வேண்டும். அவற்றுக்காக காத்திருக்கிறேன். அத்தகைய வினாக்கள் என்னை ஒருபோதும் வருந்தச் செய்யாது. உங்கள் தயக்கம் புரிகிறது. தமிழில் அனேகர் வினாக்களை புண்படுத்துவதாகவே எழுத்துக் கொள்கிறார்கள். எனக்கு அந்த தன்மை இல்லை. அந்த சந்தேகமும் வேண்டாம். புண்படுமோ இல்லையோ நான் எழுதும்போது வெளிப்படையாகவே எழுதுவேன். யாருக்கானாலும். புண்பட்டு விலகியிருக்கிறார்கள். வருத்தப்படுவது இல்லை. உண்மையாக இருப்பதும் செயல்படுவதும்தான் முக்கியம் இல்லையா

–    ஜெயமோகன்.


அன்புள்ள சுரேஷ்குமார இந்திரஜித்,

உங்கள் கடிதமும், கதைகளும் கிடைத்தன. நன்றி. உங்கள் கதைகள் மூன்றுமே சுராவிற்கும் மிகவும் பிடித்தவை என்று கூறினார். எனக்கு விரித்த கூந்தல் பற்றிய கதை மட்டுமே பிடித்திருந்தது. ஏற்கனவே இதுபற்றி எழுதியிருந்தேன்.

இங்கு சற்று மழை. நாவலுக்காக படிப்பதும் சற்று எழுதுவதும் என முற்றிலும் ஆழ்ந்திருக்கிறேன். கடிதங்கள் கூட பலசமயம் தாமதமாகிவிடுகின்றன. ஆனால் creative ஆக இருக்கும்போது நம்மைப்பற்றி நமக்கு வரும் திருப்தி அலாதியானது.

21ம் தேதி கோவையில் மீரானின் ’துறைமுகம்’ நாவல் பற்றி விமரிசன விழா ஒன்று. நானும் அருணாவும் சென்றிருந்தோம். நிகழ்ச்சி சுமார்தான். எனக்கு நாவல் அப்படி பிடிக்கவில்லை. அதைச் சொன்னேன். இனி திருவண்ணாமலையில் உதயசங்கரின் சிறுகதை தொகுப்பு பற்றி விமரிசன கூட்டம். அதுவும் எனக்கு திருப்தியாக இல்லை. நல்ல முயற்சிகள். ஆனால் அதற்குமேல் இல்லை எதுவும்.

ஏதாவது எழுதினீர்களா? தொகுப்பு ஏதும் போடும் எண்ணம் உண்டா இப்போது?

கோணங்கியின் புதிய சிறுகதைத் தொகுப்பு ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’ படித்தேன். இரண்டு கதைகள் பிடித்திருந்தன. தையல்காரன் கதை/ கருப்பன் போன பாதை. இரண்டு கதைகள் சுமார். மீதி கதைகள் வெறும் சொற்குப்பைகள்.

சுப்ரபாரதி மணியன் தொகுப்பு  என்ற கதை பிடித்திருந்தது. (கையெழுத்தில் கதையின் தலைப்பு தெளிவாக இல்லை)

நலம் நாடும் ஜெயமோகன்

தருமபுரி

636701


அன்புள்ள சுரேஷ்,                                     31/1/98

நலம்தானே?

நானும் வீட்டில் அஜிதனும் அருணாவும் நலம்.

கோலாகல ஸ்ரீனிவாஸ் தங்கை, மணிவண்ணன் திருமணத்தை முன்னிட்டு ஊர்பக்கமாக வர உத்தேசமிருந்தது. முடியவில்லை. குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயா வரவில்லை. புது ஆயா தேடுகிறோம். எங்கும் போக முடியவில்லை.

‘தினமணி’ சிறப்பிதழில் உங்கள் கதை ‘பீகாரும் ஜாக்குலினும்’ படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அபூர்வமாக படிக்க கிடைத்த கதை. உங்கள் ‘திரை’ ‘விரித்த கூந்தல்’ கதைகளுக்கு இணையானது. மனித உறவுகளின் மர்மமான இயங்குவிதியை தொட்டுக்காட்டி ஒருவிதமான பிரமிப்பை ஏற்படுத்தியது. புதுமையாகவும் இருந்தது.

வாழ்த்துகள்.

அன்புடன்

ஜெயமோகன்

தருமபுரி

636701


அன்புள்ள சுரேஷ்குமார்,

நலம்தானே?

காலச்சுவடு மலரில் என் கதை பற்றிய உங்கள் அபிப்பராயத்தை எதிர்பார்த்தேன். சுஜாதா மதிப்புரை படித்தீர்களா? அந்த ஆசாமியின் மனமும் ரசனையும் நிற்கும் இடம் வியப்பை தருகிறது. ஆனால் தன்னை ஒரு நவீனர் என்று அவர் எண்ணிக் கொள்வதுதான் அதை விடவும் வியப்பு.

சுபமங்களா வாசகர் வட்ட நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை போனேன். சுமாரான கூட்டம். நண்பர்களோடு உரையாடியது சுவாரஸ்யமாக இருந்தது. சா. கந்தசாமியும் கோமலும் நிறைய பேசினார்கள். கோமல் நாடகத்தை பற்றிய பேச்சில் விசேஷமான ஆழத்துடன் அழுத்தத்துடன் பேசுகிறார். இந்திரனின் சந்திப்பும் நல்ல அனுபவம். நினைத்ததை விடவும் ஆழமானவராக படுகிறார்.

இங்கு வருவதற்கு முன் விசிறி சாமியார் ராம் சுரத் குமாரைச் சந்தித்தேன். அழகானவர். சுவாரஸியமான இனிய மனிதர். பல மணிநேரம் (அபூர்வம் என்றனர்) எவ்வித அலட்டலும் இன்றி பேசிக் கொண்டிருந்தார். சற்று தூண்டிவிடும் பொருட்டு கூர்மையான விமரிசன கேள்விகளை கேட்டேன். தனது பக்த கோடிகளின் மத்தியில் அதை அனுமதிக்கும் தைரியம் இருக்கிறது. வலிமையான மனம் உடையவர் என்று எனக்கு பட்டது.

நேற்று Idiot படித்துக் கொண்டிருந்தேன். நஸ்டாஸியா பிலிப் போன்று தனக்கிழைக்கப்படும் அவமானங்களுக்கு பதிலடியாக தன்னையே கிழித்து வீசும் இடம் – பலமுறை படித்தும் குலுங்கி விட செய்யும் அதன் ஆவேசம்.

ஜே.ஜே. பற்றிய உங்கள் கட்டுரை அதை புரிந்து கொள்ள உதவக்கூடும். ஆனால் உங்கள் கோணமும் அணுகலும் எனக்கு தெளிவாகவில்லை. குறிப்பாக நீங்கள் சம்பத் – ஜே.ஜே. உறவு பற்றி குறிப்பிடும் இடங்கள்.

நட்புடன்

ஜெயமோகன். தருமபுரி


அன்புள்ள இந்திரஜித்,

தங்களை சந்தித்து மீண்டது மிகவும் மனநிறைவளிக்கும் அனுபவமாக இருந்தது. நாவலை எழுதி முடித்தபிறகு மிகவும் மனப்பாரமும் வெறுமையும் ஏற்ப்பட்டது.

அதனால் தொடர்ந்து ஊர் சுற்றியபடி இருக்கிறேன். நண்பர்களைச் சந்திப்பது பெரிய மன ஆறுதலைத் தந்தது. குறிப்பாக அந்த மாலை நேரமும், உணவும்.

வீட்டில் துணைவியும் குழந்தைகளும் எப்படி உள்ளார்கள். ஸ்ரீஜனனியை அஜிதன் ரொம்ப கேட்டான். அவன் அம்மாவிடம் ரொம்பவும் சொல்லிக் கொண்டிருந்தான்.

நலம் நாடும்

ஜெயமோகன்

தருமபுரி

636701


தருமபுரி.

அன்புள்ள சுரேக்ஷ்குமார இந்திரஜித்,

நலம்.

தாங்களும் நலம் என நம்புகிறேன்.

வந்த உடனே இன்னொரு அலைச்சல். எனவே உடனடியாக கடிதம் எழுத முடியாமல் ஆகிவிட்டது. நிகழ்ச்சி திருப்திகரமாக நடந்தது என்பது சந்தோஷமான விஷயம். மூவரும் மூன்றுதளங்களில் நின்று பேசினோம். நீங்கள் ஒரு சிறுகதையாசிரியரின் தளத்திலும் ஜயபாஸ்கரன் ஒரு கவிஞரின் குரலிலும் பேச நான் ஒரு விமரிசனாக பேசினேன். உரைகள் இப்படி mutually exclusive ஆக இருந்தது நல்ல விசயம் என்றுதான் தோன்றுகிறது.

அங்கு நண்பர்கள் எல்லாரும் நலம் என நம்புகிறேன். நீங்கள் போன பிறகு நானும் கோணங்கியும் நீண்ட நேரம் விரிவாக பேசினோம். வாசிப்பு- எழுத்து என்ற இரு தளத்திலும் ஒரு மிகச்சிறிய வட்டத்தினுள் அவன் நின்று கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது. இது அவனை உறையச் செய்து விடுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்.

சில பழைய கதைகளை Fair எடுத்து சில இதழ்களுக்கு அனுப்பியிருக்கிறேன். அவை உடனடியாகப் பிரசுரமாகக் கூடும். திருவண்ணாமலை மாநாடுக்காக உரை ஒன்று தயாரிக்கும் பணியில் இருக்கிறேன்.

பிரியத்துடன் ஜெயமோகன்.

தருமபுரி.


கோபிகிருஷ்ணன்

N. K. Gopalakrishnan
2nd Portion Upstairs
3 Appar street
TVS nagar
Padi
Madras 600 050

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். மதுரையில் தங்களைச் சந்தித்தது, தாங்களும் திரு. ராஜமார்த்தாண்டன் அவர்களும் திருமணத்துக்கு வந்தது அனைத்தும் மகிழ்ச்சி தரும் விஷயங்கள்.

நேற்று ‘ரா. ஸ்ரீனிவாஸன் கவிதைகள்’ பிரதி ஒன்றைத் தங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஓய்வு வாய்க்கும்போது வாசியுங்கள். இது ‘விருட்சம்’ நண்பர்களின் முதல் முயற்சி. ‘விருட்சம்’ நண்பர் அழகிய சிங்கர் திரு. மார்த்தாண்டன் அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பிரதி அனுப்பிவிட்டதாகச் சொன்னார்.

மீட்சி அச்சாக்கம் முடிந்துவிட்டது.

இங்கு ‘அலையன்ஸ் ப்ரான்சேஸ்’இல் 16,17,18 தேதிகளில் கூத்துப்பட்டறைக் குழுவினர் சார்த்தரின் தமிழாக்கமான ‘மீள முடியுமா?’வை நாடகமாக நடிக்கவிருக்கிறார்கள்.

பிற சேதி ஒன்றுமில்லை. நண்பர் திரு. ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு என் அன்பைத் தெரிவியுங்கள்.

நல்வாழ்த்துக்கள்

மிக்க தோழமையுடன்
கோபிகிருஷ்ணன்
16/7/89


சென்னை

10/11/89

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். தங்கள் கடித்ததுக்கு நீண்ட நாள் கழித்தே பதில் எழுத முடிந்திருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்.

கடைசியில் ஒரு வழியாக வேறு வேலைகள் கிடைத்துவிட்டன. இப்பொழுது

The save the children funs(London)

Guild of service

28 Casa Major Road

Egmore Madras 6000008ல் Assisstant Case worker ஆகப் பணிபுரிந்து வருகிறேன். சமீபத்தில்தான் வேலை கிடைத்தது. சம்பளம் ரூ. 750/- இந்த நிறுவனத்தில் Promotion chances உள்ளன.

இது தவிர மாலை நேரங்களில் பகுதி நேர வேலை ஒன்றும் செய்து வருகிறேன். உளவியல் மருத்துவர் திருமதி சாரதா மேனன் அவர்களது Clinic க்கில் Psychiatric social worker ஆக வேலை செய்கிறேன். இங்கு எனக்கு ரூ. 300/- தருகிறார்கள். 16/9/89 அன்று இந்த வேலையில் சேர்ந்தேன்.

திரு காசியபன் அவர்கள் சென்னை வந்திருந்தார், இரு வாரங்களுக்குமுன் அவரைச் சந்தித்தேன். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்பேன்.

எனது 2ஆவது தொகுதி வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. 4 புத்தகங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கின்றன. எனவே தான் தாமதம். இப்பொழுது Wrapper printing stageல் உள்ளது.

வேலை தேடுவதில் நிறைய நண்பர்கள் (திரு. எம்.எஸ். ராமசாமி அவர்களும்) உதவினார்கள். இது மனதுக்கு மிகவும் ஆறுதல் தரும் விஷயம். வேலைகளில் அமர்ந்த பிறகு பழையபடி மீண்டும் உற்சாகமுடன் இருக்கிறேன்.

நண்பர் திரு. ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு என் அன்பைத் தெரிவியுங்கள். தாங்கள் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

நல்வாழ்த்துக்கள்.

மிக்க தோழமையுடன்

கோபிகிருஷ்ணன்


மனுஷ்யபுத்திரன்

21/10/94

அன்புமிகு சுரேஷ் அவர்களுக்கு,

இப்போது நலமாக இருக்கிறீர்களா?

நேற்று கண்ணனிடமிருந்து உங்கள் கடிதமும், கதையின் திருத்தப்பட்ட பகுதியும் வந்து சேர்ந்து, நீங்கள் சொன்னபடி அகற்ற வேண்டியதை அகற்றி சேர்க்க வேண்டியதை சேர்த்துவிட்டேன்.

கதை எனக்குப் பிடித்திருக்கிறது. குரூரம் மிக இயல்பான மொழியில் மிகவும் அயர்ச்சியூட்டும் வண்ணம் பதிவாகியிருக்கிறது. உங்களுடைய இந்தவிதமான கதை சொல்லலில் எனக்கு தொடர்ந்து ஒரு ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக கதையின் இறுதியில் வரும் பெண் படிமம் என்னை அந்தரங்கமாக பார்த்தது. இந்தவிதமான ஒரு படிமம், எதிர்பாராத வகையில் திடீரென பயங்கரத்துடன் திரும்பப் போகும் ஒரு முகம் பற்றிய சிந்தனை, கனவு, பயம் எனக்கு வெகு காலமாக இருந்து வருகிறது. அதை பதிவு செய்வதற்கான மொழி இன்னும் எனக்கு வாய்க்கவில்லையோ என்ற தயக்கத்தில் எழுதாமலிருக்கிறேன். நீங்கள் அதை வேறொரு அர்த்தத்தில் உபயோகத்திருக்கிறீர்கள்.

தங்களுடைய ***********************  (கையெழுத்து தெளிவாக இல்லை) அம்முகத்தை ஏற்கனவே கரியமாலின் வாழ்வோடு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட வெண்முகமாக அடையாளப்படுத்துவதன் மூலம் குரூரம்- குற்ற உணர்வு – பயம் என்ற பின்னலின் ஊடாக இயங்கும் மனித நிலையினை மிகத் தெளிவாக கட்டமைக்கிறீர்கள். ஆனால் முந்தைய பிறவியில் ************ (கையெழுத்து தெளிவாக இல்லை) அம்முகத்திற்குமான உறவு ‘தெளிவாக’ இல்லை. அம்முகம் கரியமாலின் வாழ்வு சார்ந்த பயங்கரத்தின் பொதுவான ஒரு குறியீடாக முந்தைய பிரதியில் அமைந்திருப்பதாய் உணர்கிறேன். எனவே முந்தைய பிரதியின் குறியீட்டுத்தன்மையும் தெளிவின்மையும் தந்த அர்த்தங்களை உங்களது தெளிவான முடிவு சற்று சுருக்குவது போல ஒரு உணர்வு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மணிவண்ணனுடன் விருத்தாச்சலம் போயிருந்தேன். களம் என்ற அமைப்பினர் எனக்கும் தேவிபாரதி, பெருமாள் முருகன், உள்ளிட்ட சில இளம் படைப்பாளிகளுக்கும் ‘விருது’ வழங்கி கௌரவித்தனர். பயணமும், நிகழ்ச்சியும் மிகவும் அசௌகர்யமாக இருந்தது. முழு விபரமும் மணிவண்ணனுடன் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சமீபகாலமாக இலக்கிய உலகு சார்ந்த நண்பர்களால் எப்போதும் ஆயாசமும் வருத்தமும் ஏற்படுகிறது. படைப்பாளிகள் அனைவரும் அரசியல்தன்மை வாய்ந்தவர்களாகிவிட்டனர்களோ எனத் தோன்றுகிறது. சிறிய அளவிலான விமர்சனங்களைக் கூடச் சொல்லப் பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் பலரிடமும் நான் ’நிரபராதி’ என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. விரைவாக மூப்பும் களைப்பும் வந்து சேருகிறது.

எழுதுங்கள்.

பிரியமுடன்

ஹமீது.


30/12/93

அன்புள்ள சுரேஷ்குமார்,

நலமா ? உங்கள் இரு கடிதங்களும் கிடைத்தன. நான் துவரங்குறிச்சியில் இருக்கும்போதுதான் கடிதங்கள் எழுதுவதற்கான மனம் அடைகிறது. நான் இந்த மாதம் முழுவதும் இங்கு இல்லை கடந்த 10 நாட்களாக உடல் நலமில்லை. இன்றுதான் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு எழுதும் நினைப்பு மேலிடுகிறது.

என் கவிதைகள் பற்றி ஓரிரு குறிப்புகள் எழுதியிருந்தீர்கள். உங்களைப்போன்ற கலை குறித்த ஆழ்ந்த பிரக்ஞையும் நுட்பமான வாசிப்புடைய நண்பர்களின் விமர்சனங்களை நான் மிகுந்த மரியாதையுடன் எதிர் கொள்கிறேன். என் படைப்புகள் குறித்த விழிப்புடன் இயங்க இத்தகைய நண்பர்களே உதவுகிறார்கள். என் கவிதைகள் மீது உங்களுக்கு என்ன விமர்சனம் இருந்தாலும் அதை தயக்கமின்றி பாசாங்கு வார்த்தைகளற்று சொல்லலாம். “நம்ம சுரேஷ்குமார்” என்கிற நட்புணர்வோடு அவற்றை வாங்கிக்கொள்வேன். வார்த்தைகள், கருத்துக்கள், தகுதிகளுக்கு மேல் மனிதர்கள் முக்கியமானவர்களாய் இருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் சு.ராவுடன் ஒருநாள் செலவிட்டது எனக்கு மிகுந்த மன நிறைவளித்தது. பல விஷயங்கள் பற்றி போகிற போக்கில் துல்லியமான மதிப்பீடுகளை சொல்லிச் செல்கிறார். அவரது பரிமாணங்களை புரிந்துகொள்வதற்கு நிறைய சந்திப்புகளும், முயற்சிகளும் தேவை என்று தோன்றுகிறது. அடுத்த மாதம் மதுரையில் நண்பர்களுடனான சந்திப்புக்கு அழைத்து கடிதம் எழுதி இருக்கிறார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டுகிறது. முக்கியமாக இவ்வறையை விட்டு பிரயாணம் செய்ய ஒரு வாய்ப்பு. மழை பெய்து பெய்து எல்லா இடங்களிலும் நிலம் புதிய முகம் கொண்டிருக்கிறது பார்க்கப் பார்க்க நன்றாக இருக்கிறது. நிலத்தடியில் புழுதியில் புதைந்த ஆயிரம் ஆயிரம் விதைகள் கண் திறக்க பூமி உயிர்ப்பின் அவரும் பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது.  இந்நாட்களில் பிரயாணங்களை பெரிதும் விரும்புகிறேன்.

விஷயத்திலும் வெளிப்பாட்டிலும் எழுத்தில் புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். புதுசாக என்று திட்டமிட்டு ஏதும் செய்தால் ஒன்றும் நடக்காது, நீ புதுசாக இருந்தால் உன் எழுத்து புதுசாக இருக்கும் என்று அசரீரி சொல்கிறது. எழுதிய வாசகங்களை திருப்பி எழுத்தாக்க கவனம் கொண்டிருக்கிறேன்.

மதுரையில் சந்திப்பதையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

புது வருஷ வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,

மனுஷ்யபுத்திரன்


23/3/95

அன்புள்ள சுரேஷ்,

நலமா?

நீங்கள் துவரங்குறிச்சிக்கு எழுதிய கடிதத்தை நேற்றுத்தான் நெல்லையில் பெற்றேன். நானே உங்களுக்கு எழுத நினைத்துக் கொண்டிருந்தேன். சுபமங்களாவில் உங்கள் கதை படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நேர்த்தியாகவும் நுட்பாமாகவும் உள்ளது. மேல் பார்வைக்கு மிக எளிமையான தோற்றம் காட்டி மனித சுபாவத்தின் ஒரு சூட்சுமமான இடத்தை தொடுகிறது. மேலும் உங்களுக்கு இயல்பான கவித்துவத்தின் சாயலும் படிந்திருக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக இயங்க வேண்டும் என்பதே என் ஆவல்.

இங்கு நலமாக உள்ளேன். நிறைய நண்பர்களை சந்திக்க முடிகிறது. வாசிக்கவும் முடிகிறது. புதிதாக ஒன்றும் எழுதவில்லை.

சந்திப்போம்,

பிரியங்களோடு

ஹமீது.

264. N.G.O நியூ காலனி
பெருமாள்புரம் POST
திருநெல்வேலி 627007


09/11/93

அன்புள்ள சுரேஷ்குமார்,

நிகழ்ச்சிகள் முடிந்து ஞாயிற்றுக் கிழமை இரவு வீடு திரும்பினேன். எதுவுமே தங்கியிருக்கவில்லை. உள்ளே பாறைகள் எதுவும் நகர்ந்ததன் அறிகுறியே இல்லை. நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தது முதுகுவலியாக இவை யாவும் மிஞ்சுகிறது. நான் திரும்பிய பஸ்ஸின் ஹெட்லைட் பாதி வழியில் மிகவும் மங்கிவிட்டது. மேலூரில் டெப்போவில் நிறுத்தி வேலை செய்ய முயற்சி நடந்தது. அங்கே ஆள் இல்லை. இறங்கி பஸ் மாறி போகச் சொன்னார்கள். மழை, இருள். ஒரு வண்டியும் நிற்காது. நின்றாலும் நானும் வீல்சேரும் ஏறமுடியுமா என்று மிகவும் குழப்பமாகிவிட்டது. பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேறு வழியின்றி பஸ் கிளம்ப மிக மெல்லிய வெளிச்சத்தின் தடத்திலேயே ஊர்ந்து வந்தோம். வழியில் ஒரு சாலையோரக் கோவிலில் வண்டி நிறுத்தப்பட்டு கண்டக்டர் ஒரு ரூபாய் நாணையம் ஒன்றை உண்டியலில் போட்டுவிட்டு வந்தான். அந்த ரூபாயோடு நான் உட்பட அத்தனை பயணிகளின் உணர்ச்சிகளும், பயங்களும் பின்னர் பட்ட விதத்தை மிக விநோதமாக உணர்ந்தேன்.

நஞ்சுண்டன் என் கவிதைத் தொகுப்பிற்கு தன்னுடைய ‘பிரதி’ இதழில் ஒரு விமர்சனம் வெளியிட விரும்புவதாகவும் என் நண்பர்கள் யாரும் எழுதித்தரமுடியுமா என்று கேட்டார். நான் சுரேக்ஷ்குமாருக்கு எழுதுகிற அபிப்ராயம் இருப்பதாக தெரிவித்தேன். அது சம்பந்தமாக அரங்கத்தில் தேடினார். நீங்கள் இல்லை. உங்களிடமிருந்து அந்த விமர்சனத்தை வாங்கித் தரமுடியுமா என்று கேட்டார். அவருடைய விருப்பத்தை உங்களிடம் தெரிவிப்பதாக சொன்னேன். எனக்கு சிறுப்பத்திரிக்கைச் சூழலில் உறவு நிலைகள் அவ்வளவாக பரிச்சியமில்லை. எனவே இதில் நீங்கள் உங்கள் நிலைக்கேற்ப முடிவெடுக்கலாம்.

உங்கள் கதைகள் எனக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முகஸ்துதியில் தர்ம சங்கடம் எதுவும் உருவாகி விடக் கூடாதென்று என்னால் நேரில் அதிகமாக பேச முடியவில்லை. எதார்த்தத்தை அடிக்கடி தள்ளி விட்டுவிட்டு கனவுலகின் கனவு வார்த்தைகளோடு அலையும் என் உலகத்தை உங்கள் கதைகளோடுதான் முதன் முதலாக பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கதைகள் உருவாக்கும் மௌனங்கள் தீவிரமாக தாக்குகின்றன. புற உலகிற்கும் மன உலகிற்கும் இடைவிடாத பரிவு செய்கின்றன. அதன் மூலம் இந்த உள்-வெளி என்ற அபத்தமான பிரிவினையை தாண்டி முரண்பட்டதென கொள்ளப்பட்ட இரண்டு நதிகளை ஒன்றாக்கி ஒரு வெள்ளப் பெருக்கான அனுபவத்தை படைக்கின்றன. இந்த வகையில்தான் உங்கள் கதைகள் புதிய எழுத்தாக தன்னை நிரூபித்துக் கொள்கிறதென புரிந்து கொள்கிறேன். ஏன் உங்களை மௌனியோடு சேர்த்து புரிந்து கொள்ள நேரிடுகிறதெனில் மௌனியின் மனிதர்களைப் போலவே உங்கள் மனிதர்களும் அதீத ‘சுய பிரக்ஞை’யுடன் இயங்குகிறார்கள்.

நான் வாசித்த வரை உங்களிருவரைத் தவிர வேறு யாருடைய கதைகளிலும் இந்த அளவு விழிப்புணர்ச்சியை கானமுடியவில்லை. மற்றபடி மௌனியின் எழுத்து முறையும் உங்களுடைய எழுத்து முறையும் வேறு தளங்களைச் சார்ந்தவை. மேலும் ‘மறைந்து திறியும் கிழவன்’ போன்ற ஒரு சில கதைகள் காஃப்கா கொடுத்த அனுபவத்தை நினைவூட்டுகின்றன. (காஃப்காவின் ஒரு நாவலும் இரண்டு சிறுகதைகளும் தவிர அதிகம் படித்ததில்லை.)

விமர்சன சொற்களுக்கு அப்பால் உங்கள் கதைகள் எனக்குக் கொடுத்த சில அந்தரங்கமான தொடுதல்கள், நினைவூட்டல்கள் எனக்கு முக்கியமானவை. அவற்றை நான் உங்களுக்கு எழுத முடியாது. என்றேனும் நாம் நெருக்கமான நண்பர்களாக முடிந்தால் அதை நான் சொல்லக்கூடும்.

பிரியமுடன்,

மனுஷ்யபுத்திரன்.


             பிரம்மராஜன்

Bramharajan, Ooty-643001

27/06/1991

அன்பான சுரேஷ்

உங்கள் சமீப கடிதத்திற்கு நன்றி. விளம்பரங்கள் குறித்து உங்களுக்கு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். மீட்சி-35-வது இதழுக்கான Matter தேர்வு செய்யப்பட்டு விட்டது. பணப் பிரச்சனை தான். இந்த முறை சற்று சிரமம் கூடுதல். எனவே நீங்கள் உதவி செய்து 2 (ரூ.500 or more) விளம்பரங்கள் கிடைத்தால் கூட Wrapper-ஐ தயார் செய்து விட முடியும். மகரந்தனின்  Meta-Ficitional animal fable சிறுகதை முயற்சியை இந்த இதழில் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நிறைய விஷயங்கள் வர இருக்கின்றன.

***

திரு. MSR ஐ நான் ஏப்ரல் இறுதியில் சந்தித்தேன். அதற்குப் பிறகு நான் பார்க்கவில்லை. ஒஹேனக்கல் சந்திப்பில் ஏறத்தாழ ஒரு மீட்சி இதழ் தயாரிப்புக்குத் தேவையான பணம் செலவழிந்து விட்டது. இதுவும் இதழ் தாமத்திற்கான காரணம்.

***

”உலகச் சிறுகதைகள்” என்ற புத்தகத் திட்டம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக Post Modern தன்மைகள் கொண்ட கதைகள் இதில் வெளிவர இருக்கின்றன. Detective தன்மை கொண்ட Borges-ன்  The Garden of Forking Paths, An Approach to Al-Mu’tasim-ஐயும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். திரு. சிவகுமார் காஃப்காவின்   Report to an Academyயையும், Italo Calvinoவின் The Adventures of a Home Wifeஐயும் மொழிபெயர்க்கிறார். மேலும் Donald Barthelme , Kundere, Julio Cortázar, B.S.Johnson, ஜப்பானின் Kawabata ஆகியோரின் கதைகள் (சுமார் 12 to 15) தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதை எப்படி வெளியிடலாம் என்பது பற்றிய உத்திகளையும் நீங்கள் சொல்லி உதவவும்.

வேறு யாரிடமாவது உதவி கேட்கலாமா?

எப்படித் திருப்பித் தருவது? புத்தகம் 220-250 பக்கங்களுக்குக் குறையாமல் வரும்.

இந்தப் புத்தகம் வருவது இன்றைய தமிழ்ச் சூழலுக்கு அத்தியாவசியமானது.

மார்த்தாண்டன் பற்றிய தகவலுக்கு நன்றி.

Post Modern பற்றிய முடிவற்ற கோட்பாட்டுப் புத்தகங்களை படித்து அலசி எழுதிக் கொண்டிருக்கிறேன் – ஆங்கிலத்தில் – என் ஆராய்ச்சியை சமர்ப்பிக்க.

மிக்க அன்புடன்

பிரம்மராஜன்.


Bramharajan
Burn view
Conoor Road
Ooty – 643001

5-4-1990

அன்பான சுரேஷ்

உங்களுடைய “திரை/பனைமரங்கள்” கதை கிடைத்தது. கதை நன்றாக வந்திருக்கிறது.

உங்களால் சாதிக்க முடியும் என்ற எல்லையைப் பிடித்துக் காட்டியிருக்கிறது உங்களின் சமீப கதை.

“பனைமரங்கள்” என்ற தலைப்பே சிறப்பாக இருக்கிறதாக எனக்குப்படுகிறது. மாற்றிக் கொள்ளலாமா தலைப்பை?

மீட்சி–32 உங்களுக்கு தனித்தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.

மீட்சி–33 இல் உங்களின் கதை வரும். ஏறத்தாழ ஜூன் இறுதியில் மீட்சி–33 வெளிவரும்.

மீட்சி–32 எனக்கு நிறைய செலவு வைத்துவிட்டது.

எனவே ஏதும் decent ஆன விளம்பரங்கள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். உங்களால் ஏதும் விளம்பரம் வாங்கித் தர முடிந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

சிறுகதைக் கருத்தரங்கு பற்றி நாகார்ஜுனன் முதலில் தயாரான பதில் தரவில்லை. இப்போது கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை மார்த்தாண்டனை விட்டு எழுதச் சொல்லுங்கள்.

10 நாட்களாக சென்னையில் வேர்த்து, தூக்கமின்றி மீட்சி – 32ஐ உருவாக்கினேன். மீட்சி – 33க்கான matter ஏறத்தாழ என்னிடம் இப்போது தயாராக இருக்கிறது – பணம் தவிர.

மற்றவை பிறகு

மிக்க அன்புடன்

பிரம்மராஜன்.


Bramharajan Burn view Conoor Road Ooty – 643001

18/3/92

அன்பான சுரேஷ்,

உங்களின் 16-3-92தேதிய கடிதம் கிடைத்தது. நீங்கள் எழுதியிருக்கும் செய்திகள் கவலைப்படும்படியாக இருக்கின்றன.

உங்களை பிரச்சினைகளில் இருந்து மீட்டுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவைகளைப் பார்க்கலாம்.

மீட்சியின் வெளியீட்டு காலத்தை தீர்மானிக்க முடிவது மிகச் சிரமம். திட்டமாகத், தெளிவாகத், தெரியும்போது உங்களுக்கு எழுதுகிறேன்.

விளம்பரம் தருபவர்களின் மனநிலையும் சரியானதுதானே.

உலகச்சிறுகதையை தள்ளிப் போடலாம்தான். அது ஒன்றுதான் உசிதமாகத் தெரிகிறது. நீங்கள் எழுதியுள்ளதுபோல் நண்பர்கள் பலரிடமிருந்து கடித ஊக்குவிப்போ, பண உதவி பற்றிய உறுதியளிப்போ வரவில்லை.

சுதர்தன் graphicsல் என் பழைய பாக்கிகளை அடைத்து விட்டுத்தான் மீண்டும் புதிய வேலைகளை எடுத்துச் செல்ல முடியும். ரூ. 10,000/- வரை சுதர்சன் Graphicsக்கு நான் தர வேண்டிய பாக்கி இருக்கிறது. “ஆத்மாநாம் கவிதைகள்” நான் நினைத்தது போல விற்கவில்லை. எனவே ஆத்மாநாம் project-ல் ஏற்பட்ட செலவின் மிச்சங்கள் ரூ.15,000/-த்தை அடைத்த பிறகுதான் மீட்சி–35 வேலைக்கு எடுத்துச் சென்றேன். மேலும் ஒரே ஆளாக சென்னைக்கும் உதகைக்கும் ஓடுவது சலிப்பைத் தருகிறது.

மீண்டும் எழுதுகிறேன்.

பிரியங்களுடன்

பிரம்மராஜன்


Bramharajan Burn view Conoor Road Ooty – 643001

6/3/92

அன்பான சுரேஷ்,

உங்கள் கடிதமும் கதையும் கிடைத்தது. கதையில் மானுட ஆய்வாளர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை பத்தி பத்தியாகவோ, அல்லது முழுமையாகவோ கதையின் வேறு பகுதிகளுக்கு நகர்த்தலாம் என்று தோன்றுகிறது.

மீட்சி அடுத்த இதழ், “உலகச்சிறுகதை” நூலுக்கு பிறகே வெளியீட்டு சாத்தியம் உள்ளது. உலகச் சிறுகதையை வெளியிடுவதும் மிகுந்த சிக்கலாக இருக்கும் போல் தோன்றுகிறது. நான் நினைத்தபடி நண்பர்களிடமிருந்து ரூ.500/- பெறும் திட்டம் இன்னும் செயற்பட ஆரம்பிக்கவில்லை. இருப்பினும் ஒரு சிறந்த திட்டம் என்றே எழுதுகிறார்கள்.

அடுத்த மீட்சிக்கு எனக்கு 2 (அ) 3 விளம்பரங்கள். ஒவ்வொன்றும் ரூ. 850/-யில் கிடைக்க வழி தெரிந்தால் உதவியாக இருக்கும்.

1988 ஆம் ஆண்டு நோபல் பரிசு வாங்கிய Naguib Mahfoozன் The thief and the Dogs என்ற நாவல் படித்துமுடித்தேன். Mahfoozன் முதிர்ச்சி கட்டத்தில் எழுதப்பட்ட நாவலாக இருப்பினும் இது எனக்கு ஏமாற்றமளிப்பதாகவே அமைந்தது. குறிப்பாக அவர் பயன்படுத்தும் stream of consciousness உத்தியும் என்னை ஈர்க்கவில்லை. இது குறித்து எங்காவது எழுதினால் கூட நன்றாக இருக்கும். Mahfooz எகிப்திய நாவலாசிரியர்.

திரு MSR ஒரு மாதம் முன்பு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். 2 நாட்கள் தங்கி இருந்தார். மிக சந்தோஷமான 2 நாட்கள் அவை. அவருடைய உடல்நலம் நன்றாக இருக்கிறது.

காலச்சுவடு ஆண்டு மலர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக்கு ஏமாற்றம்தான்.

அன்புடன்

பிரம்மராஜன்.


கோவை ஞானி

22/07

மதிப்புக்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம். வர்ஷா முகவரிக்கு கடிதம் எழுதுகிறேன். உங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

கோவையில் ஆகஸ்டு இறுதியில் சுந்தர ராமசாமி அவர்களின் படைப்புக்கள் குறித்து ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடாகிறது. ஏற்பாடு செய்பவர் என் நண்பர் திரு. நஞ்சப்பன். கோவைக்கு அருகில் நரசிம்மநாயக்கன்பாளையம் என்ற சிற்றூரில், சிறு குன்றுகளின் பின்னணியில் அமைந்த ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் அந்த பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது. திரு. ஜெயமோகன் அவர்களும் நீங்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டும். சுந்தர ராமசாமி அவர்களுக்கும் எழுதியுள்ளேன். கோவையில் சில நண்பர்களும் கலந்துகொள்கிறோம். சு.ராவின் கவிதைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அல்லது சிறுகதைகள் என்றோ நாவல்கள் என்றோ எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அவசியம் வரவேண்டும். போக்குவரத்துச் செலவை திரு. நஞ்சப்பன் ஏற்கிறார்.

ஒரு சனிக்கிழமை நாள் முழுவதும் கருத்தரங்கு. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கோவையில் சு.ரா அவர்களை வைத்து ஒரு கலந்துரையாடலை நடத்தலாம். தலைப்பு இப்படி இருக்கலாம். ‘தமிழில் திறனாய்வு ஏன் வளரவில்லை?’ நீங்களும் கலந்துக்கொள்ள வேண்டும். பதில் எதிர்பார்க்கிறேன். அடுத்த சில நாட்களுக்குள்.

தங்கள்

கி. ப (ஞானி)


சுஜாதா

அன்புள்ள திரு. சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு

குமுதம் ஏர்-இந்தியா பரிசளிப்பு விழாவுக்கு தங்களை அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.

இளம் எழுத்தாளர்கள் ஏராளமாகப் பங்கு கொண்ட இந்தப் போட்டியில் புதிய கவிஞர்களையும் சிறுகதை, நாவலாசிரியர்களையும் அறிமுகப்படுத்துகிறோம்.

மே 1-ம் தேதி சென்னை காமராஜ் அரங்கத்தில் மாலை ஆறு மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தாங்கள் அவசியம் வந்து எங்களை கௌரவப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திரு. டி.என். சேக்ஷன் மற்றும் சிலர் பேச இருக்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளும் உண்டு. ஆனால் விழாவின் நாயகர்கள் இந்தப் புதிய எழுத்தாளர்களே.

அவசியம் வருகை தாருங்கள்.

அன்புடன்

சுஜாதா.


காலசுப்பிரமணியன்

16/3

அன்புள்ள சுரேஷ்,

நலம், நலமறிய ஆவல்.

ஒரு சிறு பிரச்னை குறித்து இதை எழுதுகிறேன். பிரமீளுக்கு டைப்ரைட்டர் வாங்கிக் கொடுப்பதாக எல்லோரும் பேசிப் பேசி காலம் கழிந்து விட்டதால், நான் இந்த மாதத்தில் முயன்று அதை நிறைவேற்ற தீவிர பட்டபோது, மதுரை நண்பர்களிடமிருந்து எப்படியும் ரூபாய் 1000 வசூலித்துத் தருவதாக ராஜ மார்த்தாண்டன் கூறினார். சமீபத்தில் மதுரை சென்ற போது இதுபற்றி எல்லோருக்கும் அறிவித்துள்ளதாகவும் இந்த மாதத்தில் பணம் எல்லோரும் அனுப்பி விடுவார்கள் என்றும் கூறினார். ஆனால்  இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை இது விஷயமாக என் பணம் ரூ 1000/- ஞானியின் நன்கொடை 500/- ரெடியாக உள்ளது. அங்கேயுள்ள நிலவரம் தெரிந்தால் நல்லது. உண்மையில் உடனே ஏதும் கிடைக்குமா? இதுபற்றி உடனே எனக்கு தெரிவிக்கவும். அப்படி கிடைத்தால் உடனே என் முகவரி D.D எடுத்து அனுப்பி வைக்கலாம்.

K. SUBRAMANIAN, ANTHIYUR ( PERIYAR DT 638501 ) என்ற பெயருக்கு அதை எடுத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பலாம். இதுபற்றி பிரமீளும் உங்களுக்கு எழுதச் சொன்னார். உடனே பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் சிறுகதைத் தொகுப்பு வெளிவர போகிறது என்று சொன்னது என்ற அளவில் உள்ளது.

அன்புடன்

கால சுப்ரமணியன்

Dr Ka Subramanian
Peraiyur – po
Sathyamangalam 638401


பிரமிள்

RamPremil                                                              6.6.89

மை டியர் சுரேஷ் உங்கள் இன்லண்ட்க்கு நன்றி. மார்த்தாண்டனுக்கு அவர் கேட்ட வீக் எண்ட் விசயம் எழுதி அனுப்புவதாக தெரிவித்திருந்தேன். ஜே.கே பவுண்டேக்ஷன் விக்ஷயம். ஆனால் பவுண்டேக்ஷன்காரர்களில் சம்பந்தப்பட்ட ஓரிருவர் எனது தீவிரத்தினால் அரட்சி அடைந்துவிட்டார்கள். சமாதான உடன்படிக்கை – அது-இது-என்று ஒரு தூதர் வேறு. விபரம் நேரில்தான் சொல்லணும். ஏனென்றால் டிஸ்கஷன்கள் சம்பந்தப்பட்டது. (நமக்கு எங்கே போனாலும் மீடியோக்கர்களின் பயங்கர விரோதம் – சந்தேகம் – பயம் – பயம் பரிதாபமாக இருப்பதால் நினத்துவைத்திருந்ததை எழுதாமல் விட்டுவிட்டேன். எப்படியும் என்னை ஒரு இண்டர்வியூ செய்வதுதான் நலம். இங்கே ஒரு நண்பர் செய்ய முன்னிற்கிறார். – எனது சிண்டிகேட் பாங்க் நண்பர் – டேவிட் தொடர்பு. ஓ.கே. என்றால் செய்து அனுப்பலாம். பிற பின்.

A.Ram Premil.


 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *