இரண்டு புகைப்படங்கள்

 

 

 

ட்ராட்ஸ்கி மருது


சிற்பி தனபால்

இந்தியாவின் மிக முக்கிய சிற்பி. ஓவியர். நவீன இந்திய ஓவிய சிற்ப வழியில் தென்பகுதியிலிருந்து தன் படைப்புகளால் புகழ்பெற்றவர். சிற்பி. டி.பி. ராய்சவுத்ரியின் மாணவர்.  நாட்டியம் கற்று நாட்டியக் கலைஞராக இருந்து ஓவியராக, சிற்பியாக இளம் வயதிலேயே மாறி வந்தவர்.  ஓவியர் பணிக்கரின் சமகாலத்தவர். அவரிடம் மாணவராக ஓவியக்கல்லூரியில் ஏழு ஆண்டுகள் கழிக்க எங்களுக்கு கிடைத்தது பெரும் பேறு.  நாங்கள் கல்லுரியை விட்டு வெளியே வரும் போது அவரும் முதல்வராக ஓய்வு பெற்றார். பாரதிதாசன், என்.எஸ்.கிருஷ்ணன் எனப் பெரிய நட்பு வட்டம் அவருடையது. தனபாலுடைய வீட்டில் தான் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவை தலைமறைவு வாழ்க்கைக்கு என்.எஸ்.கே. மறைத்து வைத்திருந்தார்.

கடந்த ஐம்பது வருடங்களில் வந்த அடுத்த தலைமுறை ஓவியர்களை வளர்த்தவர். இயற்கையின் மீதும் தாவரங்களின் மீதும் தீராக் காதல் கொண்டவர். பல ஆசிரியர்கள் குறிப்பாக, ஓவியர்கள் அல்போன்சு, கே.எம்.ஆதிமூலம். ஆர்.பி. பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் எங்களுக்கு ஆசிரியர்களாக இருந்ததுடன் அவருடைய நேரடி மாணவர்களாகவும் இருந்தனர். என் இளைய சகோதரர் போஸ் மருதநாயகம் அவருடனே அவர் வீட்டிலேயே வளர்ந்தார். தந்தை பெரியாரை அமர வைத்து அவரை மாடலாகக் கொண்டு  சிற்பம் செய்யும் வாய்ப்பைப் பெற்றவர் தனபால். அச்சிற்பம் கிரேக்கச் சிந்தனையாளர்களின் தோற்றத்தைக் கொண்டது எனச் சொல்ல முடியும்.

என் தந்தை அவரை ஐம்பதுகளின் இறுதியில் சந்தித்ததும் பின் அவரிடமே வந்து சேர்ந்து நான் ஓவியம் கற்கத் தொடங்கியதும் எப்போதும் மகிழ்வை அளிப்பவையாக இருக்கின்றன. கிராமத்திலிருந்து ஓவியம் கற்க வரும் மாணவர்கள் மீது அவருக்குள்ள பரிவும் அவர்களை வளர்த்தெடுப்பதில் உள்ள அக்கறையும் அவர்களுக்கு உதவுவதிலும் அவருக்கிணை அவரே.

பொதுவெளியில், இலக்கியப் பத்திரிகையில் ஆதிமூலம், பாஸ்கரன், தட்சிணா, நான் என பலரும் இயங்க அவரே உந்துசக்தி.

படம் : தனபால் உருவம் : ஆதிமூலம் வரைந்தது.

ஆதிமூலம், பாஸ்கர், தட்சிணா ஆகியோர்களது படம் நான் எடுத்த புகைப்படக் கோர்வை.


மதுரைச் சித்தரைத் திருவிழா

இளம் வயதிலேயே மதுரை என்னை பாதித்திருக்கிறது. எனது குடும்பத்தார், கோவில் சூழல், வைகைக்கு அழகர் வரும் நிகழ்வு, கருப்பணசாமி கோவில் அருகில் நிற்கும் சப்பரத்தில் புறப்பாடுக்கு எங்கள் குடும்பத்தார்க்கு அளிக்கப்படும் மரியாதையை வேடிக்கை பார்த்து நின்றது, கூட்ட நெரிசலில் கிராமியக் கலைஞர்களின் ஆட்டம், பாட்டு கேட்டு இரவுபகலாக வாய்பிளந்து  ரசித்து அலைந்தது, சுற்று வட்ட கிராமத்தார் வண்டி கட்டி வந்து ஐந்துநாள் மதுரை மைதானங்களில் தங்கி பொங்கிச் சாப்பிட்டு மகிழ்வதைக் கண்டது எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்று தண்ணீர் பீச்சுபவர்களையும் அவர்களது பாடல்களையும் கேட்டு மயங்கியிருந்த எனக்கு பின் நாளில் அதையே வேறு இடத்தில் கேட்க நேர்ந்தது. நான் சினிமாத்துறையில்  ‘ஸ்பெஷல் எபக்ட் கிராபிக்ஸ்’ செய்யும் போதும் உடன் பல படங்களில் நடித்த போதும் நடிகர்.வடிவேலு படப்பிடிப்புக்கு இடையே எனக்காக திருவிழாவில் தண்ணீர் பீச்சுபவர்களின் பாடலைப் பாடுவார், அதே ஏற்ற இறக்கத்துடன். அவர் பாடலில் கரைந்து உருகுவேன். அப்படிப் பாடுபவர்களில் ஒரு நகர் சார் இசை வடிவத்தில் பாடுகிற திருநங்கை ஒருவரைப் பற்றி நான் சிலாகித்துச் சொல்லும் போது வடிவேலு எழுந்து நின்று “அவருடன் தான் என் இளம் வயதெல்லாம் அலைந்து திரிந்தேன்ணே..” என கண்கலங்கியபடியே கூறுவதை ரசித்திருக்கிறேன். இந்தச் சம்பவத்திற்கு முன்பே அக்கலைஞரை ஒரு கதைக்கான ஓவியத்தில் தோன்றும்படி ‘கல்கி’ இதழில் வரைந்திருக்கிறேன் என்பதுவும் இப்போது நினைவில் வந்து செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *