Yasujiro Ozu – ஒரு ஜப்பானிய கதை சொல்லி

 

லேகா ராமசுப்பிரமணியன்


“யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கான  வழி முறையை திட்டமிட்டே வகுத்துக் கொண்டேன். எனக்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை. என்னுடைய முழுபலத்தின் மீது மட்டுமே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்..”

–  ஓஸு

ஜப்பானிய இயக்குநர் யஸுஜிரோ ஓஸு,தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சினிமாவிற்கென ​ஒப்புக் கொடுத்தவர். 1920களில் துவங்கிய அத்திரைப்பயணம் அவரது மரணத்திற்கு முந்தைய வருடமான 1962 வரை தொடர்ந்தது. ஓஸுவின் கதைகள் எளிமையானவை. நடுத்தர குடும்பங்களின் வாழ்வியல் சிக்கல்களை முன்னிறுத்துபவை. தலைமுறைகளின் இடைவெளியை வைத்து சமூக/கலாச்சார மாற்றங்களை பேசுபவை. குறிப்பிட்ட நடிகர்களை கொண்டு, குடும்ப உறவுகள் சார்த்த கதைகளை மையப்படுத்திய ஓஸுவின் படைப்புகள்  ஒரே மாதிரியான கட்டமைப்பை  கொண்டிருப்பது அவரது பலமும் பலவீனமுமாக கருதப்படுவது. இருப்பினும் இப்படியான அணுகுமுறையே  பிரியப்பட்ட  மனிதர்களுடன் கொள்ளும் உரையாடலைப் போல, அவரது படைப்புகளோடு நம்மை கேள்விகளுக்கிடமின்றி ஒன்றிடச் செய்கிறது. சராசரி வாழ்க்கையை இத்தனை அணுக்கமாய் திரையில் கொண்டு வந்தவர் வேறு எவரும் இல்லை என்னுமளவுக்கு ஒவ்வொரு தினசரி நிகழ்வையும் காட்சிப்படுத்தியவர்  ஓஸு.

ஹாலிவுட் திரைப்படங்கள் கோலோச்சிய அக்காலகட்டத்தில் அதன் தடயங்கள் ஏதுமற்ற ஓஸுவின் கதையுலகம் அசல் ஜப்பானிய வாழ்வியல் முறையை எடுத்தாண்டவை. அதன் காரணமாகவே “the most Japanese of all filmmakers” என விமர்சிக்கப்பட்டவர். ஜப்பானியர்களுக்கு மட்டுமேயானவை என்னும் தோற்றம் கொண்ட  ஓஸுவின் படைப்புகள் உலகம் முழுக்க  வரவேற்பை பெற காரணம், அவை வாழ்வின் எதார்த்தத்தை அதன் நிறை குறைகளோடு பேசியதே. சிக்கலான சூழ்நிலையை மனிதர்கள் எவ்விதம் கையாள்கின்றனர் என்பதை ஆர்பாட்டமின்றி முன்வைக்கும் எளிய கதைசொல்லல் ஓஸு பின்பற்றியது.

Early Spring, An Autumn Afternoon, Late Autumn, Late Spring உள்ளிட்ட தனது பெரும்பாலான படங்களுக்கு ஓஸு கால நிலைகளின் பெயர்களை தலைப்பாக தேர்தெடுத்ததும், அவை அப்படங்களின் பிரதான கதாபாத்திரங்களின் மனநிலையை ஒத்திருப்பதும் சுவாரஸ்யம். தங்களின் அறம் சார்ந்த படைப்புகளால் புகழ் பெற்ற துருக்கியின் நூரி பிகே சிலான், ஜப்பானின் ஹீரோக்கசு கொரீடா போன்ற இயக்குநர்கள் ஓஸுவை ஆதர்சமாகக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. இயக்குநர் கொரீடாவின்  “My Little Sister” ,”Still Walking ”  மற்றும் சிலானின் “Uzak”,”Climates”  திரைப்படங்களில் ஓஸுவின் தீவிர பாதிப்பை உணர முடியும்.

மாநகரம் என்னும் மாயை :

டோக்கியோ நகரை பிரதானப்படுத்திய ஓஸுவின் திரைப்படங்கள் “Tokyo Story” மற்றும் “The Only Son”. சிறுநகரங்களில் இருந்து பிழைக்க வழி தேடி டோக்கியோவுக்கு குடிபெயர்ந்த மனிதர்களையும், நகர வாழ்க்கை அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றங்களையும் நுட்பமாக பகிரும் இத்திரைப்படங்கள் ஓஸுவின் திரைப்பயணத்தில் முக்கிய இடம் வகிப்பவை. இவ்விரு படங்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்க்கையில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான பந்தம்  குறித்த எளிய உண்மை புலப்படுகிறது.

 

Tokyo Story (1953) :

முதிய தம்பதிகள் ஷுகிசியும் (Chishu Ryu) டோமியும் தம் பிள்ளைகளை காண வெகு தூரம் பயணித்து டோக்கியோ நகரத்திற்கு வருகின்றனர். பிள்ளைகளுக்கோ வேலையின் நிமித்தம் அவர்களுடன் செலவிட நேரமும் விருப்பமும் இல்லை. உலகப் போருக்கு பின்பான தொழில் சார் நகர கட்டமைப்பு மனிதர்களை மந்தைகளாக மாற்றிவிட்டதை இயக்குநர் சுட்டிக் காட்டுவதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும். அவர்களின் விதவை மருமகள் நோரிக்கோ (Setsuko Hara)மட்டுமே நேரம் ஒதுக்கி ஊர் சுற்றிக் காட்டுகிறாள். மீண்டும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் முதியவள் டோமியிடம், தான் தனிமையை பழகிக் கொண்டதாக நோரிக்கோ கூறுகிறாள். ஓஸுவின் படங்களில் நாம் அதிகம் கேட்க நேரிடும் வசனம் இது. தனிமையை எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் கதாபாத்திரங்கள் அவருடையவை. பிள்ளைகள் தங்களை பாரமாக கருதுவதும், தங்களுக்கென நேரம் ஒதுக்கிட தயங்குவதையும் எதிர்கொள்ள நேரிடும் அம்முதியவர்களின் கையறுநிலை பரிதாபத்திற்குரியது.

சிரித்த முகத்துடனேயே அத்தனையையும் ஏற்றுக் கொள்ளும் அவர்களின் மௌனம், உறவுகள் மீது பிரியமற்ற நவீன தலைமுறைக்கான எதிர்வினை. ஊர் திரும்பிய பின்பு மரணிக்கும் முதியவள் டோமியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் படத்தின் அடிநாதம். கிடைத்த பொருட்களை கைப்பற்றிக் கொண்டு மரண வீட்டை விட்டு கிளம்பி ஓடுகின்றனர் மகளும் மகன்களும். மருமகள் நோரிக்கோ மட்டுமே முதியவர் ஷூகிசியுடன் தங்குகிறாள். தன்னைப் போலவே தனிமைத் துயரை அனுபவிக்க தயாராகும் அவரிடம் பேசுவதற்கு ஏதுமின்றி நோரிக்கோ அழுது தீர்ப்பது மனதை உருகச் செய்வது. மெய் அன்பினை யாசித்து நிற்கும் அவ்விருவரும் பேசிக் கொள்ளும் இறுதிக்காட்சி படமாக்கப்பட்ட விதமும், உண்டாக்கும் மனவெழுச்சியும் சொல்லில் அடங்கா சிறப்பு கொண்டது. “Be a good Son as long as your Parents are alive” என்றொரு வசனம் வருகிறது, அதன் அர்த்தத்தை முழுமையாக நமக்கு  உணர்த்திக் செல்வதே இப்படத்தின் வெற்றி.

இத்திரைப்படம் அழுத்தமிக்க கதைக்களனுக்காக மட்டுமில்லாமல் ஓஸு வடிவமைத்த காட்சிகளின் அழகியலுக்காகவும் பாராட்டுக்கள் பெற்றது. தூரத்தில் இருந்து படமாக்கப்பட்ட முதியவள் டோமியும் அவளது பேரனும் புல்வெளியில் நடந்து செல்லும் காட்சி அதற்கோர் உதாரணம். போலவே அத்தம்பதியினர் சுற்றுலா தளம் ஒன்றில் பெரும் நீர்பரப்பை பார்த்தபடி அமர்ந்திருக்கும் காட்சியும். முன்னது தேர்ந்த ஒளிப்பதிவு நேர்த்திக்காகவும் பின்னது வசனங்கள் துணையின்றி கதாபாத்திரங்களின் மனநிலையை முழுமையாக பார்வையாளனுக்கு சேர்ப்பிக்கும் விதத்திலும் தனிக்கவனம் பெறுகின்றன. வெறுமையை சுமந்து நிற்கும் டோக்கியோ நகரை உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து நோரிக்கோவுடன் அம்முதியவர்கள் காண்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்ட காட்சி.

 

The Only Son (1936) :

1920களில் நடப்பதான இக்கதை பொருளாதார நெருக்கடி சமயத்தில் தன் ஒரே மகனை வளர்க்க பாடுபட்ட விதவை தாயின் போராட்டத்தை மையப்படுத்தியது. மேலான கல்வி வாழ்க்கை தரத்தை முற்றிலும் மாற்றிவிடும் என்னும் நம்பிக்கையின் மீதான பார்வையை மாற்றியமைக்கும் இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மென் உணர்வுகளால் ஆனவர்கள்.

மிகுந்த யோசனைகளுக்கு பிறகு தன் வசதியை மீறி மேற்படிப்புக்காக மகனை டோக்கியோ நகருக்கு அனுப்புகிற தாய், பதிமூன்று வருடங்களுக்கு பிறகு ஆவலோடு அவனை காணச் செல்கிறாள். மகன் நல்லதொரு வேலையில், உயர் அந்தஸ்தில் இருப்பான் என்பது அவளது நம்பிக்கை. பட்டு நூல் தொழிற்சாலையில் நாள் முழுக்க பாடுபட்டு பணம் சேர்த்து மகனை படிக்க வைத்ததின் பலன் ஒன்றுமில்லை என்பதை அறிய நேரிடும் அவளது நிலை மோசமானது. அவளது மகன் ஏமாற்றுப் பேர்வழி அல்ல. தாயின் மீது  பெருமதிப்பு கொண்டவன். மனைவி, குழந்தையின் மீது அன்பு செலுத்துபவன். கடுமையாக உழைக்க தயாராக இருப்பவன். வாழ்வில் தோல்வியுற்றது குறித்த குற்ற உணர்வு கொண்டவன். போரின் தீவிரத்தால் ஏற்பட்ட மந்த நிலையில் பாதிக்கப்பட்ட எத்தனையோ மனிதர்களில் அவனும் ஒருவன். தன்னை வந்தடைபவர்களுக்கெல்லாம் பெருவாழ்வு தரக் காத்திருக்கும் நகரமென அவள் கருதிய டோக்கியோ ஒரு சூனியமாக தோற்றமளிக்கிறது.

 

மகன் வீட்டில் அவள் கழிக்கும் நாட்கள் மகிழ்ச்சியானவை. தன் ஏழ்மையிலும் தாயை உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்கிறான் அவன். வாழ்வில் முன்னேற இன்னும் கடுமையாக முயற்சிகள் எடுக்க வேண்டும் என மகனுக்கு அறிவுறுத்தும் அந்த தாயின் ஆதங்கம் புரிந்து கொள்ளக் கூடியதே. அவன் பொருளாதார ரீதியில் வெற்றி பெறாத போதிலும் தன்னிலும் வசதி குறைந்தவர்களுக்கு யோசனையின்றி உதவி செய்யும் மனம் கொண்டிப்பது அவளுக்கு மிகப் பெரிய ஆறுதலாய் இருக்கிறது. பிள்ளை வளர்ப்பின் பயன் அவ்விதம் நிறைவு கண்டத்தில் சிறிது மகிழ்ச்சி கொள்கிறாள். ஜப்பானிய எழுத்தாளர் அகுடகவாவின்  “Life’s tragedy begins with the bond between parent and child..”  என்னும் வரிகளோடு துவங்கும் திரைப்படம் கடுமையான உழைப்பை கோரும் கல்வியும், தொழிற்துறையும் அதற்கான பயனை முழுமையாக தந்து செல்கின்றனவா? என்னும் கேள்வியை  நமக்குள் எழ வைக்கிறது.

அன்பின் பதற்றம் :

தாய் – மகள், தந்தை – மகள் உறவுகளின் மேன்மையை, பிரிவை சந்திக்க தயங்கும் அவர்களின் மேலான அன்பை தொடர்ந்து தன் திரைப்படங்களில் பேசு பொருளாக்கியவர் ஓஸு. முழுமையானதொரு குடும்ப அமைப்புக்கு அன்பும் பொறுப்பும் மிக்க பெண் பிள்ளைகளின் தேவை அவசியம் என்பதை நிறுவுவதோடு, திருமணத்தின் பொருட்டு சராசரி பெண்கள் எதிர்கொள்ளும் நடைமுறை  சிக்கல்களையும் அலசுகின்றன  இவரது  “Late Spring “,  “Early Spring “, “An Autumn Afternoon”, மற்றும் “Late Autumn”திரைப்படங்கள். மேலும் இவை வாழ்வின் சிக்கலான நிர்பந்தங்களை உறவுகளின் துணை கொண்டு எளிதாக வென்றெடுக்க முடியுமென்பதை அழுத்தமாக உணர்த்துகின்றன.

 

Late Spring (1949) :

​மனைவியை இழந்த ​பேராசிரியர் சோமியா (Chishu Ryu) தனது 27வயது ​மகளான நோரிக்கோவுக்கு ​(Setsuko Hara) ​திருமணம் முடிக்க​,​ தான் மறுமணம் செய்து கொள்ள போவதாக  நாடகமாடி  அவளை சம்மதிக்க வைக்கிறார். ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய இக்கதையில் மறைமுகமாக முன்வைக்கப்படும் விஷயங்களே பிரதானம். தந்தையும் மகளும் எவ்வித யோசனைகளும் இல்லாத  நிறைவான வாழ்க்கையை கொண்டுள்ளனர். திருமணம் குறித்து  கேள்விக்கு நோரிக்கோவின் பதில் “Why can’t we go on just as we are?​ ” ​ என்பதாக உள்ளது.​ தகப்பனை ஒரு மகளாக மட்டுமின்றி தாயாகவும் ​பொறுப்புணர்வு கொண்டு பார்த்துக் கொள்கிறாள்.​​மறுமணம் செய்து கொள்ள போவதாக சோமியா சொன்னதும் கட்டுக்கடங்காத பொறாமையினால் ​ நோரிக்கோ தன் தந்தையை வெறுப்பதும், அவர் மீது கோபம் ​கொண்டு சண்டையிடுவதும் அன்பின் பதற்றத்தை சொல்லும் இடங்கள்.

 

தனதிடத்தை வேறொருவர் ஆக்கிரமிக்க போவதை சகித்துக் கொள்ள இயலாத  அவளது சீற்றம் ரசிக்கும்படியான இயல்பு கொண்டிருப்பது. பாரம்பரிய ஜப்பானிய கலாச்சாரத்திற்கும், நவீனதத்துவத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட இளைஞர்களின் பிரதியாக நோரிக்கோ. தனக்கான துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் துணிவும் தெளிவும் பெற்ற பெண்ணாக அவள்  இருக்கிறாள். மாறாத புன்னகை கொண்ட முகம் அவளுடையது. அதற்கு பின்னுள்ள சோகம் பார்வையாளனின் சிந்தனைக்கு விடப்பட்டது​.​ புகழ்பெற்ற அந்த இறுதிக் காட்சியில் மகளற்ற வீட்டில் சோமியோ ​தனியே ​அமர்ந்திருக்கும் காட்சி உணர்ச்சிகரமானது.​ தந்தை மகளுக்கு இடையேயான பிணைப்போடு உளவியல் ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசிச் செல்கிறது Late Spring.

 

தொடர்ச்சியான குடும்ப உறவுகள் சார்ந்த படங்களை இயக்கிய ஓஸு திருமணம் ஆகாதவர் என்னும் செய்தி ஆச்சர்யமளிக்கலாம். 60ஆண்டுகள் தன் தாயுடன் வசித்து வந்த ஓஸு அதன் காரணமாகவே பெற்றோரின் அன்பை குறித்து தன் படங்களில் அதிகம் பேசியதாக சொல்லப்படுகிறது. உறவுகளின் சிக்கல்களை கதை வழியாக இல்லாமல் உணர்வு நிலைகளின் வழியாக  ஓஸு  சித்தரித்ததற்கான காரணமும்  அதுவாகவே இருக்க வேண்டும்.

 

Late Autumn (1960):​

Late Spring-ல் மகளாக நடித்த செட்சுகோ ஹரா இதில் தனது மகளை திருமணம் செய்து வைக்க எத்தனிக்கும் விதவை தாயாக நடித்துள்ளார். இதிலும் தாயின் மறுமணம் குறித்த ஒரு குழப்ப நாடகம் அரங்கேறுகிறது. முடிந்தவரை இத்திரைப்படத்தை நகைச்சுவையாக கொண்டு செலுத்தியுள்ளார் ஓஸு. இறந்த கணவனின் நண்பர்களை உதவிக்கு அழைக்கும் அவளுக்கு, அவர்கள் உதவ முயன்று வெற்றியும் காண்கின்றனர். அம்முதியவரக்ளுக்கு இடையேயான உரையாடல்களே படத்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்து  கொள்கின்றன. கடந்த காலம் குறித்த ஏக்கமும், இளைய தலைமுறை குறித்த பிரமிப்பும், இறுதி நாட்கள் குறித்த பயமும் அவர்கள் பேச்சின் பிரதானமானவை.​முதியவர்களின் மறுமணம் குறித்த ​இளைஞர்களின்  ​மாறுபடும் ​கருத்து​கள் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. தாயின் மறுமணத்தை “கேவலமானது ..அருவருப்பானது”  என்கிறாள் மகள். மகனோ “நல்ல முடிவு எனக்கு பாரம் குறையும்..” என்கிறான்.​ ​மற்றுமொரு நவீன யுவதியோ, “தனித்து விடப்பட்ட முதியவர்களுக்கு மறுமணம் அவசியம். வாழ்வின் மீதி நாட்கள் அவர்களுக்கு அர்த்தம் உள்ளதாக இருந்திட வேண்டாமா..” என்கிறாள்.​உரையாடல்களின் வழி சில தெளிவுகளை பெறலாம் என்பது ஓஸுவின் படங்களுக்கு பொருந்திப் போவது.​

பிரிவின் துயரை எதிரொலிக்கும் இப்படத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்ப்பது. மாறுபட்ட மனநிலை கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சியாய் இதன் கதை நிகழ்கிறது. ஓஸுவின் திரைப்படங்களில் இடம்பெறும் வீடுகளும், உணவுவகங்களும், சுற்றுலா விடுதிகளும் ஒரே மாதிரியான உட்புற அமைப்பை கொண்டவை. அவரது கதாபாத்திரங்கள் வீட்டிற்குள் ​ நுழைவது, காலணிகள் கழற்றுவதும்,​ ​பெண்கள் ஆண்களின் ​மேல் சட்டையை பெற்றுக் கொள்வதும், தரையில் அமர்ந்து உணவு அருந்துவதும்,​ பின்பு  திருமணம் குறித்தும்,​ முதுமையை குறித்து பேசுவது​ம் சலிப்பற்று ​அவரது எல்லா படங்களிலும் தொடர்பவை.​ மேற்சொன்ன ஓஸுவின் பிரத்யேக நாடக பாணியிலான காட்சிகள் அனைத்தும் Late Autumn’லும் ​உண்டு.​ இதன் பொருட்டே நன்கு பழக்கப்பட்ட சித்திரமாக இவரது படைப்புகள் உருக்கொள்கின்றன.

வாழ்வின் மீதான பகடி

ஓஸுவின் படங்களில் நகைச்சுவைக்கு தனித்த இடம் உண்டு. வீட்டில் நடைபெறும் மிகச் சாதாரண உரையாடல்களும், நண்பர்களுக்கிடையே வெளிப்படும் கேலியும்,கிண்டலும் புன்னகைக்கும் படியான ரசனை கொண்டு படமாக்கப் பட்டவை.

An Autumn Afternoon & Late Autumn, இவ்விரு படங்களும் மெல்லிய அங்கதம் கொண்டே  கதையின் மையத்தை நோக்கி நகர்கின்றன. வாழ்வின் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டம் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் வயதான நண்பர்களின்  பேச்சுக்கள்  இவ்விரு படங்களில் பிரதானம். தோல்வியுற்ற காதல் குறித்தும், இளவயது பெண்ணை திருமணம் செய்வது குறித்தும்​, இறந்த நண்பனின் மனைவியை ​குறித்தும் அவர்கள் பேசிக்கொள்பவை எல்லை மீறிய காரியங்கள் எனினும் ஆபாசமற்று ரசிக்கும்படியாக இருப்பவை. வாழ்வை ஓரளவு வாழ்ந்து சலித்த முதியவர்கள் இனி செய்வதற்கு ஏதுமில்லாமல் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில கூடி பேசுவதைக் கூட சுவாரஸ்யமாக காட்சிப்படுத்த ஓஸுவினால் முடிகிறது. மாறி வரும் சமூக காலாச்சாரச்சூழலுக்கு தங்களை பொருத்திக் கொள்ள முடியாது தவிக்கும் அவர்கள் சுய எள்ளல் மூலம் சமாதானம்  அடைவதை  நகைப்பின்றிக் கடக்க இயலாது.

ஓஸுவின் வண்ணப்படங்களில் அதன் காட்சியமைப்பு நேர்த்திக்காய் பாராட்டப்பட்ட Floating Feeds மற்றும் The End Of Summer திரைப்படங்களில் மதிப்பும் மரியாதையும் மிகுந்த முதியவர்களின் மற்றுமொரு முகம் பார்வையாளனுக்கு மட்டும் பகிரப்படுகிறது. சக கதாபாத்திரங்கள் அவர்களை அணுகும் முறையும் பார்வையாளன் அவர்களை அணுகும் முறை வித்தியாசப்படும். ஏனெனில் அவர்களின் இன்னொரு ரகசிய வாழ்க்கையும், அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க அவர்கள் செய்யும் கேலி கூத்துகள் நாம் மட்டுமே அறிந்தது. மிகுந்த நகைச்சுவை உணர்வோடு படமாக்கப்பட்ட இவ்விரு படங்களும் வாழ்வின் அசௌகர்யமான விஷயங்களில் ஒன்று ​அதிலிருந்து பெறப்படும் மிகுதியான மகிழ்ச்சி​யே  ​என்னும் பேருண்மையை ​  நினைவூட்டுபவை.

 

கலையாகும் காட்சிப் படிமங்கள்:

தனித்த பெரும் கட்டுரை எழுத்துமளவுக்கு ஓஸுவின் பிரத்யேக கேமரா கோணங்களும், காட்சியமைப்புகளும் புகழ் பெற்றவை. அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான  static காட்சிகள் பல உண்டு. அது அலுவலக மேஜையாகவோ, கொடியில் உலரும் துணிகளாகவோ, வீட்டின் நடுக்கூடமாகவோ, தொழிற்சாலையின்  புகைபோக்கியாகவோ, ஆட்களற்ற கடை வீதியாகவோ  இருக்கலாம். கேமராவை ஓரிடத்தில் பொருந்தி கதாபாத்திரங்களை  மட்டும் நடமாடவிடும் ஒளிப்பதிவு முறை  ஓஸுவின் தனிச்சிறப்பு. இவ்வகைக் காட்சிகள் கேமரா தரையில் இருந்து  ஓரடிக்கும் குறைவான உயரத்தில் வைக்கப்பட்டு, கீழிருந்து படமாக்கப்பட்டவை. இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் இடங்களிலும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ, கேமராவை நோக்கியோ நிற்பதில்லை. அடுத்தடுத்து அமர்ந்து முகம் பார்க்காமல் பேசிக் கொள்வதாகவே உள்ளது. பாரம்பரிய ஒளிப்பதிவு நுணுக்கங்களை கட்டுடைப்பு​ செய்த ஓஸுவின் முயற்சிகள் கூர்மையான அவதானிப்பை வேண்டுபவை.

​ஓஸுவின் பட காட்சிகளை பெரும்பாலும் அசையும் ஓவியத்தை போல நம்மை ​ வந்தடைகின்றன.​ கருப்பு வெள்ளை காலகட்டத்தில் ​இவர் நிகழ்த்திய ​ ஆச்சர்யங்கள், அவரது வண்ண படங்களுக்கு சற்றும் குறைவில்லாதவை.​Floating Weeds திரைப்படத்தில் மழையின் ஆர்பரிப்பில் சிகப்பு  குடையின் பின்னணியில்  இரண்டு கதாபாத்திரங்கள் நேரெதிரே நிற்கும் காட்சி உலக சினிமா உன்னதங்களில் ஒன்று. சிகப்பும் ஆரஞ்சும் ஓஸுவின் ஆதர்ச நிறங்கள்.அவரது வண்ணப்படங்கள் எல்லாவற்றிலும் இவ்விரு வண்ணங்களின்  ஆதிக்கம்  அதிகம்  இருப்பதை  காணலாம்.

கதாபாத்திரங்கள் நகர்ந்த பின்னும் ஓரிரு நொடிகள் வெற்றிடத்தை கேமரா படம் பிடித்து  காட்டும் ஓஸுவின்  பாணி “Pillow Shots ” என்றழைக்கப்படுவது. இவ்வகை Pillow Shots நாம் எதிர்பாத்திராத இடங்களில்  சம்பந்தமற்ற விஷயங்களையும் கொண்டது. உதாரணமாக Late Autumn’ன் கடைத் தெருவின் பெயர் பலகைகளும், Late Spring’ல் வரும் பூ  ஜாடியும், The Only Son’ ல்  காட்டப்படும் கொடியில் உலரும் துணிகளும் வெறுமையை பிரதிபலிப்பவை. மனிதர்கள் இல்லாத சட்டகங்கள் மூலம் நமக்கு ஓஸு சொல்ல வருவது என்ன என்பது குறித்து கேள்விகள் எழலாம்.​கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை, கதையின் போக்கை நின்று நிதானிக்க நமக்கு அளிக்கப்படும் அவகாசமென ​அதை கருத வேண்டியுள்ளது. பரிபூரண அமைதியை தரும் தியானத்தை போல மகத்துவம் மிக்க காட்சி நிலைகள் அவை.

அசாதாரண காட்சியமைப்புகளால், அழுத்தமிக்க வசனங்களால் செதுக்கப்பட்ட அதே வேளையில் ஒப்பற்ற பின்னணி இசையினால் ​கலையின் உச்சத்தை தொட்டவை ஓஸுவின் படைப்புகள். இசையமைப்பாளர் டகநோபு சைட்டோவுடனான ஓஸுவின் ​கூட்டணி ​ ​Tokyo Story, Late Autumn,An Autumn Afternoon,Floating Weeds என பல படங்களில் தொடர்ந்தது.​ மென் சோக உணர்வை தூண்டும் இவரது பின்னணி இசை காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டுவது. குறிப்பாக நாடகக் குழுவை மையமாக கொண்ட Floating Weeds திரைப்படத்தின் இசை, புலப்படாத மந்திரக்  கயிற்றைப் போல படம் நெடுக நம்மை  ஆக்கிரமி​ப்பது.​ An An Autumn Afternoon​ திரைப்படத்தின் இசை மேற்கத்திய சாயல் கொண்ட​து.​அது கதாபாத்திரங்களின் மனநிலை பிரதிபலி​ப்பதோடு ​ ​அவர்களின் கடந்தகால நினைவுகளை மீட்டெடுக்கும் திறவுகோலாகவும் இருக்கிறது. உற்சாகமாக துவங்கி மிகுதியான சோகத்திற்கு இட்டுச் செல்லும் Tokyo Story’ன் இசை கதியற்ற முதிய தம்பதியினரின் ​மனக்கொந்தளிப்பை ​உணரச் செய்யும் சக்தி கொண்டது.

இரண்டு நடிகர்கள்:

​அகிரோ குரோசோவா​ -​ டோஷிரோ மிஃயூனே, இக்மர் பெர்க்மெ​ன் -​ மேக்ஸ் வான், பெலினி​ -​ மார்செலோ மாஸ்ட்ரோனியனி​, லூயிஸ் புனுவல்-பெர்னாண்டோ ரே ​என புகழ் பெற்ற இயக்குநர் – நடிகர் வரிசையில் முக்கிய இடம் பெறுவது  ஓஸு – செட்சுகோ ஹரா & ஷிஷு ரியூ கூட்டணி.ஒரே நாவலின் பல்வேறு அத்தியாயங்களை நினைவூட்டும் ஓஸுவின்  திரைப்படங்களில் இவர்களின் பாத்திர படைப்பும், பங்களிப்பு முக்கியமானவை. ஓஸு குறித்த எந்தவொரு கட்டுரையும் இவர்களை குறிப்பிடாமல் நிறைவு பெறாது என்பதே நிதர்சனம் .

செட்சுகோ ஹரா,  ஓஸுவின் ​Tokyo Story, Late Spring, Late Autumn, The end of summer  உள்ளிட்ட ​ஆறு படங்களில் பணியாற்றியவர்​.​The New Earth(1937), Hakuchi (1951), Our Youth (1946) உள்ளிட்ட பிற வெற்றிப் படங்களில் தோன்றியிருந்தாலும் ​ஓஸுவின் படைப்புகள் மூலமே​ உலக அரங்கில்  பிரபலமடைந்தார். உற்சாகமிக்க நவீன யுவதியாக, தனிமையில் வாடும் விதவையாக, பேரன்பு கொண்ட தாயாக, பொறுப்பு மிக்க மகளாக ஓஸுவின் படங்களில் வலம் வரும் செட்சுகோ ஜப்பானிய பெண்களின் அடையாளமாக திகழ்பவர்.​ தனது நேர்த்தி மிகு நடிப்பால் சாதாரண கதாபாத்திரங்களை அசாதாரண அழகு கொண்டு திரையில் மிளிரச் செய்த செட்சுகோவின் வசீகரம் எளிதில் ஆட்கொள்வது. அப்பழுக்கற்ற புன்னகையை வரமாக பெற்ற செட்சுகோ, 1960களில் திரைத்துறையை விட்டு ​விலகினார். இருப்பினும் ஆண்டுகள் பல கடந்து இன்றும் நினைவுகூறப்படு​வது அவரது நடிப்பாற்றலின் மகத்துவத்தை சொல்வது.​

ஷிஷு ரியூ, 60 ஆண்டுகளுக்கு மேலாக ​நடிப்புத்துறையில் இருந்த ஷிஷூ​, ​ஓஸு இயக்கிய 30க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்தவர். ஓஸு தனது சமகால இயக்குநர்களை போல சாமுராய், கெய்ஷா கதைகளை ​தேர்ந்தெடுக்கவில்லை. ​நாயக பிம்பத்தை முற்றிலும் புறந்தள்ளிய அவரது எதார்த்த படைப்புகளில் நடிகர்களின் வசீகரத்தை காட்டிலும் நடிப்புத் திறனே முக்கியத்துவம் பெற்றது.​ அதன் பொருட்டே மெலிந்த உடல்வாகு கொண்ட ஷிஷுவினால் ஓஸுவின் படங்களில் பிரதான வேடமேற்க முடிந்தது. ​ஓஸுவின் உச்ச படைப்பு​களான Tokyo Story ,Late Spring இரண்டிலும் ஷிஷுவின் பங்களிப்பு முக்கியமானது.​ஷிஷு ஏற்ற கதாபாத்திரங்கள் அதிர்ந்து பேசாத, தன்னை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாத கூச்ச சுபாவம் கொண்டவை. முக பாவனைகளால், அலட்டல் இல்லாத உடல் மொழியால், தன்மையான நடிப்பால் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்தவர். Late Spring’ல் தன் மகளிடம் “மகிழ்ச்சி என்பது நீ எதிர்பாக்க ​ கூடிய விஷயமில்லை மாறாக நீ உருவாக்க வேண்டிய ஒன்று..” என்னும் பெரும் தத்துவத்தை ​ சிறு புன்னகையோடு வெளிப்படுத்திய இடம் அவர் எதார்த்த நடிப்புக்கு ஒரு சான்று. தனிமை துயரை எதிர்கொள்ள​த்  தயங்கும் ​சராசரி குடும்ப  தலைவனின் பிரதியாய் திரையில் தோன்றிய ஷிஷு குணச்சித்திர வேடங்களுக்கு புதிய அர்த்தம் அளித்த உன்னத நடிகன்.

One comment

  1. Good piece on Ozo. What I liked most is you have just hinted the story line, did not not detai the entire story which would have noted the audience. I know a reviewer who detailed a story of a film for 10 pages, such a bore. Where are you from? I haven’t read any of your review before. You have covered all the important films of Ozu. Tokyo story is my favourite too. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *