கவின்மலர் கவிதைகள்

 

 

 

 

 


சற்றே மந்தமாகத் துவங்கிய ஆட்டம்…

கடற்கரையில்
ஈரம் மினுமினுங்கக் கிடக்கின்றன
பனைமட்டையும் கொட்டாங்கச்சியும்

அவன் கைகளுக்கு
பனைமட்டையை விசைகூட்டி
கொட்டாங்கச்சியை பந்தாக்கி
கடலுக்குள் செலுத்தும் வித்தை தெரிந்திருக்கிறது

ஓர் அலை வந்து
பந்தை கரையில் எறிய
மீண்டுமொரு அடியில்
காற்றைக் கிழித்தபடி
நீர்ப்பரப்பின் மேல்
பறக்கிறது கொட்டாங்கச்சி
அலையோ தன் கொடுங்கரங்களால்
மீண்டும் மீண்டும் அதை கரைக்குத்
திருப்பியனுப்புகிறது.

அலை கரைசேர்க்க கரைசேர்க்க
சற்றேனும்  சளைக்காமல்
மட்டையால் அடித்தபடி அவன்.

கடலுக்கும் அவனுக்குமான
இப்போட்டியில் எப்படியாகிலும்
வென்றுவிடத் துடித்து
ஆர்ப்பரிக்கும் அலைகளோடு
கிரிக்கெட் விளையாடும் அவனை
வியப்போடு பார்க்கிறாள் அவள்.

அவனும் நிறுத்துவதாயில்லை.
அலைகளும் விடுவதாயில்லை
புறப்பட ஆயத்தமாகி
அழைக்கும் அவளிடம்
பந்தை பவுண்டரிக்கு அப்பால் செலுத்துவதே
தன் இலக்கென்றுச் சொல்லி
தொடுவானத்தைக் காட்டுகிறான்.

(ஷங்கர்ராமசுப்ரமணியனுக்கு)


Ms. மீனாவுக்கு அச்சமாக இருக்கிறது

அனைவரும் தன்னை Mrs. என்றோ Miss என்றோ
ஒரு சொல்லுக்குள் அடைப்பதாய்
Ms.மீனாவுக்கு அச்சமாக இருக்கிறது

Ms உச்சரிப்பு அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை
தோழியொருத்தி ’ம்ம்ஸ்’ என்கிறாள்
மீனாவுக்குப் புரிவதாயில்லை..

Miss என்றால் ’இன்னும் மணமாகவில்லையா’
Mrs என்றால் ’குழந்தைகள் இல்லையா’
‘சிகிச்சை பெறுகிறாயா’
ஒவ்வொன்றுக்கும் ஒரு கேள்வி

இனி இத்துன்பமில்லை
கேள்விகள் இல்லை
இனி Ms தான்

மீனா தனக்குள் ஒரு முறை
Ms.மீனா என்று சொல்லிப் பார்க்கிறாள்
அவள் முன் வந்து நிற்கும் கேள்வியொன்று
விவாகரத்தானவளா என
அவளையே உற்றுப் பார்க்கிறது.

3 comments

  1. கவிதைகள் எழுதும் ஈரமனம் உங்களைக் காக்கும். தொடர்ந்து எழுதுங்கள் கவின்மலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *