பிரதி – பலன்

கணியன் பூங்குன்றன்

புகைப்படம் : அனாமிகா


குருதிப்பூக்களின் நறுமணம்

 

ஒரு சில ராகங்களையே மீளப்பாடும் பாடகர்கள் உண்டு. ஓரிரு நிறங்களையே திரும்பத் திரும்ப உபயோகிக்கும் ஓவியர்கள் இருக்கிறார்கள். போலவே வண்ணதாசனும் மறுபடியும் மறுபடியும்  உணர்வின் சில இழைகளை மாத்திரமே தன் கதைகளுக்காகத் தேர்கிறார் என்றே தோன்றுகிறது. பாடகனின் ஓவியனின் அத்தருணத்தையே மனவெழுச்சிக்கும் கற்பனைவீச்சிற்கும் தக அந்த ராகங்களும் நிறங்களும் மாறி மாறி உருவங் கொள்ளுவதை ஒரு தேர்ந்த ரசிகன் அறிவான். மேலேழுந்த வாரியாகப் படிக்கும் ஒரு வாசகனுக்கு வண்ணதாசனின் கதைகள் சில ஒன்றே போலத் தோன்றக்கூடும். ஆனால் அவரை நுட்பமாகப் பின் தொடர்பவன், அவரது கதைகளின் ஊடாக, அவர் உறைய விட்டிக்கும் உக்கிரமான மனநிலைகளின் கொந்தளிப்பை, மிக எளிதாகத் தன்வயப்படுத்திப் பார்க்க முடியும். அகத்தில் ஒரு சிறிய ஏடு புரள்வது என்பது, வரலாற்றில் ஒரு யுகம் புரள்வதற்கு ஒப்பானது என்பதை அவன் அறிவான். பற்பல வருடங்களுக்கு முன்பாகத் தான் எழுதிய கதைகளை முன் நிறுத்திய சிநேகத்தை, விதந்த அன்பைத் தான் இப்போதும் அவர் எழுதுகிறார். ஆனால் அவற்றை கவிழ்த்து தலைகீழாக்கி, மறுபக்கத்தை அப்போது காணாத அல்லது காணவிரும்பியிராத மறுபக்கத்தை இப்போது நிதானித்து, நேர்கொண்டு எழுதுகிறார் எனத் தோன்றுகிறது.

நாம் வாய்விட்டுச் சொல்ல அஞ்சும் சில விஷயங்களை, நம் மனம் எவ்வித தயக்கமுமின்றி வெகு இயல்பாக யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்த தருணங்கள் பலவற்றை, நம் வாழ்க்கையில் கடந்திருப்போம். அது போன்ற தருணங்கள் பலவற்றை இத்தொகுப்பின் கதைகளாக்கியிருக்கிறார் வண்ணதாசன். தன் வார்த்தைகளின் துல்லியத்தால், வாசிப்பவனின் மனதில் இறுகிச் சுருண்டிருக்கும் நரம்பு ஒன்றின் முடிச்சை அவரால் போதுமான அழுத்தத்துடன் தொட்டுவிட முடிகிறது. ஆம், இத்தொகுப்பின் கதைகள் பலவற்றிலிருந்தும் வெட்டிப் பிரித்து, ஒற்றையொரு உணர்வை மாத்திரம் சுட்ட வேண்டுமென்று நிர்பந்தித்தால் அதை ‘தொடு உணர்ச்சி’ எனத் தயங்காமல் சொல்லலாம்.

ஏதேதோ காரணங்களால் உண்டான காயங்கள், எவ்விதமாகவோ ஆறி எஞ்சிய வடுக்கள், நம் ஒவ்வொருக்குள்ளும் அவசரமேதுமின்றி பொருமையாகக் காத்திருக்கின்றன. யாருடையதோ விரல்கள் வந்து வருட, அதுவரைக்குமான இறுக்கம் தளர்ந்து அவை பூக்கின்றன. இந்தத் தொடுதல் என்பது வெறும் உடல்ரீதியான ஒன்றுமட்டுமல்ல. அதற்கும் அப்பால் ஆழமாக அடிமனம் வரை சென்றுசேரக் கூடியது என்று தோன்றுகிறது. வார்த்தைகளால் தரமுடியாத வாஞ்சையை ஒரு தொடுகை நிகழ்த்திவிடும். அது தரும் ஆறுதலை விவரிக்க மாத்திரமே இவ்வளவு வார்த்தைகள் தேவைப்படுகிறது. இச்சை ஏதுமின்றி இன்னொரு உடலை தீண்டமுடிகிற போது அது சிகிச்சையாகிறது. அத்தகைய ரசவாதம் இத்தொகுப்பிலுள்ள பல கதைகளில்,எவ்வித மெனக்கெடல்களுமின்றியே இயல்பாக நிகழ்ந்திருப்பதைக் காணலாம். சற்றே விலகி, போதாமை, தரையோடு தரையாக, அகஸ்தியம், நாபிக்கமலம் ஆகியவை அவ்வகையில் முக்கியமான கதைகள்.

நாபிக் கமலம்- வண்ணதாசன், சந்தியா பதிப்பகம், அசோக்நகர், சென்னை-83. பக்-160; விலை.ரூ.140.00


மொழிபெயர்க்கப்பட்ட நூலகம்

எண்பதுகளில் ஒரு புதிய கண்டுபிடிப்பின் பரவசத்தோடு லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றிய அறிமுகம் தமிழில் நிகழ்ந்த போது வெகுவாக உச்சரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள் மார்க்வெஸ் மற்றும் போர்ஹே உடையதே. இஸபெல் அலெண்டே, கார்லோஸ் புயண்டஸ், ஜுலியோ கொர்த்தஸார், மரியோ வர்கஸ் யோசா, இராபர்டோ பொலோனோ, எட்வர்டு காலியானோ முதலியவர்கள் குறித்த அறிதல் ஒப்பீட்டளவில் இன்றளவும் குறைவானதே. இதில் தனது வசீகரமான கதை சொல்லும் முறையால் வாசகனைத் தன்வயப்படுத்திக் கொண்டுவிடும் தன்மை மார்க்வெஸ் உடையது என்றால், போர்ஹேவோ தன்னுடைய விவரணைமுறைமையால் கதைகளினின்றும் விலகி நின்று வாசகனை அறிவார்த்தமாக சிந்திக்கவும் நினைவுபடுத்திப் பார்க்கவும் யோசிக்கவும் வைக்கக் கூடியவராக இருக்கிறார். போர்ஹேவின் கதைகள் வெறும் கதையை மாத்திரம் சொல்லி நின்று விடுவதாக அமையாமல், ஒரே சமயத்தில் கதையை பற்றிய கதையாகவும், வரலாறு மற்றும் தொன்மங்களை நினைவு கூறுவதாகவும் மொழியின் சாத்தியங்கள் மற்றும் அபத்தங்களை குறிப்புணர்த்துவதாகவும் இனம், மதம், பிராந்தியம் முதலிய அடையாளங்களை வற்புறுத்தாத ஒன்றாகவும், உலகளாவிய பார்வையுடனும் எழுதப்பட்டவையாக இருந்தன. பிரமிள் முதற்கொண்டு பலரும் அவ்வப்போது போர்ஹேவினுடைய ஏதேனும் ஒரு கதையை தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். என்றாலும் கூட ‘மீட்சி’ இதழ் வந்து கொண்டிருந்த காலம் தொட்டு போர்ஹேவை மூலமொழியான ஆங்கிலத்திற்கு அணுக்குமாக அவருடைய தனித்துவத்தை தொடர்ச்சியாக கவனப்படுத்தி வந்தவர் பிரம்மராஜன். அவர் பல வருடங்களுக்கு முன்பே போர்ஹே கதைகள் என்ற ஒரு சிறுதொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறார்.

அவற்றோடு இன்னும் சில கதைகளை சேர்த்து மொத்தம் 23 கதைகள் 4 கட்டுரைகள் 17 கவிதைகள் தவிர போர்ஹேவின் எழுத்தை அறிமுகப்படுத்தும் பிரம்மராஜன் கட்டுரை ஆகியவை அடங்கிய பெருந்தொகுப்பாக மிக நேர்த்தியான அச்சாக்கத்துடன் இந்நூல் வெளிவந்துள்ளது. ஒரு சிறுகதையாளராக போர்ஹேவை அறிந்திருப்பவர்கள் கூட, அவருடைய கவிதை ஆர்வத்தை அவ்வளவாக பொருட்படுத்தி தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அவ்விதத்தில் அவருடைய கவிதைகளும் உள்ளடங்கிய தொகுப்பாக வந்திருப்பது இந்நூலின் சிறப்பு. சொந்த படைப்பிற்கு இணையான ஈடுபாட்டையும் பல சமயங்களில் அதைக் காட்டிலும் அதிக உழைப்பையும் கோரி நிற்பது மொழியாக்கம். மொழிபெயர்ப்புக்கென்று உறுதி செய்யப்பட்ட வழிமுறைகள் எதுவும் கிடையாது. மிகை நவிற்சியாக சொல்லலாமெனில் தமிழில் எத்தனை மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரோ அத்தனை மொழிபெயப்புக் கொள்கைகளும் உண்டு எனலாம். என்றாலும் சிரத்தை எடுத்துக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு அதற்குரிய கவனமும் பெயரும் காலதாமதாமாகவேனும் கிடைக்கவே செய்கிறது.

ஆங்கிலப் பேராசிரியர் ஆதலால் மூலமொழியான ஆங்கிலத்திற்கு அணுக்கமாக நின்று இப்பெயர்பை செய்திருக்கிறார். சற்றே நகர்ந்து பெயர்ப்பு மொழியான தமிழுக்கு இயைய வாக்கியங்களைப் பிரித்து அமைத்திருந்தால் வாசிக்க இன்னும் இணக்கமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஒரு வேளை அப்படி செய்திருந்தால் அது மூலத்தில் கண்டிருக்கும் போர்ஹேவின் தனித்துவமான மொழிக்கட்டமைப்பை சிதைப்பதாகவும் அமைந்திருக்கக்கூடும் என்றொரு எண்ணமும் எதிர் தோன்றாமலில்லை. இதுமாதிரியான காரியங்களை, அரசின் நிதி உதவி பெறும் பல்கலைக் கழங்களோ பண்பாட்டு நிறுவனங்களோ முன்கையெடுத்து செய்ய வேண்டும். அத்தகைய சூழல் நம் தமிழகத்தில் இல்லையென்பதால் இது போன்ற முயற்சிகளை ஆர்வமுடைய தனிநபர்களும் சிறு பதிப்பகங்களுமே செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வகையில் போர்ஹே தாமதமாகத் தமிழுக்கு வந்தாலும் அவருக்குரிய அத்தனை முக்கியத்துவத்தோடும் வந்திருக்கிறார் என்பதே இத்தொகுப்பின் சிறப்பு.

போர்ஹே கதைகள் : தமிழில்; பிரம்மராஜன். வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ், பக்கம்: 320 ,விலை.ரூ.550.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *