கலையாடி

 

 

சயந்தன்

ஓவியம் : அனந்த பத்மநாபன்


அமந்தா என்ற பிரேசிலியப் பெண்ணைக் கண்ட மாத்திரத்திலேயே சுந்தரமண்ணை “என்ர அம்மாளாச்சி” என்று வாயைப் பிளந்தார். நேசிக்கப்படுவதற்குத் தகுதியானவள் என்ற அர்த்தத்தைக் கொண்ட அமந்தா அச்சு அசலில் ஒரு தமிழ்ப்பெண்ணைப் போலவே இருந்தாள். சுந்தரமண்ணை ஒரு தமிழ்ப்பெண்ணை நேரிற் கண்டு பதினொரு மாதங்களாகியிருந்தன.

அமந்தாவிற்கு மாநிறத் தோல் முகம், எண்ணெய் வைத்து நடு வகிடெடுத்து வாரி விட்டிருந்ததைப்போலான கேசம், சற்றுத் தடித்துப் பெருத்த உதடுகள், வரவேற்கும் புன்சிரிப்பு, கூரான நாடி, ஒப்பனையற்ற கண்கள்.. அவளுடைய மார்புகள் இரண்டு சிறிய செப்புச் செம்புகளைப் போலிருக்குமென்று சுந்தரமண்ணைக்குத் தோன்றிற்று. அவர் அவளைத் தேர்வு செய்திருக்கவில்லை. அந்த விடுதியின் வரவேற்புப் பகுதியில் எச்சிலை விழுங்கிக்கொண்டிருந்த சுந்தரமண்ணையைக் கைலாகு கொடுத்து வரவேற்ற ஒருத்தி தொன்னூறு பிராங்குகள் என்பதை எழுதிக் காட்டினாள். அவர் சம்மதம் என்பதைப்போலத் தலையசைத்தார். கண்டிப்பாக ஆணுறை அணியவேண்டுமென்று வற்புறுத்திய அவள் அதற்குத் தனியாகக் காசு அறவிட்டாள். சுந்தரமண்ணை “மட்டமாக நூறு” என்று மனதிற்குள் யோசித்தார். இலங்கைப் பெறுமதியில் மூவாயிரத்து ஐநூறுக்குக் கிட்டவாக வந்தது. கடைசியாக ஊரில் அவருக்குக் கிடைத்த மாதச் சம்பளத்திலும் சற்று அதிகம். இப்படியொரு இடத்திற்கு வருவது இதுதான் முதலும் கடைசியும் என்று அப்பொழுது அவர் உறுதியெடுத்துக்கொண்டார்.

சுந்தரமண்ணையின் முகாமிலிருந்து வாரத்திற்கு ஒரு தடவையேனும் பாலியல் விடுதிக்குச் செல்பவர்கள் இரண்டு மூன்று பேரென இருந்தார்கள். அப்படிச் சென்று வந்த இரவு ‘தண்ணியடித்துவிட்டு’ மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்துவிட்டேன் என்று அழுது குழறுபவர்களும் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் தம்மிடமுள்ள ஆணுறைகளைக் கொண்டு சென்று குப்பையில் கொட்டுவார்கள். அடுத்த வாரம் மறுபடியும் புதிதாக வாங்குவார்கள். சுந்தரமண்ணை அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்பவர் அல்ல. ஆனால் “அரசாங்கம் தருகிற காசில் ‘விளையாடப்’ போவது வெட்கக்கேடானது’ என்று அவருக்கு ஒரு கருத்திருந்தது. சொந்தச் சம்பளத்தில்ப் போவதைப்பற்றிக்கூட சற்று முன்னர்வரை அவருக்கு யோசனையிருக்கவில்லை. திடும்திடுமென்று எழுந்து வந்து நுழைந்துவிட்டதை ஆச்சரியத்தோடு நினைத்தார். ‘நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை’ என்று ஒருமுறை முணுமுணுத்தார்.

அது மூன்றாவது மாடியிலிருந்த ஓர் ஒடுக்கமான அறை. ஆனால் சுத்தமாகவிருந்தது. வெளிர் நிறச் சீலை தொங்கிய ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்தால் கீழே பரபரப்பான பிரதான வீதி தெரியும். ஜன்னல் திறந்தேயிருந்ததால் நிறைய வெளிச்சமாயிருந்தது. சுவரோரமாக ஒற்றைப் படுக்கை. அதில் சுவரில் சாய்ந்தபடி இடது காலை நீட்டியும் வலது காலை மடித்தும் உட்கார்ந்திருந்தாள் அமந்தா. “தெய்வம் அதுவாகக் கூப்பிடட்டும் என்று நினைத்தபடி நான் அவளுக்கு முன்னால் சிலையைப்போல நின்றுவிட்டேன்”  என்று இச் சம்பவத்தைப் பின்னாளில் அருள்குமரனிடம் நினைவு கூர்ந்தார் சுந்தரமண்ணை.

தெய்வம் தன்னுடைய வலது கையை அசைத்து அவரைக் கூப்பிட்டது. அவர் கட்டிலின் விளிம்பில் கால்களை ஒடுக்கிக்கொண்டு உட்கார்ந்தார். அந்தச் சொற்ப நேரத்தில் நிறையக் கற்பனைகள் அவரில் மிதக்கலாயின. ஒரு காமச் செயலை எப்படி நிகழ்த்துவதென்று அவருக்குச் சில பல நினைப்புகள் இருந்தன. கடற்கரை வாடிவீட்டில் அவருக்குக் காமம் தோன்றிய நாளிலிருந்து இருபது இருபத்தைந்து ஆண்டுகளாகச் சேகரித்துவைத்த நினைவுகள்..

அவளை மெதுவாக அணைத்துக்கொள்ள வேண்டும் ஒரு பூவைப்போல..

அமந்தா சின்னச் சோர்வுடன் மேலாடையைக் கழுத்தின் மேலாக உருவவும் பதறிப்போன சுந்தரமண்ணை “ஜன்னல் திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது” என்று கத்தினார். அவள் “என்ன” என்றாள். அவர் துள்ளியெழுந்து அவள் கழட்டிப்போட்ட ஆடையை எடுத்து அவளில் போர்த்திவிட்டு ஜன்னல் ஓவென்று திறந்திருப்பதாகச் சைகை செய்தார். அமந்தா கொடுப்பிற்குள் சிரித்தபடி திரும்பி ஜன்னல் கதவுகளை மூடினாள். கட்டிலில் நிமிர்ந்து படுத்துக்கொண்டாள். ஒரு காமச் செயலை எப்படி நிகழ்த்துவது என்ற கற்பனைகள் எல்லாம் அடியோடு மறந்துபோயின. அவளில் விழுந்து வியர்க்கத் தொடங்கினார் சுந்தரமண்ணை. பிறகு மூன்றாவது நிமிடத்திலேயே சட்டென்று நிமிர்ந்து அவளுடைய கால்களின் இடையில் முழந்தாளில் நின்றார். அவள் படுத்திருந்தவாறே கேலியாக “முடித்தாயிற்றா” என்றாள். சுந்தரமண்ணைக்குக் கண்களை இறுக மூடிக்கட்டிவிட்டு ஒரு சுழற்றுச் சுழட்டிவிட்டதைப்போலவிருந்தது. என்ன நடந்திற்று என்பதிலேயே ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. போதை முழுவதுமாக இறங்கியிருந்தது. நெஞ்சு விம்மியது. மூச்சு கண்டபடி வெளியேறிற்று. உடைத்துக் கொண்டதைப்போல கண்ணீர் பொல பொலவென்று வழிய அவர் தன் நெஞ்சில் அறைந்தவாறு குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினார். “ஏமாந்தவன்.. தோற்றுப்போனவன்.. ஒன்றுக்கும் உதவாதவன்”

அமந்தா  போர்வையால் தன் மார்பை மூடியபடி பதறிக்கொண்டு எழுந்தாள். அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு “புதுசா” என்று கேட்டாள். அவருடைய கன்னத்தை ஆறுதலாகத் தட்டினாள். “அடுத்தமுறை வெல்வோம்” என்றபோது அமந்தா பிரகாசமாகச் சிரித்தாள். அப்பொழுதுதான் சுந்தரமண்ணை அவளுடைய தெத்துப் பல்லைக் கண்டார். அது இடது மேல் பல் வரிசையில் முன்னுக்கு எத்திக்கொண்டு நின்றது. அச்சுப்போல, அனலைதீவுக் காரிக்கு இருந்ததைப்போல..  அவருடைய உடல் மொத்தமும் ஒருமுறை வெடவெடத்தது. மூச்சு சுவாலையானது. கண்கள் விரியலாயின. அவள் தெத்துப் பல் தெரியும் புன்னகையால் என்னவென்று வினாவினாள். சுந்தரமண்ணை “எடியே வேசை” என்று கத்தினார். ஒரே பாய்ச்சலில் அவள் பிடித்து வைத்திருந்த போர்வையைப் பறித்துக் கீழே எறிந்தார். ஒரே தாவலில் அவளைக் கீழே விழுத்தி வாயைக் கவ்வினார். அவள் “ம்..ம்..” என்று கத்தினாள். அவரோ ஒரு கடலை தன் கைகளாலும் கால்களாலும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்ற மூர்க்கத்தோடு இயங்கினார். பொங்குகின்ற அதன் ஒவ்வொரு அலையையும் கால்களால் உதைத்துத் தள்ளினார். கடலில் துளையிட்டு உறிஞ்சி இழுத்து நிலத்தில் துப்பினார். கடல் ஓய்ந்தது. அமந்தாவின் கண்கள் கசியத்தொடங்கின. ஒரு பேயைப் போல அவளைப் புணர்ந்தார். அவருடைய வாய் “உன்னை வைச்சுக் காப்பாற்ற எனக்கு வக்கில்லையோடி.. எனக்கு வக்கில்லையோடி..” என்று உச்சரித்துக்கொண்டேயிருந்தது. பூமி துரித கதியில் சுற்றிமுடிந்தது.  சுந்தரமண்ணை அமைதியானார். அமந்தா மெல்ல எழுந்து நடந்து தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் கட்டிலில் வந்தமர்ந்தாள்.

அனலைதீவுக்காரியின் முகம் இப்படியொரு மூசுகிற அலையாக சுழற்றியடிக்கும் என்று சுந்தரமண்ணை என்றைக்கும் நினைத்ததில்லை. எப்போதாவது போதையில் நினைவுச் சரடுகளில் அவளுடைய முகம் வந்து போயிருக்கின்றதே தவிர இத்தனை வருடத்தில் இப்படி ‘போட்டாட்டியதில்லை’. சுந்தரமண்ணை பேயறைந்தவரைப்போல உட்கார்ந்திருந்தார். முகம் அங்குமிங்குமாக வெட்டி வெட்டி அலைந்துகொண்டிருந்தது. அவர் முயங்கிக்கொண்டிருந்தபோது அவளுடைய முகமே நெஞ்சு முழுவதிலும் வியாப்பித்திருந்தது. திகுதிகுவென்று எரிகிற நெருப்பைப்போல.

அவர் இரண்டு கைகளாலும் தலைமயிரைப் பொத்திப்பிடித்தபடி மறுபடியும் வெடித்து அழத்தொடங்கினார். எந்தக் கடவுளரும் தன்னை மன்னிக்க மாட்டார்கள் என்று வெம்பினார். நாக்கைத் துண்டாக்கி விடுபவரைப்போல பற்களால் கடித்தார். “பாவி.. நானொரு மாபாவி..” மாறி மாறி கன்னங்களை அறைந்தார். “அவளை மனதாலே நாசமாக்குகிற பாவியா நான்..” என்று வீரிட்டார்.

சுந்தரமண்ணை சரேலென்று நெஞ்சாண்கிடையாக அமந்தாவின் முன்னால் விழுந்துகிடந்து கையெடுத்துக் கும்பிட்டார். “என்னைவிட பத்து வயதாவது உனக்குக் குறைவாயிருக்கும். பரவாயில்லை. உன் காலில் விழுந்து கெஞ்சுகிறேன். என்னை மன்னித்துக்கொள் மன்னித்துக் கொள்” என்று அரற்றினார். “என்னைப் பொலிஸில் பிடித்துக்கொடு. என்னைச் சிறையில் போட்டாலும் தகும். கடவுள் என்னை ஒருநாளும் மன்னிக்கமாட்டார்”

எதுவும் புரியாமல் கொஞ்ச நேரத்திற்கு அவரையே வெறித்தபடியிருந்த அமந்தா சுந்தரமண்ணையை மெல்ல வாரித் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவள் இழுத்தபாட்டிற்கு அவளுடைய மார்புச் சூட்டுக்குள் கன்னத்தைப் புதைத்துக் கொண்ட அவர் ஒரு குழந்தைப்பிள்ளையைப்போல குறண்டியவாறு விசும்பி விசும்பி அழுதுகொண்டிருந்தார்.

அமந்தா அவருடைய காது மடல்களையும் தலைமயிரையும் நெகிழ்வாக வருடத்தொடங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *