கோடுகளில் புதைந்த கலகம்

 

 

 

மோனிகா


தனது சிறையின் அறைகளுக்குள் வரலாறு, தத்துவம் மற்றும் அரசியலை எழுதிய கிராம்ஷி “விளிம்புநிலை (subaltern)” என்ற சொல்லை முன்வைத்தார். அக்காலம் முதலாகவே அச்சொல் வரலாற்றியலாளர்களால் கையாளப்பட்டு வந்துள்ளது. அடக்குமுறைக்குட்பட்டவர்களாகவும் சமூகத்தின் அதிகார அடுக்குகளில் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்களாகவும் குரலெழுப்ப இயலாதவர்களாகவும் உள்ள மக்களையே விளிம்பு நிலை மக்கள் எனலாம். இவர்கள் பாரம்பரிய வரலாற்றின் கண்களில் தென்படாதவர்கள். வரலாற்றின் பக்கங்களில் காணாமற்போனவர்கள். வரலாற்றால் திரித்து பேசப்பட்டவர்கள்.

பொதுவாகவே, கலைப் படைப்பு என்பது வலிகளையும் வேதனைகளையும் சுமக்கும்பொழுது தீவிரமடைகிறது. உதாரணத்திற்கு தமிழகத்திலிருந்து வரும் கவிதைகளைவிட இலங்கையிலிருந்தும் புலம்பெயர் மக்களிடமிருந்தும் வெளிப்படும் கவிதைகள் உக்கிரமானவையாகவும், தீவிரத் தேடல் உடையவையாகவும் இருப்பதைக் காணலாம். அது போலவே 1943/44ல் வங்காளத்தில் ஏற்பட்ட ஒரு மிகப் பெறும் வரட்சியையும் அதனைத் தொடர்ந்து 1946ல் எழுந்த ஒரு மிகப்பெரிய மதக் கலவரத்தையும் மனத்தில் கொண்டு மூன்று இளைஞர்கள் தமது வாழ் நாள் முழுவதும் அது குறித்த ஓவியங்களையும் சிற்பங்களையும் படைக்கலாயினர். அவர்கள், சிட்டோபிரசாத் பட்டாச்சார்யா, ஜைனுல் அபிதீன் மற்றும் சோம்நாத் ஹோர் ஆவர்.

தற்போதைய பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கில் பிறந்த சிட்டோபிரசாத் மித்னாபூரில் நடந்த பசிக் கொடுமைகளை நேரில் கண்டார். கல்லூரியில் உள்ள எல்லோரும் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிட சிட்டோபிரசாத் மட்டும் மக்களுடன் மக்களாய் சென்று ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரும் இடைவெளியை கண்டு வெகுண்டெழுந்தார். அவரது அரசியல் பார்வையும் கோபமும் கரு நிற கோடுகளாய் வெளிப்பட்டன. கிராம மக்கள் தங்களிடமுள்ள பித்தளை அலுமினியப் பாத்திரங்களை விலைக்கு போடுவதிலிருந்து சதையற்ற ஒரு தாயின் மார்பகங்களில் ஒரு சவலைக் குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கும் காட்சி வரை அனைத்தையும் கருப்பு மையினால் கோடுகளால் கிறுக்கலானார். நடந்தே பல காத தூரம் சென்று அவர் வரைந்த இவ்வோவியங்களுக்கு “பசித்த வங்காளம் (Hungrey Bengal)” என்று பெயரிட்டார். இவ்வாறு தொடங்கிய அவரது ஓவியப் பயணம் ஐம்பதுகளில் விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையை அழகுற வரைவதில் தொடர்ந்தது. குடும்பம், தாய்மை, காதலர்கள், குழந்தைகள் என சிற்சிறு சந்தோஷங்களில் மூழ்கிய விளிம்பு நிலை மக்களை வரைந்து தனது கரிய கோடுகளால் புகழ் பெற்றாட் சிட்டோபிரசாத்.

1921ல் பிறந்த சோம்நாத் ஹோர் “தெபாகா” (1946) என்னும் விவசாயிகளின் போராட்டத்தில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். அதுவரை நிலத்துச் சொந்தக்காரர்களுக்குப் பாதி விவசாயிக்குப் பாதி என்றிருந்த வரைமுறையை விவசாயிக்கு மூன்று பங்கு சொந்தக்கார்ர்களுக்கு ஒரு பங்கு என மாற்றியமைக்க கம்யூனிஸ்டு கட்சி போராடியபோது அவர்களுடன் ஊர் ஊராகச் சென்றார். அப்போது மக்களைப்பார்த்து வரைந்த ஓவியங்களை “தெபாகா நாட்குறிப்பு” என்னும் பெயரில் தொகுப்பாக உருவாக்கினார். விவசாயிகளின் அன்றாட வேலையான நாட்டு நடுதல், உழுதல், கதிர் அறுத்தல், களைப்புடன் அருந்தக்கூடிய மதிய உண்வு போன்றவற்றை வரைந்தார். தெருக்குழந்தைகளையும், தாய் சேய்க் காட்சிகளையும் சோம்நாத் வரைந்த போதிலும் கல்கத்தாவின் மிகப்பெரிய சோகமான வரட்சியின் கோர தாண்டவங்களை அவர் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் தீட்டியமையே இன்று வரை அவரது அடையாளமாக நிலைத்துள்ளது.

Somnath Core – 1

Somnath Core – 2

Somnath Core – 3

சரித்திரமும், இலக்கியமும் பதிவு செய்ய மறந்து போகும் மறக்க எத்தனிக்கும் விளிம்பு நிலை மக்களை இவர்களது தூரிகைகள் உலகிற்கு கொண்டுவந்தன. அழகியலில் இதுவும் ஒரு வகையென இவர்கள் உருவாக்கிய யதார்த்தவாத அழகியல் இன்றளவும் “கோட்டுக் கலகக்காரர்”களாக இவர்களை நினைவில் நிற்கச் செய்கின்றன.

One comment

  1. நல்ல கட்டுரை. இன்னும் விரிவாக முயன்றிருக்கலாம். பிகாஷ் பட்டாச்சார்யாவின் ஓவியங்களை பற்றியும் எழுதியிருக்கலாம். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *