வெளியேறும் விதி – Gett The Trial Of Viviane Amsalem (2014)

 

 

 

கோகுல் பிரசாத் 


Nothing in the world can be compared to the human face. It is a land one can never tire of exploring. There is no greater experience in a studio than to witness the expression of a sensitive face under the mysterious power of inspiration.

– Carl Theodor Dreyer.

நீதிமன்ற அறைக்குள் விவியனைத் தவிர மற்ற அனைவரும் ஆண்கள். பல வருடங்களாக நீளும் விவாகரத்து வழக்கு. அவர்களது குரலும் விசாரிப்புத் தோரணையும் அவள் மனத்தைத் திருகிப் பிசைந்து கொண்டே இருக்கிறது. தீராத காத்திருப்புகளின் வேதனை உடலெங்கும் பரவி அச்சுறுத்துகிறது. அவர்களுக்குள் ஒளிந்து கொண்டு இளிக்கும் அற்பத்தனத்தை இனியும் சகித்துக் கொண்டு முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கண்களில் நிறுத்தப்பட்ட நீர் எரியத் தொடங்குகிறது. நிதானமான அடிக்குரலில் தன்னைத் திரட்டி தனது உரிமையை விவியன் தெளிவுபடுத்துகிறாள். தன் ஆத்மாவின் சீற்றத்தை வெற்றுக் கூச்சல்களாக்காமல் கனிந்த பக்குவத்துடன் அணுகி முன்வைக்கிறாள். அவளின் ஆவேசமற்ற உறுதியில் திடுமென அறைக்குள் அமைதி பரவுகிறது. நிசப்தத்தின் பேரிரைச்சல் தாள முடியாததாகிறது. நெருங்கி வரும் உண்மையின் பயங்கரத்தைக் கண்டு ஒரு சொல் கூட எடுக்கத் திராணியின்றி திகைத்து நிற்கிறார்கள். குற்றவுணர்ச்சியின் இறுக்கத்தில் இருந்து தங்களை விடுவிக்க வழிகளின்றி திணறுகிறார்கள். தப்புவித்துக் கொள்ள ஏதேனும் ஒரு  காரணம் கிடைக்காதா என ஆண்களின் மனது அடித்துக் கொள்கிறது. ஒருவரை ஒருவர் ஏறிட்டு நோக்க முடியாத இயலாமை அவர்தம் அகம்பாவத்தை சீண்டி பதற்றமடையச் செய்கிறது. அந்தச் சூழலின் பதைபதைப்பும் தவிப்பும் நம்மையும் வந்து தொட்டு விடுவது ஒரு நல்ல திரைக்கதையின் வலிமைக்குச் சான்று. ஒரு யுகம் நீண்ட அந்த ஒரு கணம் தான். எதிர்த்தரப்பு வக்கீல் ‘உனக்கு வேறொருவனுடன் தொடர்பு இருக்கிறது’ எனப் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்கிறார். நீதிபதிகள் ஆசுவாசமடைகிறார்கள். ‘அப்படியா சங்கதி?’ எனச் சரிந்து விட்ட தராசை தூக்கி நிறுத்துகிறார்கள். குல்லாக்களை சரியாகப் பொருத்திக் கொள்கிறார்கள். நீதிமன்ற அறையில் இறுக்கம் தளர்ந்து அது தனது இயல்புக்குத் திரும்புகிறது.

 

பெரும்பாலான காட்சிகள் ஓர் அறைக்குள் நிகழும் படங்களின் வரிசையை பட்டியலிட்டால் Zoltan Fabri-யின் The Fifth Seal (1976) – க்கே முதலிடம் தருவேன். அது வலுவான பின்னணியும் தத்துவார்த்த தளமும் உடையது. எளிதில் சலிப்புத் தட்டி விடக் கூடிய அபாயங்கள் நிரம்பிய உரையாடல்கள் வழி திரண்டு வரும் கதை வடிவை தேர்வு செய்து கொண்டது. அறிவுப்பூர்வமான காட்சிகளும் குறியீடுகளும் புழக்கத்திற்கு வந்து விட்ட திரைப்படத் துறையில் பழசாகிப் போன வசன பாமரத்தனங்களை கட்டிக் கொண்டு அழுவானேன் என உச் கொட்டுபவர்கள் Gett படத்தை பார்த்து விடவும். வசனங்களாலேயே கதை நகர்வதால் தமிழ்ப் படங்கள் போல இது மலினமான ட்ராமா அல்ல. இது பறந்து சென்று தொடும் உயரங்கள் எந்தவிதமான புத்திஜீவி படங்களுக்கும் சளைத்ததும் அல்ல. ஃபாப்ரியின் படத்திற்கு அடுத்த இடத்தில் இது தான் வரும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ரோனித்தும் ஷ்லோமியும் இணைந்து படத்தை இயக்கி இருக்கிறார்கள். விவியனாக நடித்திருப்பவர் படத்தின் இயக்குநர்களுள் ஒருவரான ரோனித் எல்கபெட்ஸ் தான்.

ஒரு பெண் விடுதலை அடைவது குறித்த அச்சம் நிலவும் சூழலை இதை விட ஆணித்தரமாக சொல்லிவிட முடியாது. இது ஆண்களின் உலகம் என பீடத்தில் வீற்றிருப்பவர்களை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஓர் அடி கூட அவர்களிடையே பதற்றத்தை உண்டாக்குகிறது. மத அடிப்படைவாதிகளிடம் தீர்ப்பெழுதும் அதிகாரம் இருக்கும் பட்சத்தில் தராசின் முள் இன்னும் வேகமாக அடித்துக் கொள்கிறது. அதில் அசட்டுப்  பெண்ணிய முத்திரைகள், க்ளிஷே ஆண் பிம்பங்கள், அநீதிக்கு எதிரான போராட்டம் என நீதி போதனை வகுப்பெடுக்காமல் அசலான நடைமுறையை பாசாங்குகளின்றி பிரதிபலித்திருக்கிறார்கள். ஒரு பெண்ணின் ஆளுமையை சரியாக உள்வாங்கிக் கொள்ள எந்தச் சமூகமும் கற்றுக்கொள்ளவில்லை. அவளை எதிர்கொள்வதில் ஆண்களுக்கு உள்ள சிரமங்களை மனச் சாய்வுகளின்றி படமாக்கியதில் மெய்யான நோக்கங்கள் தென்படுகின்றன. திரையில் வந்து போகும் பலவீனமான மனிதர்களின் ஊசலாட்டங்களை நாம் அவதானித்தபடியே இருக்கின்றோம். எனது முன்முடிவுகளும் கதாபாத்திரங்களைப் பற்றிய தீர்மானங்களும் படம் முடிவதற்குள் மாறி இருப்பதை நினைத்துப் பார்த்த போது விசித்திரமாக இருந்தது. வரையறை செய்யப்பட்ட சட்டகங்களுக்குள் எவரையும் அடைத்து விட இயலாது என்பது இன்னொரு முறை  ருசுவானது.

 

படத்தின் முதல் எட்டு காட்சித் துளிகள் விவியனின் பார்வையில் நிகழ்கின்றன. தனது விதியை அந்நியர்களின் குரூர கைகளில் ஒப்படைத்து விட்டு நடக்கவிருப்பதை ஏற்கனவே உள்ளுள்ளம் உணர்ந்துவிட்ட பார்வை. அதில் ஆர்வமும் எதிர்பார்ப்பும் எப்போதோ தீர்ந்து விட்டன. ஒவ்வொருவரின் நோக்கத்தையும் தொட்டெடுத்து அதன் இசைவுக்கேற்ப தன்னை நகர்த்திக் கொள்ளும் காமெரா. ஓர் அறைக்குள் சொற்ப முகங்களைத் தான் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வந்து நிலைத்தாக வேண்டும். ஆனால் அதன் நேர்த்தியில் துளியும் சுணக்கம் இல்லை. தீவிரமான பாவனையுடன் முகங்களைத் துழாவி எண்ணவோட்டங்களை காட்டிக் கொடுத்தபடியே  இருக்கிறது. சின்னச் சின்ன உடலசைவுகள் மற்றும் உரையாடல்கள் மூலமாகவே ஒட்டுமொத்த கதையுலகமும் பெரிய மெனக்கெடல்கள் இன்றி திரண்டு வந்து விடுகிறது. தனது வழவழப்பான முழங்கால்களை நகர்த்திக் காட்டி பிறழ் சாட்சியை தடுமாறச் செய்யும் விவியன், குல்லா அணியாத கார்மெல், கூந்தலை அவிழ்த்து நெஞ்சில் பரப்பியவாறு சட்டைப் பொத்தானை நீக்கி நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும் காட்சி என இந்த இஸ்ரேலியத் திரைப்படத்தில் ஓர் அறைக்குள் எல்லாம் இருக்கிறது. எல்லாமும் தனித்தன்மையுடன் துலங்குகிறது.

கதவுகளை அறைந்து சாத்தி வைக்கும் வாழ்க்கைக்குள் சாவிகளை விருப்பத்துடன் தொலைக்கக் கொடுத்து விட்டு வெளியேற விரும்பாமல் அடைந்து கொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதற்குண்டான நியாயங்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் அடைத்து வைக்கும் அமைப்பை உடைத்துக் கொண்டு போகத் தெம்பு வேண்டும். அது அவ்வளவு எளிதானதும் அல்ல. தொடர்ச்சியான போராட்டத்தால் சோர்ந்து வீழாத மனங்களின் அலைச்சல் தோல்வியில் தான் நிறுத்தப்படுகின்றது. அது அளிக்கும் விரக்தியில் பெருங்களத்தில் எழும் அபயக் குரல் சாபங்களாக வெளிப்படுகிறது. தெய்வங்களும் சட்டமும் கைகள் விட்ட பின் விவியனும் சாபமிடுகிறாள். உடைந்து விட்ட மனக் கண்ணாடியை உள்முகமாய் திருப்பி வைத்துக் கொள்கிறாள். அதில் நிரந்தரமாய் படிந்து விட்ட இழப்பின் நகக்கீறல்கள் அவளது கண்களை எப்போதும் உசாவுகின்றன.

கடந்த காலம் பற்றிய ஏக்கங்கள் இல்லாதவளாகிறாள். அது இல்லாதவர்களுக்கு நிகழ்காலமும் எதிர்காலமும் கூட இல்லை. துன்பமே நோயும் நோய்க்கு மருந்துமான பின்பு மற்றவர் வாழ்வில் இருந்து வெட்டிக் கொண்டு போக வேண்டிய நிர்பந்தம். எப்போதோ ஒரு கணத்தில் நின்று விட்ட வாழ்வை நகர்த்திக் கொண்டு போகும் துயரம் மன அழுத்தத்தைக் கூட்டுகிறது. துக்கத்தை தரித்திரமாக்கி விடும் வாழ்வின் அல்லாட்டதை துண்டு துண்டான காட்சித் துளிகளின் ஊடாக ஆரவாரமின்றி காட்டிச் செல்கிறார்கள். அந்த முகத்தின் அமைதியில் தீவிரம் சங்கடம் அவஸ்தை என அனைத்தையும் கொண்டு வந்து விடுகிறார்கள். முகங்களை அணுகி உணர்ச்சிகளை தெரிவு கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் Cross Cutting, ஷாட்/Counter shot , மான்டேஜ் போன்ற வழக்கமான எடிட்டிங் உத்திகளை முற்றிலுமாக புறந்தள்ளி இருக்கிறார்கள். கணத்த மௌனமும் வெறுமையும் அறைக்குள் நிலவும் புழுக்கமும் இசையாகிறது.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் நல்ல திரைப்படத்தை பார்ப்பதற்கு முன் அந்நாட்டின் சமூகவியல் மற்றும் வரலாறு குறித்த வாசிப்புப் பயிற்சி இன்றியமையாதது என சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போது தான் படத்தின் நுட்பங்களை பிரக்ஞையுடன் உள்வாங்கிக் கொள்ள முடியுமாம். இக்கூற்று திரைப்படக் கலையின் சாத்தியங்களை குறைத்து மதிப்பிடுகிறது என்பதோடல்லாமல் அதன் வெளிப்பாட்டு உத்திகளைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி மேம்போக்காக உளறப்பட்டது எனலாம். உதாரணமாக, இஸ்ரேலில் திருமணமும் திருமண முறிவும் Rabbi-க்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை Gett படத்தை ‘பார்த்து’ மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். தேர்வுக்குத் தயாராவது போல புத்தகங்களில் தலை புதைத்துக் கொள்ளத் தேவையில்லை. உண்மையில், ஒரு நல்ல படத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய புறத்தகவல்களின் அடையாளங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கோடிழுத்துக் காட்டப்பட்டிருக்கும். அப்பேற்பட்ட நான்கு கோடுகளை இணைத்துப் பார்த்து சித்திரம் வரைந்து விடக் கூடிய அளவுக்கு அறிவு இருந்தால் போதுமானது. சிக்கலான பின்புலங்களின் முகாந்திரங்களைக் கூட தன்னகத்தே அது பொதிந்து வைத்திருக்கும். அதன் நீட்சியாக மேலதிக ஆழங்களுக்குள் சென்று அறிய விருப்பம் உள்ளவர்களுக்கு வாசிப்பு பயன் தரும், இல்லாவிட்டால் நட்டமில்லை.

இந்தப் படத்தின் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையேயான முரண்களும் மதப் பின்னணியும் அதன் உட்பிரிவுகளும் கூட துல்லியமாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மொழியும் உடையும் அதற்குத் துணை நிற்கின்றன. எலிஷாவும் விவியனும் ஹீப்ரூவிற்கு நடுவே ஃபிரெஞ்சில் உரையாடுவதை நூல் பிடித்துச் செல்ல வேண்டும். உருஷ்ய அகதிகளைப் பற்றி ரேச்சல் உமிழும் வெறுப்பில் அவள் யார் எந்தப் பிரிவு என எளிதாகப் புரிந்து விடுகிறது. ரேச்சலின் கருத்திற்கு வெடித்துச் சிரிக்கும் விவியனில் வெளிப்படுவது நாம் கண்டுணர வேண்டிய  இன்னொரு கோணம். இரண்டு மணி நேரப் படத்திற்குள்  ஹரேதிகளுக்கும்  உருஷ்யர்களுக்குமான உறவை 1980களில் இருந்து விவரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அந்தக் கலையின் மீதான வன்முறை அன்றி வேறில்லை.

அபாரமான நாடகீயத் தருணங்கள். அதிகாரத்தின் சின்னங்களான மதமும் ஆண்களும். பெண்ணின் மீதான விசாரணை. அந்தப் பெண்ணின் கண்களுக்கு மேல் நிலைகொள்ளும் காமெரா என எல்லாம் கச்சிதமாகப் பொருந்தி இன்னொரு படத்தையும் திரைப்பட மேதையையும் நினைவூட்டின. ஆம், The Passion of Joan of Arc (1928) தான். ட்ரெயரின் காவியங்களுள் ஒன்று. அந்தப் படத்தைப் போலவே இதிலும் சில distance close up – களும் odd angle shot -களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கதையின் போக்கில் வளரும் கதாபாத்திரங்கள் தங்களைப் புதிதாகப் புனைந்தவாறு முன்வைக்கின்றன. மேதைமை கொண்ட கண்களால் மட்டுமே அவற்றைப் படைத்து படமாக்கியிருக்க முடியும். மத – அரசியல் ரீதியிலான விடுதலையை கோரி நிற்பவர்களுக்கு – குறிப்பாய் பெண்களுக்கு – அதிகாரம் தரும் அழுத்தங்களை அதன் புளித்துப் போன அரைவேக்காட்டு பழமைவாதத்தை அப்பட்டமாய் சொல்லி விடுகிறார்கள். சமீபத்தில் பார்த்த இன்னொரு திரைப்படம் மற்றொரு மேதையை நினைவுபடுத்தியது. தைவான் நாட்டுத் திரைப்படமான Kaili Blues (2015). நிழலாடியவர் தர்க்கோவ்ஸ்கி. அது குறித்து கபாடபுரத்தின் அடுத்த இதழில் எழுதுகிறேன்.

உலகெங்கும் உள்ள பொதுத்தளங்களுடன் இணைத்துக் கொண்டு தனது பிரத்யேக தனித்தன்மையையும் பேணிக் கொள்வதாலேயே இது உலகப் படமாகிறது. அத்தனைச் சங்கிலிகளையும் அறுத்துக் கொண்டு தனிமையில் உழல்வதற்கு தயாராகும் மனத்தை உக்கிரத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வன்மம் கொண்டு எப்படியாவது எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு சக்கையாகத் துப்பும் அமைப்பில் இருந்து வெளியேறுவது என்பது ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்து இன்னொன்றில் விழுவதற்கான முன்னோட்டம் தான். வெளியேறி விட்டேன் எனும் நினைப்பு தரும் வீம்பு மிச்ச வாழ்க்கையை கடத்தி விடுவதற்கான ஊக்கமாக அமையக் கூடும்.  திருமணமான பெண்ணை ஹீப்ரூவில் agunah என்றழைக்கிறார்கள். அதற்குச்  சங்கிலியால்  பிணைக்கப்பட்டவள் என்று பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *