தற்காலச் சிறார் இலக்கியத்தின் பிரச்சனைகள்

விஷ்ணுபுரம்  சரவணன்

புகைப்படங்கள் : அனாமிகா, பாலா


தலைப்பைப் படித்தவுடன், தமிழில் தற்போது சிறார் இலக்கியம் எழுதுப்படுகிறதா எனும் கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்கு புக் ஃபார் சில்ரன், வானம், என்.சி.பி.ஹெச், என்.பி.டி., உள்ளிட்ட சில பதிப்பகங்களின் நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.  புதிதாகப் பலரும் எழுத வந்திருக்கும் ஆரோக்கியமான சூழலை, வரவேற்கவும் உரையாடவும் உங்களை அழைக்கிறேன்.

பொதுவாகவே சிறார் இலக்கியம், யதார்த்தப்போக்கு, அதீத கற்பனை புனைவு என இரண்டு வகைகளில் எழுதப்படுகிறது. இப்படியான வகைப்பாட்டில் சிறார் பாடல், நாடகங்களை அடக்க முடியாது. கதைகள் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால், சிறார் இலக்கியத்தின் தொடக்கம் முதலே இவ்வகைகள் இருந்து வருகின்றன. தொலைந்து போன சைக்கிளைத் தேடிச் செல்வதாக ஒரு நாவல் செல்லும், இன்னொரு பக்கம் பூதம், மாய இளவரசி கதைகள் என்று விரியும். தற்போதைய சிறார் படைபுகளிலும் அதுவே தொடர்கிறது. படைப்புகளின் பெயர்களைத் தவிர்த்துவிட்டு, அவற்றில் காணப்படும் சிக்கல்களாக நான் உணர்வதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். அவற்றில் முதன்மையான ஐந்தை மட்டும் இப்போது பார்க்கலாம்.

மொழிவளம்:

மிகவும் அடிப்படையான பிரச்னை இது. ‘இப்போது சிறார் இலக்கியம் எழுத முனையும் பலர் பெரியவர்கள் இலக்கியப் படைபுகளைப் படிப்பதே இல்லை. இதனால், மிகவும் குறைவான சொற்களைக் கொண்டே கதைகளை உருவாக்குகின்றனர்’ பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னது இது. தற்போதைய பல படைப்புகளைப் படிக்கையில் இந்தச் சந்தேகம் எனக்குள்ளும் எழுந்திருக்கிறது. காட்சி ஒன்றை விவரித்திருக்கையில் அது, அப்பட்டமாக வெளிப்பட்டு விடுகிறது. அந்தக் காட்சியை நாம் மனத்துக்குள் விரித்துப் பார்க்கையில், திரையில் பல இடங்களில் பூர்த்திச் செய்யாத வெற்றிடமாக இருக்கிறது. இந்தச் சிக்கல் தீர, மொழியைக் கையாளவும் நேர்த்தியும் மிகவும் அவசியம்.

நிலம் சார்ந்த பிரக்‌ஞை:

வாண்டு மாமா, வள்ளியப்பா போன்ற சிறார் இலக்கிய முன்னோடிகள் இருப்பினும், பலருக்கு ரஷ்ய இலக்கியங்கள்தான் வழிகாட்டிகளாக அமைந்திருக்கின்றன. அதையொட்டி, தற்போது வரை ஆங்கிலத்திலும் தமிழில் மொழியாக்கத்திலும் வரும் சிறார் இலக்கியங்களை வாசித்து, அதையொட்டிய படைப்புகளைத் தருகின்றனர். அதில் தவறொன்றுமில்லை. இன்னும் சிலர், எளிமையாக எழுதினாலே அவை சிறார் இலக்கியம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். எனவே, அந்தக் கதைகள் நிகழும் தளம் அந்தரத்தில் மிதக்கிறது. எந்த ஓர்மையும் இருப்பதில்ல. கடற்கரை என்றால், அது எந்த ஊர் கடற்கரை என்பதைக்கூட வரையறுப்பதில்லை. எல்லாக் கடற்கரைகளும் ஒன்று அல்லவே. இதனால், கதைகளில் வரும் மனிதர்களின் குணங்களையும் தோற்றத்தையும் வரையறுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மரங்கள் மரங்களாகவே இருக்கின்றன. புங்கன் மரம், பூவரசம் மரங்களாக அவை மாற்றமடைவதில்லை. இது குறித்த பிரக்ஞை பிரதானமானது என்று நினைக்கிறேன்.

ஃபாஸ்ட் புட் மனநிலை:

வெகுகாலத்துக்குப் பிறகு, சிறார் இலக்கியத்துக்கு எனச் சிறு வணிகப் பரப்பு, தமிழ்ச் சூழலில் உருவாகியுள்ளது. அதற்கு, காரணங்கள் பலவாகக் கூறப்பட்டாலும் இந்த நிலை ஆரோக்கியமானதே. அதனால், நிறைய படைப்புகளுக்கான தேவை உருவாகியுள்ளது. அதுவும் குறைவான கால அவகாசத்தில் தேவைப்படுகிறது. எனவே, பலர் சிறுகதைக்கான அல்லது துணுக்கான ஐடியா உருவானாலே அதில் முன்னும் பின்னும் சேர்த்து நாவலாக்கும் போக்கு வந்துவிட்டது. இது எந்த விதத்திலும் சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது. இந்தப் பிரச்சனைக்குச் சரியான தீர்வு, தமிழில் சிறார் இலக்கியம் எழுத நிறைய பேர் முன் வர வேண்டும். அதன் வழியாகப் பல்வேறு கோணங்களில் புதிய சிந்தனைகளில் கதைகள் உருவாகும். பெரியவர்களுக்கான சிறுகதையை எழுத எடுத்துக்கொள்ளும் சிரத்தையையும் நேரத்தையும் சிறார் இலக்கியப் படைப்புகளுக்குச் சிலர் தருவது இல்லை. இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும். தம் படைப்புகளை இன்னும் நேர்த்தியாக, கச்சிதமாகக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சிறாரை குறைவாக மதிப்பிடுதல்:

இது சிறார் இலக்கியத்தின் தொடக்கத்திலிருந்தே இருந்து வரும் சிக்கல். ஒரு கதையை முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், அந்தக் கதை படிப்பதோடு அந்தச் சிறுவரின் வேலை முடிந்துவிட்டது என்பதாக எழுதப்படுகின்றன. இப்படிச் செல்வதன் அர்த்தம், அந்தக் கதையிலிருந்து ஒரு நீதியை, கருத்தை, பொது அறிவைப் பெற வைக்க வேண்டும் என்பதல்ல. அவை, படைப்பூக்கத்தை இன்னும் பின்னுக்கு இழுத்து விடும். மாறாக, அழகான கற்பனைக்கான வாசலை, அந்த எழுத்தாளர் திறந்துவிடும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதன் வழியே அந்தச் சின்னஞ்சிறு வாசிப்பாளர் கொஞ்சம் தூரமேனும் பயணிக்க வேண்டும். அதற்கான கதைகள் எழுதப்படுவதில் தற்போது பெரும் தேக்கம் நிலவுகிறது. இது குறித்த தீவிரமான உரையாடல் தற்காலச் சிறார் இலக்கியவாதிகளிடம் நிகழ வேண்டும்.

சில முன் முடிவுகள்:

சிறாருக்குக் கதைகள் எழுதும்போது, சிலர், பல முன் முடிவுகளைக் கொண்டிருப்பதாக அவர்களின் படைப்புகளின் வழியே உணரமுடிகிறது. எல்லாச் சிறுவர்களுமே சமூக ஊடகங்களில், மொபைல் போனில் மூழ்கிக்கிடக்கின்றனர். அதனால், அவற்றையொட்டிய கதை கருகளைத் தேர்த்தெடுக்க வேண்டும். இயல்பில் நடப்பதுபோன்ற நேரடியான கதைகளை சிறுவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது போல பல உள்ளன. ஆனால், இந்த முன் முடிவுகள் தேவையற்றவை. சிறு சிறு நிகழ்வுகளைப் படிக்கையில் நெகிழ்ந்து போகிற சிறுவர்கள் ஏராளம் இருக்கின்றனர். அவர்கள் அந்தத் தருணங்களுக்காகக் காத்திருக்கின்றனர். பெரியவர்களுக்கு எழுதப்படும் கதைகளைப் போல புதிய விஷயத்தை, புதிய தளத்தை சிறுவர்களுக்குப் படிக்கக் கொடுப்பதே முக்கியமானது. அதற்கு, இவை போன்ற முன் முடிவுகள் பெரும் தடையாக அமையும். அதேபோல, கதைகளுக்கான ஓவியம் எளிமையாக இருக்க வேண்டும் என்பது ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், சிறுவர்கள் அதைப் பார்த்து வரைந்து பழகலாமே எனும் எண்ணத்தை விதைப்பது போலச் சற்றேனும் முதிர்ச்சியானதாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த ஐந்து சிக்கல்கள் பற்றிய என் பார்வையில், பலரும் முரண்படக் கூடும். நானே முன் முடிவோடு இந்தப் பதிவை எழுதியதாகக் கருதக்கூடும். அப்படித் தோன்றினால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர்கள் தயவுசெய்து உரையாட வாருங்கள். விவாதிப்போம். இன்னும் தெளிவாக, சிறார் இலக்கியத்திற்கான பாதையைச் செப்பனிடுவோம். பேரழகான உலகத்தை சிறாருக்குப் பரிசளிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *