நான்கு கதைகள் – சிறார் இலக்கியம்

விழியன்

புகைப்படங்கள் : அனாமிகா


 

நான்கு கதைகள்

 சதுர்த்தி

ஐம்பது பிள்ளையார்களையும் அந்த பூக்கடைக்கு பக்கத்தில் இறக்கிவிட்டு அந்த குட்டியானை வண்டி சென்றது. இன்று பிள்ளையார் சதுர்த்தி. மணிவண்ணனின் அப்பா இன்று பிள்ளையார் விற்கும் வியாபாரியாக மாறி இருந்தார். தினம் தினம் ஒரு வேலை செய்வார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் துணையாக இருந்தான் மணிவண்ணன். மூன்றுவகையான பிள்ளையார்கள் அங்கே இருந்தன. சின்ன பிள்ளையார். பெரிய பிள்ளையார். மயில் பிள்ளையார். அப்பாவின் கைவசம் தங்க நிற பெயிண்டும், வெள்ளிநிற பெயிண்டும் இருந்தது. யார் என்ன மாதிரி கேட்கின்றார்களோ அப்படி செய்துகொடுப்பார். கடைசியாக அம்மா கண்வைத்து (புள்ளையார் கண்) தட்டில் அல்லது மனையில் வைத்து கொடுத்து அனுப்புவார். விடியற்காலையே அம்மா எருக்கம்பூக்களை பறித்து வந்திருந்தார். அவற்றை கோர்த்து எருக்கம்பூமாலைகளை தயார் செய்துவைத்திருந்தார்.

மணியின் வேலை அப்பா மற்றும் அம்மாவிற்கு கூடமாட வேலை செய்வது, எருக்கம்பூ மாலையை பிள்ளையார் வாங்க வருவோரிடம் கொடுப்பது. இடையில் பக்கத்தில் கடை வைத்திருந்த பூக்கடை அம்மாவிடம் சண்டை வேறு. யாரைக்கேட்டு கடை போட்டீங்க இது எங்க ஏரியா என்றார்கள். இன்று ஒரே நாள் தான், அதுவும் மதியமே பிள்ளையார் காலியாகிடும் என சமாதானம் செய்தார் அப்பா. கிடுகிடுவென பிள்ளையார் எண்ணிக்கை குறைந்தது. மாலைகளை எடுத்துக்கொண்டு மணி எம்.ஜி.ஆர் சிலை பக்கம் சென்றான். அங்கே மேலும் சில கடைகள் இருந்தன.

அங்கே தான் மணிவண்ணின் நண்பர்கள் சிலரும் இதே மாலையை விற்றுக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு மாலை விற்றாய் எத்தனை பிள்ளையார் விற்றார்கள் எனப் பேசிக்கொண்டார்கள். பிரதான சாலையில் பெரிய கடலைமிட்டாய் பிள்ளையார் வைத்திருப்பதாக அசோக் அண்ணன் சொன்னார். எப்படியும் ஒருவாரம் இருக்கும், நாம ஒரு நாள் மாலை பார்த்திவிடலாம் என முடிவு செய்தனர். இவர்கள் பேசிக்கொண்டு இருந்த இடத்தின் பக்கத்தில் ஒரு கார் சகதியில் மாட்டிக்கொண்டது. கொர் கொர் என சத்தம் வந்ததால் நண்பர்கள் இறங்கி அதனை அங்கிருந்து மீட்டனர்.

மதியம் 2 மணிக்கு எல்லா பிள்ளையாரும் விற்று தீர்ந்தது. மீதம் இருந்த களிமண்ணை மூட்டையில் கட்டி வீட்டிற்கு புறப்பட்டனர். அம்மாவிடம் குசுகுசுவென நண்பர்களை பார்க்கப்போவதாக சொல்லிவிட்டு மணி எங்கோ சென்றான். மாலை 5 மணிக்கு திரும்பி வந்த போது பிள்ளையாருக்கு பூஜை செய்தனர். ’எங்கடா போன இவ்ளோ நேரம்’ என அப்பா வைதார். அவன் வருகைக்காக தான் காத்திருந்தனர். சாப்பிட அமர்ந்த போது தான் அம்மா அதனை கவனித்தார்கள். மணிவண்ணனின் பாக்கெட்டில் ஏதோ பெரிதாக இருந்தது. அவன் கை கழுவும் போது கையும் களவுமாக பிடித்தார்.

“பாக்கெட்டில் என்னடா? எடு வெளிய” என்றார். உள்ளே இரண்டு பெரிய ஆப்பிள். “எங்க இருந்துடா எடுத்துட்டு வந்த? எப்படி வந்தது இந்த புத்தி?” என திட்ட ஆரம்பித்துவிட்டார். “சொல்லு”. அவன் கைகளிலும் தங்க பெயிண்ட் ஒட்டி இருந்தது.

“அம்மா, என் கூட்டாளிங்க ஃபாதிமாவும் டேனியலும் பிள்ளையார் சதுர்த்தின்னா என்னான்னு கேட்டாங்க? எப்படி பிள்ளையார் செய்வீங்கன்னு கேட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் மீதி இருந்த களிமண்ல பிள்ளையார் செஞ்சு பெயிண்ட் அடிச்சி கொடுத்தேன்.  ஃபாத்திமா எனக்கு ரெண்டு ஆப்பிள் கொடுத்தா, டேனியல் அழகா புள்ளையார் வரைஞ்சி கொடுத்தான். இதோ..” அழகான ஓவியத்தை நீட்டினான்.

பிள்ளையை அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தார் அம்மா.

“இந்தா, உன் கூட்டாளிங்களுக்கு கொழுக்கட்டை கொடுத்துட்டு வா” என குட்டி டப்பாவில் போட்டுக்கொடுத்தார் அம்மா. “சீக்கிரம் இருட்டுரதுக்கு முன்னாடி வந்துடுடா” என்றர். வீட்டில் இருந்து ஓட இருந்தவனிடம் “டேய், அவங்க வீட்ல விநாயகரை பார்த்து ஏதாச்சு அவங்க திட்டிட போறாங்க மணி” என்றார்.

“நம்ம வீட்ல ஒருவருஷமா மேரி மாதா போட்டோ இருக்கு இதுவரைக்கும் நீங்க கண்டுபிடிச்சீங்களா ?”ன்னு சொல்லிட்டு சந்தோஷமாக கொழுக்கட்டைகளுடன் ஓடினான்.


சிநேகிதிகள்

இந்த பயணம் சந்தியாவால் தான் சாத்தியமாகின்றது. இமய மலையில் இருக்கும் ஜாகேஷ்வரில் இருந்து இந்திய தலைநகர் தில்லியை நோக்கிய பயணம். நான் மிகவும் உற்சாகமாக இருக்கின்றேன். பங்கஜ் பட் மாமாவின் டாக்ஸியில் ஜாகேஷ்வரில் இருந்து ரயில் நிலையம் இருக்கும் காத்கோடத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். சுமார் ஐந்து மணி நேர மலைவழிப் பயணம். சில இடங்களில் மலைச் சரிவுகள் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல நேரிடலாம். அப்பா ரொட்டித்துண்டுகளை சுட்டு கொடுத்து அனுப்பி இருக்கின்றார். வழியில் நிற்கும்போது சாப்பிடுவேன். ஆமாம்! எனக்கும் சந்தியாவிற்கும் எப்படி சிநேகம் ஏற்பட்டது?

ஜாகேஷ்வரில் விசேஷமான கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோவில். யாத்ரிகள் வந்து போய்விடுவார்கள். ஒரே ஒரு அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. மற்றபடி மொத்தமாக பத்து அறைகள் கொண்ட தனியார் விடுதி ஒன்று மட்டுமே. என்னுடைய அப்பா போட்டோ கடை வைத்துள்ளார். ஆனால் இப்பொழுது கடையில் வேலையே இல்லை. ஆளுக்கு ஒரு கேமரா வைத்து உள்ளார்கள் என அப்பா புலம்புவார். சின்னச் சின்ன வேலைகள் செய்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டினார். குடும்பம் என்பது நானும் அப்பாவும் தான். என் பெயரை சொல்லவே இல்லையே நாநிதா.

சந்தியா தன் பெற்றோர்களுடன் ஒருமுறை ஜாகேஷ்வர் வந்திருந்தாள். தில்லியில் இருந்து ஜீப்பிலேயே வந்திருந்தார்கள். அவர்கள் சென்னை வாசிகள் தான். சந்தியாவின் அப்பாவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் ஜாகேஷ்வரை பிடித்துவிட ஒருவாரம் அங்கேயே தங்கலாம் என முடிவெடுத்தார். நானும் சந்தியாவும் இரண்டாவது நாள் தான் பார்த்துக்கொண்டோம். இங்கே ஒரு சின்ன அருங்காட்சியகம் இருக்கின்றது அங்கே தான் சந்தித்தோம். எனக்கு தெரிந்த ஹிந்தியிலும் அவளுக்கு தெரிந்த ஆங்கிலத்திலும் தான் முதல் உரையாடல். நான் படிக்கும் பள்ளியில் இன்னும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கவில்லை. ஆறாம் வகுப்பிற்கே வந்துவிட்டோம்.

சந்தியாவிற்கு பூக்களை படம்பிடிக்க வேண்டும் என்று ஆசை. அவள் கையில் ஒரு கேமரா இருந்தது. இங்கே எங்கே அழகான பூக்கள் இருக்கும் என்று கேட்டாள். நான் அப்பாவின் போட்டோகடைக்கு அழைத்துச் சென்றேன். அப்பா பல மலர்களை பல காலகட்டங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த ஆல்பத்தினை சந்தியாவிற்கு காட்டியதும் அவளுக்கு அதை எல்லாம் படம்பிடிக்க ஆசை என்றாள். அடுத்த நான்கு நாட்கள் நானும் அவளும் தான் ஜாகேஷ்வரை சுற்றி வந்தோம். பிரதான கோவில், குபேரன் கோவில் வாசல், விருத்த ஜாகேஷ்வர் மலை செல்லும் ஒற்றையடிப்பாதை, சின்ன சின்ன ஊற்றுகள், நந்தவனங்கள், சப்தரிஷி கோவில் என எல்லா இடங்களில் இருந்த பூக்களையும் படம்பிடித்தாள்.

என் வீட்டில் ஒரு நாள் என்னுடன் நெய்யில் வறுத்த ரொட்டித்துண்டுகளையும் அப்பாவின் சிறப்பான சப்ஜியுடன் உணவருந்தினாள். இப்படி சிறப்பான சாப்பாட்டினை அவள் சாப்பிட்டதே இல்லை எனப் புகழ்ந்து தள்ளினாள். காலையும் மாலையும் அவளுடைய அப்பா அம்மாவுடன் சில நேரம் செலவழிப்போம். விடுதி மேலாளரின் பரிந்துரையில் தான் சந்தியாவை என்னுடன் அனுப்பி வைத்தார் அவருடைய அப்பா. அவள் அப்பா புத்தகம் வாசிப்பதிலும் அவளுடைய அம்மா ஜாகேஷ்வர் கோவிலில் காலை முதல் மாலை வரை தியானம் செய்தபடி அமர்ந்திருந்து நாட்களை கடத்தினார்கள். ஒரு நாள் என்னை அழைத்துக்கொண்டு விருத்த ஜாகேஷ்வர் (ஜாகேஷ்வரில் இருந்து சாலை வழியே 13 கிலோமீட்டர்) சென்றனர். அங்கே இருந்து இமய மலையில் பல குன்றுகளை தரிசிக்கலாம். நாங்கள் சென்றபோது மேகமூட்டமும் குறைவாக இருந்ததால் நல்ல தரிசனம் நல்ல தரிசனம் என சந்தியாவின் அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். சந்தியாவை ஒரு சின்ன குன்றிற்கு அழைத்துச்சென்றேன். அவள் அதனை மிகவும் ரசித்தாள்.

ஊருக்கு கிளம்பும்போது தான் மிகவும் வேதனையாக இருந்தது. எங்கள் வீட்டில் தொலைபேசியோ அலைபேசியோ கிடையாது. ஊரிலேயே குறைச்சல் தான். ஆனால் அடிக்கடி கடிதம் எழுதலாம் என்று முடிவானது. அவளும் ஹிந்தி கற்றாள் நானும் ஆங்கிலம் கற்றேன். மூன்று ஆண்டுகள் இப்படித்தான் எங்கள் நட்பு வளர்ந்ததுள்ளது. இதோ நான் இப்போது தில்லியை நோக்கி செல்வதும் அவளுக்காக தான். சந்தியாவின் புகைப்படங்களை ஒரு நிறுவனம் கண்காட்சியாக தில்லியில் வைக்கின்றது. மந்திரிகள் சிலர் வந்து பாராட்டுகின்றார்களாம். நான் நிச்சயம் உடன் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டாள்.

அப்பா தனியாக அனுப்ப தயங்கினார், பக்கத்து கடைக்கு போன் செய்து சந்தியாவே அப்பாவிடன் பேசி சமாதானம் செய்தாள். ஜாகேஷ்வரில் இருந்து காத்கோடம் ரயில் நிலையம் வரையில் பங்கஜ் பட் மாமாவுடன் டாக்சியில். காத்கோடத்தில் இருந்து தில்லிக்கு ரயில். ரயில் நிலையத்தில் ஒரு கல்லூரி பேராசிரியை காத்திருப்பார். அவர் வேறு வேலையாக தில்லி வருகின்றார். சந்தியாவை தில்லி ரயில் நிலையத்தில் சந்திக்கப்போகிறேன்.

இதோ தில்லி ரயில் நிலையம் வந்துவிட்டது. சந்தியா காத்திருப்பாள். கைகளை விரித்தபடி என்னை அணைக்க காத்திருப்பாள். நான் அப்போது அழுதுவிடக்கூடாது. கட்டியணைத்து முத்தம் கொடுக்க வேண்டும்.


ராதாவின் கொலு

ராதாவிற்கு அந்த பருப்பு சுண்டல் மிகவும் பிடித்துவிட்டது எனப் புரிந்துகொண்டோம். மகேஷின் வீட்டு கொலுவிற்கு அந்த சுண்டல் கொடுக்கப்பட்டது. நாளை தான் கொலுவிற்கு கடைசி நாள். எங்கள் பல அடுக்கு அப்பார்ட்மெண்டில் பல வீடுகளில் கொலு கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாளும் நான்கு ஐந்து வீடுகளுக்கு சென்று கொலு பார்த்துவிட்டு சுண்டல் சாப்பிடுவது வழக்கம்.

ராதா தன் தாத்தாவின் வீட்டிற்கு வந்திருக்கின்றாள். ராதாவின் தாத்தா எங்கள் அப்பார்ட்மெண்டில் பணி புரியும் ஒரு காவலாளி. வாசலில் இருப்பார், பைப் ரிப்பேரானால் அதனை சரி செய்வார், மோட்டர் போடுவார், தண்ணீர் லாரிகளை சரியாக நிற்க வைப்பார், விருந்தாளிகள் உள்ளே நுழைந்து திண்டாடினால் சரியான ப்ளாட்டிற்கு அழைத்துச் செல்வார். அவருடைய பெயர் எங்கள் யாருக்குமே தெரியாது. “வாட்ச்மேன் தாத்தா” என்று தான் அழைப்போம். ராதா அவருடைய பேத்தி. ஊரில் படிக்கின்றாளாம். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் அவளுடைய அப்பா அவளை இங்கே அழைத்து வந்திருக்கின்றார். ஆனால் பள்ளி திறந்தும் அவள் பள்ளிக்குப் போகவில்லை. ஊரில் விட ஆளில்லை, தாத்தாவால் ஒரு நாள் விடுப்பு எடுக்க முடியாது. ஊரில் இருந்து அவளுடைய அப்பாவோ அம்மாவோ வந்தால் தான் திரும்பச் செல்ல முடியும். அவளாகவும் தனியாகச் செல்ல முடியாது.

ராதாவை மூன்று நாட்களாக தான் எங்களுக்கு பழக்கம். எங்களுக்கும் விடுமுறை இருந்ததால் ஒரு நாள் அவளை விளையாட்டுகளில் சேர்த்துக்கொண்டோம். விளையாடி முடித்து பூங்காவில் அமர்ந்து பேசியபோது தான் அவள் தன் மொத்த கதைகளையும் கூறினாள். ‘கொலு’ என்ற வார்த்தையே அவளுக்கு புதிதாக இருந்தது. அப்பார்ட்மெண்டில் எங்கள் நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியது. கொலு என்ன என்று விளக்கியதும் ‘எங்க ஊர் கோவிலில் சாமியை படியில் வெச்சிருப்பாங்க அதான் கொலுவா?. ஆனா எங்களை கோவிலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லுவாங்க’ என்றாள். பருப்பு சுண்டல் ராதிகா வீட்டில் இருந்து வந்தது. வாட்சுமேன் தாத்தா ராதாவை தேடி வந்தார். அவருடைய வீடு ஒரே ஒரு அறை தான். அப்பார்மெண்ட் ஒட்டியபடி இருக்கும் கட்டிடத்தில் சின்னச் சின்ன அறைகள் கொண்டு வீடுகள் இருந்தன. அதில் தான் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். ராதாவை அழைத்துச் சென்றார்.

தினேஷ் தான் ஆரம்பித்தான் “டேய் ராதா கொலுவையே பார்த்ததில்லையாம், நாளை யார் வீட்டுக்கு கூட்டிகிட்டு போகலாம்?”

ராதிகா அந்த யோசனையை முன் வைத்தாள் “நாம யார் வீட்டுக்காச்சும் போகறதவிட நாம் ஏன் அவளுக்கு ஒரு கொலுவை ஏற்பாடு செய்யக்கூடாது?” என்றாள்.

நாங்கள் எல்லாம் அந்த யோசனையை கேட்டு சுறுசுறுப்பானோம். திட்டம் இது தான். மோட்டர் அறைக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் இருக்கு. அந்த வழியை யாரும் பயன்படுத்துவதில்லை. மிக அவசரத்திற்கு மட்டுமே அதனை பயன்படுத்துவார்கள். அந்த படிக்கட்டில் கொலு வைப்பது என திட்டம். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சில பொம்மைகள் எடுத்துவரவேண்டும் என பேசிக்கொண்டோம்.

செய்தி இப்படியே ஒவ்வொரு நண்பர்களுக்கும் சொல்லப்பட்டது. பெரியவர்களுக்கு சொல்ல வேண்டாம், சொன்னால் தடை போட்டுவிடுவார்கள் என உஷாராக இருந்தோம். எங்களுக்கு அடுத்த செட் பசங்களும் எங்களுடன் சேர விண்ணப்பித்தார்கள். வயது வாரியாக இங்கு செட் இருந்தது. மாலை 4 மணிக்கு கூடி அடுக்கலாம் என்பது திட்டம்.

விடுமுறை நாள் என்பதால் மறுநாள் சரியாக 4 மணிக்கு எல்லோரும் அந்த படிக்கட்டுக்கு பக்கத்தில் ஆஜர். ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் திட்டமிட்டதைவிட அதிகமான பொம்மைகள். பெரிய அண்ணகள் இன்னும் கொலுவை பிரமாதப்படுத்தினார்கள். மூன்று ஜமுக்காலங்களை எடுத்து வந்திருந்தார்கள். பள்ளி ப்ராஜக்டிற்கு செய்த விளக்குகளை சில அக்காக்கள் எடுத்து வந்திருந்தார்கள். அதனை விட பிரமாதமாக ஏழு தூக்கில் சுண்டல் வந்திருந்தது. சுந்தர் ஒரு பெரிய தூக்கினை வீட்டில் இருந்து எடுத்து வந்தான். அதில் எல்லா சுண்டலையும் கொட்டி நன்றாக கலக்கிவிட்டார்கள்.

சிறப்பு விருந்தினர் வேறு யாரும் அல்ல ராதா தான். தாத்தாவின் வீட்டிற்கு சென்று நான்கு பேர் அழைத்து வந்தோம். அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவளுக்கு தான் முதல் சுண்டல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொம்மையாக இது என்ன இது என்ன என விசாரித்தாள்.

விஷயம் எப்படியோ பெரியவர்களுக்கு கசிந்துவிட்டது. மொத்த அப்பார்மெண்டே அங்கே குவிந்துவிட்டது.  எல்லோரும் குழந்தைகளை பாராட்டினார்கள். இந்த வருட சிறந்த கொலு நம்ம அப்பார்மெண்டிலேயே இது தான் என்று கூறினார்கள். நாங்கள் ஒருமித்த குரலில் கூறினோம் “இது ராதாவின் கொலு”.


முனியம்மா பாட்டி

முனியம்மா பாட்டியை அந்த பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் நன்கு தெரியும். பாட்டி இந்த பள்ளியில் வேலை செய்யவில்லை. ஆனால் தினமும் மதிய வேளையில் குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்து வருபவர். இம்மாம் பெரிய சாப்பாட்டுக்கூடை. இனிமேல் அந்த கூடையில் ஒரு அரிசிகூட வைக்க முடியாது என்ற அளவிற்கு முழுக்க சாப்பாட்டுக் கூடைகளாக இருக்கும். நெற்றியில் பெரிய்ய்ய பொட்டு. எலுமிச்சை அளவிற்கு இருக்கும். பாட்டியின் குரல் பயங்கர கணீர் என்று இருக்கும். அந்த வாயில் இருந்து வரும் அதிகமான வார்த்தைகள் “ஒழுங்க சாப்பிடு” என்பதே.

தன் வீட்டைவிட்டு காலி கூடையுடன் கிளம்புவார். சுமார் ஒரு மணி நேர நடையில் ஒவ்வொரு குழந்தையின் வீடாக சென்று சாப்பாட்டு கூடைகளை வாங்கிடுவார். வீட்டு வாசலில் நிற்கும் போது சாப்பாட்டுக் கூடை இருக்க வேண்டும்,  இல்லை என்றால் ஒரு பயங்கர குரல் ஒலிக்கும். முந்தைய நாள் சாப்பாட்டில் குறை இருந்தால் மீண்டும் நினைவுபடுத்துவார். “கொய்ந்தைக்கு காரமா இருக்குமா. குறைச்சுக்கோ” என்பார். பள்ளியில்  சாப்பாட்டு மணி அடிக்கவும் முனியம்மா பாட்டி கேட் வாசலை வந்தடையவும் சரியாக இருக்கும். ஆண்டு துவக்கத்திலேயே சாப்பாடுக் கூடை எடுக்க சொல்லிவைக்க வேண்டும்.

பள்ளிக்குள் நுழைந்ததும் ஒரு தார்பாய் அவர் கையில் வந்துவிடும்.  பள்ளியின் ஒரு மூலையில் அந்த தார்பாயை மறைத்து வைத்திருப்பார். அதில் எல்லா குழந்தைகளையும் உட்கார வைப்பார். யார் யாருக்கு எந்த சாப்பாட்டு கூடை சேர வேண்டுமோ அவர்களிடம் கொடுப்பார். பெரிய பசங்க அவருக்கு உதவுவார்கள். பின்னர் ஒவ்வொருவரும் முழுதாக சாப்பிடுவதை உறுதி செய்வார். கொஞ்சம் வைத்தாலும் மிரட்டுவார். அந்த உருட்டல் பார்வையைப் பார்த்ததும் பயந்திடுவார்கள். அப்படியும் மிச்சம் வைக்கும் சேட்டையர்கள் இருக்கவே செய்தார்கள்.

ஏதேனும் குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்றால் மதியமே டீச்சரிடம் பேசிவிட்டு குழந்தையை வீட்டில் விட்டுவிடுவார். பாட்டி பல வருடமாக பள்ளிக்கு பரிச்சயம் என்பதால் ஆசிரியர்களும் நம்பி அனுப்பிவிடுவார்கள். சில நிமிடங்களில் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு குழந்தை வந்து சேர்ந்ததா என்றும் உறுதி செய்திடுவார்கள்.

வித்யா அதே பள்ளியில் படிக்கும் ஒரு அமைதியான சிறுமி. வித்யாவிற்கு அந்த பாட்டியின் கூட்டத்தில் அமர்ந்து சாப்பிடவேண்டும் என்று ஆசை. ஆனால் அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் செல்வதால் காலையிலேயே சாப்பாடு செய்து கொடுத்து அனுப்பிவிடுவார்கள். பாட்டியின் கூட்டத்தில் அந்த தார்பாயில் அமர்ந்து சாப்பிட வித்யாவிற்கு ரொம்பவே ஆசை.

தன் பெற்றோரிடம் எவ்வளவோ சொல்வாள் மதிய சாப்பாட்டினை அந்த பாட்டியிடம் கொடுத்து அனுப்புங்க என்று. ஆனால் சாத்தியப்படவில்லை. ஆண்டின் இறுதியில் அந்த விஷயம் சாத்தியமானது. வித்யாவின் அப்பாவிற்கு வட நாட்டிற்கு மாற்றம் வந்துவிட்டது. அம்மாவும் வேலையை விட்டுவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் கிளம்பவேண்டும். பள்ளியில் கடைசி மாதம். ஆனால் ஒரு வாரத்திற்கு தான் முழுநாள் பள்ளி. அதாவது தேர்வு ஆரம்பித்தால் பாதி நாட்கள் மட்டுமே பள்ளி, முனியம்மா பாட்டியை பார்க்க முடியாது.

எப்படியோ பேசி வித்யாவின் சாப்பாடு முனியம்மா பாட்டியின் கூடையில் ஏறியது. வித்யாவின் அம்மா வேலையை விட்டிருந்ததால் பாட்டியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பினார். அதுவும் ஒரே ஒரு வாரத்திற்கு தான். வித்யாவிற்கு ஏகப்பட்ட குஷி. மதியம் எப்ப ஆகும் எனக் காத்திருந்தாள். எல்லோரிடமும் இன்னைக்கு மதியம் எனக்கு முனியம்மா பாட்டி சாப்பாடு எடுத்து வருவாங்களே என்று சந்தோஷமாகக் கூறினாள்.

தார்பாயில் அமர்ந்து உண்டாள். வேண்டுமென்றே போதும் பாட்டி என்று பாதி சாப்பாட்டில் நிறுத்தினாள். “ஒழுங்கா சாப்பிட்றியா இல்லையா” என்று மிரட்டல்.  சிரித்துவிட்டு சாப்பிட்டாள் வித்யா. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பைகளை பாட்டியின் கூடையில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். வித்யா மட்டும் அங்கேயே நின்றாள்.

“என்ன கண்ணு, க்ளாஸுக்கு போகல?” என்றார் பாட்டி.

“இந்தா பாட்டி” என்று ஒரு டிபன் பாக்ஸை நீட்டினாள் வித்யா.

“நீ சாப்பிடலையா. நான் பார்த்தனே நீ முழுசா சாப்பிட்டயே”

“பாட்டி நான் சாப்பிட்டேன். இது உங்களுக்காக எடுத்து வந்தது. எப்படியும் நீங்க திரும்ப எல்லா பாக்ஸையும் கழுவிட்டு ஒவ்வொரு வீடா கொடுத்துட்டு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். எவ்வளவு பசி இருக்கும். அதான் அம்மாகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு பாக்ஸ் கொடுத்துவிடச் சொன்னேன்”

“கண்ணு” என்று முழுமையாக சொல்லக்கூட முடியவில்லை பாட்டியால். கண்கள் நீரால் தழும்பியது.

ஒருவாரத்திற்கு தினமும் வித்யா தான் பாட்டிக்கு சாப்பாடு கொடுத்தாள். செய்தி கடைசி நாள் தான் மற்ற குழந்தைகளுக்கு தெரியவந்தது. வித்யா இந்த வருடம் வெளியூர் போய்விட்டாள், ஆனால் பாட்டிக்கு தினமும் ஒவ்வொரு வீட்டில் இருந்து மதியம் ஒரு டிபன் பாக்ஸ் உணவு வர ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *